மார்க்ஸ்

சுயேச்சதிகாரத்திற்கும், கொடுங்கோன்மைக் கும் தாயகமாய் இருந்த ருசியா, தன்னுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த போலந்து மக்களை அனேக வருடங்களாக வர்ணிக்க முடியாத இம்சைகளுக்கு உட்படுத்தி வந்தது. இவைகளைப் பொறுக்க முடியாமல் போலந்து நாட்டினர் 1863-வது வருடம் பெரிய கலகம் செய்தார்கள். அப்போது ருசியா, மிகவும் கடுமையான முறைகளைக் கையாண்டது. ஏற்கனவே ருசியா மீது அதனுடைய சுயேச்சதித்திற்காகவும், கொடுங்கோன்மைக் காகவும் – பிரான்சிலும், இங்கிலாந்திலும் சிறப்பாகத் தொழிலாளர்களிடையே ஒருவித வெறுப்பு இருந்து வந்தது.

இந்த அடக்கு முறைகளைக் கண்டதும், இரண்டு நாட்டுத்  தொழிலாளர்களும் தங்கள் தங்கள் நாட்டில் கூட்டங்கள் போட்டு ருசியாவின் அக்கிரமத்தை கண்டனம் செய்ததோடு, போலந்து விடயத்தில் தலையிட வேண்டுமென்று தங்கள் அரசாங்கங்களை முறையாகக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் தலையிட மறுத்துவிட்டன. எனவே, பிரெஞ்ச் தொழிலாளர்களும்,  பிரிட்டிஷ் தொழிலாளர் களும் சேர்ந்து ஒரு பெரிய கூட்டம் போட்டுத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது என்று தீர்மானித்தார்கள்.

ஏற்கனவே இவர்களுக்குள் ஒரு தொடர்பு இருந்தது. இதன்படி 1863 வருடம் ஜூலை மாதம் 22-ஆம் தேதி லண்டனில் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிரான்சிலிருந்து பிரெஞ்சுத் தொழிலாளர் பலர் பிரதிநிதி களாக வந்திருந்தார்கள்.  ஆனால் கூட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. ஏனென்றால் போலந்து மக்களின் எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்டது.

ஆனால் இதிலிருந்து இரண்டு நாட்டுத் தொழிலாளர்களும் தாங்கள் ஐக்கியப் பட்டிருக்க வேண்டிய அவசியத்தை முன்னைக் காட்டிலும் அதிகமாக உணர்ந்தார்கள். எனவே இவர்கள் கலந்து பேசி,சர்வதேச தொழிலாளர் சங்கம் என்ற பெயரால் ஒரு ஸ்தாபனத்தை நிறுவுவது என்றும் இதற்கு பூர்வாங்கமாக ஒரு மாநாட்டைக் கூட்டித் தக்க முடிவுக்கு வருவதென்றும் தீர்மானித்தார்கள். இந்த ஆரம்ப மகாநாடு ஒரு வருடம் கழித்து 1864ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி லண்டன் “மார்ட்டின்ஸ் ஹால்” என்ற  மண்டபத்தில் கூடியது. இதற்கு இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து, இத்தாலி முதலிய பல நாடுகளிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்.

“தற்போதைய சமுதாய ஒழுங்கை அடியோடு அப்புறப் படுத்திவிட்டு அதன் மீது புதியதோர் சமுதாய ஒழுங்கை நிறுவ வேண்டும்” என்ற விருப்பம் உடையோர் அனைவரும் இதில் பிரதிநிதிகள் ஆகும்படி அழைக்கப்பட்டார்கள். மண்டபத்தில் பிரதிநிதிகள் நிறைந்தி ருந்தார்கள் அவர்களிடத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நாவன்மையும் கூடக் கலந்தது.  கேட்கவும் வேண்டுமோ பேச்சுக்கு?

“இப்பொழுதுள்ள சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே உள்ள பொருளாதார சம்பந்தமான ஏற்றத்தாழ்வுகளை அடியோடு அகற்றிவிட வேண்டும். பொருளுற்பத்திக்குச் சாதனமாய் உள்ள அனைத்தும் தொழிலாளர் சுவாதீனத்திற்கு வர வேண்டும். பொருள் உற்பத்தியின் பலன்களைச் சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒரே மாதிரியாக அனுபவிக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் முதல்படியாகத் தனிச் சொத்துரிமை என்பது அகல வேண்டும்.”

இந்த மாதிரியான நோக்கங்களுடன் சர்வதேச தொழிலாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவ தென  மாநாட்டில் ஏக மனதாகத் தீர்மானிக்கப் பட்டது. இதன்படி “முதல் இன்டர்நேஷனல்” உருவானது!

இந்த மாநாட்டில் ஆசான் கார்ல் மார்கஸ் கலந்து கொண்டிருந்தார். ஆனால் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. சாதாரணமாகவே இவர் பேச்சோடு புதைந்து போகிற எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வது வழக்கமில்லை. அந்த மாதிரியான ஒரு கூட்டமாகத்தான் இந்த மாநாடு இருக்குமோ என்று முதலில் நினைத்தார். ஆனால் இதில் கலந்துகொண்டவர்கள் பலர் தீவிரவாதிகளா கவும், காரியவாதிகளாகவும் இருந்தார்கள். இதனால் மார்க்ஸ்,  மாநாட்டின் பிந்தைய நடைமுறைகளில் தீவிரமாகக் கலந்து கொண்டார். மகத்தான பங்களிப்புகளைச் செய்தார்- என்பதை அறிய முடிகிறது.

“முதல் இன்டர்நேஷனல்”-லுக்கு ஆசான் கார்ல் மார்க்ஸ் பிரேரபித்தது தான் என்ன?

சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் விதிகள், சட்ட திட்டங்கள் முதலியவற்றை தயாரிப்பதற்காக 55 பேர் அடங்கிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மார்க்ஸ்-சும் ஓர் அங்கத்தினன். ஜெர்மானியத் தொழிலாளர் பிரதிநிதியாக நியமனமானார். கமிட்டியினர் முதலில் சங்கத்தின் நோக்கங்கள், விதிகள் முதலியனவற்றை விவரித்து ஒரு திட்டம் தயாரித்தனர். இதில் அந்தக் காலத்தில் சம்பிரதாயமாக வழங்கப்பட்டு வந்த ஜனநாயக சொற்றொடர்கள் முதலியவைகள் தான் காணப்பட்டனவே தவிர,  தீவிரமான வேலைத் திட்டம் ஒன்றும் காணப்படவில்லை.

இது மார்க்ஸ்-க்குப் பிடிக்குமா? கமிட்டியின் இரண்டாவது கூட்டத்தில் மார்க்ஸ் தனியாகத் திட்டம் தயாரித்து ஆஜர் படுத்தினார். சங்கத்தின் அங்கத்தினர்கள், தங்கள் பொது நன்மையைக் கவனத்தில் கொண்டதோடு, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்பொழுதைய ஆட்சி முறையை அடியோடு மாற்றி அமைப்ப தற்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், இதற்காக அந்தந்த நாட்டு பார்லிமெண்ட்களிலும் தங்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்ஸினுடைய திட்டம் கூறியது. இந்தத் திட்டப்படி அங்கத்தினர்கள், சில நியமனங்களுக்கும், கட்டுப்பாடு களுக்கும் உட்பட வேண்டியவர்களாக மார்க்ஸின் இந்தத் திட்டத்தைச் சில வாசக மாற்றங்களோடு கமிட்டியினர் அங்கீகரித்துக் கொண்டனர்.

மார்க்ஸ், கமிட்டியினுடைய விளக்கத்திற்காக மேற்படி திட்டத்தோடு ஒரு அறிக்கையும் தயாரித்திருந்தார். அதன் ஆரம்ப வாசகங்களே, தொழிலாளர் வர்க்கம் வெறுமனே குறுகிய வட்டத்திற்குள் நின்று பொருளாதார பிரச்சனைகளுக்காக மட்டுமான செயல் திறன் பெற்றவர்களாக இயங்கக்கூடாது; மாறாக அரசியல் உணர்வு பெற்று இயங்க வேண்டும் என்பதனை அன்றே அறுதியிட்டுக் கூறுகிறார். இப்போது மார்க்ஸ் கூறியதைப் படியுங்கள்:

“தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர் கையில் மட்டுமே இருக்கிறது. சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிற துயரம் ஜனங்களின் வேலை மனப்பான்மை, பெரும்பாலான மக்களின் அரசியல் அடிமைத்தனம், முதலியவை களுக்கெல்லாம் மூல காரணமாய் இருப்பது என்னவென்றால் உழைப்புக்கு சாதனமாய் உள்ள பொருளாதார விஷயத்தில் அடிமைப்பட்டு இருப்பது தான். தொழிலாளர்களின் விமோசனம் என்ற லட்சியத்தை உத்தேசித்து இதுகாறும் செய்யப்பட்ட முயற்சிகள் தவறிப் போயிருக்கின்றன.

ஏனென்றால் ஒரு நாட்டிலேயே பலவகைத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்குள் ஒற்றுமை இல்லை;  இவ்வாறே, பல நாட்டுத் தொழிலாளர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை! இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவ தற்காகவே இந்த சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது”…

மேலும் விவரிக்கிறார்.

“1848 ஆம் வருடத்து புரட்சிக்குப் பிறகு முதலாளிகளின் பொருளாதார நிலைமையும் சமுதாய அந்தஸ்தும் எந்த விகிதாச் சாரத்திற்கு பெருகி இருக்கிறதோ, அதே விகிதாச்சாரத்திற்கு தொழிலாளிகளின் பொருளாதார நிலைமையும்,  சமுதாய அந்தஸ்தும் வெகுவாக குறைந்து வந்திருக்கிறது. எனினும் இதனால் தொழிலாளர்களுக்கு ஒருவித அனுகூலம் ஏற்பட்டிருக்கிறது.

எப்படி என்றால் தொழிலாளர்கள் எந்த நாட்டினராய் இருந்தாலும், எந்த அரசின் பிரஜையாக இருந்த போதிலும், எல்லோரும் ஒன்று தான். ஒன்று பட்டு இருக்க வேண்டியது அவசியம் என்ற உண்மையை வலியுறுத்தியும், உணர்ச்சியை உண்டு பண்ணி இருக்கிறது.

எந்த நாட்டிலே எந்தவிதமான போர் நடைபெற்ற போதிலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் தொழிலாளர்கள் தான். இவர்கள் யுத்த காலத்திலாகட்டும், சமாதான காலத்திலாகட்டும் சுரண்டப் படுகிறார்கள். இவர்கள் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் சுரண்டப்படுவதினின்று தங்களைத் தடுத்துக் கொள்ளலாம். இங்ஙனம் சுரண்டப்படாமலும் பொருளாதாரச் செழிப்புடனும் தொழிலாளர்கள் வாழ வேண்டுமானால் அரசியலில் இவர்கள் கலந்து கொண்டேயாக வேண்டும்.

எல்லாவற்றைக் காட்டிலும் அரசியல் அடிமைத்தனம்தான் கேவலமானது. அரசியல் துறையில்தான் தொழிலாளர்களின் அடிமைத்தனம் நன்கு வெளிப்படுகிறது. ஆதலின் தொழிலாளர்கள் அரசியலில் கலந்து கொள்ளாமல் இருப்பது பெரிய குற்றமாகும். எங்கெங்கு அரசியல் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இவர்கள் முன் நின்று மேற்படி உரிமைகள் நசுக்கப்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும்”

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1864-ல் தொழிலாளர் வர்க்கத்திற்கு மேற்கண்ட மகத்தான அறிவுரைகளை ஆலோசனைகளை முதல் இன்டர்நேஷனலுக்கு மேற்கண்டவாறு அறிக்கையாக சமர்ப்பித்தார் மார்க்ஸ்.

ஆனால், 152 ஆண்டுகள் கடந்த பின்னரும் மார்க்ஸ் பிரேரபித்தவை என்னவாயிற்று?

மேற்கண்ட பத்திகளில் ஆசான் காரல் மார்க்ஸ் பிரேரபித்த தொழிலாளர் வர்க்கத்திற்கான முன்மொழிவுகளை 152 ஆண்டுகள் கடந்த பின்னரும் தொழிலாளர் வர்க்கம் உணர்ந்திருக்கிறதா? அல்லது உணரச் செய்திருக்கிறோமா? ஆனால் முயன்றும் தேக்கம் தொடர்கிறதா? என்பதுதான் இன்று நம் முன் உள்ள பிரதானக் கேள்விகள்!

ஆம், தொழிலாளர் வர்க்கம் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே சங்கம் சேரத் தயாராக இருக்கின்றார்களேயொழிய, அதிலும் கூட ஏனோ தானோவென்று பங்கு கொள்ள முன் வருகிறார்களேயொழிய அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு ஒரு புரட்சிகர சமுதாய மாற்றத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிந்தனையற்றுக் கிடப்பது உலகு தழுவிய தொழிலாளர்கள் வர்க்கத்தின் பின்னடைவாகத் தான் நீடிக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் அரசியலற்ற இவ்வகைப் பின்னடைவு காரணமாக –  அரசியலே ஆகாது என்ற ஒதுங்கும் போக்கு காரணமாக இன்றைய காலச் சூழலில் உலகு தழுவிய கார்ப்பரேட் முதலாளிகள் காட்டில் மழை கொட்டிய வண்ணம் உள்ளன. தொழிலாளர் வர்க்கமோ தேய்ந்து துரும்பாகிய வண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட ‘அரசியலே கூடாது’ என்ற வாதம் ‘மேதாவிகள்’ மத்தியிலும் கூட நிலவுவதுதான் துயரம் மிக்கதாகத் தோன்றுகிறது.

எனவே, ஆசான்கள் காட்டிய தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், ஏன், அறிவு ஜீவிகள் – மொத்தத்தில் உழைக்கும் மக்கள் தமக்கான அரசியலைக் கற்றுக் கொள்வதும், அரசியல் இயக்கத்தில் ஈடுபட முன் வருவதும், அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், உள்வாங்குவதும் புரட்சிகர சமூக மாற்றத் திற்கான போராட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும் காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் உணர்வோமாக! அதை விடுத்து சாதி மத ஆன்மீக வெறித் தனங்களில் தங்களை மாய்த்துக் கொண்டு காலங்களை நகர்த்திக் கொண்டு செல்ல விரும்பினால் அனைவரது வாழ்வும் பாழ் படும் என்பதையும் கவனத்திற் கொள்வோமாக!

எழில்மாறன்

குறிப்பு:- சாமிநாத சர்மா எழுதிய “கார்ல் மார்கஸ்” எனும் நூலிலிருந்து மார்க்ஸ் முன் வைத்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here