பத்திரிக்கை செய்தி
அனைவருக்கும் வணக்கம்,
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 11.06.2026 அன்று நடைபெற்ற 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் (ILC), இந்தியக் குழுவை வழிநடத்திச் சென்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (ILO) வாழ்த்து தெரிவித்து உரையாற்றியதில், “இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் 2014-ல் 34 சதவீதமாக இருந்தது 2025-ல் 56 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 2017 முதல் 2025 வரை 6 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெண் பணியாளர் பங்கேற்பு 22 சதவீதத்திலிருந்து 38.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா தொடங்கப்பட்டதாக” வும் கூறியுள்ளார்.
இதில் உள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்கு மாறானவை. வேலைவாய்ப்புத் திறன் கூடியதாக கூறுவதில், பக்கோடா போடுவதும் தொழில்தான் என்று மோடி கூறியது போல பணி நிரந்தரமற்ற, சமூக பாதுகாப்பற்ற வேலையாகிய கிக் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வேலை வாய்ப்பு என கணக்கில் கொண்டு வருகிறார் அமைச்சர்.
இந்தியாவில் விவசாயம், கட்டுமானம் மாதிரி அமைப்புசாரா துறை 90% ஆகும். அங்கு வேலைகள் வருஷம் முழுக்க இல்லாமல், வாரந்தோறும் நடைபெறும் வேலைகளில் சுமார் 8.9% (11 கோடி) பேருக்கு வேலை இல்லை எனும் நிலையில், அமைச்சர் கூறியிருக்கும் 3.1% என்பது வருட கணக்கு. எனவே “வேலையின்மை குறையவில்லை, மறைக்கப்படுகிறது” என்பதே உண்மை.
மேலும் 72.7% கிராமப்புற பெண்கள் இன்னும் விவசாய கூலி வேலைக்கு தான் செல்கின்றனர். விவசாய வேலையையே வேலை வாய்ப்பாக காட்டுகின்ற மோசடி ஒருபுறமிருக்க, அங்கு பெண்களின் கூலி 30% குறைவாக உள்ளதையும் மறைத்துள்ளார் ஒன்றிய அமைச்சர். தொழில் துறை பங்களிப்பு இல்லை என்பதால் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு அவர்கள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கவில்லை.
புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு பொருந்தக் கூடிய தொழில்துறையிலோ வேலைநேரம் அதிகரித்திருப்பதையும், பணிநிரந்தரம் ஒழிக்கப்பட்டதையும், கூலி குறைக்கப்பட்டதையும் மறைத்து, பெருமை என்பதாக சித்தரித்து ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரங்களில் உண்மையில்லை. கூலி வெகுவாக குறைக்கப்பட்டு வாழ்வதற்கு வழியில்லை என வடக்கில் பீஹார், ஹரியானா என தொடங்கிய தொழிலாளர் போராட்டம் தெற்கில் கர்நாடகா வரை நீண்டு வருகிற இந்நிலையில், உண்மையை மறைத்து அப்பட்டமானதொரு பொய்யினை ஒன்றிய அமைச்சர் பேசியிருப்பது, கண்டனத்துக்குரியது.
நாட்டின் உற்பத்தியை தீர்மானித்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்ற இந்தியத் தொழிலாளர் வர்க்கம், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பினால் செழிப்பாக உள்ளதைப் போல அமைச்சர் ILC –ல் பேசிய பொய்களை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அமைச்சரின் மேற்கண்ட பேச்சுக்கு எதிராக இந்திய தொழிலாள வர்க்கம், ஓரணியில் திரண்டு அமைச்சரது கருத்துக்களை திரும்ப பெறுகின்ற வகையில் கண்டனக்குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இவண்,
R.லோகநாதன்,
மாநில பொதுச்செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி







