உழைப்பாளியை கொலைகாரன் ஆக்கிய தலைநகர்!
மீடியாக்களை பொறுத்தவரை  இரண்டு தொழிலாளிகள் அடித்துக் கொண்டனர்; அதில் ஒருவர் கொலை செய்துள்ளார் என்பதோடு செய்தியை சுருக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு அவர்களின் ஊடக கடமை முடிந்து விடுகிறது.

பிழைப்புத்தேடி பெருநகரங்களில்  தஞ்சமடையும் உதிரி தொழிலாளிகள் தமக்குள் அடித்துக்கொண்டு சாகும் அவலம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தினமும் கட்டிட வேலை செய்வார். இரவில் பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து தூங்குவார். இதேபோல பூந்தமல்லியை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்க்கும் ரபீக்(25) என்ற வாலிபரும் பார்த்தசாரதி கோவில் வாசலில் இரவில் தூங்குவது வழக்கம்.

தூங்கும் இடத்திற்காக போட்டி!

11.06.2026  இரவு 8 மணியளவில் இவர்கள்  இருவரும் பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தூங்குவதற்காக வந்து உட்கார்ந்து இருந்தனர். அப்போது தேவனிடம், ரபீக் தகராறு செய்துள்ளார்.

“இது தொடர்பாக நடந்த மோதலில் ரபீக், தேவனை செங்கலால் ஓங்கி தலையில் அடித்துள்ளார். தேவன் கூச்சல் போட்டபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். தேவனை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரபீக்கை அங்கிருந்த ரோந்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த தேவனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் தேவன் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.” என்று தினத்தந்தி எழுதியுள்ளது.

(சென்னையில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை: பெயிண்டர் கைது…)

இதைத் தாண்டி எழுதுவதற்கு அவர்களைப் பொருத்தவரை விஷயம் இல்லை. நாம் அப்படி கடந்து போக முடியாது.

ரபீக்தான் குற்றவாளியா?

சட்டப்படி அவர்தான் குற்றவாளி. தேவனை கல்லால் தாக்கி கொலை செய்ததும் அவர்தான்.  ஒருவேளை தேவனுக்கும் ரவிக்கும் தங்குவதற்கு தனிவீடு இருந்திருந்து, அந்த வீட்டில் அவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் குடும்பமாக வாழும் சூழல் இருந்திருந்தால் இந்த சம்பவமோ படுகொலையோ நடந்திருக்காதுதானே.

கட்டட வேலை செய்பவரும் பெயிண்டர் ஆக வேலை செய்பவரும் தங்குவதற்கு என்று ஒரு இடமில்லாமல் கோயில் வாசலில் தூங்கியாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது யார்? படுக்கும் இடத்திற்காக அடித்துக் கொள்ளும் அவலத்திற்கு தள்ளிய கயவர்கள் யார்?  அவர்கள் தானே உண்மையான குற்றவாளிகள்.

கூண்டில் ஏற்றப்பட வேண்டிய காண்ட்ராக்டர்கள்!

பிறர் வாழ தன் உழைப்பு சக்தி மற்றும் அனுபவத்தால் வீடுகளை கட்டுபவரும், பிறர் வாழும் வீடுகளை பெயிண்ட்டால் அழகு படுத்துவோரும் தங்க வீடு இன்றி சாலையில் தான் படுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளி இருக்கும் சமூகத்தை, சுரண்டும் வர்க்கத்தை என்னவென்று சொல்வது.

மீடியாக்களை பொறுத்தவரை  இரண்டு தொழிலாளிகள் அடித்துக் கொண்டனர்; அதில் ஒருவர் கொலை செய்துள்ளார் என்பதோடு செய்தியை சுருக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு அவர்களின் ஊடக கடமை முடிந்து விடுகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ள மீடியாக்களோ, அமைப்புகளோ, கட்சிகளோ இப்படி கடந்து போவது சாத்தியம் இல்லாதது. எனவே நாம் அதை ஆராய்வோம்.

பிரச்சனையின் மூலம் எது?

சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளும், அனைத்து மோதல்களும், வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடு என்கிறார் காரல் மார்க்ஸ்.

லாரி தண்ணீர் பிடிப்பதற்காகவோ, குழாய் தண்ணீருக்காகவோ, அண்டை வீட்டாருடன் அடித்துக் கொள்ளும் பெண்களாகட்டும், பஸ் மற்றும் டிரெயினில் சீட்டுக்காக முண்டி அடித்துக் கொள்வதாகட்டும், ரேஷன் கடைகளில் சர்க்கரை, மண்ணெண்ணெய், அரிசிக்காக முட்டி மோதுவதாகட்டும், இது எல்லாமே வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று எப்படி புரிந்து கொள்வது?

பதில் எளிமையானதுதான். மேலே நாம் குறிப்பிட்ட வர்க்கத்தினர் கடுமையாக உழைக்கும் பிரிவினர்கள்தான். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் பட்சத்தில் இப்படி முண்டியடித்துக் கொண்டு போராட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது.

படிக்க:

 பீகாரில் இஸ்லாமிய தொழிலாளி கும்பல் படு*லை!

 உரைவீச்சு : இது கடிதம் அல்ல, உலகத் தொழிலாளியின் இதயம்

மேட்டுக்குடிகள் வாழும் தெருவில் இந்த மாதிரி குழாயடி சண்டையை பார்த்து உள்ளீர்களா? அங்கு வீட்டில் புழங்குவதற்கு மட்டுமின்றி, ஏக்கர் கணக்கிலான தோட்டத்தை புல்வெளியை வாடாமல் தளதளவென்று பசுமையாக பராமரிப்பதற்கு கூட போதுமான அளவு தண்ணீர் குழாயில் தடையின்றி விநியோகமாகிறது.

அதாவது போதிய வருவாய் இருந்தால் அவர்கள் தெருவிலும் குடிநீர் வாரியத்தால் தண்ணீர் தடையின்றி வழங்கப்படும். அல்லது மாநகராட்சியால், தனியாரால் இயக்கப்படும் தண்ணீர் லாரிகளின் மூலம்  காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விடுவார்கள்.

போன் போட்டு ஓலா, உபர் புக் செய்து பயணித்து விடுவார்கள். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் போய் ஒரு மாதத்திற்கானதை மொத்தமாக “பர்ச்சேஸ் செய்து” விடுவார்கள்.

எனவே தன் உழைப்பு சக்திக்கேற்ற கூலி கிடைக்கும் பட்சத்தில்  தெருவில் தண்ணீர் லாரி முன்போ, ரேஷன் கடையின் முன்போ, பேருந்து ரயில்களிலோ அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழாது. தனது உழைப்பு சக்தியை சுரண்டும் வர்க்கத்திற்கு மிக மிக குறைந்த கூலிக்கு விற்றுவிட்டு அவர்கள் விட்டெரியும் காசில்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தான் இத்தகைய அவல நிலையை – அதாவது உழைக்கும் வர்க்கமான இவர்களை தங்களுக்குள் மோதிக் கொள்ளும் சூழலை உருவாக்குகிறது.

சாமானிய மக்கள்தான் ரயில் வந்து நின்றவுடன் பெட்டியில் முண்டியடித்துக் கொண்டு பாய்கிறார்கள். ஆனால் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, கார்ப்பரேட் முதலாளிகளோ ஏசி பெட்டியில் முன்பதிவு செய்துவிட்டு, தமது லக்கேஜ்களை போர்ட்டர்கள் சுமந்து வர அலட்டிக் கொள்ளாமல் தமது பெட்டியில் ஏறி சொகுசாக  அமர்ந்தும், படுத்தும் பயணிக்கிறார்கள். எனவே முன்பதிவு செய்யப்படாத பொது  பெட்டிக்குள் நடக்கும் மோதல்கள் வர்க்க  போராட்டத்தைதான் பிரதிபலிக்கின்றன. இந்தப் பெட்டியில் தான் பணித்தாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள கரண்டும் வர்க்கங்களால் தமக்குள் மோதிக் கொள்கின்றனர்.

கோபம் யாரை நோக்கி திரும்ப வேண்டும்!

ஏசி மற்றும் முன்பதிவு பெட்டிகளுக்கு ரயிலின் எண்பது சதவீதத்தை ஒதுக்கிவிட்டு வெறும் 4 பெட்டிகளை மட்டுமே  பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் பயன்பாட்டுக்கு என ஒதுக்கும் ரயில்வே துறையின், ஒன்றிய அரசின் அயோக்கியத்தனத்துக்கு எதிராகத்தான் பயணிகள் போராடியாக வேண்டும்.

படுக்கும் இடத்திற்காக சக உழைக்கும் வர்க்கமான மற்றுமொரு தொழிலாளியைக் கல்லால் தாக்கிய பெயிண்டரின் கோபம் யாரைப் பார்த்து திரும்பி இருந்தால் சரியானது?  தனது உழைப்பை அற்ப கூலி கொடுத்து சுரண்டும் காண்ட்ராக்ட் காரர்களிடமோ,  பில்டரிடமோதான் அவர் தனது கோபத்தை காட்டியிருக்க வேண்டும்.

ஒருவன் தனக்காக வாழ்வது எப்போது?

உழைப்பாளிகள் தமக்காக எப்போது வாழ்கிறார்கள் என்பது குறித்து மார்க்ஸ் விளக்கியுள்ளார். வாரம் முழுவதும் கடும் உழைப்பு சுரண்டலில் கசக்கிப் பிழியப்பட்டு சனிக்கிழமை இரவில் கூலியை வாங்கிக் கொண்டு சாராயக் கடைகளில் மேஜையில் தான் ஒரு தொழிலாளி தனக்காக வாழ்கிறான்.  சரக்கை அடித்து விட்டு குடிபோதையில் சாக குடிகாரனுடன் தெருவில் கட்டிப் புரண்டு சண்டையிடும் போது தான் அவன் தனக்காக வாழ்கிறான் என்கிறார் ஆசான் மார்க்ஸ்.

அதாவது வாரத்தில் ஆறு நாட்களும் முதலாளிக்காக, முதலாளியால் ஏவப்படும் மேனேஜர், சூப்பர்வைசர்களுக்காக ஓடி ஓடி உழைத்து விட்டு, கிடைத்த அற்ப கூலியில் மட்டமான சரக்கை குடித்துவிட்டு,  போதை தலைக்கேறிய நிலையில் தனது சொந்த கோபத்தையோ, உணர்ச்சியையோ தான் விரும்பிய படி வெளிப்படுத்தி சனி இரவிலும், ஞாயிறிலும் மட்டும் தான் அவன் காட்டுகிறான் என்கிறார் மார்க்ஸ்.

பெயிண்ட்டரும் கட்டட தொழிலாளியும் வேலை இடத்தில் தமது உணர்ச்சியோ கோபத்தையோ  காட்ட முடியாமல், தமக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை இரவில் தூங்கும் இடத்திற்கான போட்டியில் காட்டிக் கொண்டனர். அதில் ஒருவர் கொலையானார்; மற்றொருவர் கொலை குற்றத்தில் சிறைக்குச் செல்கிறார்.

இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் அடுத்த குற்றவாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நோய் நாடி நோய் முதலும் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பு செயல் என்கிறார் வள்ளுவர்.

சந்தை பத்திரிக்கையை போல நோயை மட்டும் காட்டுவதோடு நிற்காமல், அது தணிக்கும் வாயையும் நாம் காட்டியாக வேண்டும். வாருங்கள். உழைக்கும் வர்க்கமாக அணிதிரண்டு  நோயின் மூல வேரை -மூலதனத்தின் சுரண்டலை, கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை, காண்ட்ராக்டர்களின் சுரண்டலை  அறுத்தெறிவோம். உழைக்கும் வர்க்கம் தமக்குள் அடித்துக் கொள்ளும் – “கொல்லும்” அவலத்திற்கு முடிவு கட்டுவோம்.

  •  இளமாறன்    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here