த்திரிக்கை சுதந்திரம் குறித்து Reporters Without Borders (RSF – Reporters Sans Frontières) என்ற உலக அளவிலான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்180 நாடுகளில் நடத்திய ஆய்வில் பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 157 ஆவது இடத்திற்கு சென்றிருக்கிறது (இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் கேடுகெட்ட நிலையை அடைந்திருக்கிறது) என்ற விவரம் வெளிவந்திருக்கிறது.

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பதில் முதல் 10 இடங்களில் (முன்னணியில்) உள்ளன என்ற செய்தியையும் அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இருந்து அறிய முடிகிறது.

விஸ்வகுரு, 56 இன்ச் மோடியின் ஆட்சியின் கீழ் 2047 ஆம் ஆண்டிற்குள் ‘வல்லரசாக வளரவுள்ள’ இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் மிகமிக மோசமான நிலையில் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதாவது 180 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 157 ஆவது இடத்தைப் பிடித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஆனால் சங்கிகளால் ஏளனமாக பார்க்கப்படும் நமது அண்டை நாடுகளான நேபாளம் 87 ஆவது இடத்திலும், ஸ்ரீலங்கா 134 வது இடத்திலும், பூட்டான் 150வது இடத்திலும், பங்களாதேஷ் 152வது இடத்திலும், பாகிஸ்தான் 153-வது இடத்திலும் உள்ளன.

நரேந்திர தாமோதர தாஸ் மோடி 2014 -ல் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் படிப்படியாக நசுக்கப்பட்டு கொண்டே வருகிறது.

இது அரசு எந்திரத்தின் துணை கொண்டு அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களை மிரட்டி பணி வைப்பது மூலமாக மட்டும் நடக்கவில்லை. மாறாக அந்த ஊடகங்களையே அம்பானி அதானி வகையறாக்கள் விலைக்கு வாங்குவதன் மூலமாகவும் பெருமளவு நடந்துள்ளன.

முகேஷ் அம்பானியின் “நெட்வொர்க் 18” குழுமம் 70க்கும் மேற்பட்ட (தொலைக்காட்சி சேனல்கள் அச்சு ஊடகங்கள் டிஜிட்டல் தளங்கள்) ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல கௌதம் அதானி NDTV ஐ விலைக்கு வாங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் பாசிச பாஜக அரசு!

இப்படி செய்தி ஊடகங்களையே இவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமாக அம்பானி – அதானிகளின், ஆர் எஸ் எஸ் – பாஜகவின் நலன்களுக்கு ஏற்ற செய்திகள் மட்டுமே பொதுவெளியில் பெரும் அளவில் பரப்பப்படுகின்றன. இதன் எதிர் விளைவாக இவர்களுக்கு எதிரான அதாவது நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய செய்திகள் பெருமளவில் தணிக்கை செய்து வெளிவராமல் தடுக்கப்படுகின்றன.

இதன் மூலமாக அப்பாவி மக்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இவர்களால் ஆட்டுவிக்க முடிகிறது.

இப்படி அம்பானி, அதானி வகையறாக்களின் நலன்களுக்கு ஏற்றவாறு – ஆர் எஸ் எஸ், பாஜகவின் நலன்களுக்கு ஏற்றவாறு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகங்களுக்கு “கோடி மீடியாக்கள்” என்ற அடைமொழியை மக்கள் கொடுத்துள்ளனர். இத்தகைய “கோடி மீடியா”க்களுக்கு அரசின் விளம்பரங்கள் பெரும் அளவில் கொடுப்பதன் மூலம் அரசின் வரிப்பணம் இவர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது.

அதே சமயம் IT Rules 2021 (Information Technology Rules) IT Amendment Rules 2023 (Fact Check Unit) போன்ற சட்டங்களை போட்டு தனக்கு எதிராக செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளங்களை பாசிச பாஜக அரசு பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், செய்திகள் தணிக்கை என்ற பெயரில் பாஜகவின் நலனுக்கேற்ப நீக்கப்படுகின்றன. அப்படி செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் சட்ட விரோதமான முறையில் முடக்கப்படுகின்றன.

படிக்க

 பாசிஸ்டுகளின் ஆட்சியில் பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்!

 THE WIRE ஊடகத்தின் மீது பாசிச பயங்கரவாத கும்பலில் சட்டபூர்வ தாக்குதல்?!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர். பெண் ஊடகவியலாளர்கள் தொலைபேசி வாயிலாக மிரட்டப்படுவது அசிங்கப்படுத்தப்படுவது தொடர்கதையாக உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவிற்கு நசுக்கப்படுகிறது என்பதற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளன.

ஊடக சுதந்திரம் என்பது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கு மிகமிக முக்கியமான ஒன்று. ஊடக சுதந்திரத்தின் தன்மைக்கேற்பத்தான் அரசுகள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படும். இதன் மூலம் தான் ஆளும் அரசுகள் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.

மக்கள் நலனை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பாசிச ஆட்சியை நடத்தும் காவி பாசிஸ்டுகளால் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆட்சியாளர்கள் போடும் சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளும் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் கொடியை உயர்த்துவார்கள்.

எனவேதான் ஊடக சுதந்திரத்தை வெட்டிக் குறுக்குவது, நசுக்குவதன் மூலமாக இவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகள் எதுவும் மக்களுக்கு தெரிந்துவிடாதபடி மறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அவற்றுள் ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைக்கும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை (World Happiness Report 2025) வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 140 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இந்தியா 126 வது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது. (இந்த இடத்தில் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் உள்ள விவரங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)

அதாவது, பத்திரிக்கை சுதந்திரம் மிகவும் நல்ல நிலையில் உள்ள இந்த நாடுகளில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதும் பத்திரிக்கை சுதந்திரம் மிகமிக கேடுகெட்ட நிலையில் உள்ள இந்தியாவில் மக்கள் மிகவும் மகிழ்ச்சி குறைவாக வாழ்கிறார்கள் என்பதும் இந்த அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும், அதாவது, மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமைக்கும் மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இந்த உரிமை உள்ள நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதும் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியற்று இருக்கின்றார் என்பதும் தற்செயலான நிகழ்வு அல்ல என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக சுதந்திரத்தை நசுக்குவது என்பது மக்களின் கழுத்தை நெறிப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து ஊடக சுதந்திரத்தை காக்க அனைவரும் அணி திரள்வோம்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here