லகின் சமூக விஞ்ஞானமான மார்க்சியத் தத்துவத்தை  சோவியத் ரஷ்யாவில் முதன்முறையாக ஒரு சோசியலிச புரட்சி மூலமாக நிரூபித்துக் காண்பித்தவர் ஆசான் லெனின்.

1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஓட்கா நதிக்கரையில் உள்ள சிப்ரிஸ்ட் நகரில் பிறந்தார்-விளாதீமிர் உல்யானவ் என்னும்(குட்டையிவராயினும்) உயர்ந்த மாமனிதர். பிற்காலத்தில் இவரே மாபெரும் லெனின் ஆகப் புகழ்பெற்றார்.

ஆசான் லெனின் மார்க்சியத்தை மென்மேலும் உட்கிரத்து அதனை விரிவு படுத்தினார். எண்ணற்ற நூல்களை உருவாக்கினார். அதன் மூலமாக உலகப் பாட்டாளி மக்களுக்கு எண்ணற்ற செய்திகளை கொண்டு சேர்த்தார். சோவியத் மண்ணில் சோசலிசப் புரட்சிக்கு முன்னால் 1917 -பிப்ரவரியில் ஜார் மன்னனை வீழ்த்தி,  அதன் பிறகு 1917 நவம்பர் 7-ல் முதலாளித்துவ சீரழிவுவாதி கேரன்ஸ்கியையும் வீழ்த்தி,  சோசலிசப் புரட்சியை நடத்திக் காண்பித்தார்.

அப்படிப்பட்ட மகத்தான ஆசான் உயிர் வாழவே கூடாது என்ற கண்ணோட்டத்தில் மிச்ச சொச்சம் இருந்த முதலாளித்துவ சீர்குலைவு வாதிகள்,  ஒரு எதிர்ப்பு புரட்சியாளராக இருந்த இளம் பெண் மூலமாக துப்பாக்கியால் சுடப்பட்டார். அது முதல் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பின் மீண்டெழுந்தார். மீண்டும் தமது பணிகளை தொய்வின்றி எடுத்துச் சென்றார். இருப்பினும் அவருக்கு மூளையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு சிறப்பான மருத்துவர்கள் மூலமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் 1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி மாலை ஆறு அடித்து 50 நிமிடங்கள் ஆனதும் கோர்க்கி கிராமத்தில் ஆசான் லெனின் காலமானார்.

ஆசான் லெனின் மறைவுற்ற அடுத்த நிமிடமே அவரைப் பற்றிய நினைவுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ‘தாய்’ நாவல் படைத்த மக்சீம் கார்க்கி ஒரு வெளியீட்டினை மக்களுக்கு வெளிக்கொணர்த்தார். அதுவே “வி.இ.லெனின்: சொற் சித்திரம்”– என்ற தலைப்பில் கோர்க்கி வெளியிட்டார்.

ஆசான் லெனின் மறைந்த தருணத்தில் கூட அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புக்களை இலக்கியத்தனமாக வர்ணித்திருக்கும் போக்கு கோர்க்கியைத் தவிர வேறு எவராலும் இயலாத காரியம். இதனை ஆசான் லெனின் இணையர் நதேழ்தா குரூப்ஸ்கயா கூட நயம்பட ஒப்புக்கொண்டு கோர்க்கியை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.

ருஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமான பாட்டாளிகளாலும், அறிவு ஜீவிகளாலும் இப்புத்தகம் வெகுவானப் பாராட்டையும், புகழ்ச்சியையும் பெற்றது.

அத்தகைய கோர்க்கியின் “வி.இ.லெனின்: சொற் சித்திரம்” -என்ற நூலிலிருந்து (வாசகர்களையும் முழுமையாக புத்தகத்தைப்  படிக்கத் தூண்டும் கண்ணோட்டத்தில்) பல வரிகள் கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

(தொடரும்…)

எழில்மாறன்

000

வி.இ.லெனின் விளதீமிர் லெனின் காலமாகி விட்டார்.


“தம் காலத்துப் பெரியோர்கள் எல்லோரையும் விட அதிகத் துலக்கமாக மேதா விலாசத்தின் உருவாகத் திகழ்ந்த” மனிதரை லெனின் வடிவில் உலகம் இழந்துவிட்டது என்று அவருடைய பகைவர்களது முகாமில் கூடச் சிலர் நேர்மையுடன் ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

ஜெர்மானிய முதலாளி வர்க்கச் செய்தித்தாள் “Prager Tageblatt” லெனினைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டது. அவருடைய அதிமானுட உருவின்பால் மதிப்பும் வியப்பும் ததும்பும் இந்தக் கட்டுரையை அது பின்வரும் சொற்களில் முடித்திருந்தது.

“மரணத்தில் கூட மகத்தானவராக, அண்ட முடியாதவராக, அச்சம் விளைவிப்பவராகத் தோற்றமளிக்கிறார் லெனின்”.

கட்டுரையின் தொனியிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அது எழுதப்படக் காரணமாய் இருந்தது “பகைவனின் பிணம் எப்போதும் நன் மணம் வீசும்” என்ற முதுமொழியில் நெஞ்சீரமின்றி வெளியிடப்பட்டுள்ள உடலியல் மனநிறைவல்ல,  அமைதியற்ற பெரிய மனிதன் தங்களிடமிருந்து பிரிந்து போய்விடும் போது மனிதர்கள் உணரும் மகிழ்ச்சியும் அல்ல. இல்லை,  மனிதன் மீது மனிதனுக்கு ஏற்படும் பெருமை இந்தக்கட்டுரையில் உரக்க ஒலிக்கிறது.

வாழ்க்கைப் பற்றையும் அறிவின் அஞ்சாமையையும் வெளியிட்ட பெரியார்களில் ஒருவரது தனிச்சிறப்பை மதிப்பிடுவதில் முதலாளி வர்க்கச் செய்தித்தாள்கள் காட்டிய மரியாதையை லெனினுடைய மரணத்தின் பால் கடைப்பிடிப்பதற்கு வேண்டிய சக்தியோ, சாமர்த்தியமோ நாடு கடந்த ருஷ்யர்களின் பத்திரிக்கைகளுக்கு இல்லை.

அவருடைய உருவைச் சொற்களில் தீட்டுவது கடினம். செதில்கள் போர்த்த மீன் போல முழுதும் சொற்கள் போர்த்தவராக லெனின் வெளிக்குத் தோன்றினார்‌. தாம் சொன்னவை எல்லாவற்றையும் போலவே எளிமையும் ஒளிவுமறைவின்மையும்  கொண்டிருந்தார்.

அவரது வீரம் அனேகமாக முற்றிலும் வெளிப்பகட்டு அற்றது. உலகில் சமுதாய நியாயம் சாத்தியம் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட நேர்மை உள்ள ருஷ்ய அறிவாளி – புரட்சியாளருக்குரிய அடக்கம் வாய்ந்த,  துறவு மனப்பான்மை நிறைந்த தன்னலத் தியாகம் அவரது வீரம். ருஷ்யாவில் இது அறிதல்ல.  மனிதர்களின் இன்பத்திற்காக கூடிய வேலை செய்யும் பொருட்டு உலக இன்பங்கள் யாவற்றையும் துறந்துவிட்ட மனிதரின் வீரம் இது.

அவர் காலமானதுமே நான் எழுதியது துயர் நிறைந்த மன நிலையில், அவசரமாகவும் மோசமாகவும் எழுதப்பட்டது. “நயப்பாங்கு” காரணமாகச் சில விஷயங்களை நான் குறிப்பிட முடியவில்லை. இது முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடியதே என்று நம்புகிறேன். மதிநுட்பமும் விவேகமும் வாய்ந்திருந்தார் இந்த மனிதர். “பெருத்த விவேகத்தில் பெருத்த துயரமும் அடங்கி இருக்கிறது.”அவர் நெடுந்தொலை முன்னே நோக்கினார்.

1919க்கும் 1921க்கும் இடையே சில மனிதர்களைப் பற்றிச் சிந்திக்கையிலும் உரையாடுகையிலும் சில ஆண்டுகளில் அவர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள் என்பதை அடிக்கடி சரியாக முன்னுரைத்தார். அவருடைய தீர்க்கதரிசனத்தை ஏற்றுக்கொள்ள எப்போதும் விருப்பம் உண்டாகவில்லை. ஏனெனில் சிலர் விஷயத்தில் அது புண்படுத்துவதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக  அவரது ஐயுறவு மிக்க தன்மை சித்தரிப்புகளைப் பலர் மெய்ப்படுத்தி விட்டார்கள். அவரைப் பற்றிய எனது நினைவுக் குறிப்புக்கள் மோசமாக மட்டுமின்றி கோர்வையில்லாமல் வருந்தத்தக்க இடையீடுகளுடன் எழுதப்பட்டிருந்தன. லண்டன் காங்கிரசிலிருந்து நான் தொடங்கி இருக்க வேண்டும். அந்த நாட்களில் தான் லெனின் சிலரது சந்தேகத்தினாலும் அவ நம்பிக்கையாலும் வேறு சிலரது வெளிப்படையான பகைமையாலும் அற்புதமாக ஒளியுறுத்தப்பட்டு என் முன்னே தோன்றினார்.

லண்டன் நகர்ப்புறத்தில் இருந்த நகையாடத்தக்க ஏழ்மை வாய்ந்த மரச் சர்ச்சின் வெற்றுச் சுவர்களையும்,  வறிய பள்ளிக்கூட வகுப்பறை போன்ற சிறிய, குறுகலான ஹிலையும், அதன் கூர் முகட்டுப் பலகணிகளையும் நான் இப்போதும் என் கண்ணெதிரே காண்கிறேன். வெளியில் இருந்து பார்ப்பதற்குத் தான் அந்த கட்டிடம் சர்ச் போன்று இருந்தது. உள்ளேயோ வழிபாட்டுப் பொருள்கள் எவையுமே இல்லை. உபதேசியரின் உயரமற்ற உரைமேடை கூட வழக்கம் போல ஹாலுக்கு உள்ளே இராமல் அதன் வாயிலில் இரு கதவுகளுக்கு நடுவே அமைந்திருந்தது.

அவருடைய எழுத்துக்களையும் நான் வேண்டிய அளவு படித்ததில்லை. ஆனால் நான் படித்தவையும், சிறப்பாக அவரை நேரில் அறிந்த தோழர்களின் மகிழ்பொங்கும் வருணனைகளும் என்னை அவர் பால் வலுவாக ஈர்த்தன.  நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என் கையை இறுக்கப்பற்றிக் கொண்டு, கூரிய விழிகளால் ஆழ்ந்து ஆராய்ந்தவாறு,  நெடுங்கால நண்பர் போன்ற தோரணையில் கேலியாகச் சொன்னார்:

” நீங்கள் வந்தது நல்லதே! உங்களுக்குத் தான் சண்டைகள் பிடிக்குமே? இங்கே பெருத்த சண்டை நடக்கப் போகிறது” .

லெனின் இப்படியிருப்பார் என்று நான் எதிர்பார்க்க வில்லை. அவரிடம் எதுவோ குறை எனக்குத் தென்பட்டது. அவரது ரகர உச்சரிப்பு ஹகரம் போல ஒலித்தது. அரைக் கோட்டுக் கைத்துளைகளில் கட்டை விரல்களை நுழைத்துக் கொண்டு நின்றார். மொத்தத்தில் எல்லா விதத்திலும் சர்வ சாதாரணமாயிருந்தார். “தலைவருக்கு” உரிய எதுவும் அவரிடம் காணப்பட வில்லை. நான் எழுத்தாளன். சில்லறை விஷயங் களைக் கவனிப்பது தொழில் முறையில் எனது கடமை. இந்தக் கடமை வழக்கம் ஆகிவிட்டது. சில சமயங்களில் சலிப்பூட்டுகிறது.

நான் கி.வ.பிளேஹானவிடம் “இட்டுச் செல்லப் பட்டதும்” அவர் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார். வேலையால் அலுத்துப்போன பள்ளி ஆசிரியர் புதிய மாணாக்கனைப் பார்ப்பது போலக் கண்டிப்புடன் சலிப்பு தோன்ற என்னை நோட்டமிட்டார். “உங்கள் திறமையைப் போற்றுபவன் நான்” என்ற வழக்கமான வாக்கியத்தை அவர் என்னிடம் சொன்னார்.  இதைத் தவிர என் நினைவில் நிலைக்கும் படியான எதையும் அவர் கூறவில்லை. காங்கிரஸ் நடந்த காலம் முழுவதிலும் “மனம் விட்டுப்” பேச வேண்டும் என்ற விருப்பம் அவருக்கோ எனக்கோ உண்டாகவே இல்லை.

படிக்க: 

♦ தோழர் லெனின் அதிகம் தேவைப்படுகிறார்! 

♦ மார்க்சியமும் சீர்த்திருத்தவாதமும் லெனின்

ஆனால் வழுக்கைத் தலையரும், ரகரத்தைத் தொண்டையால் உச்சரிப்பவரும்,  கட்டுக்குட்டான வரும்,  பலமுள்ளவருமான இந்த மனிதரோ, கிரேக்க ஞானி சாக்ரடீஸினது போன்ற நெற்றியை ஒரு கையால் தடவிக் கொண்டு மறு கையால் என் கையை இழுத்தவாறு,  வியப்பூட்டும் வகையில் ஒளி சுடர்ந்த விழிகளால் என்னை கனிவுடன் நோக்கி, எனது “தாய்’ என்ற நூலின் குறைபாடுகளைப் பற்றி அப்போதே பேசத் தொடங்கி விட்டார். இ.ப.லதீஷ்னிக்கவிடமிருந்து இந்த நூலின் கையெழுத்துப் பிரதியை அவர் வாங்கிப் படித்தாராம். இந்தப் புத்தகத்தை அவசரமாக எழுதியதாக நான் கூறினேன். ஆனால் ஏன் அவசரப்பட்டேன் என்று நான் விளக்குவதற்குள் லெனின் பரிவைக் காட்டும் பாவனையில் தலையை அசைத்தவாறு தாமே அதற்கு விளக்கம் தரலானார். நான் அவசரப்பட்டது நல்லதே ஆயிற்று என்றும், புத்தகம் அவசியமாயிருந்தது என்றும், ஏராளமான தொழிலாளர்கள் உணர்வு இன்றி,  தாமாகவே உந்தப்பட்டுப் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டார்கள் என்றும், இப்போது அவர்கள் “தாய்’ என்ற நூலைப் படித்துப் பெரிதும் பயன் பெறுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

“மிகவும் காலத்துக்கு ஏற்ற புத்தகம் (தாய்)” என்பதே அவர் கூறிய ஒரே புகழுரை. ஆனால் இது எனக்கு நிதி  கிடைத்தது போல் இருந்தது. பிறகு அவர் “தாய்” பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கிறதா, ருஷ்ய, அமெரிக்கத் தணிக்கை அதிகாரிகள் நூலை எந்தளவுக்குச் சிதைத்திருக்கி றார்கள் என்று காரிய ரீதியாக விசாரித்தார். நூலாசிரியர் மீது வழக்கு தொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்ததும் அவர் முதலில் முகம் சுளித்தார். அப்புறம் தலையைப் பின்னே சாய்த்து,  கண்களை மூடிக்கொண்டு அசாதாரணமான முறையில் குபீரென உரக்கச் சிரித்தார். அவருடைய சிரிப்பு தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஃபமா உரால்ஸ்கியும் இன்னும் ஒரு மூவரும் அருகே வந்தார்கள் என்று நினைக்கிறேன்.

நான் களி பொங்கும் மனநிலையில் இருந்தேன். தெரிந்தெடுக்கப் பெற்ற 300 கட்சி உறுப்பினர்களின் நடுவே இருந்தேன் நான். ஒழுங்கமைந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின் பிரதிநிதியாக அவர்கள் காங்கிரசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அறிந்தேன். கட்சியின் எல்லா தலைவர்களையும் முதிர்ந்த புரட்சியாளர்களையும் என் முன் கண்டேன். பிளெக்ஹானவ் அக்செல்ரோத், தெய்ச் ஆகியோர் இவர்களில் சிலர். எனவே என் உள மகிழ்ச்சி முற்றிலும் இயல்பானது. தாய் நாட்டுக்கு வெளியே நான் கழித்த இரண்டு ஆண்டுகளில் எனது வழக்கமான உடல்நலம் வெகுவாகக் குன்றியிருந்தது என்று சொன்னால் எனது அப்போதைய மகிழ்ச்சியை வாசக நேயர்கள் புரிந்து கொள்வார்கள்.

என் உடல்நலம் குன்றத் தொடங்கியது பெர்லினிலிருந்துதான். சமூக- ஜனநாயகக் கட்சியின் அனேகமாக எல்லாத் தலைவர்களையும் அங்கே நான் கண்டேன்.

ஒளகுஸ்டு பெபெலின் வீட்டில், மிகப் பருத்தவரான ஸீங்கருக்கு அருகே, அவர் போன்ற மிகப் பருத்தவர்களான  மனிதர்களின் நடுவே அமர்ந்து உணவு அருந்தினேன்.

வசதியுள்ள விசாலமான வீட்டில் நாங்கள் உணவு அருந்தினோம். அங்கே கனேரிப் பறவைகளின் கூண்டுகள் பூத்தையல் வேலை செய்த கைத் துவாலைகளால் நாகரீகமாக மூடப்பட்டிருந்தன. உட்கார்பவர்கள் தங்கள் பின் மண்டைகளால் நாற்காலி உரைகளைக் கறைப்படுத்தி விடாதிருக்கும் பொருட்டு அவற்றின் மீதும் கைத் துவாலைகள் குண்டூசிகளால் குத்தி வைக்கப்பட் டிருந்தன. சுற்றுச் சூழல் முழுவதும் மிகுந்த பெருமிதமும் திண்மையும் கொண்டிருந்தது. எல்லோரும் ஆழ்ந்த முறையில் உணவருந்தினார்கள். ஆழ்ந்த முறையில் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

மக்சீம் கோர்க்கி

இன்னும் தொடரும்…

1 COMMENT

  1. தாய் நாவலின் ஆசிரியர் எழுத்தாளர். கோர்க்கி லெனினின் அற்புத தருணங்களை இந்நூலில் விளக்கியிருப்பார். லெனின் பல நூல்களை எழுதியுள்ளார். அவையனைத்தும் மார்க்சிய கண்ணோட்டத்தில் உழைக்கும் மக்கள் அரசியல் அறிவினை வளப்படுத்திக் கொண்டு தனக்கான விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்.

    ஆனால் இவ்வளவு அருகில் இருந்து யாரும் இந்த அளவுக்கு விளக்கியதில்லை. அதில் கோர்கியின் எழுத்துநடை அற்புதமாக இருக்கும்.

    இந்த கட்டுரையை படிக்கும் போது பழைய காலங்கள் நிழலாடுகின்றன.

    தோழமையுடன்
    புதியவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here