பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் ஆகியோர் நினைவு தினம் இன்று!

தூக்கு மேடையா? இதோ! வருகிறேன்! இருங்கள்! படித்து கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து வருகிறேன்! என்ற வாசகன் அவன்!.. 

0

23.03.2023

அவன் தான் பகத்சிங்!….

இந்தியாவின் புரட்சி தாகத்தின் நெருப்பு அவன்!..

விடுதலை தாகத்தை இளைஞர்களிடையே பற்ற வைத்த இளம் இரத்தம் அவன்!..

தியாகத்தின் உச்சமாம், உயிரை துச்சமென எண்ணி நாட்டிற்கு இன்னுயிர் நீத்த மாவீரன் அவன்!…

நாடாளுமன்றத்திலே யாரும் பாதிக்கா வண்ணம், கவனத்தை ஈர்க்க நெஞ்சுரத்தோடு நின்று குண்டு வீசிய போர்வீரன் அவன்!…

மன்னிப்பு கடிதமா? அகராதியிலேயே இல்லை! என்று கேட்டுக்கொண்ட தந்தையை கடிந்த கண்டிப்பு மகன் அவன்!…

ஜாலியன் வாலாபாக்கிலே! டயர் கொன்று குவித்த தன் நாட்டு மக்களின் இரத்தம் தோய்ந்த மண்ணை கையில் ஏந்தி நெஞ்சோடு அணைத்து பழி தீர்க்க சபதமெடுத்த சிறு பிள்ளை அவன்!…

திருமணமா? தேசத்தை நேசிக்கிறேன்! அது போதுமென்ற பாலகன் அவன்!

தூக்கு மேடையா? இதோ! வருகிறேன்! இருங்கள்! படித்து கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து வருகிறேன்! என்ற வாசகன் அவன்!..

தூக்கு மேடையில் முகத்துக்கு கருப்பு துணியா? வேண்டாமே! என் தேசத்தை பார்த்து கொண்டே உயிர் துறக்கிறேனே! என்று கேட்ட தேசத்தின் பாசக்காரன் அவன்!…

இறுதியாய் “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கமிட்டான்!

கயிறு இறுக்கித்தான் அவன் குரல் நின்றதே தவிர அவனாய் நிறுத்தவில்லை!

துடித்த உடல் தளர்ந்தது!.. பயணித்த கால்கள் ஓய்ந்தது! விடுதலை தாகத்தின் வித்தானான்! வருங்கால இளைஞர்களின் உரமானான்!

தூக்கிலிட்ட இறுதி நொடிகளில் என்னவெல்லாம் நினைத்திருப்பானோ!

“அநீதிகளுக்கு எதிரான எங்களின் இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை! எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை! எங்களுக்கு பின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வருவார்கள்”… என்றான்!

அவன் தான் பகத்சிங்!…

வாருங்கள் இளைஞர்களே! மாணவர்களே!

பகத்சிங் வழியில் அணிதிரள்வோம்!…

அநீதிகளுக்கு எதிராக போராடுவோம்!

தோழர். பாலமுரளி, வழக்கறிஞர், மாவட்ட அமைப்பாளர், பு.மா.இ.மு. கோவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here