ராமராஜ்யம் அனைவருக்குமானதா?

இராமாயண பட்டிமன்றங்களில் தவறாமல் விவாதங்களில் இடம்பெறும் பெயர்களில் ஒன்று “குஹன்” எனும் திருநாமம்.இன்னொன்று “சபரி”.

“குகனோடும் ஐவரானோம்”
எனும் கம்பனின் வரிகளை உபயோகிக்காத பட்டிமன்ற பேச்சாளர்களே இல்லை எனலாம். குஹன் வேடுவர் குல
மன்னன், அவன் தாழ்ந்த குலம் என்றும் பாராது ராமன் அவனை ராமன் தனது தம்பி போல நடத்தினான், பாசத்துடன் அவன் அளித்த மீன் முதலிய உணவு வகைகளை ஏற்றுக் கொண்டான் என அள்ளி விடுவதை நான் பட்டிமன்றங்களில் கேட்டுள்ளேன். குஹனை எடுத்துக்காட்டாகக் கூறி,சமூக வலைத் தளங்களில் ராமன் சாதி வித்தியாசம் பாராது சமமாக மற்றவர்களையும் நடத்தினான் என ராம ராஜ்ஜியத்தை ஸ்தாபகம் செய்ய விரும்புகிறவர்கள் கூறிவரும் கருத்தும் பரவி வருகிறது.

இது உண்மையல்ல. வால்மீகி இராமாயணம், அயோத்யா காண்டம், 50,51,52 ஸர்க்கங்களைப் படித்தவர்கள் உண்மையை அறிவர்(ஶ்ரீ.அ.வி.நரஸிம்ஹாசாரியார் மொழிபெயர்ப்பு,1912 ஆம் ஆண்டு பதிப்பு).

இராமாயணத்தில் உள்ள சர்ச்சைக்குள்ள விசயங்களைத் தொகுத்து “ஶ்ரீ வால்மீகி ஹ்ருதயம்” எனும் நூலை ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் இயற்றி வெளியிட்டுள்ளார்(1971 ஆம் ஆண்டு பதிப்பு). இவரது இயற்பெயர் R.கிருஷ்ணசாமி ஐயர். இவர் “பஞ்சதசீ” போன்ற பல வடமொழி கிரந்த நூல்களை தமிழில் இயற்றியவர். இவரது தந்தையார் பூர்வாசிரமத்தில் ஶ்ரீ ராமச்சந்திர ஐயர் எனும் பெயரைக் கொண்ட ஶ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.இவர் எழுதிய “The Hindu Ideal” மற்றும் “தர்ம விமர்ச்சனம்” போன்ற நூல்கள் சனாதனிகள் போற்றும் நூல்களாகும்.

ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் குஹன் பற்றித் தெளிவாக சில விசயங்களை “ஶ்ரீ வால்மீகி ஹ்ருதயம்”நூலில் முன் வைக்கிறார்.
அதில் முக்கியமானது குஹன் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் அநுலோம நிஷாத ஜாதியைச் சார்ந்தவன் என்பது. இதே தகவல் மூல நூலான வால்மீகி இராமாயணம், அயோத்யா காண்டம், ஸர்க்கம் 50 லும் குறிப்பிடப்படுகிறது.

அநுலோம பிரிவில் உள்ள நிஷாத ஜாதியினர், பிராம்மண ஆணுக்கும் சூத்திர பெண்ணிற்கும் பிறந்தவர்கள் ஆவர்.வால்மீகி முனிவர், குஹன்,நளன் மற்றும் ஏகலைவன் போன்றோர் நிஷாத ஜாதியைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
அநுலோம பிரிவில் உள்ள ஜாதியினர் தீண்டத் தகாதவர்கள் அல்லர்.மேல்வர்ணத்து ஆணுக்கும் நாலாம் வர்ண சூத்திரப் பெண்களுக்கு பிறந்தவர்களை அநுலோம ஜாதிகளாக பிரித்து வைத்துள்ளன வைதிக நூல்கள். கீழ் வர்ண ஆணுக்கும் மேல் வர்ண பெண்களுக்கும் பிறக்கிறவர்களே பிரதிலோமர் எனும் ஜாதி வகையினர். பிரதிலோமர்களே தீண்டத் தகாதவர்களாக கருதப்படுகின்றனர்.

குஹன் கொடுத்த உணவை ராமன் உண்ணவுமில்லை,அவனோடு சிநேகமாகப் பழகியதற்குக் காரணம் அநுலோம்ப் பிரிவில் நிஷாத ஜாதி என்பது தீண்டத்தகாதது அல்ல என்பதால்தான்.

“ஶ்ரீ வால்மீகி ஹ்ருதயம்” நூல் குறிப்பிடும் விசயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்;

கங்கைக்கரையில் குஹன் சில உணவுப்பண்டங்களைத் தந்தபோது ஸ்ரீராமர் கூறிய பதில் இங்கே கூறிப்பிடத் தக்கதாகும். சிலர் சொல்வதுபோல் குஹன் தீண்டாத ஜாதியான் அல்ல. அவன் அநுலோம நிஷாத ஜாதியைச் சேர்ந்தவன். சபரியைவிட உயர்ந்த ஜாதிக்காரன்.

“என்னிடம் உள்ள அன்பு காரணமாக நீ கொண்டு வந்து கொடுத்திருக்கும் பொருள்களை எல்லாம் நீயே திரும்ப எடுத்துச்செல்ல நான் அநுமதிக்கிறேன்.இப் போது எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை.”

ஸ்ரீ ராமர் விரும்பிய தீர்த்தத்தைக்கூட
ஸ்ரீலக்ஷ்மணனே எடுத்துத் தந்தான்.

பரதனோடு பேசும்போது குஹன் இதை நன்கு தெளிவுபடுத்துகிறான்.

“ஸ்ரீராமர் உண்பற்காக பலவகை உணவுப் பண்டங்களையும் பக்ஷணங்களையும் பலவகைப் பழங்களையும் கொண்டு போனேன்; ஆனால் ஸ்ரீராமர் க்ஷத்திரிய தர்மத்தை நினைத்துக் கொண்டு ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை.நண்பனே, நாம் எதையும் ஏற்கக் கூடாது; எப்பொழுதும் கொடுக்கத்தான் வேண்டும் அல்லவா? என்று சொல்லி எங்களை ஸமாதானப்படுத்தினார். அவர் லக்ஷ்மணர் கொண்டுவந்த தண்ணீரைக் குடித்துவிட்டு ஸீதாதேவியோடு உபவாஸம் இருந்தார்.”

சபரியைப் பார்த்தபோது மட்டும் அவர் ஒழுக்கம் மாறிவிட்டது என்று சொல்லமுடியுமா? தண்டகாரணியத்தில் இருந்தபோது ஸ்ரீ ராமர், பரத்வாஜர், அத்ரி,
சரபங்கர், அகஸ்தியர் முதலிய ரிஷிகளுக்கு அதிதியாக இருக்கத் தயங்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். இது அவர் க்ஷத்திரிய தர்மத்துக்கு முரண் அல்ல.
சுக்ரீவனுக்கோ விபீஷணனுக்கோ கூட ஸ்ரீராமர் அதிதியாக இருந்தார் என்று வால்மீகி எங்கும் சொல்லவே இல்லை.ஒழுக்கத்தில் (வர்ணாஸ்ரம தர்ம) ஸ்ரீராமர் எவ்வளவு கண்டிப்பாக இருந்தார் என்பதையே இது காட்டுகிறது.

சபரியின் பக்தியைப் பெருமைப்படுத்துவதற்காக ‘நல்ல ருசியான பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கடித்துக் கடித்து ருசிபார்த்து அவள் ஸ்ரீ ராமருக்கு என்று சேர்த்து வைத்திருந்தாள், ஸ்ரீராமரும் அவற்றை அளவற்ற அன்போடு ஏற்றுக்கொண்டார்’ என்று சொல்லப்படுகிறது. அவள் சபர ஜாதியைச் சேர்ந்த ஸாதாரண ஸ்தீரீ அல்ல.

நிறைந்த பக்தியோடு பல ரிஷிகளுக்கு ஸேவை செய்தவள்; தானும் தபஸில் ஈடுபட்டிருந்தவள். ஸ்ரீராமர் அவளிடம், “ஆரோக்கியமாக இருக்கிறாயா?” என்று கேட்கவில்லை. “எல்லா இடையூறுகளையும் வென்றுவிட்டாயா? உன் தபஸ் மேலும் மேலும் வளர்ந்து வருகிறதா? கோபத்தையும் பசியையும் வென்றுவிட்டாயா?” என்பது போன்ற கேள்விகளையே கேட்கிறார். ‘தபஸ்ஸையே தனமாகக் கொண்டவளே’ என்ற சிறந்த அடைமொழியாலேயே ஸ்ரீராமர் அவளை அழைக்கிறார்.

அவளோ தன் தபோ மஹீமையினால் தன் உடலையே அக்னியில் ஆஹுதி செய்து ஸ்ரீராமர் ஸந்நிதியில் ஸ்வர்க்கத்தை அடைகிறாள். இத்தகைய பெருமையுள்ளவள், தான் கடித்து ருசிபார்த்த பழங்களின் சேஷத்தை ஸ்ரீராமருக்கு அளித்தாள் என்பதை நம்பமுடியுமா? இப்படி அவள் செய்தாள் என்று நினைப்பது அவளுக்கு மட்டும் அல்ல, அவள் ஸேவை புரிந்த மகரிஷிகளுக்கும் ஸ்ரீராமருக்கும் கூட அபசாரமே ஆகும். அப்படியே அவள் கொடுத்ததாக க் கொண்டாலும் எச்சிற் பழங்களையும் ஏற்று உண்ணுதல் ஆசாரக் குறைவு என்பதைக் கூட அறியாதவரா ஶ்ரீ ராமர்? என்று கேள்வி எழுப்புகிறார் ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள்.

இனிமேல் குஹனையும் சபரியையும் கூறி ராமராஜ்யம் அனைவருக்குமானது சமத்துவமானது என்பதை நிறுத்துங்கள்.உங்களுக்கு சனாதனி
ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் அளித்துள்ள பதில்களே போதுமானது!

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here