முதுபெரும் கல்வியாளர் S.S. ராஜகோபாலன் அவர்களுக்கு எமது அஞ்சலி!
தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் போராட்டங்களில் பெரும்பங்காற்றியவர்.
புமாஇமு நடத்திய பல்வேறு கல்வி தனியார்மய எதிர்ப்புப் போராட்டங்களிலும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் துணை நின்றவர். தள்ளாத வயதிலும் கூட்டங்களில் அவர் ஆர்வமுடன் பங்கேற்றது இளைஞர்கள், மாணவர்களுக்கு உத்வேகமூட்டியது!
கல்விப் புலத்தில் அவரது பங்களிப்பை நினைவில் கொள்கிறோம்!
கல்வி உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழ்நாடு.
000
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்களது மறைவு கல்விப்புலத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. பள்ளிக் கல்வியில் பணியாற்றிய எஸ்எஸ்ஆர் அவர்களின் கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களே பணிவோடு கருத்தூன்றிக் கேட்டனர். கல்வித் துறையின் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் வெறுமனே விமர்சனம் செய்பவராக மட்டுமல்லாமல், அவற்றிற்கான மாற்றுப் பரிந்துரைகளை சுட்டிக் காட்டியவராகவும் விளங்கினார்.
குறிப்பாகத் தமிழகத்தில் பயிற்சி மொழியாகத் தமிழ்தான் இருக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் இறுதிவரை வலியுறுத்தி வந்தார். இது குறித்து 161 நாடுகளுக்குச் சென்று வந்த பின், அவர் குறிப்பிட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாடுகள் அனைத்திலும் தாய்மொழிக் கல்விதான் பயிற்சி மொழியாக இருக்கிறது எனும் உண்மையைத் தெளிவு படுத்தினார். அதே சமயம் ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.உலகில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் பலரும் தத்தம் தாய்மொழியில்தான் கல்வி பயின்றவர்கள் என்ற உண்மையைப் பட்டியலிட்டார்.
தமிழகத்தில் மெட்ரிக் கல்வியை மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெருமளவு கொண்டு வந்த பொழுது, இதனால் இலவசக் கல்வி மறையும், தமிழ்வழிக் கல்வி ஒழியும் என அஞ்சாமல் இடித்துரைத்தார். அவரது எச்சரிக்கை இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் ஆங்கில வழிப் பள்ளிகள் கோலோச்சுவதைக் காண்கிறோம். தமிழ்மொழிக் கல்வி குறித்த அவரது பெருங்கனவு நிறைவேறவில்லை
அதே போல், கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க ஏழை — பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரும் ஒன்றாகக் கல்வி பயிலும் பொதுப்பள்ளிகள் தேவை என்று கனவு கண்டார். அதுவும் நடக்கவில்லை.
கல்வி அதிகாரம், மாநிலத்திற்குத்தான் இருக்க வேண்டும். எனவே கல்வி, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றார் அதுவும் எட்டாக் கனியாகக் கிடக்கிறது.
கல்வி, தனியார்மயமாகக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக சென்னையிலுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறிப்பிட்டார். அப்பள்ளி அமைந்துள்ள இடம், அரசின் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமானது எனவும், அரசு அதை 99 ஆண்டுகளுக்கு அப்பள்ளிக்குக் குத்தகைக்கு விட்டுள்ளது எனவும் அனைவருக்கும் எடுத்துரைத்தார். ஆனால், அப்பள்ளி இப்பொழுது கல்விக் கொள்ளையில் முன்னணியில் உள்ளது என்பதையும் துணிவோடு அம்பலப்படுத்தினார்.
கல்வியில் இந்தி / சமஸ்கிருதத் திணிப்பைச் சமரசமில்லாமல் எதிர்த்தார். பள்ளிகள், மாணவர்கள் மீது மொழிகளைத் திணிக்கும் பட்டறைகள் அல்ல என்பது அவரது நிலைப்பாடு. இந்தி / சமஸ்கிருதம் போன்ற மொழிகளைப் பள்ளிகளில் திணிப்பதைக் காட்டிலும், அறிவியல் தொழில்நுட்பத்திற்கு அதிகப் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும், அதுதான் முன்னேற்றத்திற்கு வழி எனத் தெளிவு படுத்தினார்.
படிக்க: புதிய கல்விக் கொள்கையை கிழித்தெறிவோம்! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப் போராடுவோம்!
வேதம், புராணக்கல்வியை அவர் அங்கீகரிக்கவில்லை. வெறும் நம்பிக்கையை வரலாறாக ஏற்க முடியாது எனப் பிரகடனப் படுத்தினார். அதே போல் பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய கல்விக் கொள்கையை அவர் நிராகரித்தார். மக்கள் நலன் சார்ந்த முற்போக்கான கல்வித் திட்டத்தை மாற்றாகப் பரிந்துரைத்தார்.
ஆசிரியர்கள், என்றும் புதிது புதிதாகப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் படிப்பதை நிறுத்தினால், ஆசிரியர் எனும் தகுதியை அவர்கள் இழந்து விடுவார்கள் என்பது அவரது உறுதியான கருத்தாக இருந்தது.
ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறுவதோடு நின்றுவிடாமல் ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளித்ததோடு களத்தில் அவர்களோடு நின்று போராடிய சமராளி அவர்.
எப்பொழுதும் ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். குறிப்பாகக் கிராமப்புறத்திலுள்ள மாணவர்கள், முதல்தலைமுறை மாணவர்கள் ஆகியவர்கள் மீது மிகுந்த கரிசனம் காட்டி அவர்களுக்கு ஊக்கமளித்து வந்தார்.
அவரை ஆர் எஸ் எஸ் தன்பக்கம் இழுக்க முயற்சித்த பொழுது, அதற்கு ஒரு சிறிதும் அவர் ஒப்பவில்லை. அதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமானது.
“நான் எஸ்எஸ்ஆர். எனது பெயரே
ஆர் எஸ் எஸ் என்பதற்கு எதிரானது ”
( SSR X RSS ) என நெற்றியடியாக அவர் பதிலுரைத்தார்.
இத்தகைய உயர்விழுமியங்களைத் தன் செல்நெறியாகக் கொண்ட எஸ் எஸ் ஆர் , அவர்கள் கல்வித் துறையில் என்றும் வழிகாட்டியாகத் திகழ்வார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அவருக்குப் புகழ் வணக்கம்.
கண.குறிஞ்சி
முகநூல் பதிவு







என் கனவுகள் பல நிறைவேறவே இல்லை கல்வியாளர் எஸ் எஸ் ஆர்!
தமிழ் மொழி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் எம் ஜி ஆர் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தும் பொழுது இலவச கல்வி ஒழிக்கப்படும் என்று எச்சரித்தவர் கல்வி தனியார்மயம் ஆக்கக்கூடாது கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் குறிப்பாக சமஸ்கிருத இந்தி மொழியை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது தமிழ் மொழி முதன்மையாகவும் ஆங்கில மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியவர் தமிழக மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் கல்வியில் சிறந்த சிந்தனையாளராகவும் விளங்கியவர் எஸ் எஸ் ஆர் அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் சிந்தனைகளை செழிமையாக்குவோம் .நன்றி