சிவசேனா ஆட்சிக் கவிழ்ப்பு! குளு குளு ரெஸ்டாரண்ட் குடி, கும்மாளம்! சந்தி சிரிக்கும் இந்திய ஜனநாயகம்!

உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது

சிவசேனா ஆட்சிக் கவிழ்ப்பு!
குளு குளு ரெஸ்டாரண்ட் குடி, கும்மாளம்! சந்தி சிரிக்கும் இந்திய ஜனநாயகம்!


மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியமைப்பை கலைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி செய்து வருகின்ற குதிரை பேரங்கள், கட்சிக்குள் உள்ள பதவி வெறியர்களை இழுத்து ஆட்சியை கைப்பற்ற நடத்துகின்ற சதிச்செயல்கள் ஆகிய அனைத்தையும் சுவாரசியமான, கிளுகிளுப்பான கதைகளை போல எழுதி ஊடகங்கள் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக் கொள்கின்றன.

உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியின் தலைமையில்  மகா விகாஷ் அகாடி அரசு நடந்து வந்தது. மராட்டிய மேலவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டளித்த செயலுக்குப் பின்னர் கடந்த இருபதாம் தேதி இரவு சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மந்திரி ஏகநாத் ஷிண்டே தலைமையில் ஒன்று திரண்டு அசாம் மாநிலம் கௌகாத்திக்கு சென்றனர்.

உத்தவ் தாக்கரே உடன் ஏக்நாத் ஷிண்டே

அங்குள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டு குடி, கும்மாளம் என கூத்தடித்துக் கொண்டிருந்தனர். சொந்தக் கட்சியின் மீது விசுவாசம் இல்லாத இந்த கும்பல் பதவி வெறியுடன் ஊரை விட்டு ஓடி சுற்றித்திரிந்தது.

இந்தியாவில் கட்சியின் கொள்கை, தலைமையின் மீது விசுவாசம் போன்ற குறைந்தபட்ச விழுமியங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டுக் கட்சிகள் சீரழிந்து மூன்று தசாப்தம் ஆகிறது.

இந்த பின்னணியில் இருந்து பார்க்கும் போது சிவசேனா கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் என்று 39 பேர் திடீரென்று தோன்றி விட்டார்களா என்ன?

அப்படித்தான் முதலாளித்துவ மஞ்சள் பத்திரிகைகள் எழுதி தள்ளுகிறார்கள். தான் முதல்வராக வரவேண்டும் என்ற பதவி வெறியில் சிவசேனா ஆட்சியை கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே “மகா விகாஸ் அகாடி அரசின் பிடியிலிருந்து சிவசேனா மற்றும் அதன் தொண்டர்களை விடுவிக்க நான் விரும்புகிறேன். இதனை சிவசேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே நான் போராடி வருகிறேன் இந்தப் போரானது கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக” என்று வாதம் புரிகிறார்.

கவனியுங்கள்! மகாராஷ்டிரா மக்களின் முன்னேற்றத்திற்காக என்று கூறவில்லை. தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக என்று தனது பதவி பேர அரசியலால் கிடைக்கும் ஆதாயத்தின் பலன்களை அனைவருக்கும் தருவேன் என்பதே அவரது வாதத்தின் பொழிப்புரையாகும்.

மிஸ்டர் கிளீன் சீட் அரசியல் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் யோக்கியதை இதுதான். ஷிண்டே கூறும் தொண்டர்களின் முன்னேற்றம் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தி ரிசார்டுகளில் இருந்து கோவாவில் உள்ள தாஜ் ரிசார்ட் வரை சந்தி சிரிக்கிறது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பாசிச ஜெயாவின் மரணத்திற்கு பிறகான கூவத்தூர் ரிசார்ட் கும்மாளங்கள் ஓட்டுக் கட்சி அரசியலின் யோக்கியதையை நமக்கு தெளிவடைய வைக்கிறது. கூவத்தூர் சின்னம்மா கொத்தடிமைகள், சின்னம்மாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியதும் ஆட்சியை இழந்த பிறகு தங்களுக்குள் அடித்துக்கொண்டு நாறி வருவதும் நாம் அறிந்த செய்திகள் தான்.

தனியார்மயம், தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்த துவங்கிய பிறகு கட்சிகள் அதன் கொள்கை கோட்பாடுகளை முற்றிலுமாக இழந்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தனது ஓட்டு வங்கியை நிறுவனமயமாக்குவது, அதன் மூலம் பேரங்களை நடத்தி பதவியை பிடிப்பது அல்லது பதவியை தக்க வைத்துக் கொள்வது என்பதுதான் கட்சிகளின் ஒரே வேலையாக மாறி உள்ளது.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி பிற கட்சிகளை விமர்சித்து ‘தேச பக்தர்களை’ கொண்ட கட்சி என்றெல்லாம் தனக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்தது. தமிழகத்தின் திடீர் தலைவர் அண்ணாமலை இன்று வரை தனது கட்சி யோக்கிய சிகாமணிகளின் கூடாரம் என்று வாயடித்து வருகிறார்.

உண்மையில் நாடு முழுவதும் உள்ள பதவி வெறியர்கள், பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகள், சாதி, இன, பார்ப்பன மதவெறியர்கள், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்த குட்டி தாதாக்கள் முதல் பெரிய தாதாக்கள் வரை பொறுக்கிகள், ரவுடிகள் உள்ளடக்கிய கொள்கை கோட்பாடுகளற்ற பாசிச குண்டர்படை தான் இவர்களின் அடிமட்ட, மேல்மட்ட தொண்டர்கள்.

அகண்ட பாரத கனவுடன் கார்ப்பரேட்டுகளுக்கு, உடைபடாத அகண்ட சந்தையை உருவாக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் பார்ப்பன, பனியா முதலாளிகளுக்கு இது போன்ற கொள்கை கோட்பாடுகளற்ற குண்டர் படைத்தான் தேவைப்படுகிறது. அந்த குண்டர் படைக்கோ பதவி, பணம், பவிசு போன்றவை மட்டுமே குறியாக உள்ளது.

இந்த கேடுகெட்ட பாசிச கும்பல் தேசபக்தியுடன் போராடுகின்ற சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது கொடூரமான அடக்குமுறைகளை ஏவி விடுகிறார்கள்.

படிக்க:

கோதுமை ஏற்றுமதிக்கு தடை கார்ப்பரேட் சேவையில் பாஜக!

நாட்டில் நடப்பது பாசிச பயங்கரவாத ஆட்சி! இல்லை என்பவர்கள் அனைவரும் பாஜகவின் கட்சி!

இசுலாமியர்கள் தான் இந்த நாட்டின் எதிரிகள் என்பதைப் போல சித்தரித்து இன வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி தனது கார்ப்பரேட் சேவையை மூடி மறைக்கிறார்கள்.

ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிராவில் செய்த  கூவத்தூர் ஃபார்முலா இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையையும் ஓட்டுக் கட்சிகளின் உண்மையான முகத்திரையையும் கிழித்தெறிகிறது.

இன்னமும் இந்த ஓட்டுக் கட்சி அரசியல் மீது நம்பிக்கை வைப்பது ஏமாளித்தனமும், பாமரத்தனமுமாகும்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here