மூச்சுத் திணறுகிறது டெல்லி; முதற்காரணம் முதலாளித்துவம்!

பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் பீஜிங் காற்று மாசுவின் தலைநகராக இருந்தது. சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்கவில்லை., 2013 –ல் போடப்பட்ட ஐந்தாண்டு செயல்திட்டத்தின் விளைவாக 42% காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளது.

4

பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படத்தில் வற்றிப் போய் புழுதி படிந்த கங்கை நதியின் மீது வாகனம் செல்வதைப் போல ஆரம்ப காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒரு காட்சியைத் தான் இப்போது டெல்லி மக்கள் பார்த்து வருகிறார்கள். ஆனால் நஞ்சாகிப் போன கங்கையில் தண்ணீர் மட்டும் இன்னும் மிச்சமிருக்கிறது.

சென்னையின் மழைவெள்ளம் போல பருவ காலங்களில் டெல்லி தொடர்ந்து சந்திக்கும் பிரச்சனை காற்று மாசு. வருடத்தின் இறுதி மாதங்களில் தலைப்புச் செய்திகளாகும் இந்த பிரச்சனைகள் பின்னர் கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால் அதன் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் மீள்வதற்குள் அடுத்த வருடம் வந்து விடுகிறது. 100 என்கிற அளவில் இருக்க வேண்டிய AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக இருப்பதால் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். 2007-ல் புகை இல்லா நகரமாக பெயரெடுத்த சண்டிகர், 2024-ல் இந்தியாவின் இரண்டாவது மோசமான மாசுபட்ட நகரமாக உருவெடுத்துள்ளது.

49 சிகரெட்கள் பிடித்தால் ஒரு மனித உடலுக்கு என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த நிலைமையில் தான் காற்றின் தரம் உள்ளதாகவும், சுவாசக் கோளாறுகள் மட்டுமின்றி, நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்படுவது, இதய மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது என்கிறார், டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் நிகில் மோடி. டெல்லி மக்கள் சுவாசிக்கவில்லை மாறாக புகைக்கிறார்கள். இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பஞ்சாபில் காற்று தர குறியீடு 2000 அளவுக்கு உயர்ந்திருப்பதால் அப்பகுதியில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயிர்க்கழிவுகளை எரித்தலை தடுப்பது, வாகன போக்குவரத்தை குறைப்பது, கட்டுமானங்களை நிறுத்துவது, பட்டாசுகளுக்குத் தடை என காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அரசு. நவம்பர் 18 முதல் Graded Response Action Plan (GRAP-IV) நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 20 முதல் அடுத்த அறிவிப்பு வரை 50% அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய உத்தரவிடப்பள்ளது. லட்சங்களில் காற்று சுத்திகரிப்பான்களை வாங்கி பொருத்தி, அதன் முன்னால் அமர்ந்து கொண்டு மக்கள் கடைபிடிக்க வேண்டிய இந்த கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டுள்ளார்கள்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிடுதல், ஒற்றை இரட்டை இலக்க வாகன போக்குவரத்தால் வியாபரம் பாதிப்பு என இந்த கட்டுப்பாடுகளால் சிறு வணிகர்களுக்கு இரட்டைச் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார், அனைத்து இந்திய வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தெல்வால். பள்ளிக் கல்லூரி மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. வசதியில்லாத ஏழை கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் கலந்து கொள்ள முடியாமல் கல்வி புறக்கணிக்கப்படுகிறது.

அக்டோபர் நவம்பரில் விளைச்சலுக்கு பின்னர் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகிறது. பஞ்சாபில் மட்டும் ஒரே நாளில் 1251 முறை பயிர்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது. இது இந்த பருவத்தின் மிக அதிகமான எரிப்பு நடவடிக்கை. கட்டுபாடுகளால் தங்கள் வாழ்க்கை முடங்கி விடுமோ என்கிற பயத்தில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துள்ளனர். அண்டை மாநில அரசுகள் வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதால், பயிர்க்கழிவு எரிப்பில் மாறி மாறி குற்றஞ்சொல்லி பிரச்சனையை தட்டிக்கழிக்கின்றனர். கட்டிட வேலைக்கு செல்லும் தினக்கூலிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. காற்று மாசினால் மூச்சை அடக்கி, பசிக்கு வயிற்றை சுருக்கி மெல்ல சாகிறது தொழிலாளி வர்க்கம்.


படிக்க: தனது வாரணாசி தொகுதியில் மோடி கொண்டு வந்த வளர்ச்சி


சுத்தமான காற்று மற்றும் ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின் படி, பயிர்க்கழிவுகள் எரிப்பினால் வெளியாகும் வாயுவை விட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் 16 மடங்கு அதிகமான சல்பர் டைஆக்ஸைடு வாயுவை உமிழ்வது கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் 281 கிலோ டன்கள் சல்பர் டைஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகின்றன. பயிர்க்கழிவுகள் எரிப்பினால் 17.8 கிலோ டன்கள் உமிழப்படுகிறது. மேற்சொன்ன ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியபடி சல்பர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த flue gas desulphurisation தொழிநுட்பத்தை ஒரே ஒரு மின் நிலையத்தில் மட்டுமே அமைத்திருக்கிறார்கள். காற்றை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது குறித்து அரசின் அக்கறையை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்

பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் பீஜிங் காற்று மாசுவின் தலைநகராக இருந்தது. சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்கவில்லை., 2013 –ல் போடப்பட்ட ஐந்தாண்டு செயல்திட்டத்தின் விளைவாக 42% காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடியதன் விளைவாக இது சாத்தியமாக்கப்பட்டது. தற்போது சுற்றுச்சூழலை பாதிக்காத வன நகரத்தை சீனா உருவாக்கியுள்ளது.

இது இயற்கை பேரிடர் அல்ல. மாறாக நகரமயமாக்கல் மற்றும் ஆலை சார்ந்த நச்சுக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரிடர். இதற்கு ஆளும் வர்க்கமும் அரசும் தான் பொறுப்பு. பெருமழை, வெள்ளம், வறட்சி, பருவநிலை மாற்றம் என அனைத்துக்கும் காரணம் இயற்கை சூறையாடலே. மறுசுழற்சிக்கு இடம் கொடுக்காமல் கட்டற்ற முறையில் இயற்கையை சுரண்டும் முதலாளிகளால் தான் பூமியில் மனித குலம் வாழத் தகுதியற்ற நிலை உருவாகி உள்ளது இயற்கைக்கும், மனிதகுலத்துக்கும் எதிரானது முதலாளித்துவ உற்பத்தி முறை. பூமியை பாதுகாக்க வேண்டும் என்றால் முதல் படி முதலாளித்துவத்தை ஒழித்திட வேண்டும். செயற்கை மழையோ, காற்று சுத்திகரிப்பான்களோ அல்லது கட்டுப்பாடுகள் என்கிற பெயரில் செய்யப்படும் சில்லறை சீர்த்திருத்தங்களோ ஒருபோதும் பிரச்சனையை தீர்க்காது. அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்த வீரியமிக்க போராட்டம் தான் டெல்லி மீது குவிந்துள்ள மஞ்சள் புகை மேகத்தை கலைக்கும் சக்தி கொண்டது.

  • செல்வா

4 COMMENTS

  1. சீனா அனுபவங்களை பார்த்தாலும், டெல்லி நகரமே அழிந்தாலும் இந்த அரசு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடப் போவதில்லை, காரணம் மோடியின் நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள், இவர்களின் வளர்ச்சி தான் நாட்டுக்கு முக்கியம், மக்கள் எக்கேடு கேட்டாலும் நமக்கு என்ன?

  2. இந்த கட்டுரையில் விவரங்களுக்கு இடையே உள்ள தொடர்புகள் குறித்து புரிதலுக்காக சில கருத்துக்கள்
    //இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பஞ்சாபில் காற்று தர குறியீடு 2000 அளவுக்கு உயர்ந்திருப்பதால் அப்பகுதியில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.//இப்படி குறிப்பிடுவதால் ஏதோ அந்த பகுதியின் ஆலைகளின் காற்று மாசு காரணமாக நடப்பது போன்று கட்டுரை உள்ளது மாறாக இயற்கையான காற்றின் போக்கு மற்றும் வெட்ப நிலை பருவ காலம் இதற்கு காரணம் ferrel cells western disturbance என்று சொல்லக்கூடிய மத்திய தரை கடலில் இருந்து வரும் அழுத்தம் நிறைந்த கடிகார காற்று சுழற்சி இந்த காற்று சுழற்சியில் அந்த பகுதியை சுற்றியுள்ள தூசு மாசுக்களை இழுத்து வந்து பகபாகிஸ்தான் இந்தியா சீன பகுதிகளில் குவிக்கும்! பருவமழை பின்வாங்கும் காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வு இப்படி இயற்கையாக நிகழும் காற்று சுழற்சியில் ஐரோப்பிய காற்று மாசுகளும் அடக்கம். எனவே தான் வளர்ச்சி? பெற்ற நாடுகளும் பருவநிலை மாற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பருவநிலை மாற்றத்தால் நேரடியாக உடனடி பாதிப்புகளை சந்திக்கும் பூமத்திய ரேகை பகுதி நாடுகள், வளரும் நாடுகள் கோருகிறது. இந்தியாவின் விஷ்வ குருவின் சிறம் தாழ்ந்த நிலைப்பாட்டை பொருத்திப் பார்க்க வேண்டும்.

    //பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் பீஜிங் காற்று மாசுவின் தலைநகராக இருந்தது. சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்கவில்லை., 2013 –ல் போடப்பட்ட ஐந்தாண்டு செயல்திட்டத்தின் விளைவாக 42% காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளது.//
    இதற்கு ஆதாரம் இருக்கிறதா? பருவநிலை மாற்றத்தால் பெரும் அளவு காற்று சுழற்சியில் பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவே எந்த அடிப்படையில் என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    //இது இயற்கை பேரிடர் அல்ல. மாறாக நகரமயமாக்கல் மற்றும் ஆலை சார்ந்த நச்சுக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரிடர்//
    முதலாளிகளித்துவ உற்பத்தி முறையால் உருவாக்கப்பட்ட இயற்பேரிடர் “செயற்கை பேரிடர்” என்று சுருக்கமாக கருத இயலாது.
    நன்றி

  3. பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் பீஜிங் காற்று மாசுவின் தலைநகராக இருந்தது. சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்கவில்லை., 2013 –ல் போடப்பட்ட ஐந்தாண்டு செயல்திட்டத்தின் விளைவாக 42% காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளது.

    https://m.economictimes.com/news/india/aqi-blues-what-india-can-learn-from-china-to-curb-air-pollution/articleshow/115420397.cms

  4. //இயற்கையான காற்றின் போக்கு மற்றும் வெட்ப நிலை பருவ காலம் இதற்கு காரணம் ferrel cells western disturbance என்று சொல்லக்கூடிய மத்திய தரை கடலில் இருந்து வரும் அழுத்தம் நிறைந்த கடிகார காற்று சுழற்சி இந்த காற்று சுழற்சியில் அந்த பகுதியை சுற்றியுள்ள தூசு மாசுக்களை இழுத்து வந்து பகபாகிஸ்தான் இந்தியா சீன பகுதிகளில் குவிக்கும்!//

    இது சம்மந்தமான தரவுகள் இருந்தால் அனுப்பவும். நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here