இந்திய பெண்ணியத்தின் தாயார்
சாவித்திரிபாய் புலே


“ஒரு பெண் வெளியில் புறப்பட, உடையணிந்து தயாராகிய பின், பையில் ஒரு மாற்று உடையை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர் மீது கற்களும், மாட்டுச் சாணமும், மனித மலமும் வீசப்படுகின்றன. தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் குளித்து உடை மாற்றிவிட்டு தன் பணியைத் தொடர்கிறார். யார் அந்தப் பெண்? ஏன் இத்தனை அவமானங்கள்? இவ்வளவு இழிவுப்படுத்தும் அளவுக்கு அவர் என்ன செய்தார்?

சாதியின் பெயரால், பெண் என்பதனால் கல்வி மறுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வியினைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கை கொண்டு தீவிரமாக உழைக்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு சமூகம் தரும் பரிசு என்னவாக இருக்கும். கல்வீசி காயப்படுத்துதலும், சாணங்களை வீசி அவமானப்படுத்துவதுமா? ஆம், அதைத்தான் செய்தது இந்தச் சாதிய சமூகம்!”

“சாவித்திரி பாய் புலே இந்திய வரலாற்றில் அதிகம் உச்சரிக்க மறந்த அல்லது மறுத்த ஒரு பெயர். சாவித்திரிபாய் புலே மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி வாய்ப்பு இல்லாத வகுப்பைச் சார்ந்தவர். அக்கால வழக்கப்படி தனது 9 வயதிலேயே ஜோதிராவ் புலேவுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். ஜோதிராவ் புலே ஒரு சமூகப் போராளி. அக்காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடியவர் புலே. அவரே சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி போதிக்கிறார். அவர் கற்றுத்தேர்ந்த பி்ன், இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைக் கொடுக்கப் புறப்படுகிறார்கள். 1847-ல் ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினர்.

அன்றைய காலகட்டத்தில் குழந்தைத் திருமணம் மிகுந்து இருந்ததால் இளம் வயதிலேயே விதவையான பெண்கள் பலர் இருந்தார்கள். பின் 1848-ம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண் குழந்தைகளுக்கான பள்ளியை பூனேவில் தொடங்குகின்றனர். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் சாவித்திரி பாய் புலே. அன்றைய காலகட்டத்தில் கல்வி பயிற்றுவித்த பெண் அவரே. ஆம், அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அதற்குப்பின் 1849-ல் ஒரு பள்ளியைத் தொடங்குகின்றனர் அன்றைய இந்தியாவில் அனைத்து மக்களுக்குமான அதாவது பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள் என அனைவருக்குமாக இயங்கிய ஒரே பள்ளி அதுதான். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, சாவித்ரி பாய் புலே கல்வி வழங்கியதை அன்றைய பழைமைவாதிகள், சாதியினர் விரும்பவில்லை. எனவே சாவித்திரி செல்லும் வழி எங்கும் கற்களையும் சாதனங்களையும் அவர் மீது வீசினர். இதை, கணவர் ஜோதிராவிடம் கூறி வருந்த அவர் பழைய ஆடைகளை அணிந்துகொண்டு போ! பின் அங்குச் சென்று நல்ல உடைகளை உடுத்திக்கொள்’ என்றார் அதனையே பின்பற்றினார் சாவித்திரி பாய்.

அக்கால கட்டத்தில் தீண்டாமையின் கொடுமை அதிகம் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் மறுக்கப்பட்டது. ஆகையினால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கண்டு, தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். குழந்தைத் திருமணத்தால் விதவையான பெண்களுக்கு தலை முடியை மழித்து விடும் கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்தது. அப்பணியைச் செய்து வந்தவர்களே அச்செயலை மறுக்கும் அளவுக்குத் தீவிரமாகப் போராடி வெற்றி பெற்றார்கள் புலே தம்பதி. இந்த 21- நூற்றாண்டிலேயே மறுமணம் செய்து கொள்பவர்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சமூகம் இருக்கையில் 18-ம்
நூற்றாண்டிலேயே விதவைகளுக்கு மறுமணம்”

“சாவித்திரிபாய் புலே நல்ல கவிஞரும் ஆவார். மராத்தியத்தில் நவீன கவிதைப் போக்கு இவரில் கவிதைகளிலிருந்தே தொடங்குகின்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆராயும் பணி புரிந்துகொண்டிருக்கும் பேராசிரியர் டாம் உல்ப் என்பவர் ஆயிகோஸ் என்ற உலகப் பத்திரிகையில், சாவித்திரிபாய் புலேவை இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை’ என்று குறிப்பிடுகிறார்.

1852ல் இவர் தொடங்கி வைத்த `மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புஉணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. மகாராஷ்டிராவை பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர். ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது. சாவித்திரி பாய் புலே அயல்நாட்டில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த தன் மகனை இந்தியா அழைத்துவந்து மருத்துவமனை அமைத்துக்கொடுத்தவர் சாவித்ரி பாய். நோயால் அவதிப்பட்டவர்களைத் தோளில் சுமந்து வந்து தன் மகனின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவியவர் புலே.

ஒருமுறை பாண்டுரங்கன் என்கிற 10 வயதுச் சிறுவனை தூக்கி வரும்போது நோய்த்தொற்று பரவியது புலேவுக்கு. பாண்டுரங்கன் பிழைத்துக்கொள்ள நோயால் மரித்துபோனார் புலே. மரித்துப்போன கணவரை எமனிடமிருந்து மீட்கவில்லை இந்த சாவித்ரி. பதிலாக… அவரின் கொள்கை எனும் நெடிய சங்கிலியை இறுக்கப் பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இழுத்துச் சென்றவர். அதற்காகவே உயிர் துறந்தவர். இத்தகைய மாமனிதரின் பிறந்த தினம் இன்று.

கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே இருந்ததால், வரலாறு என்பது அவர்களே அவர்களுக்காக எழுதிக்கொண்டதாக அமைந்துவிட்டது. ஒவ்வோர் இந்தியரும் நினைவில் வைத்திருக்க வைத்துக்கொள்ள வேண்டியவருக்கு உன்னதமான சேவையும் , தொண்டும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலேயே போய்விட்டன. கடந்த 2017 ம் ஆண்டு இவரின் பிறந்த தினத்திற்கென பிரத்தியேக `கூகுள் டூல்’ அமைத்துச் சிறப்பித்தது கூகுள். இன்று கல்வி அனைவரிடத்திலும் இருக்கிறது வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலையில் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாள் பெண் குழந்தைகளின் கல்வி தினமாகக் கொண்டாப்பட வேண்டும்.

அமுதினியன். இரா.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here