பொதுவாக நீதிமன்ற வழக்குகள் குறித்து பதிவு போடுவதில்லை. ஆனால் நடந்த பஞ்சாயத்து, பதிவு போட வைக்கிறது. ஜீவ காருண்யம் பேசும் கோசாலைகளின் லட்சணம் எப்படி உள்ளது என்று பதிவு செய்யவே….

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு போன சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 30 எருமை மாடுகளை தேச பக்தர்கள் குழு கருமத்தம்பட்டி டோல் கேட்டில் தடுத்து நிறுத்தி அப்படியே கோசாலைக்கு அள்ளிப் போகிறது.

இப்படி அள்ளிக் கொண்டு போகும் தேச பக்த தலைவனை மனநிறைவு பெரும் வகையில் ‘கவனித்தால்’ உடனே மாடுகளுக்கு விடுதலை கிடைக்கும். கவனிப்பு போதவில்லை என்றால் நேராக கோசாலைக்கு அனுப்பி அப்புறம் பஞ்சாயத்து நடக்கும். இப்படி தான் அந்த 30 மாடுகளும் கோசாலைக்குப் போனது.

அரசியல் நெருக்கடியால் வேறு வழி இன்றி காவல் துறையும் விலங்குகளை கொடுமைப்படுத்திய பிரிவு, அதிக கூட்ஸ் ஏற்றிய பிரிவு என பல பிரிவுகளில் வழக்கு பதிந்து கோசாலைக்கு போக அனுமதிக்கிறது. இப்படியான வழக்குகளில் இவர்களோடு மல்லுக் கட்டி மாடுகளை மீட்க எந்த உரிமையாளரும் விரும்புவதில்லை.

அதனால் தேச பக்தர்களால் கைப்பற்றப்பட்ட மாடுகள் என்ன ஆனது என்பது குறித்து அதன் பின்பு காவல்துறையோ நீதிமன்றமோ கண்டு கொள்வதில்லை.

ஆனால் இந்த வழக்கில் மாடுகளின் உரிமையாளர் எந்த விதி மீறலும் செய்யவில்லை என்றும் வெட்டுக்கு போகவில்லை என்றும் கீழமை நீதிமன்றத்தில் மாடுகளைத் திரும்ப ஒப்படைக்குமாறு மனு செய்கிறார். நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்கிறது. மேல் முறையீடு சென்னை உயிர் நீதிமன்றத்தில் செய்து அது விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட கொண்டு போன மாடுகள் என்று உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்து சில நிபந்தனைகளுடன் உரிமையாளரிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கிறது. இதுவெல்லாம் பஞ்சாயத்து இல்லை.

முறைப்படி கீழமை நீதிமன்றம் முன்பு திரும்ப ஒப்படைக்க கோரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூன்று நாட்களாக மாடுகள் எப்படி உள்ளது என்று பார்க்க போன காவல் அதிகாரிகளை வளாகத்தில் உள்ளே (கேட்டுக்குள்) விட மாட்டோம் என்று கோசாலை நிர்வாகம் மறுத்து விட்டது.

உண்மையாகவே மாடு இருக்கிறதா இல்லை இவர்களே வெட்டுக்கு அனுப்பி விட்டார்களா என்று காவல் துறைக்கு சந்தேகம். காவல் துறை பொறுப்பில் இருக்கும் நீதிமன்ற பொருள் என்பதினால் ஒருவேளை மாடுகள் இல்லை என்றால் போலீஸ் தான் புதியதாக மாடுகளை விற்பனை வாங்கி நீதிமன்றத்தில் இதுவரை பத்திரமாக வைத்திருந்ததாக ஒப்படைக்க வேண்டும். இதென்னடா தலைவலியாக போச்சு என்று காவல் துறை பதட்டமாகியது.

மாடுகளின் தற்போது நிலையை பார்க்க கோசாலைக்கு முதலில் ஒரு போலீஸ் போய் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று திரும்பி வந்தார்.. அப்புறம் இரண்டு பேர் போய் திரும்பி வந்தார்கள். பிறகு மூன்று பேர்.. கோசாலை நிர்வாகம் ” அதெல்லாம் உள்ளே விட முடியாது ” என்று கட்டன் ரைட்டாக சொல்லி விட்டது. “அடேய் அது எங்க ப்ராப்பார்ட்டி டா ” என்றார்கள் அதிகாரிகள்.

தேச பக்தர்கள் ” நோ கோசலைக்கு உள்ளே வந்தால் அது எங்க ப்ராப்பர்ட்டி ” என, என்னடா கிருக்கனுங்களா இருக்காணுங்களே என்று எஸ்ஐக்கு தகவல் சொல்ல அவரும் நம்பாமல் வருகிறார். அதே பதில் தான், “போன் பூத்துக்குள் போகும் வரை தான் அது உங்க காய்ன் போய்விட்டால் அது எங்க காயின்” என்று தத்துவம் பேச.. அவர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொல்கிறார். அவர் வருகிறார். இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு அல்ல ஒரே பேச்சு “மாடுகள் எங்களுக்கே சொந்தம் நாங்கள் கோமாதாவை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறோம்” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் “உரிமையாளரே கண்ணும் கருத்துமா பார்த்துகிறதா சொல்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி இருக்காங்க” என்று சொல்லியும் அனுமதிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் காவல் துறை அதிகாரிகள் கடுமையாக அவமானப் படுத்தப்பட்டார்கள்.

அவர் எஸ்.பிக்கு தகவல் சொல்ல.. மண்டை உடைத்து ஒருவழியாக மாடுகளை நீதிமன்றம் கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்களுக்குள் பெண்டு கலன்று விட்டது. 30 மாடுகளில் 25 மாடுகள் மட்டுமே நீதிமன்றம் வந்தது.

“யப்பாடா முடிஞ்சது என்று ” அவர்கள் முடிவு செய்த நேரம் கோசாலை சார்பாக வந்து இறங்கிய வக்கீல் அரைமணி நேரம் பல உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றம வழக்குகள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி பிராணிகளை எப்படி கையாள வேண்டும் என்கிற சட்ட வழிகாட்டுதல்களை வரிசையாக சொல்ல, நீதிபதியும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்க, ஐயோ மறுபடியும் கோசாலைக்கு விடச் சொல்லிடுவாங்களா! என்று காவல் துறை அதிகாரிகள் பதற ஆரம்பித்து விட்டார்கள்.

உரிமையாளர் சார்பாக ஆஜரான வக்கீல் (நான் தான்) எந்த குறுக்கீடும் செய்யாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவுடன் கூடுதல் பதட்டமாகி விட்டது.

நேரம் செல்ல செல்ல நீதிமன்றத்தில் தேச பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. போலிசுக்கு அந்த நெருக்கடி வேறு தனியாக இருந்தது. கோசாலை வழக்கறிஞர் பேச பேச நான் நடுவில் எழுந்தால் நீதிபதியும் இருங்க சார் அவர் பேசட்டும் என்கிறார். ஒரு வழியாக அவர் முடித்தவுடன் நான் எழுந்து ” இவர் யார் இவர் எதுக்கு பேசறாரு, இந்த கேசுக்கும் இவருக்கும் என்ன சம்மதம், அவர் பேச தகுதியே இல்லை ” என்று சொன்னதும் அந்த வழக்கறிஞர் பதறி விட்டார். என்னடா தொண்டை தண்ணி வத்த கத்திருக்கோம் இந்தாளு பொசுக்குன்னு நீ யாருணு கேக்குறாரு ” என்ற கோபம் வேறு. நீதிபதிக்கும் அந்த சந்தேகம் வந்தது.

இந்த வழக்கு உரிமையாளருக்கும் அரசுக்கும் உள்ள வழக்கு, இதில் பேச கோசாலைக்கு உரிமையே இல்லை. இந்த வழக்கில் கோசாலை ஒரு தரப்பே இல்லை என்று உயர் நீதிமன்ற ஆணை சுட்டி காண்பித்த பின்பு தான் அவரும் அலர்ட் ஆனார். “வயித்துல பாலை வார்த்த அய்யா ” என்பதை போல போலிசுக்கு நிம்மதி. கோசாலை நிர்வாகம் தன்னை ஒரு தரப்பாக சேர்க்க சொல்லி போகவும் இல்லை. இப்படியே பஞ்சாயத்து பண்ணி வண்டி ஓட்டுவதை போலவே இதிலும் இருக்கலாம் என்று கொஞ்சம் அசால்ட்டா இருந்து விட்டார்கள்.

கோசாலைக்கு பின்புள்ள அரசியல் புவியியல், குடிமை இயல், பொரியல் எல்லாம் விலக்கி முடித்தவுடன் சூழல் மாறியது. உடனே கோசாலை வழக்கறிஞர் “நாங்கள் எவ்வளவு பெரிய சமூக சேவை செய்கிறோம், எங்க செயலுக்கு இவ்வளவு தான் நீதிமன்றம் மரியாதை தருமா ” என்று கேட்க “நீங்க எங்க சார் அவ்வளவு கஷ்டப்பட்டு சமூக சேவை செய்கிறீர்கள்” என்று நான் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். கடுப்பாகி விட்டார்.

” மாடுகளுக்கு மருத்துவம் பார்த்து, நல்ல உணவு கொடுத்து அற்புதமாக பராமரிக்கிறோம் ” என்று பில்டப் கொடுக்க அந்த நொடிக்காகத்தான் காத்து கொண்டு இருந்தேன். மாடு பிடிக்கும் போது எடுத்து வந்த வீடியோ போட்டோ எல்லாவற்றையும் அப்படியே எடுத்து காட்ட “பல நாள் சோறு போடாமல் என்னை விடுங்கடா போய் சேருகிறேன்” என்று மயக்கத்தில் இருந்த மாடுகளை காண்பித்தேன். 30 மாடுகளில் 3 மாடுகள் இறந்து விட்டது. அதுதான் பராமரித்த லட்சனம் என்று சொல்லவும், நீதிபதி பாஸ் ஓவர் for orders ” என்று சொல்லிவிட்டார்.

சொந்த அவசர வேலையாக நான்கு மணிக்கு பர்மிசன் போட்டு கிளம்பயிருந்த நீதிபதியை இரவு பத்து மணிவரை தேச பக்தர்களால் இருக்க வேண்டியாகியது.

வெளியே வந்த என்னிடம் இன்ஸ்பெக்டர் “சூப்பர் சார் செம்ம ஆர்குயூமன்ட் ” என்று கை கொடுத்த போது அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சார் அந்த வக்கீல் பேசுறத பார்த்தால் மறுபடியும் அங்கேயே விட சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன். ” ஒரே ஒரு மாடு மட்டும் என்ன ஒரு மணிநேரம் ஓட வீட்டிடுச்சு சார் ” என்று சொல்லும்போது நிஜமாகவே சிரித்து விட்டேன். ஆனால் அவர் பாவம் தான். போலிசுக்கு வந்த சோதனை.
“எதுக்கு சார் போய் விடணும் அவங்கள்ட அசிங்க படனும் ” என்றேன். “இது மேல் இடம் வரைக்கும் போய்டுச்சு சார் இனிமேல் கோசலைக்கு அனுப்பிறது சம்மந்தமா மேல் இடம் முடிவு எடுப்பார்கள்” என்றார். உண்மையை சொன்னால் கோசாலைக்கு போகும் மாடுகள் நிலைமை பரிதாபம்.

மாடுகளை பார்க்க வெளியே வந்த நீதிபதி ஒரு லாரியில் 6 மாடுகள் தான் இருக்க வேண்டும், அதுவும் இன்ஜின் பார்த்து நிற்க வேண்டும் என்கிறது சட்டம் அப்படி நிறுத்துங்கள் என்றார். ஆனால் மாடு நிற்க மாட்டிங்குது. அவரும் “நேர நிற்க சொல்லுங்க” என்றார். நான் குறுக்கிட்டு “அது என்ன போலீஸ் வேலைக்கா வந்திருக்கு நேர நிற்க சொன்னா நிற்க! அது மாடு ” என்றேன். ஒரு வழியாக மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவு போட்டார். மாடுகளை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறை உள்ளது. அதில் தண்ணீர் புல் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே எதிர் தரப்பு வழக்கறிஞர் பேசியதினால் அந்நேரம் புல்லு காட்டுகளை தேடி எல்லா மாடுகளின் காலில் போட்டு போட்டோ எடுத்து வண்டி கிளம்ப 10மணியானது.

செம்ம கடுப்பில் வெளியே இருந்த கோசாலை வக்கிலீடம்” வாங்க பாஸ் ஒரு டீ சாப்பிடலாம் என்றேன். ” ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் எல்லா மாடுகளையும் கொண்டு போறீங்க இது நியாயமா” என்றார். ஒரு சமூக சேவை செய்யும் அமைப்பு வக்கீலுக்கு இந்த சமூகத்தில் இவ்வளவு தான் மரியாதையா…

தமிழக அரசு இது குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகள் தமிழ் நிலத்தில் உருவாகும்.

Kareem Aak

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here