குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்டம்!    அரசு பயங்கரவாத பாசிச ஒடுக்குமுறைக்கு மற்றொரு சான்று!


திமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஒரு முறை இவ்வாறு கிண்டல் செய்திருந்தார். “கம்யூனிஸ்ட்கள் எப்போதும் சரியான முடிவைத்தான் எடுப்பார்கள்; எந்த ஒரு முடிவு எடுப்பதற்கும் முன்னால் கமிட்டியை கூட்டி விவாதித்து அதன் பின்னரே முடிவு எடுப்பார்கள். அவ்வாறு கமிட்டியை கூட்டி முடிவு செய்யும்போது அது சரியான முடிவாக தான் இருக்கும். ஆனால் அந்த முடிவு எடுப்பதற்குள் பிரச்சனையே தீர்ந்துவிடும்” என்று நக்கலாகவும்,  சுருக்கென்றும் கூறியிருந்தார்.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்-பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பாதையை பயன்படுத்திக்கொண்டு, சட்டப்பூர்வமான வழிமுறைகளிலேயே ஆட்சிக்கு வந்தவுடன் தனது “அகண்ட பாரத, ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகின்ற வேலையை படிப்படியாக செய்ய ஆரம்பித்துவிட்டது.

ஆனால் இந்தியாவிலுள்ள  பலரக கம்யூனிஸ்டுகள் “பாசிசம் ஆட்சிக்கு வந்துவிட்டதா,” “நாட்டை பாசிஸ்டுகள் ஆண்டு கொண்டிருக்கிறார்களா,” “பாசிச ஆட்சி முழுமையாக வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” “பாசிசம் எல்லாம் இல்லை, எதேச்சதிகாரம்தான் உள்ளது,” “பாசிசத்தை எதிர்த்து இடதுசாரிகள் ஒற்றுமை,” “பாசிசத்தை எதிர்ப்பதற்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒன்றிணைய கூடாது” என்றெல்லாம் தமது சித்தாந்த அறிவை கூர் தீட்டிக்கொண்டு உள்ளார்கள்.

நடப்பு நிகழ்வில் ஏகாதிபத்திய, கார்ப்பரேட் கைக்கூலிகளான ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல்  நாட்டை மறுகாலனியாக்கும் திசையில் வேகமாக சென்று கொண்டுள்ளதுடன், காலனிய காலத்தில் இருந்த சட்டங்களை விட கொடூரமான அரசு பயங்கரவாத சட்டங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது.

குற்றவாளிகளை விசாரிக்கவும், தண்டிக்கவும் ஏற்கனவே குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதே, ஒருவர் மீது சந்தேகம் வந்தால் உரிய ஆதாரங்கள் இல்லாவிட்டலும் கூட, எந்த விசாரணையுமின்றி கைது செய்யவும், தண்டிப்பதற்கும் பொருத்தமாக ஆள் தூக்கி UAPA சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸ் துறை அதிகாரத்தில் இருந்தாலும், ஒன்றிய அளவில் எந்த கட்டுப்பாடும் இல்லாத சூப்பர் அதிகாரம் கொண்ட NIA என்ற அமைப்பை உருவாக்கி எதிர் கருத்து சொல்பவர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.

அந்த வரிசையில் தற்போது குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்ட முன்வரைவு ஒன்றை மக்களவையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தாக்கல் செய்து அன்றே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வரைவின்படி வழக்கில் கைதாக கூடிய அனைவரையும் அங்க அடையாளங்கள் மட்டுமின்றி கை கால்களின் அச்சு, கண்கள், உடல் அவயங்கள், இவை தவிர கையெழுத்து, behavioural attributes உட்பட அனைத்தையும் பதிவு செய்யும் உரிமை போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போலீசுக்கு தற்போது உள்ள அதிகாரங்களே குற்றவாளிகள் என்று கருதுகின்ற அல்லது குற்றம் சுமத்துகின்றவர்களை third degree method-ல் கையாண்டு வழக்கு பதிவு செய்வது தான் நடைமுறையாக உள்ளது எனும்போது, புதிதாக கொடுக்கப்படும் அதிகாரம் போலீஸ் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட எந்த தடையும் இருக்காது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது இந்த நாட்டின் பூர்வ குடிமக்களை இழிவு படுத்துகின்ற வகையில் குற்றப்பரம்பரை சட்டம் என்று ஒன்றை கொண்டு வந்தனர். அந்த சட்டம் இன்று வரை அமுலில் உள்ளது. வெவ்வேறு வடிவங்களில் மக்களின் மீது கொடும் அச்சுறுத்தலாக சுமத்தப்படுகிறது தமிழகத்தின் இருளர்கள் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்கள் இதுபோன்ற சட்டங்களினால் இன்றுவரை நசுக்கப்படுகின்றனர். இந்த சூழலில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்ட முன்வரைவு அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பதுடன் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விடும்.

படிக்க:

♦  மோடி அரசால் சிறையில் வாடும் சமூக செயற்பாட்டாளர்கள்! – தோழர்.பாலன் உரை

♦ காஷ்மீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது! 

இந்த சட்ட பூர்வமான அடக்குமுறையை வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், கலைஞர்கள் அனைவரும் எதிர்த்து போராட வேண்டும். இதில் பொதுமக்களின் நலன் மட்டுமின்றி, சமூகத்தில் முன்வரிசையில் நின்று போராடும் சமூக செயல்பாட்டாளர்களின் கருத்துக் கூறும் உரிமை, போராடும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு பாசிச அடக்குமுறையே நிரந்தர அதிகாரமாகிவிடும்

பாசிச கொலைகார ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசாட்சி புரிகின்ற உத்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் அரசு பயங்கரவாத ஒடுக்குமுறை மக்களின் மீது அன்றாடம் தாக்குதலாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட பாசிசம் குறித்த முடிவற்ற விவாதங்களில் இறங்கி மக்களையும் தனது கட்சியினரையும் குழப்புபவர்கள் வரலாற்றின் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here