பாரதிய ஜனதா கட்சி பிற அரசியல் கட்சிகளை போல தேர்தல் அரசியலை மட்டும் நம்பி இருக்கும் கட்சி அல்ல. ஆர் எஸ் எஸ் என்ற பார்ப்பன மதவெறியை முன்வைக்கின்ற, பாசிச பயங்கரவாத அமைப்பு அதன் பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை.
ஆனால் ஆர் எஸ் எஸ் பருண்மையாக திட்டமிட்டுக் கொண்டு இந்தியாவில் உள்ள படித்த, பாமர மக்களை “வளர்ச்சி- வல்லரசு” என்ற போர்வையின் கீழ் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வருகிறது.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கார்ப்பரேட்டுகளுக்கு தங்குதடையின்றி சேவை செய்வதற்கு பொருத்தமாக நாட்டை மறுகாலனியாக்கும் திசையில் வேகமாக சென்று கொண்டுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் விரிவாக்கப்பட்ட மறு உற்பத்தியில் பிணைக்கப்பட்டுள்ள இந்தியா, தனது உற்பத்தியை ஏகாதிபத்தியங்களின் பின் நிலமாக நடத்திக் கொண்டுள்ளது. அவர்களின் உற்பத்திப் பொருள்களை விற்று கொடுக்கின்ற பிரம்மாண்ட சந்தையாகவும் மாறியுள்ளது.
இந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு காரணிகளை மக்களுக்கு புரிய வைக்காமல் பாசிசத்தை வீழ்த்துவது சாத்தியமே இல்லை. தோழர் ராஜசங்கீதன் 5 மாநில தேர்தல்களைப்பற்றி ஓரளவிற்கு விரிவாக அலசியுள்ளார்.
தேர்தல் அரசியலுக்கு வெளியில் நின்றுகொண்டு அவர்களை விமர்சிப்பது, மாற்று ஒன்று தயாராக இருப்பதை போல மக்களை பிரமைகளில் ஆழ்த்துவது போன்றவை அனைத்தும் பாசிசத்தை வளர்ப்பதற்கும், துரிதமாக நாட்டை பாசிச பயங்கரவாத ஆட்சியின்கீழ் நிரந்தரமாக கொண்டு வருவதற்கும் மட்டுமே உதவும்.
எனவே, தேர்தல் அரசியலில் அவர்களை தனிமைப்படுத்துகின்ற வகையில் பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும்.
நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்ற புரட்சிகர அரசியலை கைவிட்ட சிலர் இன்றும் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று வெளியில் உள்ளது என்றெல்லாம் கற்பனையாகவும், தற்குறித்தனமாகவும் உளறிக்கொண்டு உள்ளனர்.
தேர்தலில் பாஜகவை புறக்கணிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், தேர்தல் அரசியலுக்கு வெளியில் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டுகின்ற வேலையை செய்வதும் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற புரிதலில் முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் எந்த மாற்றமும் வராது.
1930களில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி பெருமந்தம் ஆகியவற்றின் உபவிளைவாக தோன்றிய பாசிசமும், தற்போது 2008 ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள மீள முடியாத நெருக்கடி கொண்டுவரும் நவீன பாசிசமும் ஒரே மாதிரியானவை என்ற புரிதல் அடிப்படையில் ஆசான்களின் வழிகாட்டுதல்களை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் இன்றி அப்படியே காப்பியடிப்பது அதையும் மார்க்சியம் என்று அணிகளையும் மக்களையும் நம்ப வைப்பது போன்ற அனைத்தும் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு பதிலாக அதனை நிரந்தரமாக அதற்கே பயன்படும் இந்தக் கண்ணோட்டத்தில் தோழர் ராஜசங்கீதன் முகநூல் பகிர்வை வெளியிடுகிறோம்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
000
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம்தான். ஆனால் ஒன்று தெரியுமா? இந்த ஏமாற்றத்தைதான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஏதோவொரு மாநிலத் தேர்தல் நடக்கும்போது பாஜகவைத் தகர்க்கும் வெற்றி கிடைக்க வேண்டுமென விரும்பி காத்திருக்கிறோம். ஏமாறுகிறோம்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, ராமர் கோவில், விலைவாசி உயர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் பிரிப்பு என ஒவ்வொரு விஷயத்தை பாஜக நடத்தி முடிக்கும்போதும் அதில் கிளம்பும் எதிர்ப்பைக் கண்டு, அடுத்து நடக்கும் மாநில தேர்தலில் பாஜக வீழ்ந்துவிடும் என மீண்டும் நம்பிக்கைக் கொண்டு காத்திருக்கிறோம். மீண்டும் ஏமாறுகிறோம்.
ஏமாறும் ஒவ்வொரு முறையும் ‘வடக்கன்கள்’, ‘வாக்கு இயந்திர முறைகேடுகள்’, ‘இந்துத்துவ வெறி’, ‘எதிர்க்கட்சிகளின் தோல்வி’ எனப் பலக் காரணங்களைச் சொல்லிக் கொள்கிறோம்.
பாஜக வெல்வதற்கு என்னதான் காரணம்?
திரிபுராவில் பாஜகவை வெற்றிபெறச் செய்தவர் இப்படிச் சொல்கிறார்: ‘கம்யூனிஸ்ட்டுகளை பணம் கொடுத்து வாங்க முடியாதென்பதால், அம்மண் சார்ந்த நாகர்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் உழைத்த பணி தெரியாமலும் வாசிக்காமலும் வளர்ந்திருக்கும் தலைமுறையை மட்டும் கைகொள்ளும் வேலையைச் செய்து வெற்றி பெற்றோம்.’
உத்தரப்பிரதேசத்தில் யாதவர்களுக்குதான் ஆளும் கட்சிகள் ஆதரவாக இருந்திருக்கின்றன என்றும் பாஜக தலித்களுக்கு ஆதரவான கட்சி என்றும் ஒரு கருத்தை உருவாக்குவதற்காக உத்தரப்பிரதேச தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்குவது வரை சென்றதாகவும் சொல்கிறார். ஆர்எஸ்எஸ்காரர்களின் உதவியுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் நிதியுதவி பெற்றிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் வாக்கு இயந்திரங்கள்!
2010ம் ஆண்டில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்திய வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து செல்பேசியின் குறுந்தகவலைக் கொண்டு எண்ணிக்கையை மாற்ற முடியும் என செய்தே காட்டினார்கள். அமெரிக்க ஆய்வாளர்களுடன் அதைச் செய்து காட்டிய ஹரி பிரசாத் கைது கூட செய்யப்பட்டார். இது போல் எத்தனையோ demonstration-களை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்தவர் உட்பட பலரும் செய்து காட்டியிருக்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடத்தப்படும் வாக்கு இயந்திரங்கள், குப்பையிலும் ஹோட்டல் அறைகளிலும் கிடக்கும் வாக்கு இயந்திரங்கள் என செய்திகள் வருகின்றனவே, அவற்றுக்கென்ன அர்த்தம்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றதே.. அது மக்கள் ஓட்டுகளில் மட்டும்தான் நடந்ததென நிச்சயமாகவே நம்புகிறீர்களா என்ன? அந்தளவுக்கு பேராதரவு பெற்ற உலக மகா தலைவரா தேனியில் வென்ற அந்த அவர்?
இந்தியத் தேர்தலில் இதுவரை எல்லா கட்சிகளும் பயன்படுத்திய உத்திகளையும் தேர்தல் முறை கொண்டிருக்கும் பலவீனங்களையும் புது உத்திகளையும் புதிய வாய்ப்புகளுடன் இணைத்துதான் பாஜக ஒவ்வொரு தேர்தலையும் அணுகுகிறது. வெற்றி பெறுகிறது.
பிகார் சட்டமன்ற தேர்தலின் போது சுஷாந்த் சிங் என்கிற நடிகரின் தற்கொலையை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தது பாஜக. ஜுன் 2020-ல் இறந்தவரை அக்டோபரில் நடந்த பிகார் தேர்தலுக்கு பயன்படுத்தியது அக்கட்சி. பாஜகவின் இணைய அணி சுஷாந்த் சிங் பற்றிய காணொளியை உருவாக்கி பரப்பியது. மும்பையில் ஆளும் சிவசேனை கூட்டணி அரசு சுஷாந்த் சிங் மரணத்தை முறையாக விசாரிக்கவில்லை என பிரசாரத்தை மாற்றியது. சிபிஐக்கு அந்த வழக்கை கொண்டு போய் முறையான நீதி கொடுத்தது பாஜகவின் ஒன்றிய அரசுதான் என அக்கட்சி பிரசாரம் செய்தது.
சாம, தான, பேத, தண்டம் எல்லாம் பாஜக தேர்தல் வெற்றியில் பார்ப்பதில்லை.
ஒரு தற்கொலை தொடங்கி, குடியரசுத் தலைவர் நியமனம், ராணுவ நடவடிக்கை வரை நீளும் அளவுக்கு பாஜக தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
பிற கட்சிகளில் தேர்தல் காலத்தில் தேர்தலை கவனிக்கவென ‘war room’ இருக்கும். பாஜகவில் அது தேர்தலல்லாத காலத்திலும் இயங்குகிறது.
பாஜக மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது குறைவுதான். அல்லது குறைந்த அளவுதான். ஆனால் பிற அணிகளுக்குக் அக்கட்சிக் கொடுக்கும் பணம் அளப்பரியது. உதாரணமாக ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொகுதியில் A சாதி 40 சதவிகிதம் இருக்கிறது. B சாதி 30 சதவிகிதமும் C சாதி 20 சதவிகிதமும் D சாதி 10 சதவிகிதமும் இருக்கிறது. இதில் 40 சதவிகிதமும் 30 சதவிகிதமும் இருக்கும் சாதிகள் பாஜகவுக்கு ஓட்டு நிச்சயமாக போடாது எனத் தெரிகிறது. 20 சதவிகிதமான C சாதியிடம் பாஜக கடுமையாக வேலை பார்த்து தன் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும். ஆனால் வெறும் 20 சதவிகிதத்தைக் கொண்டு எப்படி தேர்தலை வெல்வது? அதுதான் தேர்தல் முறையின் மகத்துவம்!
A சாதியில் ஒரு மூன்று பி டீம்களை பாஜக இருக்கும். மூன்று டீம்களும் மக்களுக்குக் கொடுக்கவென பல நூறு கோடிகளை பாஜக கொடுக்கும். 40 சதவிகித வாக்குகள் சிதறும். அது எத்தனை மடங்காகச் சிதறினாலும் பாஜகவுக்கு சாதகம்தான். போலவே B சாதியில் ஒரு மூன்று பி டீம்கள். பல கோடி பணம். 30 சதவிகிதமும் சிதறும். அடுத்து இருக்கும் 20 சதவிகிதம் சரியாக பாஜகவுக்கு வந்து சேர்ந்து விடும். அதற்கடுத்த 10 சதவிகிதம் ஒரு கட்சிக்குக் கொத்தாக சென்றாலும் பிரச்சினை இல்லை. இறுதியில் அத்தொகுதியில் 20 சதவிகிதமே வெல்லும்.
மேற்குறிப்பிட்ட சதவிகிதங்களுக்குள் மதம் பாலினம் போன்ற விஷயங்களையும் ஊடாடியும் கணக்குகள் உருவாக்கப்படும். உதாரணமாக கிறித்துவ நாடார்கள் 40 சதவிகிதம் என வைத்துக் கொண்டால் அவர்கள் நிச்சயம் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். எனவே இந்து நாடார்கள் பக்கமோ அல்லது நாடார்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாதிக்கோ பாஜக வேலை செய்து வைத்திருக்கும்.
இத்தகைய social engineering-ம் கூட பாஜக கண்டுபிடித்ததில்லை. ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடந்து வரும் உத்திதான்.
உத்தரப்பிரதேச தேர்தலில் மோடி பயன்படுத்திய பிரச்சாரக் கருத்தாடல்களில் சிலவை:
‘என்னை வீழ்த்துவதற்காக என்னை கொலை செய்யும் நிலைக்கு எதிர்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டார்கள். ஆனால் என்னை கொலை செய்யக்கூட, அவர்கள் சாமி கும்பிட என் தொகுதி வாரணாசிக்குதான் அவர்கள் வந்தார்கள் என தெரிந்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்’
‘இந்திய நாட்டின் வளர்ச்சி பிடிக்காமல் இஸ்லாமிய நாடுகள் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதால்தான் பெட்ரோல் விலை உயர்கிறது’
இத்தகைய கருத்தாடல்களை ஏன் அந்த முட்டாள்கள் நம்புகிறார்கள் என்றெல்லாம் இறுமாப்புடன் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி நம் மனதில் தோன்றினால் பழநியில் கேம்ப் அடித்த தெற்கத்தி இளைஞர்களை சாரை சாரையாக ஈர்த்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் வகுப்புக்கு ஒருமுறை சென்று பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்டத் தகவல்களை தெரிந்துகொள்ள ஒருவர் அலைந்து திரிய வேண்டியது கூட இல்லை. எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது.
பாஜகவுடன் இயங்கியவர்களும் இயங்கிய நிறுவனங்களும் சாட்சிகளாக இருந்து பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாஜகவின் வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ்ஸும் கொண்டிருக்கும் பங்கைப் பற்றியும் முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்கள் எழுதிய பல புத்தகங்கள் உண்டு. இந்திய அரசை (State) ஆர்எஸ்எஸ் உள்ளிருந்து எப்படி கையகப்படுத்துகிறது என முன்னாள் அதிகாரிகளின் எழுத்துகளும் பல இருக்கின்றன. இந்துத்துவத்தை முதலாளித்துவம் பயன்படுத்தி இரண்டும் எப்படி வளர்கிறது என்பதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. இணையத்தை பாஜக எத்தனை வலிய ஆயுதமாக பயன்படுத்துகிறது என்பதைச் சொல்லவும் பல புத்தகங்கள் இருக்கின்றன.
தேவை அரசியல் உறுதி (political will) மட்டும்தான்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை!
தங்களது சித்தாந்தங்களையும் ‘கும்பகர்ண’ சோம்பலையும் கட்சிகள் கொஞ்சம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி பற்றிய வரலாறுகளையும் புத்தகங்களையும் எழுத்துகளையும் படித்து உரையாடி கட்சிகளுக்குள் வகுப்புகள் எடுக்கத் தொடங்கலாம். நிலைமையின் தீவிரம் பற்றியப் புரிதலை கட்சிகளின் அனைத்து மட்டங்களிலும் உருவாக்க முயற்சிக்கலாம். விமர்சனங்களைக் காது கொடுத்து கேட்கத் தொடங்கலாம்.
Emptying cup is also a way to fill the cup (கோப்பையை காலி செய்தும் நிரப்ப முடியும்) என்கிற பேருண்மையைக் கண்டுபிடிக்கலாம்.
இந்தியச் சமூகம் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றின் பிரத்தியேகத்தை என்னவென துலக்கமாக நமக்கு புரிபடலாம். பார்ப்பனீயமும் இந்துத்துவமும் இந்தியச் சமூகத்தின் நுண்ணிய இழைகளில் கூட ஊடுருவியிருப்பதை ஏற்றுக் கொள்வதிலிருந்து பாஜகவை வீழ்த்தத் தொடங்கலாம்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.
மூளைக் கிண்ணங்களில் ததும்பி வழியும், யதார்த்தம் மீறியக் கற்பனைகளை கொட்டிவிட்டுத் தேவையானவற்றை நிரப்பத் தொடங்குவோம்!
The night is still young!
நன்றி
ராஜசங்கீதன்.
முகநூல் பகிர்வு.
பாஜகவின்தேர்தல் வியூகத்தை தெளிவாக அம்பலப்படுத்திய
தோழர் .ராஜசங்கீதன் அவர்களுக்கு நன்றி .ஆர் எஸ் எஸ் ம் பார்ப்பனியமும் இந்துத்துவாவும் ஒரு நுண்ணிய நூலிழையில் ஒன்றிணைந்து அதிகார பீடத்தில் அமர்ந்துகொண்டு கோடிக்கணக்கான மக்களின் குலை அறுக்கும் காவி பாசிச சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி மிகச் சிறப்பாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் முகநூல் பதிவானது அமைந்துள்ளது.