தூங்காநகர நினைவுகள் – கீழடி – வரலாற்றின் ரகசியம்!
அ.முத்துக்கிருஷ்ணன்

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013-14 ஆம் ஆண்டில் வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. வெள்ளிமலையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள 400 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும் 90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள்.

அதில் வாழ்விடங்களான கீழடி, மாரநாடு, சித்தர் நத்தம், டொம்பச்சேரி, அல்லிநகரம், ராஜகம்பீரம், பாண்டிக்கண்மாய், அரசநகரி ஆகிய இடங்களைப் பரிசீலித்து அதில் கீழடி, மாரநாடு, சித்தர் நத்தம் ஆகிய மூன்று கிராமங்களைத் தங்களின் அடுத்த கட்ட ஆய்விற்கு இந்தக் குழுவினர் தேர்வு செய்தனர்.

கீழடி – கொந்தகை ஆகிய இரு கிராமங்கள் 13-ம் நூற்றாண்டில் குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்கிற பெயரால் அழைக்கப்பட்டது. சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கு முனைதான் கீழடி என்று இன்று அழைக்கப்படுகிறது, பின்னாள்களில் சதுர்வேதி மங்கலம் என்கிற வார்த்தை மறுவி கொந்தகையாக மாறியது. கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய மூன்று கிராமங்களின் எல்லைகளுள் ஒரு தொல்லியல் மேடு இருப்பதைக் குழுவினர் கண்டறிந்தனர். இந்தத் தொல்லியல் மேட்டின் பெயர்தான் பள்ளிச்சந்தைத் திடல். இந்தப் பள்ளிச்சந்தைத் திடலைத்தான் தங்களின் ஆய்வுக் களமாக முடிவு செய்து இங்கே அகழாய்வை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறை முடிவு செய்தது.

கொந்தகை ஆய்வு

கடந்த இரு நூற்றாண்டுகளாக வைகை நதிப்பகுதிகளில் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1888-ல் பரவை, அனுப்பானடி, துவரிமான் பகுதிகள், 1976-ல் தே.கல்லுப்பட்டி, 1980-ல் கோவலன் பொட்டல், 1986-ல் அழகன்குளம், 2007-ல் மாங்குளம் என இந்த அகழாய்வுகளின் வழியே மிக முக்கியக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வைகை நதிக்கரையில் 1950களில் முனைவர் கே.வி.ரமணா அவர்கள் பல இடங்களில் ஆய்வுகள் செய்துள்ளார். 2006-ல் முனைவர் கா.ராஜன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் வழியேதான் நமக்கு புலிமான்கொம்பை, தாதப்பட்டி நடுகற்கள் கிடைத்தன.

கீழடியில் அகழாய்வுக் குழிகளில் 1.5 மீட்டர் ஆழத்தில் களி மண்ணும் அதற்குக் கீழ் 4.5 மீட்டர் ஆழம் வரை மணலும் இருக்கின்றன. இந்த மணல் வைகை ஆறு இங்கே பாய்ந்ததற்கான சான்றாகவும் பின்னர் ஆறு தனது பாதையை மாற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இந்த அகழாய்வு இந்தியத் தொல்லியல் துறையில் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. கீழடி மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அகழாய்வு நிபுணர்களின் மேற்பார்வையில் புதைந்திருக்கும் அரிய பொக்கிஷங்களைக் கண்டெடுத்தார்கள். மூன்று ஆண்டுகள் இந்தியத் தொல்லியல் துறையும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையும் தொடர்ச்சியாகக் கீழடியில் அகழாய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

2600 ஆண்டுகளாக நம் பொக்கிஷங்களை காத்த மண்

கீழடியில் அகழாய்வுகள் தொடங்கிய நாளில் இருந்தே நமக்கு அந்த நிலம் ஆச்சரியங்களை வழங்கியபடி இருக்கிறது. அங்கு கிடைத்த பொருள்களை வைத்து அங்கு வாழ்ந்தவர்கள் ஒரு வேளாண் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதையும் தெளிவுபடக் கூறலாம். அவர்களின் வசிப்பிடங்களில் பாவிக்கப்பட்ட கட்டுமானப் பொருள்கள் நமக்குக் கிடைத்துள்ளன. செங்கற்கள், சுண்ணாம்பு சார்ந்த கூரை ஓடுகள், சுடுமண்ணாலான உறைகிணறுகள், இரும்பு ஆணிகள் கிடைத்துள்ளன.

உறை கிணறு

கீழடியில் கிடைத்த பானைகளில் உள்ள கீறல் குறியீடுகள், தமிழி எழுத்துகள் சங்க காலத் தமிழர்களின் எழுத்தறிவை நமக்குப் பறைசாற்றுகின்றன. ‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’, ‘குவிரன் ஆத(ன்)’ போன்ற பெயர்களைக் குறிப்பிடும் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. தாமிரத்தாலான கண் மை தீட்டும் குச்சி, இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரைக் கட்டைகள் உட்பட பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

அங்கு கிடைத்த சில கைவினைப் பொருள்கள், அவர்கள் கைவினைத் தொழில்களில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நிறுவுகின்றன. தக்களிகள், எலும்பினாலான கூர்முனைகள், அரவைக் கல், தந்தத்தினாலான சீப்புகள், நீள் கழுத்து நீர்க்குடுவைகள், மணி வகைகள் என ஏராளமான பொருள்கள் அவர்களின் தொழில் சார் நடவடிக்கைகளையும், கைவினைப் புலமையையும், வாழ்வியலையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஆயுதங்கள்

கீழடியில் வாழ்ந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை அங்கு கிடைத்த மதிப்பான அணிகலன்களின் வழியே காண முடிகிறது. தங்கத்தினாலான தொங்கட்டான், மணி, தகடு, வளையம், கண்ணாடி மணிகள் என அழகிய அணிகலன்கள் கிடைத்துள்ளன.

பண்டைய மக்களின் விளையாட்டுப் பொருள்களும் நமக்கு அகழாய்வில் கிடைத்துள்ளன. பகடைக்காய்கள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், தந்தத்தினாலான தாயக்கட்டை என நமக்கு அங்கு பல முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளன.

கீழடியை அடுத்த கொந்தகை அகழாய்வில் கிடைத்த சுடுமண் மண்குடுவை! | sand cup found in keezhadi excavation
கொந்தவையில் கிடைத்த குடுவை

அவர்கள் ரோமாபுரியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் கீழடியில் அகேட் மற்றும் கார்னீலியன் (சூதுபவளம்), ரெளலட்ட மட்கலன்கள் கிடைத்துள்ளன. மனித சமூகத்தின் மிகத் தொன்மையான கலைவடிவமான சுடுமண் உருவங்கள், புடைப்பு உருவங்கள் அங்கு கிடைத்துள்ளன. 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் அகழாய்வில் கிடைத்துள்ளன. செம்பினால் செய்யப்பட்ட அரிய பொருள்களும் நமக்கு அங்கு கிடைத்துள்ளன.

ஒரு நகரத்திற்கு நீர் வழங்குதலும் கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. கீழடியில் சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் வசதியுடன் கட்டடங்கள் இருந்தன என்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்று உறைகிணறுகள் வெவ்வேறு மட்டங்களில் கிடைத்துள்ளன, இதைப் பொறுத்து அந்தக் காலத்தில் இருந்த நீர் மட்டங்களின் உயரத்தைக் கணிக்க முடிகிறது. நீர் மட்டம் குறைந்ததால் அடுத்து அடுத்து இன்னும் கூடுதல் ஆழத்திற்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டதா என்பதை மண் பரிசோதனைகள் மூலம் அறியலாம். அது மட்டும் அல்லாது இங்கு கிடைத்த செங்கற்கள் நான்கு அளவுகளில் கிடைத்துள்ளன. 46, 38, 36, 34 சென்டிமீட்டர் அளவுகளில் அவை இருப்பதால் இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்தவையாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் கட்டடங்களே இல்லை என்கிற இதுகாறும் நிலவிவந்த நம்பிக்கையைக் கீழடி அகழாய்வு மாற்றியமைத்துள்ளது.

வரலாற்றின் தொடக்கக்காலத்தைச் சேர்ந்த கறுப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கறுப்பு சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிறக் கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியில் மட்டுமே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகவும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கீழடியில் உள்ள கட்டிட அமைப்புகள்

கீழடியில் உள்ள கட்டடங்களின் தரைத்தளங்களும், நீண்டு செல்லும் மதில் சுவர்களும் நகர நாகரிகத்திற்கு வேண்டிய அனைத்துக் கட்டமைப்புகளையும் இந்த நகரம் கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம் மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, ஆறு கரிம மாதிரிகளின் காலம் கி.மு 6-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 3-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகும். 353செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் கரிமத்தின் காலம் கி.மு 6-ஆம் நூற்றாண்டு என்றும் 200 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மற்றொரு கரிமத்தின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டு என்றும் காலம் கணிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் ஆயிரக்கணக்கான பொருள்களை உறைந்த நிலையில் காலம் பாதுகாத்து நம்மிடம் வழங்கியிருக்கிறது. மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பொருள்களின் பெரும் கண்காட்சி நடைபெற்றது. இப்போது கீழடியில் தொல்லியல் துறையின் சார்பாகப் பெரும் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இங்கே ஒரு உலகத்தரமான தொல்லியல் அருங்காட்சியகம் மதுரையின் ஒரு மகுடமாக அமையவிருக்கிறது. இதை நாம் மட்டும் கண்டுகளித்தால் போதாது; இந்தப் பொருள்களுக்கு இனி சிறகு முளைத்து அது இந்தியாவின் பல பாகங்களுக்குப் பறக்கத் தொடங்க வேண்டிய நேரமிது. உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் உலகம் முழுவதும் சென்று கண்காட்சிக்கு வைக்கப்படுவதுபோல் கீழடி தொடங்கி தமிழர் நாகரிகத்தின் சான்றுகள் உலகம் முழுவதும் சென்று காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்.

நம் குழந்தைகள் இனி எத்தனை காலம்தான் உலக அரசியல்களைப் பற்றியே பாடம் படிப்பது, இனி அவர்கள் நம் நிலத்தில் உள்ள அதிசயங்களைப் பற்றியும் கற்க வேண்டும். நம் பள்ளி கல்லூரி மாணவர்கள் இனி வருடம்தோறும் மதுரையைச் சுற்றி உள்ள பாறை ஓவியங்களை, கல்வெட்டுகளை, சமணர் படுகைகளை-குகைகளை, அகழாய்வுத் தளங்களை, புராதனச் சின்னங்களைச் சென்று பார்க்க வேண்டும்.

நம் பண்பாட்டின், மொழியின், நாகரிகத்தின் போற்றத்தக்க விழுமியங்களை அறிய வேண்டும், நம் பிள்ளைகள் நாம் ஒரு மூத்த நாகரிகத்தின் தொடர்ச்சி என்கிற பெருமிதத்துடன் உலகம் முழுவதும் வலம் வர வேண்டும்.

தொல்லியல் துறையில் ஆர்வம் கொண்டு தம் வாழ்க்கையை இதற்கு அர்ப்பணித்த நூற்றுக்கணக்கான அறிஞர்கள், ஆர்வலர்கள் தமிழகம் எங்கும் இருக்கிறார்கள். இவர்களின் ஒப்பற்ற உழைப்பின் வழியேதான் கல்வெட்டுகள், நடுகற்கள் முதல் அகழாய்வுகள் வரை எல்லாவற்றையும் இன்று அடைந்திருக்கிறோம். ஐராவதம் மகாதேவன், நாகசாமி, நடனகாசிநாதன், அப்துல் மஜீத், பேரா. சுப்புராயுலு, பேரா. கே.வி.ராமன், பேரா. பி. சண்முகம், சந்திரமூர்த்தி, கே.ஸ்ரீதரன், கே.ராஜன், மார்க்சியா காந்தி, பூங்குன்றன், சாந்தலிங்கம், வேதாச்சலம், ராஜேந்திரன், ராஜவேலு, பத்மாவதி, வசந்தி, ஏகாம்பர நாதன், வி.செல்வக்குமார், துளசிராமன், செல்வராஜ் என இந்தப் பட்டியல் முடிவற்று நீள்கிறது. தமிழ்நாட்டுத் தொல்லியல் கழகத்தின் மாநாடுகளில் இவர்களை நான் கடந்த பத்தாண்டுகளாகச் சந்தித்துவருகிறேன்.

பசுமை நடையின் ஒவ்வொரு திருவிழாவிலும் இவர்களை அழைத்துப் பெருமை செய்திருக்கிறோம். வீரராகவன் – மங்கையர்க்கரசி ஆகிய தம்பதிகள் தமிழகத்தின் நடமாடும் அருங்காட்சியமாகவே திகழ்கிறார்கள். எத்தனை எத்தனை பேர் தொல்லியலை, கல்வெட்டியலை தங்கள் உயிர் மூச்சாக வாழ்திருக்கிறார்கள், ஆனால் இன்று தமிழர்களின் எத்தனை பேர் இவர்களை அறிவோம், நம் குழந்தைகளுக்கு இந்த நாயகர்களை நாம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறோமா என்கிற கேள்வி இந்தச் சமூகத்தைத் துரத்த வேண்டும். வெற்றுப் பெருமிதங்கள் போதாது என்பதையே இன்றைய நிலை உணர்த்துகிறது.

அரிக்கமேடு, அழகன்குளம், காவேரிப்பட்டினம், உறையூர், கரூர், கொடுமணல், தாண்டிக்குடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், முசிறிப்பட்டினம் என இவை எல்லாம் நம் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நின்ற நிலங்கள், இந்த இடங்கள் எல்லாம் நாம் செல்லும் சுற்றுலாத் தலங்களாக மாற வேண்டும், இந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். நம் பண்பாட்டின் இந்த விலைமதிப்பிட முடியாத பொக்கிஷங்களைப் பற்றி நம் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும்

கீழடிக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்குமான தொடர்புகள் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கீழடி மற்றும் தமிழகமெங்கும் கிடைத்த பொக்கிஷங்கள் நம் சங்க இலக்கியங்களில் வரும் விவரணைகள் பலவற்றுடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன. சங்க இலக்கியங்கள் வெறும் புனைவு அல்ல, அவை இந்த நாகரிகத்தின் வாழ்விலிருந்து முகிழ்த்தவை என்பது நிரூபணமாகி வரும் காலமிது. கீழடி பாண்டியர்களின் தொல்நகரான `பெருமணலூராக’ இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மதுரையின் வரலாற்றை கடந்த 27 வாரங்களாகக் காட்சிப்படுத்தும் தூங்காநகர நினைவுகள் எனும் இந்தத் தொடர் நெடுகிலும் புனைவுகளை நான் எங்கும் துணைக்கு அழைக்கவில்லை. மாறாக, பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் முதல் அகழாய்வுகள் வரை எல்லாம் இன்றைய உலகம் ஏற்கும் அறிவியல் சான்றுகளின் வழியேதான் இந்தத் தொடர் பயணிக்கிறது.

இந்தத் தொடரில் நாம் பயணித்து வந்த சங்க கால மதுரை அச்சு அசலாக நமக்குக் கீழடியில் கிடைத்துள்ளது என்பது கூடுதல் பெருமிதமே, கீழடியில் நம் பண்டைய மக்கள் இயற்கையை வணங்கியிருக்கிறார்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகமாக அது இருந்துள்ளது. உலகின் மூத்த நகரங்களில் ஒன்றாக, 3000 ஆண்டுகள் தொடர்ச்சியாக மனிதர்கள் வசித்த நகரமாக, தொல் நகரமாக மதுரை இருந்துள்ளது என்பதற்குக் கீழடியைவிட வேறு என்ன சான்று வேண்டும்!

அ.முத்துக்கிருஷ்ணன்

நன்றி,

முகநூல் பதிவு: தோழர். அ.முத்துகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here