தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் தென் சீனா கடல் பிராந்தியத்தில் முக்கியமான இடம் வகித்துக் கொண்டுள்ளது என்பதால் அதன் மீதான கட்டுப்பாட்டை புவிசார் அரசியல் காரணமாகவும், பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதாலும் அமெரிக்காவினால் தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாக ஸ்பெயின் காலனியாக இருந்த பிலிப்பைன்ஸ் பின்னர் அமெரிக்காவின் காலனியாக மாற்றப்பட்டது. இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் ஏகாதிபத்தியத்தால் கைப்பற்றப்பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜப்பானிடம் இருந்து அமெரிக்கா பிலிப்பைன்ஸ் தீவுகளை மீண்டும் விலை கொடுத்து வாங்கி தனது காலனி நாடாக வைத்துக் கொண்டது.

பிலிப்பைன்ஸ் என்பது சுமார் 7000 சிறிய தீவுகளை உள்ளடக்கிய நாடாகும் என்ற போதிலும், இதில் முக்கியமான 11 தீவு பகுதிகளில் தான் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தீவுப் பகுதிகளுக்குள் இணைப்பு மிகவும் சிக்கலான வழியாக உள்ளதால் அமெரிக்காவுக்கு சாதகமாக உள்ளது எனக் கூறலாம்.

ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் எதிராக பூகோளரீதியாக முக்கியத்துவம் வாய்ந்துள்ள பிரதேசங்களில் தனது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு அமெரிக்க மேல்நிலை வல்லரசு செய்த பல்வேறு சதித்தனங்களின் ஒரு பகுதியாகவே பிலிப்பைன்ஸ் மீதான தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருவதை நாம் பார்க்க வேண்டும்.

1946 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் சுதந்திரத்தை அங்கீகரித்ததாக கூறிய பிறகும் அந்த நாட்டில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து கால் பதித்திருப்பதை எதிர்த்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் ஒற்றுமையுடன் போராடி வந்தனர். இதன் காரணாமாக 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி போடப்பட்ட அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் இருந்து வெளியேறியது.

அப்போது மேலும் 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. ஆனால் பிலிப்பைன்ஸ் மக்கள் சுமார் 2 லட்சம் பேர் வீதியில் திரண்டு போராடி இந்த ஒப்பந்த நீடிப்பு முயற்சியை ரத்து செய்தனர்.

ஆனாலும் பிலிப்பைன்ஸ் மீதான பிடியை அமெரிக்கா விடவில்லை. மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தியது. அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டாலும் இன்னமும் பிலிப்பைன்ஸ் முழுவதும் 17 இடங்களில் இராணுவ தளங்களை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கியுள்ளனர் என்பதால் உள்நாட்டு மக்கள் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அமெரிக்க துருப்புகள் வெளியேறிய பின்னர் பிலிப்பைன்ஸ் மக்கள் சுதந்திரமான ஒரு அரசாங்கத்தை நிறுவிக் கொள்வதற்கு முயற்சித்து வந்தாலும் பிலிப்பைன்ஸை 20 ஆண்டுகள் ஆண்டு வந்த் பாசிச சர்வாதிகாரியான பெர்டினண்ட் மார்க்கோஸ் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டை அமெரிக்க காலனியாகவும், உள்நாட்டு சுயசார்பு பொருளாதாரத்தை முன்வைக்கின்ற மாவோயிச கம்யூனிஸ்டுகளை நசுக்குவதிலும் முன்னணியாகவும் செயல்பட்டு வந்தார்..

இவரது சர்வாதிகார ஆட்சிக்கு பின்னர் நாட்டை ஆண்ட ரோட்ரிகோ டுடெர்டெ மார்க்கோஸை விஞ்சிய சர்வாதிகாரியாக இருந்ததால் 2022 ஆம் ஆண்டு தேர்தலில் மார்க்கோசின் மகனான ஜூனியர் மார்க்கோஸ் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்க அடிவருடி எனபதால் அமெரிக்காவின் இராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா தனது தளங்களை விரிவுபடுத்துகிறது. அமெரிக்க இராணுவத்தினர் சுற்றுலாவுக்கு செல்வதைப் போல பிலிப்பைன்சுக்கு வந்து போகின்றனர்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உலக மேலாதிக்க போட்டி வலுவடைந்து வருகின்ற சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிலிப்பைன்ஸில் உள்ள தனது தளங்களில் ட்ரோன்கள், அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஜெட் விமானங்கள், போர் விமானங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றை அமெரிக்கா குவித்து வருகிறது என்பதால் மீண்டும் அமெரிக்கா காலனியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது என்பதை உணர்ந்த பிலிப்பைன்ஸ் மக்கள் தொடர்ந்து அதற்கு எதிராக போராடுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 16 அன்று அமெரிக்க ராணுவம் வெளியேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினத்தில் மக்கள் ஒன்று கூடி மீண்டும் அமெரிக்கா இராணுவ ஆக்ரமிப்பை எதிர்த்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற போதிலும் புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிராந்தியத்தில் தற்போதைக்கு அமெரிக்கா பின்வாங்காது என்பது தான் நிலைமையாகும்.

படிக்க:

♦ ஜூலியன் அசாஞ்சே  விடுதலை! அமெரிக்க பயங்கரவாதிகளின் உண்மை முகம்.

♦ பிக்பாஸ் அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள்.

காலனிய, அரைக்காலனிய நாடுகளில் மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை அடிப்படையில் போராடுகின்ற நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்படுகின்ற பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் அதன் தலைமையில் செயல்படும் புதிய மக்கள் ராணுவம் (NPA) ஆகிய இரண்டும் மாவோயிச பாதையில் கொரில்லா யுத்த முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அமைப்புகளுக்குள் சில பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் மீண்டும் நம்பிக்கையூட்டும் சக்தியாக அவை வளர்ந்து வருகின்றன என்பது மட்டுமின்றி கடந்த 2022 ஆம் ஆண்டு காம்போசா நடத்திய கூட்டமைப்பில் பங்கு பெற்று உலக கம்யூனிச இயக்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர். இதனால் மக்களுடன் இணைந்து அமெரிக்காவை நிரந்தரமாக விரட்டுவார்கள் என நம்புவோம், அவர்களின் விடுதலைப் போராட்ட முயற்சிகளுக்கு குரல் கொடுப்போம்.

கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here