நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதை ஒட்டி குமுறிக் கொண்டிருந்த நேபாள மக்களின் கோபாவேசம் வெடித்து போராட்டமாக கிளர்ந்து எழுந்துள்ளது.

நேபாளத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் அலுவலகமான சிங்கா தர்பாரின் மேற்கு வாயிலை உடைத்து எதிர்ப்பாளர்கள் உள்ளே நுழைந்ததாக உள்ளூர் ஊடகமான தி இமாலயன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“நேபாளம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. அதன் பணவீக்கம் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தன்னுடைய அடிப்படை தேவைகளுக்காக இறக்குமதியை பெரும் அளவில் சார்ந்திருக்கும் நேபாளம் கூட்டரசாங்கத்தை பயன்படுத்தி சுயசார்பு பொருளாதாரம் ஒன்றை கட்டியமைக்க தவறிய போலி புரட்சியாளர்களான மாவோயிஸ்ட் கட்சியின் தவறுகளினால் கடும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளது.”என்று 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் எமது இணையதளத்தில் எழுதி இருந்தோம்.

50:50 ஆட்சி என்ற முறையில் முதலில் ஆட்சி நடத்திய முன்னாள் மாவோயிஸ்ட் பிரசண்டா ஆட்சி முதல் அதன் பிறகு பதவியேற்ற பிரதமர் சர்மா ஒலி ஆட்சி வரை இருவரின் ஆட்சியின் கீழ் நேபாளத்தின் பொருளாதார நெருக்கடி பல மடங்கு அதிகரித்துக் கொண்டே சென்றது.

விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்களின் வாழ்க்கையில் கடுமையான சிக்கல்கள் உருவானதால் குமுறுகின்ற எரிமலையாக நேபாள மக்கள் மத்தியில் போராட்ட உணர்வு கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இதற்கு அக்கம்பக்கமாகவே தெற்காசிய நாடுகளில் இலங்கையில் நடந்த ராஜபக்சே ஆட்சிக்கு எதிராகவும், வங்கதேசத்தில் ஷேக் அசினா ஆட்சிக்கு எதிராகவும், நடந்த போராட்டங்கள் அனைத்திலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பங்கெடுத்துக் கொண்டு போர்க் குணத்துடன் போராடி வருகின்றனர்.

இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலும், வேளாண் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் இதேபோன்று ஒன்று திரண்டு எழுச்சியுடன் போராடியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

“ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்க புரட்சியும்” என்ற இந்த லெனினிச காலகட்டத்தில் இருபத்தோராம் நூற்றாண்டில் அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்தும், அதன் அடியாள் படையான பிராந்திய வல்லரசான இந்தியாவை எதிர்த்தும், 2008 ஆம் ஆண்டு நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த கம்யூனிச புரட்சி தெற்காசிய நாடுகளில் பரவி மீண்டும் உலகில் கம்யூனிசத்தை உயிர்த்தெழ செய்துவிடும் என்ற அஞ்சி நடுங்கியது.

இந்திய ஆளும் வர்க்கமும், அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஒன்றிணைந்து நேபாள புரட்சியை ஒழித்துக் கட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர்.

இதன் காரணமாகவே பிற்போக்கு மன்னர் ஆட்சியை வீழ்த்துகின்ற வரை நேர்மையாக போராடிய மாவோயிஸ்டு கட்சியின் தலைமைக்குள்ளேயே ஊடுருவி அந்தக் கட்சியை இரண்டாக பிளப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

குறிப்பாக இந்தியா மூலம் பல்வேறு சதி திட்டங்களையும், உதவி என்ற பெயரில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் இந்திய தரகு முதலாளிகள் முதலீடு நேபாளத்தில் குவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

முதலாளித்துவ நாடாளுமன்ற சீரழிவின் கீழ் நேபாளம்!.

இதன் உப விளைவாக சுயசார்பு பொருளாதாரத்தை கட்டி அமைப்பதற்கு பதிலாக ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்பை சார்ந்து நிற்கின்ற அடிமை பொருளாதாரம் ஒன்றை முன்னிறுத்தி செயல்பட்டதால் மாவோயிஸ்ட் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது என்பதும், அதன் பிறகு போலி புரட்சிகர குழுவாக செயல்பட்ட பிரிவினர் பாராளுமன்றத்தை கைப்பற்றி கொண்டு அரசியலில் அதிகாரத்தை சுவைப்பதற்கு பல்வேறு ‘அரசியல் அசிங்கங்களை’ செய்தனர் என்பதும் அம்பலமானது.

இந்த நூற்றாண்டில் உருவான இணையற்ற மக்கள் புரட்சியின் தலைமை சக்தியான கம்யூனிச புரட்சியாளர்களின் மீதும், கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கை உருவாக்குகின்ற அளவிற்கு நேபாளத்தில் போலி மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட அருவருப்பான நடவடிக்கைகள் மேலோங்கிக்கொண்டே சென்றன.

தற்காலிக இடைக்கால அரசாங்கம், அதன் பிறகு புதிய ஜனநாயக புரட்சி, படிப்படியாக சோசலிசத்தை நோக்கி முன்னேறுவது; சோசலிச முகாம் ஒன்றை அமைப்பது; ஏகாதிபத்தியம் மற்றும் மேல்நிலை வல்லரசுக்கு எதிராக சோசலிச பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முகாம் மூலமாக புதிய நம்பிக்கையை உருவாக்குவது என்ற வழிமுறைகள் அனைத்தும் பின்னடைவுக்கு உள்ளானது.

இதற்கு நேர் மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை சார்ந்து உருவான பொருளாதாரம் மக்களின் வாழ்க்கையை கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. இதன் விளைவாகவே தற்போது மக்களின் கோப உணர்வு அனைத்தும் ஒன்று திரண்டு மிகப்பெரும் எழுச்சியாக உருவாகியுள்ளது.

ஒருபுறம், கடுமையான பொருளாதார தாக்குதல்களை தொடுத்துக்கொண்டே மக்களின் மீது கருத்தியல் ரீதியிலான தாக்குதலை தொடுப்பதற்கு அவர்கள் பயன்படுத்துகின்ற சமூக ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட தடையானது மக்கள் மத்தியில் பற்றி எரிய துவங்கிய உடனே ஆட்சியாளர்கள் குடியிருந்த இடங்கள், பாராளுமன்றம், கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரை வீதியில் ஓட விட்டு அறைந்த காட்சி வெளியாகி அண்டை நாடான இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பீதியை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட எழுச்சிகள் அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது என்ற அசட்டு துணிச்சலில் சங் பரிவார கும்பல் பல்வேறு கருத்துகளை சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி வருகின்றனர்.

மாதத்திற்கு ஒரு பார்ப்பன மதப் பண்டிகை, மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கும் சாதிய உணர்வுகளை ஊக்குவிக்கின்ற வகையில் சாதி வெறி சங்கங்களை கொண்டு தொடர்ச்சியாக பிளவுபடுத்துவது, கலவரங்களை உருவாக்குவது என்று சாதியின் பேராலும், மதத்தின் பெயராலும் கட்டுண்டு கிடக்கின்ற வகையில் பெரும்பான்மை மக்களை கட்டுப்படுத்துகின்ற வசதி வாய்ப்பு உள்ளதால் இங்கு மக்கள் ஒன்று திரள மாட்டார்கள் என்று கொக்கரித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், இயற்கையின் விதியின் படியும், சமூக விஞ்ஞான விதிகளின்படியும் ஆதிக்கம் செலுத்துகின்ற, அதிகாரம் படைத்த சக்திகள் ஒரு கட்டத்திற்கு பிறகு தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி ஒளிவதும் மக்கள் அவர்களை அடித்து துரத்தி வீழ்த்தி புதிய சமூக அமைப்பை, புதிய சமூக கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவதும் தவிர்க்க முடியாது.

வங்கதேசம், இலங்கை, நேபாளம் என்ற அண்டை நாடுகளில் நடக்கின்ற எழுச்சியை இந்தியாவில் உருவாக்குவதற்கும், அந்த எழுச்சி தற்காலிகமாக தோன்றி மறைவதைப் போல இல்லாமல் புதிய ஒரு சமூக கட்டமைப்பு உருவாகின்ற வகையில் அதாவது ஜனநாயக கூட்டரசு ஒன்று உருவாகின்ற வகையில் மக்களை பயிற்றுவிப்போம்.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here