மிழ்நாட்டில் மதசார்பற்ற தன்மையில் ஒரு இணக்கமான வாழ்க்கையை மேற்கொள்ளும் – மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை பிளவு படுத்தி, வடநாடு போல் இங்கும் ஆட்சியைப் பிடிக்கலாம்… அதன் மூலம் மசூதிகளை இடித்துத் தள்ளலாம்; தேவாலயங்களை இடித்துத் தள்ளலாம், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை அச்சுறுத்தல் வாழ்க்கையிலேயே காலம் தள்ள வழிவகை செய்யலாம்…என வரிந்து கட்டிக்கொண்டு பல்லாண்டுகளாக பாஜக -ஆர் எஸ் எஸ் – சங்பரிவார் – பாசிச காவிக் கூட்டம் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்று வரை அவர்களது கனவு நிறைவேறவில்லை.

எனவே, காவிக் கூட்டத்தின் வடநாட்டு பல மூலவர்கள் காட்டும் வழிமுறைகள் படி, தமிழகத்தை எப்படிக் கலவரப் பூமியாக்கலாம்; அரசியல் அறுவடை செய்யலாம் எனத் திட்டமிடப் பட்டு அனைத்து வகை சங்பரிவார் காவிக் கூட்டத்தினராலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

திருப்பரங்குன்றம் பிரச்சனை தான் என்ன? 

இது பற்றி ஏற்கனவே நாம் பல கட்டுரைகளை படைத்திருக்கிறோம். எனினும் சாராம்சம் இதுதான்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில், உச்சிப் பிள்ளையார் கோயில், சமணக் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, விஸ்வநாதர் கோயில்… போன்றவை இருக்கின்றன.

பிரிட்டிஷ்காரன் காலத்திலேயே அந்நாளைய (காவி) பார்ப்பனக் கூட்டம் தர்கா இருக்கும் இடத்திற்கு உரிமை கொண்டாடி மதுரை கீழமை நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர்.

வட்டாட்சியர் ராமசாமி ஐயங்கார், அன்றைய நீதிபதி ராமய்யர் போன்றோர் பல்வேறு தரப்பட்டோரையும் உடன் அழைத்துச் சென்று புலத் தணிக்கை செய்து எந்தெந்த இடங்கள் எவ்வளவு விஸ்தீரணத்தில் எவரெவருக்குச் சொந்தம் என்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அடையாளக் கற்கள் ஊண்டப்பட்டன.இந்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ராமய்யர் தீர்ப்பே உறுதியானது.

ஆனாலும் எதிரிகள் அன்றைய உச்ச நீதிமன்றம் என கூறப்பட்ட லண்டன் பிரிவி கவுன்சிலில் 1921-ல் மேல்முறையீடு செய்யப்பட்டு 1923, 1931 போன்ற ஆண்டுகளில் எல்லாம் விசாரணை செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா, மசூதி, நெல்லி தோப்பு, அதை ஒட்டிய இடங்கள், அவற்றுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதைகள் அனைத்தும் தர்கா அது சார்ந்த (வக்ப்) இஸ்லாமியர்களுக்கு சொந்தமென தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதன்பின்பும் சுதந்திரம் அடைந்ததாக கூறப்படும் காலகட்டத்திற்கு பின்னரும் எண்ணற்ற முறையில் பல்வேறு நீதிமன்றங்களில் சங்கிக் கூட்டம் வழக்குத் தொடர்ந்து பார்த்தும் காரியம் கைகூட வில்லை.

அதன்பின்பும் இவர்கள் ஆர்எஸ்எஸ் ரூபத்தில் வெளிவந்து நாடு முழுமைக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக, எப்படி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு துண்டு சீட்டைக் கூட நீதிமன்றங்களுக்கு முன்னால் ஆதாரமாக சமர்ப்பிக்க வக்கற்று, அராஜகமாக பாபர் மசூதியை இடித்து தகர்த்தெறிந்து, பின்னர் ராமர் கோயிலைக் கட்டிக் கொள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் எந்த லட்சணத்தில் தீர்ப்புரை எழுதினேன் என்று வாக்குமூலம் கொடுத்தாரோ,

அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் நிறைவேற்றிக் காண்பிக்க ஆர் எஸ் எஸ் சங் பரிவார் கூட்டத்திற்கு, சட்டத்திற்கு புறம்பாக பக்க பலமாக நின்று ரவுடித்தனத்தில் ஈடுபட்டு தீர்ப்புரையையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் நீதிபதி என்ற பெயரில் உள்ள ஜி.ஆர்.சுவாமிநாதன்.

இதே போன்ற வழக்குகள் பற்பலக் காலக்கட்டத்தில் சங்கிகளால் தொடரப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இதே கோரிக்கைக்காக நீதிபதி கல்யாண சுந்தரம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு வழக்கம்போல் எப்படி அறநிலைத்துறை ஏற்பாட்டால் திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறதோ, அந்த நடைமுறையையே பின்பற்றப்படல் வேண்டும்; தர்கா இடத்தை நோக்கி தீபம் ஏற்ற முற்படக்கூடாது என அருதியிட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்து விட்டனர்.

தற்போது கார்த்திகை நெருங்கும் நேரத்தில் ஏற்கனவே முருகன் மாநாட்டில் இந்த பாசிச காவிக் கும்பல் அறிவித்தபடியே தனக்கு ஏதுவான ‘நீதிபதி'(!?) ஜி ஆர் சுவாமிநாதன் ஒற்றை நீதிபதி அமர்வில் ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த இந்துமத அமைப்பினன் ராம.ரவிக்குமார்தர்காவிற்கு அருகில் உள்ள தீபத்தூணில் (உண்மையில் அது தீபத் தூண் அல்ல; மாறாக எல்லைத்தூண்) கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கோரி கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்கிறான்.

ஏற்கனவே இது தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு இதே நீதிமன்றத்தில் முடிவான தீர்ப்புரை வழங்கிய பின்பு ஒற்றை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதே தவறு. ரவிக்குமார் மனு தாக்கல் செய்த தருணத்திலேயே அதனை தள்ளுபடி செய்து உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான் சட்ட நியதி. ஆனால் சட்ட நியதிக்கு தன் வாழ்நாளில் என்றுமே கட்டுப்படாத – சங்கித்தனமான ஆர்எஸ்எஸ் நீதிபதி சுவாமிநாதன், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

விசாரணையில் மனுதாரர் ரவிக்குமார் என்ற ஒரே நபருக்காக அவர் சார்ந்த வழக்கறிஞரும், எதிர்த்தரப்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி காவல் ஆணையர், கோவில் நிர்வாகம், தமிழ்நாடு அரசு, அர்ச்சகர் மாணவர் சங்கம்உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் எதிர்மனுதாரர்களாக வாதிடுகின்றனர். தர்கா தரப்பிலோ, வக்ப் தரப்பிலோ முதலில் சம்மன் கூட அனுப்பப்படவில்லை. இந்த விவாத முறைகளில் எல்லாம் தமக்கு நம்பிக்கை தென்படவில்லை என்று கூறிவிட்டு நான் புலத்தணிக்கை செய்து ஒரு முடிவுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு வாதி தரப்பு – எதிர்த்தரப்பு, அது சார்ந்த வழக்கறிஞர்கள் எவரையும் அழைத்துச் செல்லாமல் தான் ஒருவர் மட்டும் ‘ஒரு சுபயோக சுப தினத்தில்’ திருப்பரங்குன்றத்தில் ‘ஆய்வினை'(!?) மேற்கொண்டார்.

படிக்க:

 திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்பு | புஜதொமு கண்டன அறிக்கை!

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி கல*வரத்தை தூண்ட முயற்சி!

அதன் பிறகு தர்கா தரப்பு, வக்ப் வாரிய தரப்பு முதலானோருக்கு சம்மன் அனுப்பியபோது, அவர்கள் தரப்பில் எங்களுக்கு கடைசி நேரத்தில் தகவல் கொடுக்கின்றீர்கள்; புலத்தணிக்கு செல்கின்ற பொழுது கூட எங்களை அழைக்கவில்லை; எனவே எங்களுக்கு பதில் அளிக்கக் கால அவகாசம் தேவை என்று கூறுகின்றனர்.

இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஒற்றை நீதிபதி விசாரிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான விவாதங்களை அர்ச்சக மாணவர் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான வாஞ்சிநாதன் விவாதத்தை முன் வைத்தார்.‌

அரசு அறநிலையத்துறை சார்பிலும், அரசு வழக்கறிஞரும் போதுமான சான்றாவணங்களை முன்வைத்து தர்காவிற்கு சொந்தமான இடத்தில் மனுதாரர் கார்த்திகை தீபம் ஏற்றிட அனுமதிக்கக் கூடாது; வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் அறநிலைத்துறையால் ஏற்றப்படல் வேண்டும் என்று வாதிட்டனர். இக்கருத்தில் எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வாதிட்டனர் என்பது மிக முக்கியமானதாகும். ஆனால் ஆர்எஸ்எஸ் வெறி உணர்வு பெற்ற ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து விவாதங்களையும் கடாசி எறிந்து விட்டார்.

மனுதாரர் ராம ரவிக்குமார் குறிப்பிடும் தீபத்தூண் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாக கூறப்படுவதற்கு சான்றாவணமாக ஒரு துண்டுச் சீட்டை கூட(ராமர் கோவில் விவகாரம் போல) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வக்கற்ற நிலையில், GRS தன் மூப்பிற்கு, ‘தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் (அது தீபத் தூணே அல்ல; எல்லைக்கல்) மனுதாரர் ரவிக்குமார் டிசம்பர் 3-ல் கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ளலாம்; அந்தத் தீபத் தூணை சென்றடைய, (இஸ்லாமியருக்குச் சொந்தமான அதாவது) தர்காவிற்குச் சொந்தமான படிக்கட்டுப் பாதைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்; மாநகர காவல் துறை இவை அனைத்திற்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும்…’

இதுதான் ‘சட்ட மேதை’ சங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புரையின் சாரம். சிந்தித்துப் பாருங்கள். இவருக்கு எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பு இருக்க வேண்டும்.

ஒரு இந்து கோவிலுக்கு அருகில் தர்காவோ, தேவாலயமோ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த தர்காவிற்கு தேவாலயத்திற்குச் செல்ல பாதையே கிடையாது. கோவில் வழியே போனால் தான் அந்த இரண்டு வழிபாட்டு தலங்களையும் அடைய முடியும்.

படிக்க:

 குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!

 ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?

அப்படிப்பட்ட தருணத்தில் இதே ஜி.ஆர். சுவாமிநாதன் தாராளமாக கோவிலுக்குச் சொந்தமான பாதையில் நுழைந்து தர்கா மற்றும் தேவாலயங்களுக்கு செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்கக் கனவிலும் கூட எண்ணிப்பார்ப்பாரா? ஏன் இந்த வஞ்சனை? இஸ்லாமியர் படிக்கட்டுகளில் நுழைந்து தீபம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ரவிக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறார் என்றால், கலவரம் மூளட்டும் என்று நெருப்பை பற்ற வைக்கிறார் ஜி. ஆர். சுவாமிநாதன்.

எவ்வளவு பெரிய ஆபத்தான பேர்வழி இவர்?

கிளர்ந்தெழுந்த மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு:

ஜி ஆர் சுவாமிநாதனின் சட்டத்திற்கு புறம்பான நீதி நேர்மைக்கு புறம்பான தீர்ப்பைக் கண்டு கொதித்தெழுந்தனர் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தோழர் மீ.த. பாண்டியன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்ந்த பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் உட்பட தீர்ப்பு எப்படி தவறு என்றும், ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு இப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்ற பொழுது, தற்போது ஒற்றை நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் சட்ட நீதி நியதிகளுக்குப் புறம்பான புதிய தீர்ப்பினை வழங்கி உள்ளார்; எனவே இது சட்டப்படி தவறு என்பதால் ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பின்படி தர்காவிற்கு உரிமையான எல்லைக் கல்லில் தீபத்தூண் என்று பாவித்து எதிரிகள் டிசம்பர் 3-ல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வீரியமாக வைத்தனர்.

இவ்வித நடவடிக்கைகளுக்கு (பாஜக சார்பு கட்சியினரைத் தவிர) அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும், மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல பகுதி மக்களும் பெருமளவில் ஆதரவு தந்தனர்.‌ ஊடகங்களில் ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவு குறித்து எள்ளி நகையாடினர். தங்களின் கோபத்தை பெருமளவில் பதிவு செய்தனர். அனைத்தும் ஊடகங்களில் (தினமலர் போன்ற இழிந்த பத்திரிகைகள் தவிர) வெட்ட வெளிச்சம் ஆகின.

இந்நிலையில் டிசம்பர் 3-ல் காவித் துண்டை தலையில் கட்டிக்கொண்ட சில நூறு சங்கிகள் திருப்பரங்குன்றத்தை வட்டமிட ஆரம்பித்தனர். ஏற்கனவே ஜி.ஆர். சாமி நாதனின் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பாக அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அவ்வழக்கு டிசம்பர் 4-ல் விசாரணைக்கு வருகிறது.

அதற்குள் சுவாமிநாதனின் தீர்ப்புரையை நடைமுறைப்படுத்தக் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தவர்கள், காவல்துறையின் தடையையும் மீறி, தர்காவிற்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்ற முயன்றனர். அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காலி கூட்டம் ‘பேரிக்கேட்’டை காவல்துறையை நோக்கித் தள்ளி விட்டு தாக்கியதில் சில காவலர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் சட்டப்பிரிவு 163 BNSS-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

சட்ட நியதிகள் அனைத்தையும்  தூக்கி எறிந்து விட்டு சதிராட்டம் போடுகிறார் GRS!

GRS தற்போது இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சங்கி  ராம ரவிக்குமார் தரப்பு ‘கோர்ட் ஆர்டர்படி தங்களுக்கு தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவில்லை என்று முறையிட்ட மாத்திரத்தில், டிசம்பர் 3-ஆம் தேதி பகலிலேயே அறநிலையத்துறைக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக பணிக்கிறார் GRS. அரசு தரப்பு வழக்கறிஞர், ‘டிசம்பர் 1-ல் தான் தீர்ப்பு வழங்கினீர்கள்; Contempt எப்பொழுதுங்க வரும்; தீபம் 6 மணிக்கு மேல் தானே ஏற்றுவார்கள்; நீங்கள் பகலிலேயே வழக்கு எடுக்கின்றீர்கள்….’என்ற பாணியில் வாதிட்டவுடன், ‘அப்படியா? 6 மணி முடியட்டும்;

நான் 06:05-க்கு வழக்கை எடுக்கிறேன்’ என்று திமிர்த்தனமாக பரபரத்துக் கூறிவிட்டு, இருப்புக் கொள்ளாமல் கிடந்து தவித்து இருக்கிறார். இதே ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் ஆயிரக்கணக்கான contempt வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒன்றிற்காவது இப்படி சங்கிகளுக்காக இறக்கை கட்டி பறப்பது போல பறந்திருப்பாரா? ஏன் இந்த ஆர்எஸ்எஸ் வெறி? ஏன் இந்த பார்ப்பனக் கொழுப்பு?

தமிழ்நாடு அரசுக்கு மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் இருக்கின்றது. ஆனால் இந்த நீதிபதி ‘கெட்டிக்காரத்தனமாக’ டிசம்பர் 3-ல் சங்கிகள் கார்த்திகை தீபம் ஏற்ற டிசம்பர் 1-ல் தீர்ப்பளிக்கிறார். காரணம் என்ன? எவனும் மேல்முறையீடு செய்யக்கூடாது? அதுதான் காரணம். தான் நினைத்ததை சாதிக்க வேண்டும்.

கடைசியில் தமிழ்நாட்டு காவல்துறையை நம்பாமல் மதுரை உயர்நீதிமன்ற வளாகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டிருந்த ஒன்றிய CISF காவல் படையை, ரவிக்குமார் சார்ந்த சங்கிகளுக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைத்து, மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார் இந்த GRS. இதில் மிக முக்கியமானது என்னவெனில் CISF படையினரை இப்படி உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வேறு பணிக்கு அனுப்பிய இந்திய அளவில் முதல் நீதிபதி GRS-தான். இது கேவலமான சட்டத்திற்கு புறம்பான செயல்முறை இல்லையா?

வேறு எந்த Contempt வழக்கிலாவது இப்படி CISF படை வீரர்களை இதற்கு முன் GRS அனுப்பி வைத்த வரலாறு உண்டா? சங்கி விவகாரம் என்றால் ஏன் இப்படி வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்? இதற்காகவே GRS மீதும் CISF-க்கு பொறுப்பான நீதிபதி ஜெயச்சந்திரன் மீதும் தக்க நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எடுக்க வேண்டும். ஒருவேளை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தெரிந்தோ அனுமதி பெற்றோ இச்செயல் அரங்கேறி இருந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இம்மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன சட்டம்? என்ன நீதி? என்ன நீதி பரிபாளன முறை? காரித் துப்புவது போல் உள்ளது.

ஆனால் இப்படை அனுப்பப்படுவதற்கு முன்னரே, சங்கிகளுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு வில் காவலர்கள் காயம் பட்டதாலும், பதட்டமான சூழ்நிலையை சங்கிகள் ஏற்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்ததாலும், ஒன்றிய CISF வீரர்களையும் சங்கிகளையும் மலையில் ஏற காவல்துறை அனுமதிக்கவில்லை.

டிசம்பர் 4-ல் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஜெயச்சந்திரன்- ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்விலும், ரவிக்குமாரின் contempt வழக்கு ஜி ஆர் சுவாமிநாதன் அமர்விலும் விசாரணைக்கு வருகின்றன. ஜி.ஆர்.எஸ்ஸின் அநீதியான தீர்ப்பை ரத்து செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளனர். ஜி.ஆர்.எஸ் தர்கா அருகில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு அமலாக்கப்பட்டதை இன்று காலை 10.30க்கு மீண்டும் விசாரிக்கிறார்.‌

இந்திய அளவில் சங்கிகள் அனைவரும் ஒரே பாசிச ரகமே!

2018-ல் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.ஆனால் அதை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது பாஜக உள்ளிட்ட காவி(லி)க் கூட்டம்.

அதை ஒட்டி ‘நிறைவேற்ற முடியாத தீர்ப்புகள் வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்’ (‘courts should desist from pronouncing verdicts that cannot be implemented’) – எனது திருவாய் மலர்ந்திருந்தார் ‘அறிவுலக மேதை’ கலவர நாயகன் அமித்ஷா. அதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது எனக் கலவரம் செய்தன சங்கிக் கூட்டம்.

ஆனால், மதுரை திருப்பரங்குன்றத்தில் மட்டும் ஆண்டாண்டு காலமாக திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை அறநிலையத்துறையே, பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வரும் வேளையில் – வழிபாடு செய்து வரும் வேளையில், சங்கிகளும் நீதிபதி ஆர் எஸ் எஸ்-காரரான ஜி. ஆர். சுவாமிநாதனும் குறுக்கே விழுவது ஏன் என்பதே நமது கேள்வி.

ராம. ரவிக்குமார் என்ற சங்கி ஒருவன் 1996 மற்றும் 2017 வரை உறுதியாக்கப்பட்ட தீர்ப்பிற்கு மாறாக தர்கா இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுச் செய்கிறான். உடனே புலத்தணிக்கை செய்து தன் மூப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கிறார் சங்கி நீதிபதி GRS. எவ்வளவு பெரிய கொடுமை இது? மொத்தத்தில் கலவர நோக்கம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

அந்த வகையில் டிசம்பர் 3-ல் தமிழ்நாடு அரசு கலெக்டர் மூலம் 144 தடை உத்தரவு பிறப்பித்தும் “We are not allowing, We will face the consequences” என்று காவல்துறை அதிகாரிகள் மூலம் உறுதியாக நின்றும் சங்கி கூட்டத்தின் கனவுகளை தற்காலிகமாகவாவது தகர்த்தெறிந்ததைப் பாராட்டுவோம்.

இருப்பினும் தடையை மீறி ‘பேரைக்கேட்’டை உடைத்து உள்ளே நுழைந்து காவலர்களை தாக்கிய காலிகளை எவர் எவர் என கண்டறிந்து தமிழ்நாடு அரசின் காவல்துறை கடுமையான தண்டனை வழங்க முன்வர வேண்டும்.

மரபுவழி வழிபாட்டு முறைக்கு எதிராக பக்தர்கள் நம்பிக்கைக்கு (அமித் ஷா சொன்ன அதே ‘faith’) எதிரான சங்கிகளின் முயற்சி தமிழ்நாட்டில் முதற்கட்டமாக முறியடிக்கப்பட்டுள்ளது. வடநாட்டை போல பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பாஜக காவிக் கூட்டத்தின் பாசிச சதிச் செயல்கள் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது – என்பது சங்கி கூட்டத்திற்கும், அவர்களின் அடிமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் குரலாக டிசம்பர் 3-ல் பதிய வைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் தமிழ்நாட்டு மக்களும் அரசியல் இயக்கங்களும் விழிப்போடு இருக்க வேண்டும். மிதப்பாக இருந்து விடக்கூடாது.

GRS-ன் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் ஒன்றா? இரண்டா?
  • அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிருத்துவ தேவாலயத்திற்கும் – மண்டுக் கருப்பன் கோவிலுக்கும் இடையிலான பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கேயும் இதே GR சுவாமிநாதன் கலவரப்புத்தியுடன் கிறித்தவ மதத்தினருக்கு எதிரான நிலைப்பாட்டை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொண்டுள்ளார்.
  • கரூர் அருகிலுள்ள நெரூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு கோவில் நிகழ்வில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலைகளின் மீது வெற்று உடம்புடன் சூத்திரர்களும் பஞ்சமர்களும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உருண்டு பிரார்த்தனை செய்வது, இந்த விஞ்ஞானக் காலத்தில் ஏற்புடையதன்று என தொடரப்பட்ட வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு சில பார்ப்பன புத்தியுடைய நபர் இந்த வழக்கை இதே GR சுவாமிநாதன் ஒற்றை நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்தபோது, ‘பக்தர்களுக்கு இப்படி எச்சில் இலையில் உருள்வதால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது; அவர்கள் நம்பிக்கையில் கடவுள் மத வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’ என்ற வகையில் கருத்து கூறி எச்சில் இலையில் உருள்வது சட்டப்படி தவறில்லை தாராளமாக உருண்டு கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்தார் இந்த ‘மாமேதை’ GR.சுவாமிநாதன்.
  • ஆளுநர் RN. ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கெல்லாம் கையொப்பமிடாமல் மூட்டை கட்டி வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா – மகாதேவன் அமர்வு ஆளுநரை தலையில் கொட்டி பத்து மசோதாக்களுக்கும் முன் தேதியிட்டு ஒப்புதல் வழங்கியது.

அதை நடைமுறைப்படுத்தி துணைவேந்தர்களை நியமிக்க முதலமைச்சர் முயன்ற பொழுது, திருநெல்வேலி மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடேசன் அவசரம் ஏதுமற்ற அதே நேரத்தில், அவசரங்களுக்காக உருவாக்கப்பட்ட விடுப்பு கால மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வழக்கை சென்னை விடுப்பு கால அமர்வில் அமர்ந்திருந்த தனக்கு ஏதுவான நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் லட்சுமி நாராயணன் அமர்வில் தாக்கல் செய்து, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ராமன், வில்சன் முதலானோருக்கு ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்க மறுத்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தார் இதே ஜி. ஆர் சுவாமிநாதன். இதனால் எண்ணற்ற துணைவேந்தர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பாழாகிறது.

  • ஒரு இந்திய பார்ப்பன அமெரிக்க வாழ் பெண்மணி தமிழ்நாடு வந்திருந்த பொழுது, கார் ஓட்டிச் சென்ற சமயத்தில் ஒருவர் மீது மோதி அவர் மாண்டு போனார். ஆனால் அப்பார்ப்பனப் பெண் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும்; இந்தச் சூழ்நிலையை புரிந்து கொண்ட அப் பெண்ணின் சகோதரன், அந்தக் காரை ஓட்டிச் சென்று கொலை செய்தது தானே என ஏற்றுக் கொள்கிறான்; அமெரிக்க வாழ் சகோதரியை உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி விடுகிறான்; ஆள்மாறாட்டம் செய்து குற்றத்தை ஏற்றுக் கொண்டவனுக்கு நீதிமன்றம் 18 மாதங்கள் மட்டும் சிறை தண்டனை வழங்குகிறது.

இந்தக் குடுமி வைத்த ஆள் மாறாட்டக்கார பார்ப்பனன் அற்றை நாளில் வழக்கறிஞராக இருந்த ஜிஆர். சுவாமிநாதன் வீடு வந்து கதறி அழுது காப்பாற்ற மன்றாடியுள்ளான். இவனுடைய ‘படுபாதகமான’ சூழலை ‘நன்குணர்ந்த’ வழக்கறிஞர் GRS அவனது முதுகில் தட்டிக் கொடுத்து, தமது வீட்டிற்குள் அமரச் செய்து ஆசுவாசப்படுத்தி, தனது இல்லாளிடம் பிஃல்டர் காஃபிவழங்கச் செய்து, இப்படி கூறினாராம். ‘வேதம் அறிந்த பிராமணாள் எவரும் எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்கப்படவே கூடாது; அப்படி தண்டிக்கப்பட்டால் ஸனாதனமே பொய்த்துப் போனதாக அர்த்தம்; நான் உன்னை விடுவிக்கச் சபதம் கொள்கிறேன்; தைரியமாக இரு…’ என்ற பாணியில் தைரியம் ஊட்டி வழக்கை மேல்முறையீடு என்ற பெயரில் சாட்சியங்களின் சில ஓட்டை உடைசல்களை கண்டறிந்து, தனது வகுப்பு தோழனான மிக நெருங்கிய நண்பன் அமர்விற்கே இந்த வழக்கை கொண்டு சென்று ஆள் மாறாட்ட பேர்வழியைக் காப்பாற்றி விட்டாராம். அப்படி காப்பாற்றி விட்ட அன்றைய வழக்கறிஞர் தான் இன்றைய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

இந்த உண்மையை நீதிபதி பதவியில் இருந்து கொண்டு, சட்டை போடாமல் பூணூல் மட்டுமே அணிந்து கொண்டு ஒரு அரங்கத்தில் நிறைந்திருந்த கூட்டத்தில் ஒலிவாங்கியில் பேசியவர் இதே ஜி. ஆர். சுவாமிநாதன் தான். கொலை செய்தது ஒருவர்; ஆள் மாறாட்டத்தின் மூலம் குற்றத்தை வலிந்து ஏற்றுக் கொண்டவர் இன்னொருவர்; இவர்களை சட்டத்தின் ஓட்டை உடைசல்களை பயன்படுத்தி காப்பாற்றி விட்டேன் என்று வெட்கம் துளியும் இன்றி கூறுபவர் இன்னொருவர்… ஆக மூவருமே குற்றவாளிகள்.

இவர்கள் மீது GRS-ன் வீடியோ வாக்குமூல உரையின் மூலம் எஃப்.ஐ. ஆர். பதிவு செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா? இப்படி எல்லாம் இருந்தால் எப்படி நீதி விளங்கும்? சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

*காவி கூட்டம் நடத்திய மதுரை முருகன் மாநாட்டிற்கு பல்வேறு நீதிமன்றங்கள், ஏன் உச்ச நீதிமன்றம் வரை சென்று கூட வாகனங்களுக்கு பாஸ் வாங்குவதற்கான உத்தரவை பெற முடியவில்லை.

ஆனால் சந்து பொந்துக்குள் நுழைந்து இதே ஜி ஆர் சுவாமிநாதன் அமர்விற்கு சங்கிகள் மனுத் தாக்கல் செய்து ‘பாஸே தேவையில்லை;

எத்தனை வாகனங்களில் வேண்டுமானாலும் ஆட்களை திரட்டி கொண்டு சென்று மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்’ என்று தீர்ப்பு வழங்கியவர் தான் இதே ஜி. ஆர். எஸ்.

  • அந்த மாநாட்டில் தான் அரசியல் பேச மாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு கார்த்திகை தீபம் ஏற்றியே தீர்வோம் என்று பேசினார்கள் தீர்மானம் போட்டார்கள் காவிக் கூட்டத்தினர்.

ஆனால் நீதிமன்றம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. காவல்துறை மற்றும் அரசின் நிலைமைகளும் அதே தான்.

  1. அர்ச்சகர்கள் நியமன வழக்கில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தகுதி பெற்ற அர்ச்சக மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் பெற மடுத்தாக்கல் செய்து இருந்த பொழுது, ‘நானே ஸ்மார்த்த பிராமணன்; நான் நினைத்தாலே அர்ச்சராக செல்ல முடியாது.. உங்களை எப்படி நியமிக்க முடியும்’ என்ற பாணியில்.. நானே நானே என்று திமிர் எடுத்துக் கூறினாரே ஜி ஆர் எஸ்.

இவர் நீதிபதி பதவிக்கு லாயக்கணவரா. *மத்திய பிரதேசத்தில் ஒரு பெருமாள் கோவிலில் உடைந்து கிடந்த சிலையை கற்பக் கிரகத்திற்குள் உள்ளே வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்மனுச் செய்கிறான் ஒருவன். ‘இது தொல்லியல் தொடர்பான வழக்கு. எனவே உங்களது கோரிக்கையை தொல்லியல் துறைக்கு கொண்டு செல்லுங்கள்; அங்கே சென்று தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய். ‘அங்கே முடியாததால் தான் இங்கே நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறேன் என்று விடாமல் வாதிடுகிறான் அந்தப் பார்ப்பனீய வழக்கறிஞன்.

தலைமை நீதிபதியோ எவ்வளவோ விளக்கியும் அந்த மரமண்டையில் ஏறாததால், ‘அப்படியெனில் உங்கள் ஆண்டவனிடமே சென்று முறையிட்டு- வழிபட்டு தீர்வு கண்டு கொள்ளுங்கள்’ என்று சரியாகவே கூறினார்.

இதற்காகத்தான் சங்கிக் கூட்டம் நாள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது ஷூவை (செருப்பை) கழற்றி வீசினான் அந்தப் பொறுக்கி வழக்கறிஞன்.

ஆனால் உச்சநீதிமன்றம், ஜனாதிபதி, பிரதமர், உத்துறை மந்திரி, ராணுவம், காவல்துறை, பாராளுமன்றம், நீதிமன்றம்…என என்னென்ன துறைகளோ இருந்தும் அந்த வெறி நாய் மீது எள்ளின் முனையளவும் நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையற்ற பிரச்சனைகள் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண்டு சதிராட்டம் போடும் நீதிபதிகளை சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வெட்கக்கேடு! மானக்கேடு!

  • கடந்த பிப்ரவரி 4-ல் இதே திருப்பரங்குன்றத்தில் காவிக் கூட்டம் நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த உத்தரவாதத்திற்கு மாறாக காவிக் கொடிகளுடன் முருகன் கோவிலில் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிட்டு கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்ட கேவலத்தையும், ‘டிசம்பர் 6 பாபர் மசூதிக்கு மட்டுமல்ல; திருப்பரங்குன்றத்திலும் நிறைவேற்றி காண்பிப்போம்’ என்று திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவை தகர்ப்போம் என்ற கண்ணோட்டத்தில் ‘வீர’ முழக்கமிட்டானே – உயர்நீதி மன்றத்தையே மசுருக்குச் சமம் எனச் சொன்ன – எச்ச ராஜா; அவன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் காவல் ஆணையாளர் லோகநாதன் உட்பட அரசாங்கம் ஏன் எச்ச ராஜாவை கைது செய்யாமல் இருக்கிறது?

இப்படியாக தமிழ்நாட்டில் படிப்படியாக காவி கூட்டம் காவல் துறையிலும் நீதித்துறையிலும் நிறைந்து வழிகிறது. தமிழ்நாட்டு மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருந்து முறியடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

விழிப்புணர்வு கொள்வோம்! 

எழுச்சியுடன் களம் காண்போம்!

காவிக் கூட்டத்திற்கும் அதன் அடிமைகளின் அராஜகத்துக்கும் முடிவு கட்டுவோம்! 

இது பெரியார் மண் தான் என்பதை மெய்ப்பிப்போம்!

கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்! 

 ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here