எவர்தாம் பெரியார்?
"தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டைச் சுரப்பை உலகு தொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம் பெரியார்!"
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
1879 செப்டம்பர் 17-ல் வேங்கடப்ப (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள் ஆகியோருக்கு ஈரோட்டில் பிறந்தவரே ஈ.வே.ராமசாமி எனும் தந்தை பெரியார்.
சிறுவயதிலேயே முரட்டுத்தனம் உடையவராகவும், வீட்டில் குடும்பத்தாருக்கு அதிக தொல்லை கொடுப்பவராகவும் இருந்ததால் மட்டுமே இவர் 1885-ல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்த வயதிலும் பள்ளி ஆசிரியரை அடித்திருக்கிறார். ஆக அவர் பள்ளிக்குச் சென்ற ஆண்டுகள் என்பது மொத்தம் ஐந்தே (5) ஆண்டுகள் தான். அதன் பின் அவர் கல்விச்சாலை வழியாக துளியும் கற்றவர் இல்லை.
1891-ல் தமது 12-வது வயதில் தமது தந்தையின் வணிகத் தொழிலில் ஈடுபடலானார். தங்கள் வணிக நிறுவனத்தை நோக்கி வருவோர் – போவோரிடம் கூர்மையான அறிவாற்றல் காரணமாக தர்க்க விவாதம் புரிவதை, சிறுவயதிலிருந்தே அவர் சுய புத்தியின் அடிப்படையில் மேற்கொள்ளலானார். இது பலருக்கு வியப்பையும், இன்னும் பலருக்கு ஆத்திரத்தையும் ஊட்டியது.
தம்மைப் பற்றி 1937-ல் அவரே கூறிய வார்த்தைகளைக் கீழே காண்க:
“எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தம் உள்ள இடங்களில் போலியாக காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அதுபோலவே, கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டும் என்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி எந்தக் காரியத்தையும் செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். அதேபோல, கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ, எனக்கு அவசியம் என்று தோன்றாத எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்”
” எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி – மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கின்றேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை”.
இது “நவமணி” என்ற இதழின் ஆண்டு மலர் ஒன்றில் 1937 இல் தந்தை பெரியார் குறிப்பிட்டதாகும். ஆக, ஒரு வகையில் இவர் பிறவி நாத்திகராக, பிறவி பகுத்தறிவாளராக, பிறவி சமத்துவ இயல்புடையவராக தன்னைத் தகவமைத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்று எண்ணுகின்ற பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது.
இந்த வகைகளில் தான், அவர் தமது சுய புத்தியை மென்மேலும் வளர்த்துக் கொண்டு, சுய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதும், பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதும், புராண இதிகாசக் குப்பைகளில் நாற்றம் எடுத்துக் கிடக்கும் சகல இழிவுகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டவரானார். நாசகர சனாதன பார்ப்பனக் கும்பல் தம் பிழைப்புவாதத்திற்காக உருவாக்கி அளித்த இந்து மதம், மோட்சம், நரகம், தெய்வம், அவதாரம், வேதம், புராணம், சாதி, தீண்டாமை, சனாதனம் என்பன போன்ற முற்றிலும் புரட்டுவாதக் கருத்தோட்டங்களுக்கு, நேர் எதிரானவரானார். அவர் மனதை வெகுவாகப் பாதித்தது நாட்டில் நிலவும் சாதி – தீண்டாமைக் கொடுமைகள் ஆகும். இவை அவரது மனதில் ஆழ்ந்த கவலையையும் ஆழமான வடுவையும் உருவாக்கியது.
அக்காலம் சனாதனப் பார்ப்பனியம் கோலோச்சி இருந்த காலக் கட்டமாகும். (பெரியார் மறைவுற்று 52 ஆண்டுகள் கடந்த பின்னரும் அக்கொடுந்துயர் இன்னும் நீடிப்பது அவமானம்; வெட்கக்கேடாகும்) இத்தருணங்களில் பெரியார், காங்கிரஸ் இயக்கத்தில் முழு மூச்சோடு இயங்கினார். காந்தியின் சொற்கேட்டு அந்நிய ஆடைகளை புறக்கணித்து, தேசிய ஆடைகளான கதர் ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக கதர் மூட்டைகளை தன் தோளில் சுமந்து ஊர் ஊராக, தெருத் தெருவாகச் சென்று விற்றவர் தந்தை பெரியார். அதுமட்டுமல்ல; கதர் ஆடை அணிந்து தானே நடைமுறைப்படுத்திக் கொண்டார். தனது தாய், சகோதரிகள் குடும்பத்தார் அனைவரையும் கதர் ஆடை உடுத்தச் செய்தார். ஒருமுறை மதுவுக்கு எதிரான முன்னெடுப்பினை காந்தியார் அறிவித்த நேரத்தில், தனது நிலங்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது தரும் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். ஈரோடு நகர்மன்ற தலைவர் பதவி வகித்தார். வெள்ளையன் உருவாக்கி வைத்த ஜில்லா போர்டு நீதிபதியாக இருந்திருக்கிறார். இன்னும் பல அரசு பதவிகளில் இருந்திருக்கிறார். காங்கிரசாரில் காந்தியக் கோட்பாடுகளை பெரியாருக்கு இணையாக வேறு எந்த காங்கிரஸ்காரனும் (பார்ப்பன காங்கிரசார் உட்பட) ஆற்றிய வரலாறு இல்லை. அந்த அளவிற்கு சுயநலம் பாராது பொது நலம் கருதியே தனது வாழ்வை தகவமைத்துக் கொண்டார் பெரியார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக – நலனுக்காக எந்நாளும் சிந்திக்கத் துவங்கினார். இத்தோடு மட்டுமல்ல; பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த குருகுல கல்விச்சாலைகளில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாக உணவு- உறைவிட இடம்; பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாக உணவு- உறைவிட இடம்; பார்ப்பனர்கள் மட்டுமே கோவில்களில் அர்ச்சகர்களாக நீடிப்பது, பார்ப்பன அக்ரகாரங்களில் சூத்திர பஞ்சம மக்கள் நடமாடுவதிலிருந்த கடும் கட்டுப்பாடுகள், தேவதாசி முறை அமலில் நீடித்தது; பெண்ணடிமைத்தனம்; வகுப்புவாரி பிரதிநிதித்துவம்…. இவை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளில் காந்திக்கும்- பெரியாருக்கும், காங்கிரசுக்கும்- பெரியாருக்கும், பார்ப்பனர்களுக்கும்- பெரியாருக்கும் மோதல் போக்கு மிகக் கடுமையாக நீடித்தது.
இறுதியில் காங்கிரஸ் என்பது உருப்படாத கட்சி, இக்கட்சியால் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட – பழங்குடியின – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்நாளும் விடியல் ஏற்படப் போவதில்லை; இது பார்ப்பனர்களின் நலன்களுக்காக மட்டுமே உருவான கட்சி என்ற முடிவுக்கு வந்தவராய், 1925-ஆம் ஆண்டில் காங்கிரஸ்சை விட்டு பெரியார் வெளியேறினார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், நீதிக் கட்சியின் வழியே சுயமரியாதை இயக்கம் கண்டார்.
குறிப்பிட்ட காலம் வரை தமிழ்நாடு தனி நாடாகப் பிரிந்தாக வேண்டும்; வடவரின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு இருக்கும் வரை பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க முடியாது; எனவே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தமது விடுதலை பத்திரிக்கையில் முகப்பிலேயே வெளிவர வைத்தார். ஆனால் அம்முழக்கத்திற்கு ஏற்ற நடைமுறை திட்டத்தை முன் வைத்து செயற்பாடுகளை வகுத்துக் கொண்டவராய் பெரியார் இருக்கவில்லை என்பது பெரிய முரண்.
படிக்க: பெரியார் உயிரோடு இருந்திருந்தால்
02-05-1925-ம் நாளில் பெரியார் ‘குடியரசு’ என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த இதழைத் தொடங்கினார். அந்த நாளையே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக வரையறுத்து இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த 2025 என்பது பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு ஆகும்.
1925 சுயமரியாதை இயக்கத்திற்கு மட்டும் நூற்றாண்டு அல்ல; உலகம் முழுமையும் உழைக்கும் மக்களுக்கு விடுதலையைத் தேடித் தர வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டதும் இதே 1925-ல் தான்.
ஆக, இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும் இது நூற்றாண்டு.
இந்த நாட்டை இன்று குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கக் கூடிய, நாட்டு மக்களை சாதி ரீதியிலும், மத ரீதியிலும் பிளவுபடுத்தி, சகலவற்றிலும் சனாதனப் பார்ப்பனியம் கோலோச்சுவதற்கும், மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறித்தெடுத்துவிட்டு, நாடு முழுமைக்கும் கலவரங்களை ஏற்படுத்தக்கூடிய – பாஜக – இந்துத்துவ – அமைப்புக்களுக்குத் தாயாக உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு விதை ஊன்றப்பட்ட ஆண்டும் இதே 1925 தான்.
ஆம், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் இது நூற்றாண்டு.
அப்படியானால் மேற்கண்ட மூன்று இயக்கங்களும் 2025-ல் தத்தம் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இம்மூன்று இயக்கங்களின் லாப-நஷ்டக் கணக்கை எப்படி பரிசீலிப்பது?
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்ட பிறகு நாட்டில் நிலவக்கூடிய சாதி மத வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொண்டார். இதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய சனாதனப் பார்ப்பனியம் குழி தோண்டிப் புதைக்கப்படல் வேண்டும் என்றும் அக்கறை கொண்டிருந்தார். மனஸ்மிருதி, பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக்கதைகளை உள்ளடக்கிய, மனித விரோத நூல்களை ஆழமாகக் கற்றறிந்தார் பெரியார்.
படிக்க: ஆர் எஸ் எஸ் –இன் நெஞ்சைக் கிழித்த அம்பு!
உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது; மந்திரம் பிராமணர்களுக்குக்(பார்ப்பனர்களுக்கு) கட்டுப்பட்டது… எனவே சூத்திர பஞ்சம அடித்தட்டு மக்கள் கடவுளை நேரடியாக வணங்க வேண்டும் என்பதில்லை;
பிராமணாளை (பார்ப்பனர்களை) வணங்கினாலேயே கடவுளை வணங்கியதற்கு சமம் என்று போதித்தது சனாதன பார்ப்பனியம்.
(எனவே தான் அக்காலத்தில் பத்து வயது பார்ப்பனன் எண்பது வயது சூத்திர முதியவரை ‘டேய் கருப்பா’, ‘டேய் குப்பா’ என்று விளித்தழைக்க முடிந்தது; இன்று வரையிலும் கூட நமது அறியாத மக்கள் – படித்தவராக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும் பார்ப்பனர்களை வைத்து வீடுகளில் சகல காரியங்களையும் செய்து கொள்வதும், அதைப் பெருமையாகக் கருதுவதும் அந்த ஈனப் பிறவிகளை ‘சாமி’ என்று அழைப்பதும் நீடித்துக் கொண்டிருக்கிறது.) எனவேதான் இந்து மதம், அது போதிக்கும் மந்திரங்கள், அதற்கு அடிப்படை இருக்கக்கூடிய கடவுள்கள், இவை அனைத்தையும் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனர்கள் அனைத்தையும் தூக்கி ஆற்றில் போடு என்று கங்கணம் கட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை தட்டி எழுப்பி வேலை செய்ய ஆரம்பித்தார் பெரியார்.
‘பிராமணாள் ஹோட்டல்’, ‘ஐயங்கார் காபி கஃபே’ என்ற பெயர்ப் பலகைகளை அகற்றப் போராடி வெற்றி பெற்றார். ஆனால் இன்றோ ‘ஐயங்கார் பேக்கரி’ என்றும், ‘ஐயர் ஹோட்டல்’ என்றும் சூத்திரர்களே கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வெட்கமின்றி லாபம் ஈட்டுகின்றனர்.
தந்தை பெரியாரின் உழைப்பு எங்கே? பிழைப்புவாத இந்த ஈனர்களின் இழிந்த செய்கை எங்கே? ஒப்பிட்டுப் பாருங்கள்
(தொடரும்…)
- எழில்மாறன்
சிறிய கட்டுரை மூலம் பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது போன்ற ஒரு உணர்வு உள்ளது உணர்வு உள்ளது 2025 ஆம் ஆண்டில் நூற்றாண்டு கொண்டாடும் மூன்று ஒன்று கொண்டு முரண்பட்ட இயக்கங்கள் குறித்து எழுதிய விதம் நன்றாக உள்ளது. கட்டுரை மிக சிறப்பாக அமைந்துள்ளது. 💐💐💐💐