ஆணவப் படுகொலைக்கு பலியான கவின்
பெற்றோருடன் கொடுந் துயரில் “மக்கள் அதிகாரம்” தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு சி. சந்திரசேகர் – தமிழ் செல்வி இணையரின் மூத்த மகன் கவின் செல்வ கணேஷூம்(பட்டியலினம்), ஆதிக்க சாதி வெறி கொண்ட சரவணன் – கிருஷ்ணகுமாரிமகள் சுபாஷினியும்
பள்ளிப் பருவம் முதல் ஒருவருக்கொருவர் நேசித்து காதலித்து வந்தது குறித்தும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த வேளையில், நயவஞ்சகமாக சுபாஷினியின் தம்பி சுர்ஜித் என்பவன் கவின் செல்வ கணேஷை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று 2025 ஜூலை 27 அன்று நெல்லையில் அவன் வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை செய்த
கொடும்பாதகச் செயல்கள் குறித்து மக்கள் அதிகாரத்தின் இதே தளத்தில் பல கட்டுரைகளை வெளியிட்டு இருந்தோம்.

தமிழ்நாட்டில் ஆதிக்க சாதி வெறி ஆணவப் படுகொலைகள் என்பது தொடர் நிகழ்வுகளாக நடைபெற்று வருவதால் மக்கள் அதிகாரம் கடந்த ஆகஸ்ட் 17 தொடங்கி செப்டம்பர் 17 முடிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தீர்க்கமான முடிவு எடுக்க அரசாங்கங்களை வலியுறுத்தி ஒரு மாத இயக்கம் மேற்கொண்டுள்ளது.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்று!

சாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு வழங்கு!

சாதிவெறி படுகொலைகளுக்கு காரணமான சனாதனத்தைத் தாங்கி பிடிக்கும்
ஆர் எஸ் எஸ் சங்க பரிவார் அமைப்புகளைத் தடை செய்!

சாதி வெறி சங்கங்களைத்
தடை செய்!

ஜனநாயக கூட்டரசை
நிறுவுவோம்!

சாதி ஒழிப்பை
நோக்கி முன்னேறுவோம்!

….உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியார் பிறந்த நாளான 2025 செப்டம்பர் 17 அன்று மாநில அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இத்தகு சூழலில் மக்கள் அதிகாரம் மாநிலக் குழு வழிகாட்டுதல்படி இவ்வமைப்பின்
மூத்த தோழர் எழில்மாறன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் மருது, மதுரை மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் நடராஜன், மதுரை மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் தோழர் காளிதாஸ் முதலானோர் 30-08-2025 அன்று அதிகாலை 06:45 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு காலை 11 மணியளவில் சென்றடைந்தனர்.

அமைப்பின் சார்பில் ஏற்கனவே கவின் தந்தையுடன் பேசி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் “மக்கள் அதிகாரம்” தோழர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். கவின் தந்தை திரு சந்திரசேகர் அவர்கள் தோழர்களை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

கவின் தந்தை, தாய் தமிழ்ச்செல்வி, சித்தி மற்றும் பலரும் துயரத்தில் இருந்து மீளாதிருந்ந சூழலில் தோழர்களின் சந்திப்பு என்பது இரு தரப்பிற்கும் மனதிற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

மக்கள் அதிகாரம் சார்பாக கவின் பெற்றோருக்கு இதய பூர்வமான அஞ்சலியை இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. இந்தக் கொடுஞ்செயலைக் கண்டித்து
மாநில அளவில் மக்கள் அதிகாரம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. கவின் படுகொலை தொடர்பான மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வரப்பெற்ற கட்டுரைகள் அனைத்தையும் பிரின்ட்டவுட் எடுக்கப்பட்டவற்றை கவின் தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்கள் அதிகாரம் போராட்ட நிகழ்வுகள், வீடியோ உரைகள் வாட்ஸ் அப் மூலமாக பகிரப்பட்டது.

செப்டம்பர் 17 மதுரை ஆர்ப்பாட்டத்திற்கான துண்டு பிரசுரங்களை கூடுதலான எண்ணிக்கையில் கவின் தாய் மற்றும் தந்தையிடம் வழங்கப்பட்டன.

ஆணவப் படுகொலைக்கு பலியான கவின் பெற்றோருடன் கொடுந் துயரில் "மக்கள் அதிகாரம்" தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்!

துயரத்திலும் இப்படி ஆள் பேர் தெரியாத நபர்கள்/ இயக்கங்கள் இவ்வித நடவடிக்கை
களை மேற்கொள்வதைக் கண்டு விழி உயர்த்தி தங்களது நெருக்கத்தினைக் காண்பித்துக் கொண்டனர்.

“மக்கள் அதிகாரம்” சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல்
நடைபெறவிருக்கும் ஆணவப் படுகொலை களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழர்களால் கோரப்பட்டது.

கவின் தந்தை திரு சி. சந்திரசேகர் அவர்கள் உறுதியாக கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்தார். நிகழ்ச்சி நிரலில் தனது பெயரையும் இணைத்துக் கொள்ள இசைவு தெரிவித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்கும் தமது ஒப்புதலை மனமுவந்து தெரிவித்தார்.

சோகக் கதைகள் நிறைந்து வழிகின்றன. கவின் தாயார் திருமதி தமிழ்ச்செல்வி இருளடைந்த சூழலிலேயே நீடித்திருப்பதைத் தோழர்களால் உணர முடிந்தது.
பல்வேறு தகவல்கள் கருத்தியல் ரீதியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. தோழர்கள் எழில்மாறனும், மருதுவும், நடராஜனும் தொடுத்த வினாக்கள் காரணமாக கூடுதலான விவரங்களை சேகரித்துக் கொள்ள முடிந்தது.

படிக்க: திருச்சியில் நெல்லை கவின் ஆணவப்படுகொலையை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

அவர்களது துயரத்தில் மக்கள் அதிகாரம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், பிற வகைகளிலும் உதவிகள் புரிய அமைப்பு தயாராக இருக்கிறது என்றும் தோழர்களால் உறுதி கூறப்பட்டது.

அவர்களின் இளைய மகன் பிரவீன் கூட பொறியாளர் தான். அவரது தகுதிக்கேற்ற அரசுப் பணியை அரசு உடனே வழங்க வேண்டும்; இப்படிப்பட்ட ஆதிக்க சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நிகழும்கால் உச்ச நீதிமன்றம் நிர்ணயத்திருக்கக் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒன்றிய – மாநில அரசுகள் கவின் குடும்பத்திற்கு அனைத்து விதமான உரிமைகளையும் வழங்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.

இத்துயர நிகழ்வில் கூட எஸ்கார்ட் பணிக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொண்ட சுமார் 26 அல்லது 27 வயது உடைய பாலகிருஷ்ணன் என்ற காவலர், நமது தோழர்களுடன் அநாகரீகமாக நடந்து கொள்ள முற்பட்டதும், தோழர்கள் சரியான பதிலடி கொடுத்து தலை குனியச் செய்ததும் தனிப்பட்ட நிகழ்வாக நடந்து முடிந்தது.

இவ்விவரமறிந்த கவின் தாய் மிகவும் வேதனை உற்றார். தந்தையும் லாவகமாக தோழர்களுக்கு உதவியாய் இருந்தார்.

ஆணவப் படுகொலைக்கு பலியான கவின் பெற்றோருடன் கொடுந் துயரில் "மக்கள் அதிகாரம்" தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்!

உயர் போலீஸ் அதிகாரிகள் கீழ்மட்ட காவலர்களிடம், துயரம் கேட்க வருபவர்களிடம்
எத்தகைய இங்கிதமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்குவர் என்று நம்புவோமாக.

படிக்க: நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா!

ஆணவப் படுகொலையை தடுக்க வக்கற்ற அரசாங்கம், காவல்துறை, கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை இதுவரை கைது செய்ய வக்கற்ற காவல்துறை கவின் பெற்றோருக்கு எஸ்கார்ட் வழங்கும் போலி நாடகம் மூலம் எதனை சாதித்து கிழிக்கப் போகிறது? இவர்களால் மேற்கொண்டு தான் தொல்லைகள். இனியும் பெற்றோரை காவு கொள்ள ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணிவு ஏற்படுமேயானால் இந்த அரசாங்கம் இருந்தென்ன இந்த காவல்துறை இருந்தென்ன? இல்லாமல் போயென்ன? மக்கள் இயக்கங்களே அவர்களுக்கு உறுதியான பாதுகாப்பினை அளிக்க தயாராக இருக்கின்றோம்.

ஆறுமுக மங்கலத்தில் கவின் பெற்றோர் உறவினருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துயரத்தில் பங்கேற்று விட்டு, அத்தகு சூழலிலும் தோழர்களுக்கு
அவர்கள் வலியுறுத்தி வழங்கிய தேநீரையும் அருந்திவிட்டு, கனத்த இதயத்தோடு அவர்களிடமிருந்து விடைபெற்று, அவர்கள் ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்டோ மூலம் ஏறல் வந்து அங்கிருந்து தோழர்கள் தூத்துக்குடி வந்தடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து மதுரை பேருந்தில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு தோழர்கள் மதுரை வந்தடைந்தனர்.

இது விடயத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு இன்னும் தொடர் பணிகள் இருக்கவே செய்கின்றன என்பது கவின் பெற்றோரை சந்தித்த பின் தோழர்களால் உணர முடிந்தது.

காளிதாஸ்
ஊடகப்பிரிவு செயலாளர்,
மதுரை மாவட்டம்.

1 COMMENT

  1. நெல்லைக் கவின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிய மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here