ஆதிக்க சாதி வெறியன் கே.கே.சி.பாலு-வுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கும் அறிவிப்பினை திரும்பப் பெறுக!
“இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே”.
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 பேருக்கு கலைமாமணி விருது வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது.
அந்த வகையில் 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 90 நபர்களுக்கு கலைமாமணி விருது கடந்த 24-09-2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாரதியார் விருது, எம் எஸ் சுப்புலட்சுமி விருது, பால சரஸ்வதி விருது ஆகிய மூன்று விருதுகள் பல்வேறு துறைகளின் ஆளுமைகளுக்கு அகில இந்திய அளவில் மூன்று நபர்களின் பெயர்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு மேற்கண்ட தேதியில் அறிவித்துள்ளது. இந்த விருதுகள் அனைத்தையும் அக்டோபர் 2025 -ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
ஆதிக்க சாதி வெறி கொண்டவருக்கும் கலைமாமணி விருதா?
தமிழ்நாடு அரசு, கலைமாமணி விருது மற்ற மூன்று விருதுகள் என மொத்தம் 93 விருதுகளுக்கு உரிய நபர்களை தேர்வு செய்து அறிவிப்பு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இப் பட்டியலில் ‘வள்ளி கும்மி கலைஞர்’ என வரையறுத்து கே கே சி பாலு என்பவருக்கு 2022-ம் ஆண்டிற்கான ‘கலைமாமணி’ விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள 93 நபர்களின் தகுதியைப் பற்றி நாம் அதிகம் அலசி ஆராய வேண்டியதில்லை. ஆனால் கே கே சி பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட அறிவிப்பு செய்திருப்பது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்.
இவர் கொங்கு மண்டலப் பகுதியைச் சார்ந்தவர் ஆவார். எந்நேரமும் ஆதிக்க கவுண்டர் சாதி வெறியைப் பரப்புவதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கக் கூடியவர். இவர் ஈஸ்வரன் தலைமை தாங்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளராக செயல்பட்டு வருகிறார். ஈஸ்வரனின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் மக்களை ஈர்க்கும் வகையில் கொங்கு மண்டலத்தில் ‘வள்ளி கும்மி’ கலை ஆட்டங்களுக்கு பயிற்சி கொடுத்து பங்களிப்பு செய்து வருபவர் இந்த கே கே சி பாலு ஆவார். அதனால் அந்த மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் குறிப்பிட்டதொரு பெயரையும் ஈட்டி உள்ளார்.
மேலும் இந்த ‘நற்பெயரை’ப் பயன்படுத்திக் கொண்டு கவுண்டர் இன பெண்களிடம் கீழ்க்கண்டவாறு சத்தியம் வாங்கியுள்ளார். ‘நாடகக் காதல்’ போன்றவற்றில் கவுண்டர் சாதி பெண்கள் சிக்கிக் கொள்ளாமல் சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்.
‘சத்தியமே, சாத்தியமே, சின்னமலை சத்தியமே!
கல்யாணம் செய்திக்கிறோம், கவுண்டர் சாதிப் பையனையே!
இது போதும் இது போதுமே,
இனி வேறு எதுவும் வேண்டாமே!’
…இவ்வாறு பெண்களை சத்தியம் செய்யச் செய்து உறுதி மொழி வாங்கியிருக்கிறார் இந்த சாதி வெறியன் கே கே சி பாலு. இப்பணியினை தொடர்ந்து செய்து வருகிறார்.
அப்படிப்பட்டவருக்குத்தான் ‘வள்ளி கும்மி கலைஞர்’ என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசாங்கம் ‘கலைமாமணி’ விருது அறிவித்து உள்ளது. வி.சி.க.வின் வன்னியரசு அறிவித்துள்ளது போல், கே கே சி பாலு, ‘கொலை மாமணி’ பட்டம் பெறுவதற்கேத் தகுதி பெற்றவர்..
இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறையில் வேட்பாளராக நின்று தோற்றவர். ஒரு முறை பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்பு இப்படிப்பட்டதொரு பிரச்சனையில் ஓரங்கட்டப்பட்டார். ஆணவப் படுகொலைக்கு உள்ளான கோகுல்ராஜ் வழக்கில் ஏ1 குற்றவாளி யுவராஜ் போன்றோரெல்லாம் இவருக்கு நெருக்கமானவர்களே.
அப்படிப்பட்டவரை ‘சமூக நீதி’, ‘திராவிட மாடல்’ பேசும் திமுக அரசு இந்த சாதிவெறியனை கலைமாமணி பட்டத்திற்கு பிரேரபிக்க எப்படித் துணிச்சல் வந்தது?
படிக்க: விற்கப்படும் கலைமாமணி விருது! லஞ்ச ஊழலில் சிக்கிதவிக்கும் இயல் இசை நாடக மன்றம்!
ஆம், ஒரே காரணம்தான். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்கு வங்கியை வளைத்துப் போட வேண்டும். கொங்கு மண்டலத்தில் கணிசமான சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி அடைய இவ்வித ஏற்பாடுகளும் கை கொடுக்கும் என்பதே மு க. ஸ்டாலினுக்கு பிழைப்புவாதத்தனத்தில் ஊறி திளைத்தோர், தூண்டுதல் செய்வோரும், அதற்கு இசைந்து முதலமைச்சர் மு க ஸ்டாலினும் இவ்வித கேடுகெட்ட அறிவிப்புகளை துணிச்சலாக செய்கிறார்கள்.
கேட்டால், ‘குறிப்பிட்ட துறையில் அசாத்தியமான திறமை உடையவரை – அவர் எங்கிருந்தாலும் (சாதிவெறியனாக இருந்தாலும்) பாராட்டுவது தான் அரசின் கொள்கையாக வரித்துக் கொள்ள வேண்டி உள்ளது. மற்ற விடயங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட வேண்டியவையே…’ என்ற பாணியில் பதில் கூறுகிறார்கள்.சிலர் அதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள்.
‘நரகலில் நல்லரிசியைத் தேடாதீர்’ என்றார் பெரியார்!
தந்தை பெரியாரிடம் சிலர் இப்படி வினா எழுப்பினார்கள். அதாவது குறிப்பிட்ட ஓரிரு சிறப்பான அம்சங்களை சுட்டிக் காண்பித்து, ‘புராண இதிகாசங்கள் பலவற்றில் சில நல்ல கருத்துக்களும் உள்ளனவே; அப்படி இருக்கின்ற பொழுது தாங்கள் ஒட்டுமொத்தமாக புராண இதிகாசங்களை விமர்சித்து பரப்புரை செய்வது நியாயமா?’- என்றவாறு கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பெரியார், இப்படிச் சொன்னார்.
‘அரிசி வேண்டுமென்றால் நேரடியாக அரிசி கடைக்கோ, மளிகைக் கடைக்கோ சென்று தான் அரிசி வாங்க வேண்டும். அதை விடுத்து மலத்தில் அரிசி கிடக்கிறது என்பதால் அந்த அசிங்கத்தைப் போய்க் கிளறி அரிசியைப் பொறுக்க எண்ணுவது முட்டாள்தனம்; மடமை; அறிவீனம்! உங்கள் கேள்விக்கு இதுதான் எனது பதில்…’ என்று முகத்தில் அறைந்தது போல பதில் அளித்தார்.
எனவே, ஒரு குறிப்பிட்ட நபர் எந்த ஒரு துறையிலும் சிறப்பான ஆளுமையைப் பெற்றிருந்தாலும், அவரை விருதுகள் பல வழங்கும் ஒரு தகுதிக்கு உயர்த்தும் பொழுது, குறிப்பிட்ட துறையில் அவரது தகுதி, தேர்ச்சியை பற்றி மட்டும் அலசி ஆராய்வது சரியானதாக இருக்க முடியாது. மாறாக ஒட்டுமொத்த மனித சமூக அமைப்பில் அவரது கண்ணோட்டம் என்ன? செயற்பாடுகள் என்ன? மனித சமூக முன்னேற்றத்திற்கு எப்படிப்பட்ட கொள்கைகள் வைத்திருக்கிறார்? அவரது ஒழுக்கத் தன்மைகள் என்ன?என எண்ணற்ற பல்வேறு கூறுகளையும் கண்டிப்பாகக் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். அதுவல்லாமல் குறிப்பிட்ட திறமையை மட்டும் அளவுகோலாக எடுத்து கே கே சி பாலுவுக்கு விருது கொடுக்க தமிழ்நாடு அரசு முன்வருமேயானால் தந்தை பெரியார் குறிப்பிட்டது போல ‘மலத்தில் அரசி பொறுக்குவது’ போன்றதே ஆகும்.
படிக்க: வள்ளிக்கும்மி – ஒரு நண்பரின் அனுபவம்!
தமிழ்நாடு அரசு, ‘பெரியார் மண்’ ‘சமூக நீதி அரசு’ ‘திராவிட மாடல் அரசு’ எனப் பீற்றிக் கொள்வதில் நாணயத்தை வெளிப்படுத்த விரும்பினால் உடனடியாக திமுக அரசு ஆதிக்க சாதி வெறி கொண்ட கே கே சி. பாலுவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெறல் வேண்டும்.
முருகன் திருமணம் செய்து கொண்ட வள்ளி ‘குறத்தி’ சமூகம் தானே?
சாதி மத கடவுள் போன்றவற்றில் எங்களுக்கு ஏகப்பட்ட முரண்கள் உண்டு. ஆனால் ‘வள்ளி கும்மி கலைஞர்’ எனப் பெயர் பெற்ற – அதற்காக கலைமாமணி விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள – இந்த கே கே சி பாலு என்ன அறிவுடைமையைப் பெற்று இருக்கிறார்?
அவர் உயர்த்திப் பிடிக்கும் வள்ளி – உங்கள் புராணக் கதைகளின் படி – யார்? முருகனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குறத்தி சமூக பெண் தானே?
திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையுடன் வீற்றிருக்க, திருத்தனியில் அதே முருகன் வள்ளியுடன் வீற்றிருக்கிறார் அல்லவா? முருகன், வள்ளி, தெய்வானை, நம்பிராஜன், புள்ளிமான், நாரதர், அடர்ந்த காடு, வள்ளிக் கிழங்கு இவர்களின் தோற்றம், வரலாறு எல்லாமே கூட தசரதன், கோசலை, ராமன், சீதை, சிவன், பார்வதி, விநாயகர் இன்னும் இவை போன்றதுகளின் கதை – வரலாறுகள் போன்றது தான்.
இருப்பினும் கே கே சி பாலு வள்ளியை உயர்த்தித்தானே வள்ளி கும்மி கலை வடிவத்தை மக்களிடம் கற்பித்து, தான் புகழ்பெற்று சம்பாதித்து உயர்ந்து கொண்டிருக்கிறார். அப்படியெனில் அந்த வள்ளி குறத்தி சமூகத்தில் பிறந்து முருகனை புரட்சிகர சாதி மறுப்புத் திருமணம் தானே செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது ‘ஆண்டவனே சாதி மறுப்புத் திருமணம்’ செய்து கொண்டு, பச்சைக்கொடி காட்டியிருக்கின்ற பொழுது, சாதாரணமான மக்களை குறிப்பாக கவுண்டர் சாதி பெண்களிடம் ‘வேறு சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என சத்தியம் வாங்குகிறார் இந்த ஆதிக்க சாதி வெறியன் கே கே சி பாலு.
இது எந்த வகையில் நியாயம்? கே கே சி பாலு மட்டுமல்ல; திருமண வயதிற்கு வந்துவிட்ட ஒரு ஆணோ பெண்ணோ தான் விரும்பும் இணையரை தேர்வு செய்து கொள்ளும் முழு உரிமை அவர்களுக்கே உரித்தானது.
அதற்கு சட்டம் போட்டு நிறுத்துவதற்கோ, தடை செய்வதற்கோ எந்த ஒரு சாதிய இயக்கத்திகோ, பிற இயக்கத் தினருக்கோ, தனி மனிதனுக்கோ கிடையவே கிடையாது.
அந்த வகையில் கம்பி எண்ண வேண்டிய பலபேர் பல்வேறு சுகம் தரும் பதவிகளில் அமர்ந்து கொண்டு, மக்களைப் பிளவுபடுத்தி தந்நலம் பேணிக் கொண்டிருக்கக் கூடிய பட்டியலில் உள்ளவர் தான் இந்த கே கே சி பாலு.
சனாதனப் பார்ப்பனீயத்தால் சாதிய அடுக்குகள் உருவாக்கப்பட்டு இன்றுவரை மக்கள் திட்டமிட்டு பிளவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கோடான கோடி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப் படுகின்றன. வர்க்க ரீதியாக ஒன்றுபட வேண்டிய மக்களை, இப்படிப்பட்ட சாதி வெறியர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து ஆதிக்க சாதி வெறி பால் ஊட்டி, சாதியப் பிளவுகளிலேயே இறுக்கமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வர்க்க ஒற்றுமையை கட்டி அமைப்போம்! சமூக மாற்றத்தினை நோக்கி முன்னேறுவோம்!
இந்தியாவில் சாதி மத வேறுபாடு களைக் கடந்த கோடானு கோடி உழைக்கும் மக்களின் நிலையோ பசியாலும், பஞ்சத்தாலும், பட்டினியாலும், விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், கொடும் வறுமை, குழந்தைச் சாவுகள், தற்கொலை சாவுகள் என இவற்றின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி கொண்டிருக்கின்றன.
பற்றாக்குறைக்கு பாலியல் வக்கிரங்கள், சாதி மத கலவரங்கள், கொலைபாதகச் செயல்கள் என திட்டமிட்டு தூண்டி விடப்பட்டு ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சங்பரிவார் பாசிசக் காவி கூட்டத்தால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவர்களை இயக்கக் கூடியவர்களாக – நமது மக்களின் வாழ்வை சூறையாடுவதற்கு – கார்ப்பரேட் முதலாளிகள் தலைமை தாங்கி நிற்கிறார்கள்.
எனவே, உழைக்கும் மக்கள் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை முறியடிக்க களம் காண்போம்!
கே கே சி பாலு போன்ற ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அரசின் சார்பாக மக்களின் பணத்தில் இருந்து விருது வழங்க எத்தனிக்கும் அரசின் இழிசெயலை வன்மையாகக் கண்டனம் செய்வோம்!
கே கே சி பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்க விடாமல் தடுத்திட களம் இறங்கிப் போராடுவோம்!
- எழில்மாறன்






