பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி போராடி வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். 134 பந்துகளில் 127 ரன்கள் அடித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்துள்ளார். அந்த ஜெமிமா மீது கடந்த சில ஆண்டுகளாக  வன்மத்தை கக்கி வருகிறார்கள் மதவெறியர்கள்.

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டிற்கும் கொடுக்கப்படுவதில்லை. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையான முக்கியத்துவம் பெண்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை.

பெண்கள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பாத காலம் மாறி படிக்கச் சென்று அரை நூற்றாண்டு தான் ஆகிறது. இன்னும் பல ஊர்களில் பள்ளிப்படிப்பை முடித்து உடனே திருமணம் நடத்தி வைக்கும் அக்கிரமமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் பெண்கள் தற்போது தான் அதிகரித்து வருகிறார்கள். அப்போதும் ஆணின் கட்டுப்பாட்டில் தான் பெண் இருக்கிறார். சுயமாக தன் முடிவை எடுப்பதற்கு ஆணாதிக்க சமூகம் அனுமதிப்பதில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸை அவர் பள்ளி காலத்தில் விளையாடிய கிளப்பில் 500 ஆண்கள் பயிற்சி பெறும் இடத்தில் தனிப்பெண்ணாக பயிற்சி பெற்றதை பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இதுதான் உயர்நடுத்தர வர்க்கம் மத்தியிலேயே பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம்.

இத்தனை தடைகளையும் தாண்டி பெண் விளையாட்டு துறையில் சாதிக்கும் போது நாம்  கொண்டாடி மகிழ்கிறோம். அதனால் தான் வறுமையின் சூழலில் வளர்ந்து அரசாங்கத்தால் ஒரங்கட்டப்பட்ட கண்ணகிநகர் கார்த்திகா ஆசிய இளையோர் கபடி போட்டியில் வெற்றி வாகை சூடிய போது  முற்போக்கான தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ்ந்தது. அதேபோல்தான் இந்தியாவில் ஆண் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கொண்டாடப்பட்ட நிலை மாறி  ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றவேர்களின் சிறப்பான ஆட்டங்களை கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். ஆனால் பிற்போக்கு கும்பல் அவரை மதத்தின் அடிப்படையில் உளவியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.

இந்தியாவில் சாதாரண குடும்பங்களில் விளையாட்டில் அவ்வளவு எளிதில் உயரத்தை எட்டி விட முடியாது. அதுவும் அனைத்து அதிகார மையங்களிலும் இந்து மதவெறியர்கள் நிறைந்துள்ள சூழலில் மத சிறுபான்மையினர் நிலைமையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விளையாட்டில் சாதிப்பது மட்டுமல்லாமல் மதவெறியர்களுடன் முட்டி மோதி பல்வேறு தடைகளை தாண்டி வந்தாக வேண்டும். அப்படி வந்தவர்தான் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

இந்திய அணியில் அவருக்கு அவ்வளவு எளிதாக இடம் கிடைத்துவிடவில்லை. 2018ல் இந்திய ஒரு நாள் போட்டியில் அறிமுகமான மும்பை சேர்ந்த இளம் வீரருக்கு இப்போது விளையாடுவது தான் முதல் உலகக் கோப்பை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

படிக்க:

 மத நல்லிணக்கத்திற்கு துணை நிற்போம்! பார்ப்பன மதவெறி க்கு கொள்ளி வைப்போம்!

 வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது  நடவடிக்கை எடு!

அது மட்டுமல்ல, மும்பையில் கர் ஜிம்கானா கிளப்பில் 2023 உறுப்பினரான ஜெமிமா இந்த கிளப்பில் சேர்ந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. ஜெமிமாவின் தந்தையான யுவான் ரோட்ரிக்ஸ் ஜிம்கானாவில் உள்ள மீட்டிங் அறையில் கிறிஸ்துவ ஜெப கூட்டங்கள் நடத்தியதை மதமாற்ற நிகழ்ச்சிகளை நடத்தினார் என பொய் குற்றம் சாட்டப்படுகிறார். கிளப் நிர்வாகத்தின் எச்சரிக்கையை அடுத்து பிரார்த்தனை கூட்டம் நடத்துவது நிறுத்தப்பட்ட பிறகும் இப்பிரச்சினையை  பயன்படுத்தி சங்பரிவார் கும்பல் கொடுத்த அச்சுறுத்தல் காரணமாக ஜெமிமாவுக்கு வழங்கப்பட்ட கவுரவ உறுப்பினர் அட்டையும் திரும்ப பெறப்பட்டது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக அவதூறான  கருத்துக்களை பரப்பியது பாஜக ஐடி விங். மதவெறி பிடித்த மிருகங்கள் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்தது. ஆனால் உண்மையை விளக்கிய உண்மை சரிபார்ப்பு நிறுவனமான ஆல்ட் நியூஸ் ஜூபைர், “அப்படி ஒரு சம்பவம் (மதமாற்ற நிகழ்வு) நடைபெறவில்லை என ஜிம்கானாவின் தலைவர் விவேக் தேவ்னானி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். வரவிருக்கும் தேர்தலுக்கு முன்பு கிளப்பில் உள்ள ஒரு பிரிவினர் (மதவெறியர்கள்) அரசியலின் ஈடுபடுவதன் விளைவாக இது நடந்ததாக  தற்போது கூறியுள்ளார்.

இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளானார் ஜெமிமா. அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் எதிரொலித்தது. பெரும் பின்னடைவுகளை சந்திக்க வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்ததை பெரிதாக கொண்டாடாத ஜெமிமா தன்னால் நாடு வெற்றி பெற்றதை கொண்டாடும்போது ஏன் கதறி அழுதார் என்பதற்கும், பரிசளிப்பு நிகழ்வில் “நான் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதை என்னால் தனியாக செய்ய முடியவில்லை, என் அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் பேசினார். இப்படி அவர் பேசியதற்கு ஆட்டத்தின் அழுத்தம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மட்டையால் அவர் அடித்த நூறும், பரிசளிப்பு நிகழ்வில் அவர் பேசியதும் சங்கிகளை செருப்பால் அடித்ததற்கு‌ சமமாகவே பார்க்க‌ முடியும்.

இந்த வெற்றிக்குப் பின்னரும் மதவெறியர்கள் “இயேசுவுக்கு எப்படி நன்றி சொல்லலாம்” என மதத்தை வைத்து ஜெமிமா ரோட்ரிக்சை கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். எத்தனையோ வீரர்கள் வெற்றி பெற்ற பின் நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என சொல்வதுண்டு. அவர்கள் இந்துவாக இருப்பின் சங் பரிவார் கும்பலால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருப்பின் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ‘ஐ லவ் ஸ்ரீராம்’,  ‘ஐ லவ் கணேசா’ என்று சொன்னால் இந்தியாவில் பிரச்சினை இல்லை. ‘ஐ லவ் முகமது’, ‘ஐ லவ் ஜீசஸ்’ என்றால் மதவெறியர்கள் கலவரமாகவே ஆக்கி விடுகிறார்கள். இந்திய குடிமக்கள் தங்கள் மத சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமை இல்லாத நிலை தான் கடந்த 11 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த நிலை பாசிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்படும் வரை தொடரும்.

  • சுவாதி

1 COMMENT

  1. முடக்கப் பார்த்த மத வெறியர்களுக்கு பதிலடி கொடுத்த
    ஜெமிமா ரோட்ரீக்ஸ்.

    கிரிக்கெட் கிளப்பில் மத வெறியார்களால் அவமதிக்கப்பட்ட ஜெமிமா மற்றும் அவர் தந்தை மதமாற்றப்படுகிறார் என்று அவதூருக்கு உள்ளாக்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தும் வேலையில் பாசிஸ்டுகள் செய்தனர் இதன் எதிரொலியாக ஜெமிமா கிரிக்கெட் விளையாடுவதற்கும் தடையாக இருந்தது அந்த தடைகளை உடைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெண்கள் கிரிக்கெட் போட்டியில்127 ரன் அடித்து அரை இறுதிக்கு கொண்டு சேர்த்த பெருமை ஜெமிமா அவர்களுக்கே உரியது அவர் அடித்த ஒவ்வொரு ரன்னும் மதவெறியர்களுக்கு கொடுக்கப்பட்ட செருப்படியே என்று மிக அருமையாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது இறுதியாக கோப்பை பெறும் போது இயேசுவுக்கு நன்றி கூறினார் இதனால்
    மத வெறியர்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள் இந்துக் கடவுள் பற்றி ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி இருந்தால் மதவெறியர்கள் கோபம் அடைந்திருக்க மாட்டார்கள் என்ற இந்த கட்டுரை ஆசிரியர் சுவாதி அருமையாக எழுதியுள்ளார் தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here