டந்த வாரத்தில் ஈரான் இஸ்ரேல் போர் முற்றிய நிலையில் சமூக வலைதளங்கள் முழுவதும் போர் குறித்த விவாதங்களும் பதிவுகளையும், காணொளிகளும் காண முடிந்தது. அதில் பலரும் இஸ்ரேல் மக்கள் மீது விழும் குண்டுகளை கொண்டாடினார்கள். அந்த மக்கள் கதறும் காட்சிகளைப் பகிர்ந்தனர். தற்போது போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்க- இஸ்ரேல் ஆணவத்தை ஈரான் அடக்கிவிட்டதாக கொண்டாடுகின்றனர். ஈரான் அரசு வெளிப்படுத்திய எதிர்ப்பு பாராட்டுக்குரியது. எனினும், இந்த போக்கில்  இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு மக்கள் பயந்து ஒடியதை, கதறி அழுததை பதிவிட்டு காசா மக்களின் துயரம் இப்போதுதான் இஸ்ரேல் மக்களுக்கும் புரியும் என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்த போக்கிற்கு முதன்மை காரணம் இஸ்ரேல் அரசு என்பதே உண்மை. 2023 அக்டோபரில் தொடங்கிய போரினால் இதுவரை 55,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு இன அழிப்புப் போராகவே நடந்து வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனான் ஹெஸ்புல்லா குழு தாக்குதல் தொடுத்தது. இதற்கு எதிர் தாக்குதலாக லெபனான் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ஜியோனிச இராணுவம். ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். லெபனானின் பொதுச்சுகாதர அமைச்சகத்தின் தகவலின் படி 2024 நவம்பருக்குள் 3583 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் இராணுவம் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அப்பாவி மக்களையும் அவர்களது முகாம்களையும் குறிவைத்து குண்டு வீசியது. அதுமட்டுமல்லாமல் ஆளில்லா விமான்ங்கள் மூலம் தனிநபர்களை இலக்கு வைத்து குண்டு வீசி அழித்தது. குழந்தைகளையும் பெண்களையும் இரக்கமில்லாமல் கொன்றது. மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும் சிதற செய்தது. போரினால் காயமடைந்தவர்களுக்கும் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு உயிராதார பொருட்கள் கிடைக்கவிடாமல் கொன்றொழித்தது உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் பார்க்கிறார்கள். இவையனைத்தும் பல நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் மீதான கோபத்தை அதிகரித்தது.

இஸ்ரேல் அரசு வேறு! மக்கள் வேறு!

இஸ்ரேலை ஆளும் பாசிச நெதன்யாகு அரசு காசா மீது நடத்தி வரும் தாக்குதல் கொடுமையானது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அமெரிக்க ஆதரவு ஐநாவும், சர்வதேச நீதிமன்றமும் கூட கண்டித்துள்ளது. உலகம் முழுவதும் மாணவர்கள் பாசிச இஸ்ரேல் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் மக்களும் பாசிச நெதன்யாகுவை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். குறிப்பாக இஸ்ரேலின் பெரும்பான்மை மக்கள் நெதன்யாகு அரசையே ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் தாக்குதலைக் காரணம்காட்டி காசா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்துவதன் மூலம் இஸ்ரேல் மக்களை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அதற்கு பெரும்பான்மை மக்கள் பலியாகவில்லை.

போர்களில் எதிரி – அப்பாவி மக்கள் அல்ல, மேலாதிக்கப் போர் வெறி அரசுகள்!
பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக போராடும் இஸ்ரேல் மக்கள்

கடந்த ஜூன் 4 ஆம் தேதி இஸ்ரேலிய பல்கலைகழகங்களில் பணியாற்றும் 1200 பேராசிரியர்களும் நிர்வாகிகளும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்தி வரும் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான கொடிய குற்றங்களை எதிர்த்து வெளிப்படையான கண்டன கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இப்படியாக காசா மக்களுக்கு ஆதரவாக, இன அழிப்புப் போருக்கு எதிராக இஸ்ரேல் மக்களும் உள்ளார்கள்.

இஸ்ரேலின் இந்த போர்வெறியையும் அதன் அரசியல் காரணங்களையும் போருக்கான மூலதாரிகளையும் அறியாத மக்கள் இஸ்ரேல் நாட்டின் மீதே வெறுப்புக் கொண்டது இயற்கையானதே. அப்படியான வெறுப்பு நிகழ்வுகள் தான் சமீபத்திய நாட்களில் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

போர்: லாபம் யாருக்கு நஷ்டம் யாருக்கு?

உலகில் இதுவரை நடந்த அத்துனை போர்களிலும் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்கள் தான். நாட்டை ஏகாதிபத்தியங்களிடமிருந்தும், காலனியாதிக்க கும்பலிடமிருந்தும், பாசிஸ்டுகளிடமிருந்தும் பாதுகாக்க நடைப்பெற்ற போர்களில் மக்கள் தாங்களாக முன்வந்து பங்களித்துள்ளார்கள். உயிர் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போர் தனது வியாபாரத்திற்கான சந்தையை பிடிக்கும் போர். மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போர். இயற்கை மற்றும் கனிம வளங்களை சூறையாட நடத்துகின்ற போர். இந்த போர்கள் அந்நாட்டு மக்களைக் காவு கொள்கின்றன. இதுவரை சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் நேரடியாகவும் உள்நாட்டில் கிளர்ச்சி குழுக்களை உருவாக்கியும் அந்த நாடுகளில் பொம்மை அரசுகளை ஏற்படுத்தி அந்நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடியது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆப்பிரிக்க நாடுகளின் வளங்களையும் கொள்ளையடித்தது அந்நாடுகளை சுடுகாடாக்கி மக்களை கடும் வறுமையில் தள்ளியது. அதற்கு சிறந்த உதாரணம் நைஜீரியா.

இப்போது நடக்கும் போர்களின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது தான் அமெரிக்காவின் முக்கிய நோக்கம். அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பார்க்க்கின்றன. இஸ்ரேல் உள்ளிட்டு பல நாடுகளில் நடக்கும் போர்களுக்கும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி கும்பலுக்கும் ஆயுத சப்ளை செய்து அதன் மூலமும் வருமானம் பார்க்கின்றனர் ஆயுத வியாபாரிகள். போரில் வெற்றிப் பெற்று சந்தையை கைப்பற்றுவது ஒருபுறம் என்றால் மறுபுறத்தில் ஆயுத தளவாடங்கள், உட்கட்டமைப்பு என பல லட்சம் கோடி லாபம் பார்க்கின்றன ஏகாதிபத்திய கொள்ளை நிறுவனங்கள். எப்படி பார்த்தாலும் போரின் மூலம் லாபம் பார்ப்பது ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல் தான்.

படிக்க:

🔰 போர்களைத் தூண்டும் அமெரிக்காவின் அடாவடி, இஸ்ரேலின் போர்வெறி !

🔰 யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?

ஆனால் அப்பாவி மக்களோ உயிரை இழந்து, உடமையை இழந்து நிற்கதியாய் நிர்கிறார்கள். ஒரு வேலை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் நிலையை போர்கள் ஏற்படுத்திகின்றன. போர்கள் முடிவுக்கு வந்தாலும் பொருளாதார இழப்பை சரிசெய்து பழைய வாழ்வுக்கு திரும்புவதற்கு சில பத்து வருடங்கள் ஆகின்றன. அல்லது ஒரு தலைமுறையே தன் வாழ்க்கையை இழந்து விடுகிறது. ஆனால் இந்த போர்களை நடத்தும் அரசுகளும் அதிகார வர்க்கமும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாவதில்லை.

இஸ்ரேலும் ஈரானும் தனது இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் ஆயுதங்களோடு நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. இரு நாடுகளுமே மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மருத்துவமனைகளையும் பள்ளிக் கூடங்களையும் இலக்காக குறிவைத்து தகர்க்கின்றன. போர் என்றால் இழப்புகள் இருக்கத்தானே செய்யும் என சிலர் வியாக்கியானம் செய்யலாம். அந்த இழப்பு ஏன் மக்களுக்கு மட்டும் ஏற்படுகிறது. ஈரானோ அல்லது இஸ்ரேலோ அந்த நாட்டு பாராளுமன்றங்களை குறிவைப்பது கிடையாது, இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது கிடையாது என்பதிலிருந்து உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். மேலும் இந்த போரினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை மக்களிடம் வரியை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்கின்றன.

மறுபுறம் போரினால் அந்நாட்டு அப்பாவி மக்கள் மட்டுமல்லாமல் உலகமயமாக்கத்தின் விளைவாய் பல்வேறு நாடுகளின் வளங்களை நம்பியிருக்கும் நாடுகளும் அந்நாட்டின் வழியே வணிகம் மேற்கொள்ளும் நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. அதற்கு ஒரு எடுத்துக் காட்டை பார்ப்போம்.

ஹார்முஸ் ஜலசந்தியும் அதன் முக்கியத்துவமும்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதலில் அமெரிக்கா தலையிட்டால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட தயாராக இருப்பதாக ஈரான் எச்சரிக்கை செய்தது. இதனை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி யாஸ்திகாவ் மெஹ்ர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைத்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுப்போம் என்று அவர் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர் வழியாகும். இதன் குறுகலான இடத்தில் ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது. இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலம் கொண்ட இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. உலகின் மிக முக்கியமான ஜலசந்தி இதுதான். ஏனென்றால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாள்கிறது. இதில் ஏற்படும் தடங்கல்கள் உலக எண்ணெய் சந்தையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகப் பொருளாதாரமே பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்தது.

போர்களில் எதிரி – அப்பாவி மக்கள் அல்ல, மேலாதிக்கப் போர் வெறி அரசுகள்!
ஹார்முஸ் ஜலசந்தி

ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் இந்தியாவிற்கும் பாதிப்பு ஏற்படும் விலைவாசி உயர்வு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆகையால் எங்கோ நடக்கும் போர்கள் நம்மை பாதிக்காது என்று நினைத்து விடக் கூடாது. அதனால் தான் போர்கள் தேவையற்றது என்கிறோம். மனித குலத்தை நாசம் செய்யும் என்கிறோம்.

எதிரி யார் என்பதை தீர்மானிப்போம்!

பாலஸ்தீனத்தின் காசாவில் கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள் என்றாலும்  உலக முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் எந்த வேறுபாடும் பாராமல் அம்மக்களுக்காக துணிந்து போராடுகிறார்கள். அன்று யூதர்கள் ஹிட்லரால் இன அழிப்பு செய்யப்பட்ட போதும் அவர்களுக்காக கடைசி வரை போராடி ஹிட்லரை வீழ்த்தியது சோவியத் செம்படை.  ஆனால் இப்போது நடைப்பெற்று வரும் தாக்குதலை மத ரீதியாக மட்டும் பரிசீலிப்பது பலன் தராது

ஆகையால் இஸ்ரேல் அரசு போர் நடத்துவதால் அம்மக்களை குற்றவாளியாக பார்ப்பதும் அவர்கள் மீது குண்டுவிழுவதை ரசிப்பதும் அல்லது பழிக்குப்பழி என்பதும் சரியான கண்ணோட்டம் அல்ல. இது முதன்மை எதிரியை அம்பலப்படுத்தாது. நாம் மேலே சொன்னது போல் இந்த போர்களினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். இஸ்ரேலின் பின்னணியில் உள்ள அமெரிக்க மேலாதிக்க கும்பலின் துணையோடு தான் இந்த இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. இருநாடுகளுக்கும் போர் வெறியை தூண்டி விடுவது,

  • நலன்

1 COMMENT

  1. பொதுவாக இரு நாடுகளுக்கு இடையிலான போராக இருந்தாலும், சில அல்லது பல நாடுகள் பங்கேற்று நடத்தும் போராக இருந்தாலும் அதனை எப்படி ஊடுருவி பார்ப்பது? சரி எது? தவறு எது? என்பதை எப்படி கவனிப்பது?… என்பன போன்ற விடயங்களை கட்டுரையாளர் தோழர் நலன்
    சிறப்பாகவும் ஆழமாகவும் விரிவாக விளக்கியுள்ளார். இதனை மெத்தனமாக இல்லாமல் அனைவரும் படித்து உணர வேண்டிய கட்டுரை இது. மேலும் இப்போரில் இந்திய பாசிச மோடி அரசு எப்படி இஸ்ரேலுக்கு பக்கபலமாக நின்றது; அமெரிக்காவிற்கு எதிராக நாவசைக்கக்கூட
    கோழைத்தனமாக பிழைப்புவாதத்தனமாக முடங்கிக் கொண்டது என்பதற்காக இரண்டு வரிகளை இக்கட்டுரையில் இணைத்திருக்கலாம். கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here