விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் பிரம்மாண்ட சிலை அமைத்து சிறப்பாக கொண்டாட அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும் என்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் கூடங்களில் கட்டாயப்படுத்தி வசூலிப்பது என்பது இந்து மத வெறி அமைப்புகளின் நடைமுறையாக உள்ளது.
இப்படி வசூலில் ஈடுபடும் பொழுது தாங்கள் கேட்கும் தொகையை கொடுக்காதவர்களுடன் ரகளையில் ஈடுபடுவதும் வசூலித்தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது அவர்களுக்குள் மோதலாக மாறுவதும் அவ்வப்பொழுது பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்து நாறிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டில், இது போன்ற செய்தி இப்பொழுது திருப்பூரில் வெளிவந்திருக்கிறது. திருப்பூர், போயம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் கணபதி. இவரிடம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று மாலை அகில பாரத இந்து மகா அமைப்பைச் சேர்ந்தவர்களான அண்ணாச்சி சதீஷ், முகிலன், ராசுக்குட்டி, பாலாஜி, அருண், சுரேஷ், அஸ்வத் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் கணபதி ரூ. 550 நன்கொடையாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட இந்துமத வெறியர்கள் இரண்டு நாட்களுக்குள் மேலும் 3000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
பிறகு செப்டம்பர் 2ஆம் தேதி அன்று இரவு 10:38 மணிக்கு தள்ளுவண்டி கடைக்கு வந்து மேலும் ரூ.3000 கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு “வியாபாரம் சரியாக இல்லை. எனவே, என்னால் மேலும் பணம் கொடுக்க இயலாது” என்று கடையின் உரிமையாளரான கணபதி கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் அவரின் தள்ளுவண்டி ஓட்டல் கடையை இந்து மதவெறியர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டவர்களில் ராசுக்குட்டி, பாலாஜி ஆகிய இருவரும் இந்து முன்னணியில் இருப்பதாக இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அச்சடித்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா வசூல் பிரச்சனைகள் ஈடுபட்டவர்கள், இந்து முன்னணியை சார்ந்தவர்கள் அல்ல; அகில பாரத இந்து மகாசபை அமைப்பை சேர்ந்தவர்கள் என்று இந்து முன்னணி ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. (ஆகா, என்ன ஒரு தன்னிலை விளக்கம்! மல்லாந்து படுத்துக்கொண்டு காரி துப்பிக் கொண்டிருக்கின்றனர்.)
படிக்க:
♦ கலவரத்தின் தொடக்கப்புள்ளி விநாயகர் சதுர்த்தி!
♦ இந்துக்களே எச்சரிக்கை! இந்து முன்னணி காலிகள் வருகிறார்கள் எச்சரிக்கை!
விநாயகர் சதுர்த்திற்கு சாமி கும்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் அமைதியான முறையில் விநாயகர் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்து விடுகின்றனர். ஆனால் அப்பாவி உழைக்கும் மக்கள் வீதிகளில் விநாயகர் சிலைகளை பார்க்கும் பொழுது அது பக்திக்காக வைக்கப்படவில்லை; அரசியலுக்காக, அரசியல் நடவடிக்கையாக, அதுவும் இந்து மத வெறியை பரப்புவதற்கான ஒரு வழிமுறையாக இந்து மத வெறியார்களால் வைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதில்லை.
சில இடங்களில் இந்து மதவெறியர்கள் நேரடியாக இப்படிப்பட்ட சிலைகளை நிறுவாமல் அந்தப் பகுதியில் உள்ள அப்பாவி இந்துக்களை பக்தியின் பெயரால் அவர்களை இப்படிப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க தூண்டி விட்டும் தங்கள் நோக்கத்தை வருங்காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்து மத வெறி காலிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இதைச் செய்யத் தவறினால் வருங்காலத்தில் தமிழகத்திலும் மதவெறி கலவரங்களை இந்து மத வெறியர்கள் கட்டமைத்து விடுவார்கள். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டுமானால் முற்போக்கு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் இந்து மத வெறியை — இந்து மத வெறியர்களை முறியடிப்பதற்கு மக்கள் மத்தியில் இப்பொழுதே தமது பிரச்சாரத்தை தொடங்கி, தொடர்ந்து நடத்த வேண்டும்.
— குமரன்






