2004 ஜனவரி 1ம் தேதிக்குப்பின் மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குமுன் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக பலன் கிடைத்ததாகவும், அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டங்களை துச்சமாக மதிக்கின்ற இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக அரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தற்போதைய நிதி நிலையில் இது பற்றிய பரிசீலனைக்கு இடமில்லை என்று நிர்மலா சீதாராமன் மூலம் கைவிரித்துள்ளது.
இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய போது புதிய ஜனநாயகம் இதழில் அதை அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம்.
“சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்ப்பதாக நாடகமாடி வரும் பா.ஜ.க. கும்பல், ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பதை வரவேற்று உள்ளது. மைய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஓய்வூதியத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கும், அதில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்ததே பா.ஜ.க.வின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இச்சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.”என்று காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மூல காரணமே பாசிச பாஜக தான் என்பதையும் அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம்.
படிக்க:
♦ அரசு ஊழியர்கள் இனி ஆர் எஸ் எஸ்-சில் சேரலாம். தடை நீக்கமும், அதன் தாக்கமும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பலனடைந்து வந்த தொழிலாளி வர்க்கத்தின் தலையில் பேரிடியாக இறங்கிய புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அப்பட்டமான ஒரு பகல் கொள்ளை என்பதையும் பாட்டாளி வர்க்கத்திற்கு புரியும் வகையில் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
“எனவே, ஓய்வூதியம் என்பது தொழிலாளிகளுக்குத் தரப்படும் தானமல்ல. அது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கொடுபடா கூலியின் ஒரு பகுதிதான். இதனைத் தர மறுப்பதென்பது முதலாளித்துவப் பயங்கரவாதம்தான். புதிய ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய உரிமையைப் பறித்ததன் மூலம், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல். ஓடிஓடித் தேய்ந்து போன இயந்திரங்களைக் கழித்துக் கட்டிக் குப்பையில் வீசியெறிவது போல, உழைத்து உழைத்து இளைத்துப் போகும் தொழிலாளர்களை, அவர்களின் முதுமைக் காலத்தில் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் அற்ற நிர்க்கதியான நிலையில், அபாயத்தில் தள்ளிவிடும் முதலாளித்துவ வக்கிரம்தான் இப்புதிய ஓய்வூதியத் திட்டம்.” என்று புதிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களையும் அதன் நாசகார விளைவுகளையும் அம்பலப்படுத்துகின்ற பாசிச பாஜகவானது இந்த புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி மட்டும் வாயை திறக்காமல் நாடகமாடி கொண்டுள்ளது.
பாதிப்புகளை காங்கிரசு மற்றும் நேரு காலத்திலிருந்து பேசுகின்ற பாஜகவினர் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதற்கு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் கிடப்பில் போடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவாதங்கள் வரும்போது மட்டும் நிதி நிலையை காரணம் காட்டி பாட்டாளி வர்க்கத்தின் தலையில் மேலும் மேலும் இடியை இறக்குகிறது.
தமிழகத்தை ஆண்டுவரும் திமுக அரசானது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொடுத்தது.
படிக்க:
♦ மோடிக்கு கண்டனம் தெரிவித்து 108 அரசு ஊழியர்கள் கடிதம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து என்ற போராட்டங்கள் கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் மூலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிகிறது. இந்த அறிக்கையை சமர்ப்பிக்கின்ற ககன்தீப் சிங் பேடி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் 2026 தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு மோசடியாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்காமல் உண்மையிலேயே தொழிலாளி வர்க்கத்தின் பாதிப்புகளில் இருந்து நேர்மையாக பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் என்று முழங்குவோம்.
◾கணேசன்.







பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து என்பது பொருளாதார கோரிக்கை. இது பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கையாக இருக்க முடியாது. அது தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கையாக தான் இருக்கும்.
பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை என்பது ஒரு சோசலிச சமுதாயத்தை, கம்யூனிச சமுதாயத்தை படைப்பது தான் அதனுடைய இலக்கு என நான் உணர்கிறேன். ஆகவே மேல் குறிப்பிட்ட தலைப்பு சரியானதா என்பதை ஆசிரியர் குழு பரிசளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.