
ஹரியானா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த புரன்குமார் (Additional Director General of Police) தலித் என்பதற்காக மேல் அதிகாரிகளால் தொடர்ந்து சாதி ரீதியாக புறக்கணிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வந்தது காரணமாக அக்டோபர் 7ஆம் தேதி அன்று தனது கைதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரன்குமார் 25 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். காவல்துறையில் தனது சிறப்பான சேவைக்காக குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்றவர்.
“ஹரியானாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் பொழுது அங்கு புரண்குமார் பணியமர்த்தப்பட்டார். விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் துப்பாக்கிச் சூடு நடத்துமாறும் புரன்குமாருக்கு அறிவுறுத்தப்பட்ட பொழுது அவர் அந்த வழிகாட்டுதலை அமுல்படுத்த மறுத்துவிட்டார். அதுதான் அவரது நேர்மை” என்றும் “புரன்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை, ஏழைகள் மற்றும் தலித்துகளுக்காக நின்றதற்காக அவர் வீரமரணம் அடைந்தார்” என்றும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் கூறியுள்ளார்.
இவரது மனைவி அம்னீத் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஹரியானா மாநிலத்தின் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வருபவர். ஜப்பான் நாட்டில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்த அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நயாப்சைனி தலைமையிலான அதிகாரப்பூர்வ தூதுக்குழுவுடன் புரன்குமாரின் மனைவி அம்னீத்-ம் சென்று அங்கு அதற்கான பணியில் ஈடுபட்டிருந்த தினத்தில் தான் புரன்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொண்ட புரன்குமாரின் மைத்துனர் ரட்டான் (Rattan) பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏவாக இருக்கிறார்.
ஆக 25 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய புரன் குமாரின் மனைவியும் அந்த மாநிலத்தின் ஒரு துறைக்கே தலைமைச் செயலாளராக இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அதிகார வர்க்கத்தில் இவ்வளவு உயர்ந்த இடத்தில் செல்வாக்கு மிக்க நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் இருந்த போதும் மைத்துனர் ஒரு எம்எல்ஏவாக இருக்கும் பொழுதும் புரன்குமார் ஒரு தலித் என்பதற்காக மேலதிகாரிகளால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது இந்த நாட்டில் சாதி எந்த அளவிற்கு ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதற்கு துலக்கமான சான்று.
புரன்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய தனது தற்கொலை குறித்த கடிதத்தில் ஹரியானா DGP சத்துருஜித் கபூர், ரோஹ்தக் மாவட்டத்தின் SP நரேந்திர பிஜார்ணியா உள்ளிட்ட பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் என 11 மூத்த அதிகாரிகள்தான் தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் என்று தெளிவாக பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புரன்குமார் 2020 ஆம் ஆண்டு (அம்பாலா மாவட்டத்தில் உள்ள) ஒரு காவல் நிலையத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சென்ற பொழுது இருந்து தனக்கு எதிரான பாகுபாடு ஆரம்பமானதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருந்த தனது தந்தையை பார்ப்பதற்காகக்கூட தனக்கு விடுப்பு வழங்காமல் மறுக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சலும் மனவலியும் ஏற்பட்டதாகவும் பதவி உயர்வு, தங்குமிடம், விடுப்பு அளிப்பது, பணி ஒதுக்குவது போன்ற பலவற்றில் தான் தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாகவும் பழிவாங்கப்பட்டதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மேல் அதிகாரிகளின் தொடர்ச்சியான சதிகளால், தான் சாதி ரீதியாக ஒடுக்கப்படுவது, அவமானப்படுத்தப்படுவது, உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாத அளவிற்கு இருக்கிறது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க:
♦ புதுச்சேரி: ‘தலித்’ அமைச்சருக்கே நிகழ்ந்த கொடூரம்!
♦ அம்பேத்கர், தலித்துகளை இழிவுபடுத்திய பல்கலைகழக மாணவர்கள், முதல்வர் கைது!
இவ்வளவு தெளிவாக எவ்வாறெல்லாம் தான் சாதி ரீதியாக தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களுடன் தற்கொலைக்கான காரணத்தை விளக்கி புரன் குமாரால் கடிதம் எழுதப்பட்டிருந்த பொழுதும் இந்த தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIRல்) சேர்க்கப்படவில்லை. சாதி ரீதியாக துன்புறுத்துவது தொடர்பான (SC / ST Act) சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை.
இவை அனைத்தும் சாதி தீண்டாமை குற்றம்புரிந்த மேல் அதிகாரிகளை தப்புவிப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய முறையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படும் வரை, தற்கொலைக்கு காரணமான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்படும் வரை தனது கணவரின் உடலை உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்று நியாயத்திற்காக புறன்குமாரின் மனைவி அம்னீத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருக்கிறார்.
சனாதனம் கோலோச்சி வரும் இந்திய நாட்டில் தலித் மற்றும் பழங்குடியின மக்களில் ஏழைகளாக உள்ளவர்கள் மட்டும்தான் சாதிக் கொடுமைகளுக்கு ஆளாகி உயிரை இழந்து வருகின்றனர் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் ஹரியானாவில் இருந்து வந்துகொண்டிருக்கும் இந்த செய்திகள் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.
இறந்து போனவர் ஒரு இந்து தான். ஹரியானா மாநிலத்தில் நடந்து கொண்டிருப்பது ‘இந்துக்களை காப்பாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கும்’ பாஜகவின் ஆட்சிதான். ஆனால், ஒரு இந்துவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாரதிய ஜனதா கட்சியினரை – பாஜக அரசை தடுப்பது எது? சனாதனம் தான் தடுக்கிறது.
மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படாததால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே மாற்றப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகளுக்கு ஒரு தலித் உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதே சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இந்த நிலையில் ஒரு தலித் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து பாஜகவினர் அலட்டிக் கொள்ளப் போவது இல்லை. அதன் வெளிப்பாடு தான் இன்று வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை.
ஆர் எஸ் எஸ் – பாஜக இந்துக்களுக்காக அரும்பாடு பட்டுக் கொண்டிருப்பதாக நம்பும் அப்பாவிகளே இந்த சங்கிகள் அமைக்க துடிக்கும் இந்துராஷ்டிரம் எவ்வளவு கொடூரமானதாக, மனிதத் தன்மைக்கு எதிரானதாக இருக்கப் போகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
– குமரன்
செய்தி ஆதாரம்: The wire







சாதி என்ற ஒற்றை காரணத்தை முன்வைத்து எஸ் அதிகாரியாக இருந்தாலும் அதிகார மட்டத்தில் உச்சத்தில் இருந்தாலும் என்ற மனநிலை மிக கொடூரமானது. இதற்கு அடிப்படை மனுதர்மம் தான் அதை பெரியார் அம்பேத்கர் பாக்கிய வழியில் வீசி சமத்துவ சமூகம் படைக்க வேண்டும்.