
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று நடத்தப்பட்ட அமெரிக்க இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். முதலில் இந்த செய்தியை டிரம்ப் நேற்று அறிவித்தார். அது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இன்று காலை ஈரான் நாட்டு அரசு தனது அதிகாரப்பூர்வ ஊடகத்தின் மூலம் அவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படுகொலையை மாபெரும் குற்ற நடவடிக்கை என்றும், நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 40 நாட்களும் ஈரான் நாட்டில் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஈரான் இராணுவம் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது. இது அரபு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொருபுறம், ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் கொல்லப்பட்டதை அறிவித்த ட்ரம்ப் அந்த நாட்டு மக்கள் மீண்டும் ஈரான் அரசை கைப்பற்றுவதற்கு உரிய தருணம் இது என்று, அந்த நாட்டு மக்கள் சார்பாக இந்த தாக்குதல் கொடுக்கப்பட்டது போல் பேசி உள்ளார்.
கடந்த இரு நாட்களாக ஈரான் நாடு மீது நடந்த தாக்குதலில் அந்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது பற்றி இங்கு கருத்து தெரிவிக்கும் பலரும் குறிப்பாக சங்கிகள் ஈரான் அதிபர் கொல்லப்பட்டது குறித்து அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். அந்த நாட்டில் நிலவி வரும் மதக் கொடுங்கோன்மை அரசை வீழ்த்த அமெரிக்க தலையீடு அவசியம் என்றும் பேசுகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்கள் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும், சர்வாதிகாரிளுக்கு எதிராகவும் குரல் எழுப்பியது. அப்போதே அந்த போராட்டத்தை பயன்படுத்தி ஈரான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த அமெரிக்க அரசு திட்டமிட்டது. அதனை வெளிப்படையாகவும் அறிவித்தது. ஆனால் அந்த சமயம் அது நடக்காது போன பிறகு பேச்சு வார்த்தை என்று பெயரில் ஒரு பக்கம் திசை திருப்பிவிட்டு ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றிணையும் தருணத்தைப் பார்த்து திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்திக் கொன்றுள்ளது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் வெனிசுலா நாட்டில் புகுந்து அந்நாட்டு அதிபரையே கடத்தியது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு. அதற்கு நியாயம் கூற அதிபர் அமெரிக்காவுக்குள் போதை மருந்தை கடத்துவதாக குற்றம் சாட்டியது. மேலும் வெனிசுலாவில் மக்களின் வாழ்வும் ஜனநாயகமும் பறிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதாகவும் அறிவித்தது.
இப்போது பலருக்கும் எழும் ஐயம் என்னவெனில் ஈரான் நாட்டில் நடப்பது ஒரு மதம் கொடுங்கோன்மை அரசு என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் அந்த நாட்டு மக்களை நசுக்கி அழுத்தி வரும் அந்த அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கி எறிந்தால் அந்த நாட்டு மக்களுக்கு நல்லது தானே என்ற எண்ணம் பலருக்கும் எழக்கூடும். ஆனால், இப்படி அந்நிய நாடுகளுக்குள் புகுந்து அரசுகளை கவிழ்ப்பதும் நாட்டுத் தலைவர்களை கொல்வதையும் அமெரிக்கா ஏகாதிபத்திய அரசு பல 10 ஆண்டுகளாக செய்து வருகிறது. முக்கிய உதாரணங்கள் ஈராக், சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் ஆகியவையாகும். இந்த நாடுகளில் எந்த அளவு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது என்பதை அந்நாடுகளில் தற்போது நிலவும் நிலைமைகளைக் கொண்டு நாம் சொல்லலாம்.
மேலும் ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதும் நாட்டின் சர்வாதிகார அரசை தூக்கி எறிவதும் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். அவை அந்த மக்களின் முன் முயற்சிகளும் வர்க்க ஒற்றுமையினாலும் சாதிக்கப்பட வேண்டிய விதியே தவிர ஏகாதிபத்திய தலையீட்டின் மூலமாக செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல அப்படி செய்யப்படவும் முடியாது.
படிக்க:
♦ ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!
♦ ஈரான் மீது குண்டு வீச்சு : உலகைப் போர் பதற்றத்தில் தள்ளி உள்ள அமெரிக்கா!
ஈரான் நாட்டில் நிலவும் மதக் கொடுங்கோன்மை அரசு என்பதும் அந்த நாட்டு மக்கள் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டிய விஷயம். மேலும் 1979 ஆம் ஆண்டு இந்த மதக்கொடுங்கோன்மை அரசு வருவதற்கு முன்பு அங்கிருந்த அமெரிக்க அதிபர் அடிவருடி அரசு, ஜனநாயகத்தைக் கொண்டு இருக்கவில்லை என்பதே ஈரான் வரலாறு. அதற்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியின் விளைவாகவே இப்போதுள்ள மத அடிப்படைவாத அரசு உருவாகியது.
அதே சமயம் 1979 இல் இருந்து அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஈரான் நாட்டின் மீது தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளது அதன் விளைவாக அந்த நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் அந்நாட்டு அரசுடன் கைகோர்த்து நின்றனர். பொருளாதார தடைகள் மூலமும் ராணுவ நடவடிக்கையில் மூலமும் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள துணை நின்றனர்.
ஈரான் நாட்டு மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை ஈரான் மத அரசு தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அந்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஜனநாயகத்தை நிலை நிறுத்தாமல் போனது. இதனால் அந்த நாட்டு மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தியை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதலானது எவ்விதத்திலும் அந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதல்ல. மாறாக, ஈரான் மற்றும் அரபு நாடுகளின் பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலக மக்களுக்கு மாபெரும் இடையூறாகும். ஈரான் நாட்டு மக்களும் அவர்களது ஜனநாயகப் போராட்டங்களை நடத்த தேச பாதுகாப்பு என்ற தடை ஏற்படுத்தப்படும்.
உலகை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலைத் தடுக்க சீனா ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர் ஏகாதிபத்திய நாடுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ஈரான் மீது தடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதலை மோடி அரசும் கண்டிக்கவில்லை. இதுவே இன்றைய உலக நிலைமை.
ஏகாதிபத்தியங்களுக்குள் இருக்கும் முரண்பாடு என்பது அவர்களின் சுரண்டலுக்கும் மேலாதிக்கத்திற்கும் தானே ஒழிய, உலக மக்களின் நன்மைக்கானது அல்ல.
உலக பதற்றத்துக்கு உள்ளாக்கும் உலக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகும் இந்த நிலைமையை முறியடிக்க ஒடுக்கப்பட்ட நாடுகளும் அதன் மக்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். ஒடுக்கும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களும் அதனை ஆதரிக்க வேண்டும்.
சோசலிச முகாம் என்ற ஒன்று உறுதியாக இல்லாத நிலையில் உலக மக்களை ஏகாதிபத்திய அராஜகங்களிலிருந்து விடுவிப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
- திருமுருகன்






