டெல்லி ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் அவர்களை அச்சுறுத்த நினைக்கும் அதிமுக ஐடி விங்கின் இணையவழித் தாக்குதலை, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் (TNDJU) வன்மையாகக் கண்டிக்கிறது.
டெல்லியில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் திரு.நிரஞ்சன் குமார், கடந்த 8 மாதங்களாக “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு அவர் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். தமிழ்நாட்டு மக்களால், தமிழ்நாட்டின் டெல்லி முகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வாறு அழைக்கப்படுவதற்குக் காரணம் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அவர் செயல்படுவதே. விவசாயிகள் போராட்டம், 2024 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளைக் களத்தில் இருந்து துல்லியமாக நமக்கு அளித்தவர். தற்போது ‘தி கேப்பிடல்’ ஊடகத்தின் வழியாகவும் பல ஊடகங்களின் மூலமாகவும் உச்சநீதிமன்றச் செய்திகள், நாடாளுமன்றச் செய்திகள், டெல்லியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை காய்தல் உவத்தல் இன்றி வழங்கி வருபவர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து ‘ஏர் செய்த போர்’ என்ற ஒரு நூலையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தான் செய்த பயணங்கள் குறித்த ‘இந்தியா வென்றது – 2024 நாடும் நாடாளுமன்றத் தேர்தலும்’ என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர் நிரஞ்சனின் தனியுரிமையும் ஜனநாயகப்பூர்வமான உரிமையுமான இந்த எழுத்துப் பணிகளுக்கும் கூட உள்நோக்கம் கற்பிக்கிறது அதிமுக ஐடி விங் அறிக்கை.
கடந்த செப்டம்பர் 16, 2025 அன்று தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லிக்குச் சென்ற செய்தி நாடறிந்தது. குறிப்பாக அமித்ஷா அவர்களைச் சந்தித்த பிறகு அவர் தனது கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி காருக்குள் சென்றார் என்று பல்வேறு காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வீடியோ/புகைப்படங்களுடன் செய்தி வெளியாகி உள்ளது. ஊடகவியலாளர் நிரஞ்சன் அவர்களும் அவ்வாறே இச்செய்தியினை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு அதிமுக தரப்பில் இருந்து விளக்கமோ மறுப்போ தெரிவிக்கலாம். அவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள மறுப்பும்கூட அனைத்துவகை ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
அமித்ஷா – எடப்பாடி திடீர் சந்திப்பும் – ஆபாச அரசியல் அரங்கேற்றமும்!
உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!
இந்தச் சந்திப்பு குறித்து நூற்றுக்கணக்கான ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள சூழலில் ஊடகவியலாளர் நிரஞ்சன் அவர்களை மட்டும் குறி வைத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் பக்கம் Legal Notice என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கறிஞர் அறிக்கை (Legal Notice) நிரஞ்சன் குமார் அவர்கள் ட்விட்டர் ஐடியைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தாலும், அவ்வறிக்கை யாரால் அனுப்பப்படுகிறது என்ற விவரம் இல்லை. யாருக்கு அனுப்பப்படுவதாக ட்விட்டர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளனரோ அவருக்கும் அனுப்பப்படவில்லை. சட்டப்பூர்வமான வழக்கறிஞர் அறிக்கை என்ற பெயரில் வெளியாகி இருந்தாலும் இந்த அறிக்கையின் எழுத்துகள் முழுக்க முழுக்க அரசியல் தன்மையோடே இருக்கிறதே தவிர சட்டப்பூர்வமானதாக இல்லை. முழுக்க முழுக்க சமூக வலைதளங்களின் மூலம் சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாக்கும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள அதிமுக ஐடி விங் அறிக்கையை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் Time has come to name and shame all of you என்று வெளிப்படையாக அனைத்து சுதந்திர ஊடகவியலாளர்களையும் மிரட்டுகிறது அதிமுக அறிக்கை. சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரை மிகவும் தரக்குறைவான வகையில் அதிமுகவின் இவ்வறிக்கை தாக்குகிறது. ஊடகச் சூழலைக் கெடுக்கும் எலிகள் என்றும் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும் பொறுமையை சோதிப்பதாகவும் மிக அருவருப்பான வார்த்தைகளை ஊடகவியலாளர் மீது பயன்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஊடகவியலாளர் நிரஞ்சன் மீது அவதூறு பரப்பி சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கருத்துரிமையை நசுக்குகின்ற வகையில் அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை TNDJU வன்மையாகக் கண்டிப்பதுடன் பாசிசப் போக்கை வெளிப்படுத்தும் அவ்வறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
தொடர்புக்கு:
இந்திரகுமார் தேரடி,
தலைமை ஒருங்கிணைப்பாளர், Tamil Nadu Digital Journalists Union.
Mail: tndjumail@gmail.com