இந்த ஆண்டில் முதல் சட்டப்பேரவை இன்று 20.01.2026 கூடியது. 2026-ல் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையோடு தொடங்க இருந்தது. சட்டப்பேரவை வளாகத்திற்கு 9.20 மணிக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 9.37 மணிக்கு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி நடந்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தபடியே உண்மையாக்கிவிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் உரையை முழுதாக வாசித்த ஆளுநர் ரவி, 2023 ஆம் ஆண்டு சுயமரியாதை, பெரியார், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு உரையை வாசித்தார்.
ஆளுநர் வாசிக்காவிட்டாலும் அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம்பெறும் என முதல்வர் அறிவித்ததும், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். 2024 மற்றும் 2025 அவையோட தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று சொல்லி உரையை படிக்காமலேயே வெளியேறினார்.
இந்த வருடம் என்ன செய்யப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சென்ற ஆண்டு போலவே தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி அவையில் இருந்து வெளியேறியுள்ளார்.
கவர்னர் உரையை வாசிக்காததாலேயோ அல்லது அவையில் இருந்து வெளியேறியதாலேயோ யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டு மக்களும் அதையே விரும்புகிறார்கள். அவைகளில் இருந்து வெளியேறியவர் தமிழ்நாட்டில் இருந்து எப்போது வெளியேறப் போகிறார் என்பதை அவர்களின் கேள்வி.
9.37 மணிக்கு அவையில் இருந்து வெளியேறியவர் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த அறிக்கையை சரியாக 10:02 க்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ x பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து, உரையில் வைத்துள்ள புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி காட்டியுள்ளதாகவும், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அதிகரித்து வரும் தற்கொலைகள், பஞ்சாயத்து தேர்தல் நடக்காதது குறித்து, பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது பற்றி என தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவரை போல் எதிர்க்கட்சியினர் தயாரிக்க வேண்டிய அறிக்கையை தானே தயாரித்து வெளியிட்டுள்ளார் ரவி.
படிக்க:
♦ ஆசான் மார்க்ஸ் பற்றி அவதூறு பரப்பும் பார்ப்பனக் கொழுப்பும் – அதிகார வெறியும் பிடித்த RN ரவி!
♦ திருவள்ளுவர் தொடர்ந்து அவமதிப்பு: தமிழ் மண்ணில் இருந்து R.N. ரவி விரட்டியடிக்கப்படல் வேண்டும்!
ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையாகவே தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் அவரது அறிக்கையில் சில முக்கிய பிரச்சினைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். தனியார் மயத்திற்கு எதிரான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் திமுகவின் அணுகுமுறை பற்றியும், பல ஆலைகளில் அதிகரித்து வரும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் போராட்டம் பற்றியும், முதலாளித்துவ சுரண்டல் பற்றியும், பரந்தூர் விமான நிலைத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்தும், ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்கள் குறிக்கும் அறிக்கையில் எந்த சுட்டுதலும் இல்லை.
இதற்கான காரணத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் திமுகவிற்கு எதிரான போராட்டங்கள் மட்டுமல்ல. கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், தனியார் மயத்திற்கும் எதிரான போராட்டங்களாகவும் உள்ளது. அதனால் திமுக அரசை எதிர்த்த விஷயங்களை அறிக்கையில் குறிப்பிட்டு கார்ப்பரேட் தனியார் மயம் தொடர்பான விஷயங்களை தவிர்த்து இருக்கிறார் ஆளுநர் ரவி.
ஆளுநரின் கடந்த காலச் செயல்பாடுகள் அனைவரும் அறிந்தது. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன. ஆளுநருக்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஆளுநர் மாளிகை முற்றுகை, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போட்டது, நீதிமன்றத்தில் குட்டு வைத்தது. பின்பு நீதிமன்றத்தையே சங்பரிவார் அதிகார கும்பலை வைத்து மிரட்டி பணிய வைத்தனர்.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸின் அதிகார மையமாக செயல்பட்டது, திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசியது, தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என ஆளுநர் மாளிகை லெட்டர் பேடில் மாற்றியது எதிர்ப்பு பலமானவுடன் திரும்பப்பெற்றது, கம்யூனிசத்தின் ஆசான் கார்ல் மார்க்ஸ் குறித்து தொடர்ந்து அவதூறு பேசியது, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே சனாதன விஷத்தை பரப்பியது என ஆளுநர் ஆர்.என்.ரவி – ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்பட்டதை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ்நாடு ஆரம்ப காலத்தில் இருந்து ‘ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஆணி’ என்பதை அம்பலப்படுத்தி போராடி வருகிறது. அதற்கேற்பவே சமீப காலமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
பாஜக அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் பொம்மையாக நியமித்துவிட்டு எதிர்க்கட்சிகளாலும் மாநிலங்களை கட்டுப்படுத்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் ஆளுநர்களை நியமித்து மாநிலங்களை சுயமாக செயல்பட விடாமல் தொல்லை கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. பாசிசக் கும்பல். மாநிலங்களை ஒன்றிய அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்கேற்பதான் ஆளுநர் போன்றோர் செயல்படுகிறார்கள்.
இது தமிழ்நாட்டிற்கான பிரச்சனை மட்டுமல்ல. கேரளா, மேற்குவங்கம், காஷ்மீர் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நாளை பாஜக வேறு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்தாலும் அங்கும் கொல்லைப்புற வழியாக அதிகாரத்தை கைப்பற்ற ஆளுநர்களை பயன்படுத்தும். மாநில சுயாட்சி உரிமைக்கு வேட்டு வைக்கும்.
ஆகையால் ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை மாநிலத் தன்னாட்சிக்கான போராட்டங்களாக பரிணமிக்க செய்வோம்.
- நலன்






