மக்கள் தீர்ப்பே இறுதியானது: தற்போது நீதிமன்றங்களில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஒரு பக்க சார்புடையதே!
இறுதியாக கார்த்திக் அந்த ஊரில் காளி சிலையை நிறுவ மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்த பின்பு தான் மக்கள் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

“சென்னை: எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். இவர் அதனை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இதையடுத்து வருவாய்த்துறையினர் காளி சிலையை அகற்றினார்கள். இதனால் கார்த்திக் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காளி சிலையை ஊருக்குள் கொண்டுவந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது” என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கோர்ட்டுகளில் உத்தரவு போட்டு விட்டால் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என்று கடந்த ஒரு மாத காலமாக திருப்பரங்குன்றம் வழக்கில் பார்ப்பனக் கும்பல் எகிறிக் குதிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்த முடியாது என்று அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் பலமுறை நிராகரித்ததை பல சம்பவங்கள் கொண்டு நாம் இதற்கு பதிலடி கொடுக்க முடியும் என்றாலும் சமீபத்தில் நடந்த மேற்கண்ட நிகழ்வைக் கொண்டு இதற்கு பதில் கூறலாம்.

மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காகவே நீதிமன்றங்களும், போலீஸ், இராணுவம் உள்ளிட்ட அதிகார உறுப்புகளும் உருவாக்கப்பட்டதாக அரசு தோன்றிய காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள், அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டுள்ள பலம் படைத்தவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஒத்தூதுகின்ற வகையிலேயே பல்வேறு கட்டுமானங்கள் அதாவது மதம், நீதி, அரசு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்படுகிறது. இதனால்தான் நீதிமன்றம் என்ற உடனே அது இரு தரப்பினருக்கும் சமமாக நீதி வழங்குகின்ற மன்றம் என்று பலரும் புரிந்து வைத்துள்ளனர்.

அது சோலாப்பூர் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த அடிப்படையிலேயே நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகளில் கூட நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதிகளின் மனசாட்சிக்கு உறைக்கின்ற வகையிலும், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நீதி குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அமுல்படுத்துவதற்கே கூட மக்கள் வீதியில் திரண்டு போராடினால் தான் நியாயம் எப்போதாவது கிடைக்கிறது.

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த நெட்டுக்குப்பம் கார்த்திக் என்பவர் இந்த பகுதியில் ஒரு காளி சிலையை நிறுவி மாந்திரீகம் செய்து வருவதாக மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கவே தாசில்தார் முன்னிலையில் அந்த காளி சிலை அகற்றப்பட்டது . அந்த காளி சிலையை மீண்டும் தனது வீட்டில் நிறுவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மந்திரவாதி கார்த்திக்.

படிக்க:

 பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!

 திமுகவுக்கு முருகன் மாநாடு! CPI(M) க்கு ஐயப்ப மாநாடு! மார்க்ஸ், பெரியார் சிந்தனைகளுக்கு சவக்குழி!

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காளி சிலையை மீண்டும் நிறுவுவதற்கு வீட்டுக்கு சென்ற தாசில்தார் உள்ளிட்டவர்களை மக்கள் இடைமறித்து திருப்பி அனுப்பி உள்ளனர். எனவே மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் காளி சிலையை நிறுவுவதற்கு நெட்டுக்குப்பம் சென்ற தாசில்தார் உள்ளிட்ட பலரை நெட்டுக்குப்பம் மக்கள் ஊரின் எல்லையிலேயே கருப்பு கொடியுடன் மறித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த மறியலில் மக்களிடையே நேரடியாக கார்த்திக்கையே பேச வைத்தனர். இறுதியாக கார்த்திக் அந்த ஊரில் காளி சிலையை நிறுவ மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்த பின்பு தான் மக்கள் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டாலே அதுவே உயர்ந்த பட்ச தீர்ப்பு என்பது ஆளும் வர்க்கத்தின் நீதியாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரம் முதல் வழிபாட்டு நம்பிக்கை வரை அனைத்திலும் அவர்கள் கூறுவது தான் உண்மையான நீதியாக இருக்க முடியும் என்பது தான் நெட்டுக்குப்பம் மக்கள் தமிழகத்திற்கு உணர்த்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்படுகின்ற தீபமானது மரபு மற்றும் பழக்க வழக்கம் அடிப்படையில் தற்போதைய கார்த்திகை தினம் வரை ஏற்றப்பட்டு கொண்டு இருந்தாலும், தற்போது திடீர் என்று நில அளவைக்கல் மீது தீபம் ஏற்றினால் தான் அது தீபம் என்று ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கும்பல் தமிழகத்தில் இருந்து டெல்லி வரை கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நெட்டுக்குப்பம் மக்களின் போராட்ட முறை கற்றுக் கொடுத்துள்ள அனுபவத்தை உணர்த்தும் திசையை நோக்கி மக்களை தயார் படுத்துவது தான் சரியாக இருக்கும்.

பார்த்தசாரதி.

புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதி மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மயிராக்கிய அனுபவத்தை மதுரை திருப்பரங்குன்றம் மக்களிடம் கொண்டு செல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here