கேரளாவில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னெப்போதும் இல்லாத வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). 2024ல் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இருந்துக் கொண்டே  இடது முன்னணி (LDF), காங்கிரஸ் (UDF) பாஜக(NDA) தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டன. 20 நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களை கைப்பற்றியது. பாஜக 1 இடத்திலும், இடது  ஜனநாயக முன்னணி  ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சசிதரூருக்கு  பாஜக வேட்பாளர் சந்திரசேகர் கடும் போட்டியாளராக இருந்தார். 15000 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே சசிதரூர் வெற்றி பெற்றார். இது திருவனந்தபுரத்தில் பாஜகவின் வளர்ச்சியை காட்டியது. அந்த தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடமே பெற முடிந்தது.

இதன் தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. இதற்கு திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக உள்ள சசிசரூர்-ம் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது அவரது சமீபத்திய செயல்பாடுகளும் அவரின் இன்றைய அறிக்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

சசிதரூரின் அறிக்கையில்,

“திருவனந்தபுரத்தில் பாஜ அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு (பாஜ) கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.”

இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, காங்கிரஸ் கட்சியே இந்தியாவில் இல்லாமல் செய்வேன் என்று பேசி வரும் பாசிச மோடி கும்பலின் வெற்றியை புகழ்ந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். காங்கிரஸ் கட்சியில் இருந்துக் கொண்டு எதிரியின் வெற்றியை கொண்டாடுகிறார். இதனை தினமலர் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன‌.

45 ஆண்டு காலமாக திருவனந்தபுரம் இடதுசாரிகள் கைவசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பாசிச கும்பலின் வளர்ச்சியை தடுக்க ஆளும் இடது முன்னணியோ அல்லது காங்கிரஸோ வேலை செய்ததாக தெரியவில்லை. மாறாக, அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியிலேயே முனைப்பு காட்டினார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாசிச பாஜகவை எதிர்த்து வீழ்த்த அமைக்கப்பட்ட I.N.D.I.A கூட்டணி அதன் சந்தர்ப்பவாத பிழைப்புவாத நடவடிக்கையால் மேற்குவங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டன.

படிக்க:

 கேரளாவில் சிபிஎம் செயலாளர் ஆர்எஸ்எஸ் கும்பலால் படுகொலை – 4 பேர் கைது

 கேரளாவை புரட்டிப் போடும் மேக வெடிப்பு !

பாஜக இவர்களின் ஒற்றுமையின்மையை எடுத்துக் கூறியே ஓட்டு கேட்டது. மக்களும் இவர்களது ஒற்றுமையின்மையால் நம்பிக்கை இழந்தததால், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்கோபி எம்பி ஆக வெற்றி பெற்றார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காவிக் கும்பல் காலூன்றினாலும் தமிழ்நாடு, கேரளா அவர்களுக்குத் தண்ணி காட்டியது. தற்போது கேரளாவில் வலுவாக கால் ஊன்றுவதற்கு தொடக்கமாக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பாஜக பார்க்கிறது.

கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணியும், கோழிக்கோடு மாநகராட்சியை LDF கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் வென்றுள்ளன.

நகராட்சியில் காங்கிரஸ் 54, இடது முன்னணி 28, பாஜக 2 இடங்களிலும் வென்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 504, இடது முன்னணி 341, NDA 26 இடங்களில் வென்றுள்ளன. மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் மற்றும் எல்டிஎப் 7 இடங்களில் வென்றுள்ளன. வட்டளவில் UDF 79, LDF 63 இடங்களில் வென்றுள்ளது.

பாஜகவின் வளர்ச்சியை சாதாரணமாக கடந்து விட முடியாது. தனது அதிகார பலம், பண பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அடிமட்டத்திலிருந்து வேலை செய்கிறது. அதற்காக பாஜகவின் மூத்த தலைவர்கள் வரை இறங்கி பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

கடந்த 2020 திருவனந்தபுரம் மேயராக சிபிஎம் இன் ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயது மேயராக பிரபலமடைந்தாலும் மாநகராட்சி ஊழலில் சிக்கியதால் மக்கள் எதிர்ப்பை சிபிஎம் சம்பாதித்தது. அதனை பாஜக பயன்படுத்திக் கொண்டது.

திருவனந்தபுரம் மேயர் தேர்தல் வெற்றிக்காக 1980 முதல் பாஜக வேலை செய்கிறது. திருவனந்தபுரத்தில் இந்துத்துவ வாக்கு வங்கி ஓரளவுக்கு இருந்தது. அதனை கடந்த 45 வருடங்களில் வளர்த்துள்ளது பாஜக. 2019 தேர்தலில் 6 கவுன்சிலர்களை மட்டுமே வென்றது. 2015 அது 35 ஆக உயர்ந்தது. 2020இல் 34 ஆக குறைந்தாலும் பாஜகவே முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது.

பாஜக தான் காலூன்ற நினைக்கும் மாநிலங்களில் நீண்ட கால திட்டத்தை வைத்து செயல்படுகிறார்கள். இளைஞர்களையும் மாணவர்களையும் ஷாகாக்களில் பங்கேற்க செய்து இந்துத்துவ அரசியலை பயிற்றுவிக்கிறார்கள். ஏபிவிபி என்ற சங்பரிவார் மாணவர் அமைப்பின் மூலம் மாணவர்களை ஒன்றிணைத்து அரசியல் பயிற்றுவிக்கிறது பாஜக. அதாவது, நாளைய தலைமுறை வாக்காளர்களுக்கு முன்கூட்டியே இந்துத்துவ அரசியலை ஊட்டி வளர்கிறது.

ஆனால், சிபிஎம் அவ்வாறு செயல்படவில்லை என்பதை அவர்களின் தேர்தல் தோல்வி காட்டுகிறது. தேர்தல் அரசியலை தாண்டி மக்களை அரசியல்படுத்த கேரளா சிபிஎம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையா அல்லது முயற்சியே எடுக்கவில்லையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மேற்குவங்கம், திரிபுராவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்று இருந்தால் இந்த நிலைமை சிபிஎம்முக்கு வந்திருக்காது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜக ஆதரவாளர்கள் ஆனதற்கு அவர்களின் பிழைப்புவாத அரசியலும் அவர்களுடைய வர்க்க கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றமுமே காரணமாக அமைந்தது.

கம்யூனிஸ்டுகளின் நிரந்தர எதிரி பாஜக தான்‌. ஆனால், கேரள சிபிஎம்  காங்கிரசை முதன்மை எதிரியாக பார்க்கிறது. காங்கிரசும்  பாஜகவை கண்டுக் கொள்ளாமல் சிபிஎம்-ஐ மட்டும் எதிரியாக பார்க்கிறது. அதாவது தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு பாஜகவின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவியுள்ளார்கள். இதே  தான் மேற்கு வங்கத்திலும் நடந்தது.

திருணாமுல் காங்கிரசை எதிரியாகப் பார்த்தவர்கள் பாஜகவை கண்டுகொள்ளாததன் விளைவு பாஜக மிகப்பெரிய சக்தியாக மேற்குவங்கத்தில் வளர்ந்துள்ளது. ஒரு சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி எம்எல்ஏவாக இருந்தவர் அடுத்த தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய நிகழ்வும் நடந்தது.

அதே நிலைமை கேரளாவில் ஏற்படாமல் தடுக்க பாஜகவை முதன்மை எதிரியாக கொண்டு கேரள சிபிஎம் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாசிஸ்டுகளின் வளர்ச்சியை தடுப்பது கடினம்.

  • நலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here