உழைக்கும் பெண்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கோ அல்லது பகுதிகளுக்கோ செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசும் காவல்துறையும் அவர்களை வேட்டையாடும் சம்பவங்கள் நிறைய உண்டு. அப்படியானதொரு கொடுமையான சம்பவம் தான் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இது குறித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு கொடுத்த தகவல்களை பதிவிடுகிறோம்.
000
திருவண்ணாமலை மார்கெட்டிற்கு ஆந்திராவிலிருந்து தக்காளி ஏற்றி வந்து மார்கெட்டில் இறக்கிவிட்டு திரும்பிய போது ஏந்தல் புறவழிச்சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜா இருவரும் 30-09-2025 அதிகாலை 5:00 மணியளவில் சந்தேகத்தின் பெயரில் வாகனத்தை மறித்து சோதனை செய்ய வேண்டும் என கூறி வாகனத்தில் இருந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவரை விசாரிக்க வேண்டும் என கூறி வாகனத்தை அனுப்பி வைத்தாகவும் , அந்த பெண்னை அடித்து சாலையோரத்தில் இருந்த புதருக்குள் இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு சாலையோரத்தில் விட்டுச் சென்ற பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த பெண் கொடுத்த தகவலின் படி பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு காவலர்களையும் கைது செய்துள்ளனர்.
இச்செய்தியை ஊடகங்களில் பார்த்த பிறகு திருவண்ணாமலையில் உள்ள ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சென்று பார்த்து விசாரித்து நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என கூற சென்றோம். நாங்கள் Casuality wardல் விசாரித்த போது பதிவு செய்யும் register நோட்டில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர்களை நாங்கள் சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று சொன்னபோது மருத்துவமனையில் இருந்த அதிகாரிகளும், ஊழியர்களும் அவர்கள் பெண்கள் வார்டில் இருக்கிறார்கள் என்று கூறியும், மகப்பேறு வார்டில் இருக்கிறார்கள் என்று கூறியும் அலைக்கழித்த பிறகு அவர்கள் இங்கு இல்லவே இல்லை, அவர்களை அட்மிட் செய்யவில்லை, OP செக்க்ஷனில் மட்டும் பார்த்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்றும் கூறினர்.
ஆனால், அங்கிருந்த கடைநிலை ஊழியர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட ஆந்திர பெண்கள் இருவரும் இங்குதான் சிகிச்சை பெற்று இருந்தார்கள் அவர்கள் உள்ளே தான் இருக்கிறார்கள் நாங்கள் மதியம் 2:00 மணி அளவில் கூட பார்த்தோம் என கூறினார்கள்.
பிறகு மருத்துவமனை டீன் அவர்களை பார்க்க சென்றோம். அவர் இல்லாததால் அவருக்கு கீழே இருந்த அதிகாரிகளை சந்தித்தோம் அவர்கள் நாங்கள் அதை சொல்ல முடியாது, அவர்கள் சென்று விட்டனர், அவர்கள் இங்கு வரவே இல்லை என முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். ஆகையினால் நாங்கள் வெளியே வரும்பொழுது ஏ ஆர் காவல்துறையினரை சந்தித்தோம். அவர்களிடம் விசாரித்த போது எங்களுக்கு அதைப்பற்றி தகவல் தெரியாது என கூறினர்.
பிறகு நாங்கள் ஆலோசித்து ஒருமித்த முடிவாக மருத்துவமனை வாயிலில் நின்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் , பாதிப்பை ஏற்படுத்திய காவலர்களை கைது செய்ய வலியுறுத்தியும் , பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்க விடாமல் அலைகழித்த திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கமிட்டோம்.
பங்கேற்ற கட்சிகள், இயக்கங்கள்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ML)
தலித் விடுதலை இயக்கம்
மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
எஸ் டி பி ஐ கட்சி
முற்போக்கு வழக்கறிஞர்கள்.
தகவல்:
புமாஇமு
திருவண்ணாமலை
9003319594.