அமெரிக்க செனட்டில் ஒலித்த பாலஸ்தீன ஆதரவு போர் குரல்!

“அமெரிக்காவே கிளர்ந்தெழு!. நேரம் கடந்து விட்டது.” என்று அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜோசஃபின் கில்போ அமெரிக்க வெளியுறவுத் துறை தொடர்பாக நடைபெற்ற அந்நாட்டின் செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் வீர முழக்கமிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல! “அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் (Senate Foreign Affairs) காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ளனர்” என்றும் முழக்கமிட்டு குற்றம் சாட்டியுள்ளனர் ஆண்டனி அகிலர் மற்றும் ஜோசஃபின் கில்போ என்ற இரண்டு அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள்.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிரொலித்த இந்த குரல் இன்று உலகம் முழுவதும் காணொளி வாயிலாக எதிரொலிக்க துவங்கியுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் யூத ஜியோனிச வெறிபிடித்த ராணுவம் துடிக்க துடிக்க பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள், பெண்கள் அனைவரின் மீதும் கொடூரமான தாக்குதல் நடத்துவது; பட்டினி போட்டு சாவடிப்பது என்ற வழிமுறைகளை கண்ட பிறகும், ‘ ஜனநாயக உரிமைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற யாராவது அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்தால் அது போலியான ஜனநாயக உரிமைகளுக்கு போராடுகிறார்கள் என்பது தான் அர்த்தமாகும்.

ஓய்வுபெற்ற கிரீன் பெரெட் (சிறப்புப் படை) வீரரும், தகவல் வெளியீட்டாளருமான (whistle blower) ஆண்டனி அகிலர், அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் காசா மானிடப் பணி நிறுவனத்தின் (Gaza Humanitarian Foundation) உணவு விநியோக இடங்களிலும் பணியாற்றியவர். அவ்வாறு அவர் பணியாற்றிய காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இழைத்த இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை அவர் ஆவணப்படுத்தியிருந்தார்.

படிக்க: இஸ்ரேல் இனப்படுகொலைக்கு உதவிய மைக்ரோசாப்ட்! எதிர்த்து முழங்கிய அதன் ஊழியர்!

இதுவரை காசாவில் நடந்து வருகின்ற இனப்படுகொலைகள் மற்றும் உணவு தண்ணீர் மருத்துவம் இல்லாமல் செத்து மடிகின்ற பட்டினி சாவுகள் ஆகியவற்றை பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் களத்தில் நின்று வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகின்ற அல்ஜசிரா செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படை நடத்தி வருகின்ற தாக்குதல்கள் உண்மையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவிலேயே அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

“பாலஸ்தீன பகுதிகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான சர்வதேச ஆணையம், சில தினங்களுக்கு முன்னர் தனது விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யும் நோக்குடன் செயல்படுகின்றனர்” என்று குற்றம் சுமத்தினர்.

“இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து குற்றங்களில், பாலஸ்தீனர்களைக் கொல்வது, அவர்களுக்குக் கடுமையான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது, திட்டமிட்டு இயல்பு வாழ்க்கையை அழிக்கும் சூழலை உருவாக்குவது, பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் திணிப்பது ஆகிய நான்கு குற்றங்களை இஸ்ரேல் செய்துள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வெறுப்புப் பேச்சுகளே இனப்படுகொலை நோக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது’ என்றும் அந்த அறிக்கை விரிவாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பிரிட்டன் அரசாங்கம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது. எனினும் இதற்கு நேர் எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது.

உலகில் எந்த மூலையில் மக்களின் எழுச்சி நடந்தாலும் அதனை ஒடுக்குவதற்கான உரிமையும் நாடுகளுக்கு இடையில் நடக்கின்ற போர்களை நிறுத்துவதற்கும் நாட்டாமை செய்வதற்குமான அதிகாரம் அனைத்தும் தனக்கே உள்ளது என்று கொக்கரித்து வரும் அமெரிக்க பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து அதன் சபையிலேயே அதை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய முன்னாள் ராணுவ உறுப்பினர்கள் இருவரும் பல மடங்கு பாராட்டத்தக்கவர்கள்.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார தாக்குதல்களுக்கு அடிபணிந்து விசுவாசமாக செயல்பட்டு வரும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரதமரான மோடி மற்றும் அவரது சக பாடிகள், ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவாரக் கும்பல் ஆகியவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்துகின்ற தாக்குதல்களையும், கொலை வெறியாட்டத்தையும் அங்கீகரிப்பது, ஆதரவளிப்பது என்றே செயல்படுகின்றனர்.

இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ உறுப்பினர்களின் போர்குணமிக்க போராட்ட வழிமுறையை நாமும் கடைபிடிப்போம். “சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரி!” “இந்திய ஒன்றிய அரசே! இஸ்ரேலுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்!” என்று வீதிகளில் திரண்டு போராடுவோம்.

பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here