ஏர் இந்தியாவும் !
ஏழை இந்தியாவும்!


பொதுத்துறை நிறுவானங்களை தொடர்ந்து தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு, ஏர் இந்தியாவை டாடாவிடம் விற்றிருக்கிறது.

நஷ்டத்தில் இயங்குவதால்,
விற்பதைத் தவிர வேறு வழியில்லை ! எனும் தோற்றத்தை ஊடகங்கள் வழியாக ஒன்றிய அரசு பரப்பி, ஏர் இந்தியாவை விற்றிருக்கிறது.

1932 ஆம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. குடியரசான இந்தியாவுக்கு , சொந்தமாக விமான நிறுவனத்தை நடத்தும் எண்ணம் தோன்றியது. 1953 இல் டாடா ஏர்லைன்ஸை ஒன்றிய அரசு கையகப்படுத்தியது.

இவ்வாறு டாடா ஏர்லைன்ஸ்
ஏர் இந்தியாவாக மாறியது.

இப்போது கடனைக் காரணம் காட்டி 18,000 கோடிக்கு, ஏர் இந்தியாவை,
மீண்டும் டாடாவிடமே விற்றிருக்கிறது மோடி அரசு.

உண்மையில் ஏர் இந்தியா
நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்ததா?

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது! என முடிவெடுத்த பிறகு , அவை நஷ்ட்டத்தில் இயங்குவது போன்ற தோற்றத்தை கார்ப்ரேட் நல அரசே உருவாக்குகிறது.

எல்லா துறைகளையும் போலவே, விமான சேவையிலும் தனியார் நிறுவனங்கள் அரசால் ஊக்குவிக்கப்பட்டன. ஏர் இந்தியாவுக்கு விமானங்கள், உதிரி பாகங்கள் வாங்குவதில் லஞ்சம் ஊழல் நிலவின. தனியார் வான்வழி வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிட்டு ஏர் இந்தியா சேவையின் தரம் குறைக்கப்பட்டது. லாபகரமான வான் வழித் தடங்கள் தனியார் விமான நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டன.

பிஎஸ்என்எல் போலவே ஏர் இந்தியாவும் அரசால் சீர் குவைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு நிதி உதவி செய்து ஏர் இந்தியாவை, நஷ்ட்டத்தில் இருந்து மீட்கும் முயற்சியை எடுத்தது. அதன் விளைவாக மீண்டும் ஏர் இந்தியா லாபகரமான பாதையில் செல்லத் தொடங்கியது.

ஆனால், தொடர்ந்து வந்த மோடி அரசு
ஏர் இந்தியாவுக்கான நிதி உதவியை நிறுத்தி, அதை நஷ்டத்தில் தள்ளியது. அதேவேளை ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பது என முடிவுக்கு வந்ததும் , படிப்படியாக ஏர் இந்தியாவின் கடன்களை (கிட்டத்தட்ட 20, 000 கோடி) ஒன்றிய நிதியமைச்சகம் தள்ளுபடி செய்தது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் போன்ற மதிப்பு வாய்ந்த இடங்களில் அசையாச் சொத்துகள் உள்ளன. அந்த வகையில் ,
ஏர் இந்தியாவின் அசையாச் சொத்துகள் மதிப்பு மட்டும் 20,000 கோடி இருக்கலாம்.

ஏர் இந்தியாவிடம் பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அதிநவீன விமானங்கள் உள்ளன.

அரசு 12, 000 கோடி மதிப்பை ஏர் இந்தியாவுக்கு நிர்ணயித்தது.
ஆனால் டாடா பெருந்தன்மையோடு
18,000 கோடிக்கு வாங்கியிருக்கிறார்!
என கதையளக்கின்றன, அரசும்
அதற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும்.

ஏர் இந்தியாவின் மொத்த மதிப்பை கணக்கிட்டால், டாடா கொடுத்திருக்கும் விலை மிகச் சொற்பமானது.

ஏர் இந்தியாவை விற்றதில் ,
சர்வதேச அளவிலான டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

ஏதோ துண்டைப் போட்டு , சந்தையில் மாடு விலை பேசுவதுபோல் வியாபாரத்தை முடித்துள்ளனர்,
அரசும் டாடாவும்.

நாம் சைக்கிளில் போகிறவர்கள்தானே! ஏர் இந்தியா எப்படி போனால் நமக்கென்ன? என்று சும்மாயிருக்க முடியாது.

ஏதோ, ரஜினியும் நம்மூரு நிதியமைச்சர் பிடிஆரும்தான் விமானத்தில் போகிறார்கள் என்றில்லை.

துபாய்க்கும் சவுதிக்கும் ஆடு மேய்க்க, தக்காளி செடிக்கு தண்ணி விட, பத்தாவது மாடியில் இடுப்பில் ஹூக் மாட்டிக் கொண்டு பெய்ண்ட் அடிக்க, இருபதாவது மாடிக்கு கம்பி கட்ட,
நமது கிராமங்களிலில் இருந்து, நூற்றுக்கணக்கானவர்கள் நாளும் விமானத்தில் பறந்தபடி இருக்கிறார்கள்.
ஏர் இந்தியாவை நடத்த முடியாமல் டாடா அதை விற்றாலும்,
வேறு ஒரு இந்தியருக்குதான் விற்க வேண்டும்! என்று தேசாபிமானத்தோடு கண்டிஷன் போட்டிருக்கிறது மோடி அரசு.

ஒரு வேளை நஷ்ட்டப்பட்டு, டாடாவே ஏர்இந்தியாவை விற்றாலும், அதை ரைஸ் மில் வைத்திருக்கும் நம்மூர் ராமசாமியா வாங்கிவிட முடியும்?

அம்பானியோ அதானியோ சன்டிவி கலாநிதியோதான் வாங்க முடியும்.

தனியார்மயத்தைவிடவும்
கொடூரமானது கார்ப்ரேட் மயம்.

என்ன செய்ய? லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற பரபரப்பில், ஏர் இந்தியா டாடாவுக்கு போய்விட்டது.

பாவம் ஏழை இந்தியர்கள்!

ரெண்டு கண்களை வைத்துக்கொண்டு எத்தனை துயரங்களுக்கு அவர்களால் கண்ணீர் விடமுடியும்?

ரெண்டு கைகளை வைத்துக்கொண்டு அவர்களால் எத்தனை
கொடுமைகளுக்கு எதிராக
போராட முடியும்?

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here