“துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரக்கூடாது” என்ற நிலைப்பாடு சரியா?

தூய்மைப் பணியில், திடக்கழிவு மேலாண்மையில்  நவீன எந்திரங்களை பயன்படுத்துகிறோமோ அல்லது உடல் உழைப்பை அதிகமாக சார்ந்து இருக்கிறோமோ என்பது தற்போது முதன்மை பிரச்சனை அல்ல.

2
“துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரக்கூடாது” என்ற நிலைப்பாடு சரியா?
உழைக்கும் வர்க்கமாக துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக நாம் களத்தில் நிற்க வேண்டும். 

சென்னையில் துப்புரவு வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திமுக அரசின் அறிவிப்புக்கு எதிராக ரிப்பன் மாளிகை முன்பு நடந்த போராட்டம் காவல்துறையின் அடக்கு முறையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

நசுக்கப்பட்டுள்ள போராட்டம் குறித்து தமிழக அரசையோ, நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ கண்டித்து பேசும் தலித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினின்  அறிவிப்பை வரவேற்கிறார்கள். துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கையை கண்டிக்கிறார்கள்.

ஆனால், போராட்டக் களத்தில் நின்ற துப்புரவு தொழிலாளர்கள் முதல்வரின் புதிய சலுகைகளை கண்டு மயங்குவதாக இல்லை. ஒரு சில துப்புரவுத் தொழிலாளர்களை வைத்து ஒட்டுமொத்த துப்புரவு பணியாளர்களும் இத்தகைய அறிவிப்பை கொண்டாடுவதைப் போல் நாடகத்தை தான் திமுக அரசால் நடத்த முடிந்துள்ளது. உண்மையில் பட்டியல் இன மக்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் தலைவர்களின் நோக்கம் தான் என்ன என்பதையும் பரிசீலிப்போம்.

ஏன் பணி நிரந்தரம் கூடாதாம்!

பணி நிரந்தரம் கேட்பதன் மூலம் துப்புரவு தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் அதே வேலையில் தொடர்வது உறுதி செய்யப்பட்டு விடும். குப்பை அள்ளும் தொழிலை, அதாவது சமூகத்தில் மதிப்பு குறைவாக பார்க்கப்படும் தொழிலை, காலத்துக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாகும்? எனவேதான், துப்புரவு வேலைகளில் நவீன எந்திரங்களை புகுத்தி படிப்படியாக தொழிலாளர்களை வேறு துறைக்கு மாற்றி விட வேண்டும் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன்.

“தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள அருந்ததியர்களோ ஆதிதிராவிடர்களோ ஒருபோதும் பணி நிரந்தர கோரிக்கையை எழுப்பக் கூடாது” என்கிறார் ஆதித்தமிழர் பேரவையின் அதியமான்.

பட்டியல் இன மக்கள் காலத்துக்கும் கழிவுகளை சுமந்து சாக வேண்டுமா என்ற அக்கறையில் இருந்து முன்வைக்கப்படும் வேண்டுகோளாக “துப்புரவு வேலையில் பணி நிரந்தரம் கேட்காதீர்கள்” என்பதை  எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. தற்போது துப்புரவு தொழில் ஈடுபட்டுள்ள பட்டியல் இன மக்கள் உடனடியாக வேறு ஒரு தொழிலுக்கு தம்மை மாற்றிக் கொள்ளவோ, அப்படி மாற்றிக்கொண்டால் வாழ்க்கையை உத்தரவாதமாக நடத்தக்கூடிய அளவிலான ஊதியத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கவோ வாய்ப்பு உள்ளதா?

சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளை துப்புரவு பணியில் கழித்து விட்டவர்கள், இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு வேறு எந்த துறையில் வேலை தேட முடியும்? புதிதாக ஒரு துறைக்குள் நுழைந்து அவ்வேலையை கற்றுக்கொண்டு, அதில் நல்ல வருவாய் வரும் அளவிற்கு செட்டிலாக எத்தனை காலம் பிடிக்கும்? எத்தனை பேருக்கு இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்த சாத்தியமானதாக இருக்கிறது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது.

படிக்க: சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா? 

பணி நிரந்தரம் எதை சாதிக்கும்?

தற்போது செய்து வரும் துப்புரவு தொழிலில் பணி நிரந்தரம் கிடைத்து, மாத ஊதியமாக 50 ஆயிரத்திற்கும் மேல் உத்தரவாதமாக கிடைக்கும் போது, அவர்களின் பிள்ளைகளை உயர்கல்வி வரை அனுப்பி, வேறு தொழிலுக்குள் நுழைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது சமூக ரீதியில் மரியாதை குறைவாகவும் இழிவாகவும் பார்க்கப்படும் குப்பை அள்ளும் துப்புரவு பணியை தனது பிள்ளைகள் செய்யத் தேவையில்லை என்ற மாற்றத்தை கொண்டு வருவதற்கு அதிகபட்சம் வாய்ப்பு உள்ளது.

உழைக்கும் வர்க்கமாக துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக நாம் களத்தில் நிற்க வேண்டும்.

வர்க்க ரீதியாகவும் பார்ப்பதே சரி!

தூய்மைப் பணியில், திடக்கழிவு மேலாண்மையில்  நவீன எந்திரங்களை பயன்படுத்துகிறோமோ அல்லது உடல் உழைப்பை அதிகமாக சார்ந்து இருக்கிறோமோ என்பது தற்போது முதன்மை பிரச்சனை அல்ல.  இந்த வேலையை காண்ட்ராக்ட் முறைக்கு மாற்றி,  கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டு, அதில் பணிபுரியும் ஊழியர்களை கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளாக மாற்றும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று பட்டியல் இன மக்கள் இந்தப் பணியை கணிசமான எண்ணிக்கையில் செய்வதாக இருக்கலாம். நாளை இந்நிலைமை மாறக்கூடும். எனவே எந்த சாதியினர் செய்கிறார்கள் என்று பார்ப்பதையும் கடந்து, உழைக்கும் வர்க்கமாக துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக நாம் களத்தில் நிற்க வேண்டும்.

படிக்க: துப்புரவுத் தொழிலாளர் போராட்டம்! கிழிந்து தொங்கிய திமுகவின், ’சமூக நீதி!’

துப்புரவு பணி நிரந்தரப் பணியாகவும் அரசு பணியாகவும் மாற்றப்பட்டு விட்டால் அது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். மாதம் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் என்ற நிலைமையை ஏற்றினால் சாதிகளைக் கடந்து இந்த வேலைக்காக பலரும் போட்டி போடுவர். அப்படி ஒரு போட்டி வந்தால், அது காலம் காலமாக தலித் மக்களை இந்த துப்புரவுத் தொழிலில் தள்ளி, அதை சமூக ரீதியாக இழிவானதாகவும் அமுல்படுத்தி வரும் பார்ப்பனியத்தின், ஆதிக்க சாதியினரின்  அயோக்கியத்தனங்களுக்கு மாற்றாக அமையும்.

குறுக்கு வழிகளை அடைப்பது தேவை!

துப்புரவுப் பணி அரசு பணி என்று மாறும் பட்சத்தில் உயர்சாதியினர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினரும் கூட இந்த வேலைக்கு போட்டி போடுவர் பெயரளவிற்கு தான் வேலையில் சேர்ந்து கொண்டு களத்தில் நடைமுறையில் தலித் மக்களை தனது பினாமியாக வைத்து தூய்மை பணியை தொடர வாய்ப்புள்ளது. இத்தகைய முறைகேடுகளுக்கு தலித் மக்கள் ஒத்துழைக்கக் கூடாது, அரசு கண்காணிக்க வேண்டும் என்று நாம் எதிர்காலத்தில் எச்சரிக்க வேண்டியது வரும். தற்போதும் கூட மாநகராட்சியில் வேலை செய்பவரின் பட்டியல் ஒன்றாகவும் களத்தில் குப்பைகளை சேகரிப்பவர்கள் வேறொருவராகவும் இருப்பது பல இடங்களில் நடக்கவே செய்கிறது. நகராட்சி, மாநகராட்சியில் கடைநிலை பணிகளில் நுழைந்து, தனது சாதிய பின்புலத்தை பயன்படுத்தியும், லஞ்சம் தந்தும் படிப்படியாக முன்னேறி நகராட்சி அல்லது மாநகராட்சியில் அதிகாரிகளாக பலரும் முயற்சிக்கின்றனர்.  தமிழகத்தில் பல நகரங்களில் இப்படி பிற்பட்ட வகுப்பினரும் கூட “முன்னேறி விடலாம்” என்ற கண்ணோட்டத்தில்  துப்புரவு வேலைக்குள்  நுழைந்துள்ளனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிராக, உண்மையில் களத்தில் துப்புரவு வேலை செய்யும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்து அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். அரசு கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பட்டியல் இன மக்களை சமூக ரீதியில் மதிப்பு குறைவானவர்களாக நிலைநாட்ட உதவி வரும் தூய்மைத் தொழிலில் இருந்து வெளியேறக் கூறுவது நீண்ட கால நோக்கில் முற்றிலும் சரியானதே. அதே போல் எந்த ஒரு தொழிலிலும்,  வர்க்க ரீதியாக உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், பணி நிரந்தரமும், சமூக மதிப்பும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சரியானதே. தலித் மக்களின் நலனை சிந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு களமாடுவதுதான் சமூக முன்னேற்றத்திற்கு உதவும்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்கக் கூடாது என்ற திருமாவளன் அதியமான் பேச்சுகள் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை பின்னுக்கு இழுப்பதாகும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்கள் தூய்மைப் பணியில் நிரந்தர வேலை செய்தால் உத்தரவாதமான சம்பளம் நிலையான வேலையால் தங்களுடைய பிள்ளைகளை மேல் படிப்பு வரை படிக்க வைத்து உயர் பதவிகளுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதை இந்த இரண்டு தலைவர்களும் பார்க்க மறுக்கிறார்கள் என்று இந்த கட்டுரை சிறப்பாக சுட்டி காட்டியுள்ளது

    பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் அதே வேளையில் ஊதியம் அதிகமாக பெரும்பொழுது அதில் பல சமூகங்களை சேர்ந்த நபர்கள் போட்டி போட்டு அந்த வேலைக்கு வருவார்கள் அப்பொழுது ஒரு குறிப்பிட்ட சமூகம் தூய்மை வேலை செய்வதை காலப்போக்கில் அழிந்து விடும் அனைவருக்கும் ஆன வேலையாக மாறும் அப்படித்தான் ஒரு மார்க்சிய லெனினிய பார்வையில் நாம் பார்க்க வேண்டும் என கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்

    கட்டுரை ஆசிரியர்
    எழில் மாறன்
    அவர்களுக்கு
    நன்றி

  2. துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் கூறக்கூடாது என்பது சரியா ?

    விசிக தலைவர் திருமாவளவன் அதியமான் போன்ற தலைவர்கள் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கூறக்கூடாது என்று பேசி உள்ளார்கள் அவர்கள் நோக்கம் என்ன பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்கள் தூய்மை பணியில் நிரந்தரமாக இருக்கக் கூடாது அடுத்த அடுத்த வேலைகளில் செல்ல வேண்டும் என எந்த விதமான மேற்கொள்ளும் காட்டாமல் பொதுவாக அறிவிப்பு செய்கிறார்கள் இந்த அறிவிப்பு என்பது அந்த மக்களுடைய வாழ்க்கையை மேலும் பின்னுக்கு தள்ளப்படும்

    ஒரு பாட்டாளி வாழ்க்கை தலைமையின் கீழ் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் இந்த சம்பவத்தை எப்படி பார்க்க வேண்டும் தலித் பிற்படுத்தப்பட்ட அருந்ததிய மக்கள் பணி நிரந்தரம் கூறும் பொழுது பணி நிரந்தரம் நிலையான சம்பளம் உத்தரவாதமான வேலை தங்களுடைய வாழ்க்கைத் தரனை மேம்படுத்தி தங்களுடைய பிள்ளைகளை பாடப் படிப்பு மேல்படிப்பு வரை படிக்க வைத்து உயர்ந்த பதவிகளில் அமர்த்த முடியும் அவர்கள் பெற்றோர்கள் செய்யும் தூய்மை பணி என்பது ஒழிந்து விடும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை திருமாவளவன் அதியமான் போன்ற தலைவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதே கம்யூனிஸ்டுகள் பார்வை ஆகும்

    கட்டுரை ஆசிரியர்
    தோழர் இளமாறன்
    அவர்களுக்கு
    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here