கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனையின் முதன்மை வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த ஊடக கூடாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அல் ஜஸீரா நிருபர் முகமது குரைகெ (33), அனஸ் அல்-ஷரீப் (28) காமிரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் சாஹர் (25), முகமது நுஃபால் (29) மற்றும் மோமென் அலிவா (23) ஆகியோரும் அடங்குவர். இஸ்ரேல் அரசின் இந்த பாசிச தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தக் கொலைகளை போர் குற்றமாகக் கண்டித்து, அல்-ஷரீப்பை “துணிவும், அபார அர்ப்பணிப்பும் கொண்டநிருபர்” எனப் பாராட்டியுள்ளது. அவர் 2024-ம் ஆண்டு மனித உரிமை பாதுகாவலர் விருதைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது காசா போரின்போது அல் ஜஸீரா செய்தியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அல்ல. ஞாயிற்றுக்கிழமை இரவின் தாக்குதலுக்கு முன்பே குறைந்தது ஐந்து அல் ஜஸீரா செய்தியாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
அல் ஜஸீரா, தனது நிருபர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை “ஊடகச் சுதந்திரத்தின் மீதான இன்னொரு வெளிப்படையான, திட்டமிட்ட தாக்குதல்” என கண்டித்துள்ளது. இஸ்ரேல் சர்வதேச ஊடகங்களை நுழையத் தடை செய்த நிலையில், அல்-ஷரீப் மற்றும் அவரது சகாக்கள், காசா உள்ளிருந்து செய்தி தெரிவித்து வந்த கடைசி குரல் என அல் ஜஸீரா குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா.வில் உள்ள பாலஸ்தீனப் பிரதிநிதிகள், அல்-ஷரீப் மற்றும் குரைகெ ஆகியோரை “திட்டமிட்டு கொலை செய்ததாக” இஸ்ரேலை குற்றம்சாட்டினர். அவர்கள் “இஸ்ரேலின் இன அழிப்பு மற்றும் பட்டினி கொடுமையை முறையாக வெளிப்படுத்தி, ஆவணப்படுத்தி வந்தவர்கள்” என்றும் தெரிவித்தனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டெரஸ் அவர்களின் செய்தி தொடர்பாளர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள் எங்கு இருந்தாலும் பயமின்றி பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் இத்தகைய கண்டனங்கள் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையைத் தடுப்பதாக இல்லை.
பத்திரிக்கையாளர்களை குறிவைப்பது – போர்க்குற்றம்!
பிரவுன் பல்கலைக்கழகத்தின் Costs of War அறிக்கை, 2023 அக்டோபர் 7 முதல் தொடங்கிய போரில் காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை, அமெரிக்க உள்நாட்டுப் போர், முதலாமும் இரண்டாமும் உலகப் போர்கள், கொரியப் போர், வியட்நாம் போர், முன்னாள் யுகோஸ்லாவியா போர்கள், மற்றும் 9/11க்கு பிந்தைய ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
Reporters Without Borders (RSF) அமைப்பின் படி, 2024 பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரும் உயிரிழப்பான ஆண்டாகும் — 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாண்டு தொடக்கம் முதல், 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
படிக்க: உத்திரப் பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பத்திரிக்கையாளர்கள்!
ஷிரீன்.ps (அல் ஜஸீரா செய்தியாளர் ஷிரீன் அபூ அக்லே பெயரில் இயங்கும் கண்காணிப்பு தளம்) கணக்கெடுப்பின் படி, 22 மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் சுமார் 270 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் — அதாவது மாதத்துக்கு சராசரியாக 13 பேர்.
இந்தக் கணக்கு மிகவும் கடுமையானது ஏனெனில், சர்வதேச ஊடகங்களை ஜீயோனிச பாசிச இஸ்ரேல் அரசு காசாவுக்குள் அனுமதிக்காத நிலையில், அங்கு செய்தி தெரிவிக்கும் குரல்கள் வேகமாக கொல்லப்பட்டு வருகின்றன.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான கமிட்டி (CPJ) தெரிவித்ததாவது, 2023 அக்டோபர் 7-ம் தேதி முதல் பத்திரிகையாளர்களின் கொலைகள் மற்றும் கைது நடவடிக்கைகள், போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தாமல் விடும் ஒரு “செய்தி வெற்றிடத்தை” உருவாக்கியுள்ளன.
ஜூன் மாதத்தில், RSF, CPJ மற்றும் பல ஊடக அமைப்புகள் வெளியிட்ட திறந்த கடிதத்தில், காசாவிற்கு வெளியே உள்ள நிருபர்கள் நம்பிக்கையுடன் சார்ந்திருந்த பல பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளனர், மேலும் பலர் “தங்கள் பணி — சாட்சியமளிப்பது — காரணமாக உயிருக்கு ஆபத்தை” எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தனர்.
சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும் பத்திரிகையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் அரசின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
படிக்க: அமெரிக்க பத்திரிக்கையாளரை மிரட்டிய இந்துத்துவ கும்பல்!
அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில், “இஸ்ரேல் பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல், பத்திரிகைத்துறையையே தாக்குகிறது. இன அழிப்பை ஆவணப்படுத்துவதைத் தடுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் பாலஸ்தீன மக்கள் மீது பாசிச இஸ்ரேல் அரசு நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த இனப்படுகொலையை உலகின் முன் நிறுத்தி இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து உருவாக முக்கிய காரணம் உயிரை பணயம் வைத்து காசாவில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களே.
பாசிச இஸ்ரேல் அரசு இந்த மனித உரிமை விரோத நடவடிக்கைகளை வீழ்த்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தமது நாட்டு அரசுகள் இஸ்ரேல் அரசுடனான உறவைக் துண்டித்துக் கொள்ள செய்ய வேண்டும். குறிப்பாக, இந்திய மக்களாகிய நாம் மோடி அரசை இஸ்ரேல் அரசுடனான நட்புறவு, வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தக் கோரிப் போராடுவோம்.
- திருமுருகன்
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/8/11/here-are-the-names-of-the-journalists-israel-killed-in-gaza
இஸ்ரேல் பாசிச ஜியோனிச அரசு காசாவில் நடத்தும் பச்சை படுகொலைகள் உலகில் வேறு எங்கும் நடந்திடாதது.
பாசிச ஜியோனிச அரசுக்கு எதிரா உலகம் முழுவதும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள் அமெரிக்கா ஜியோனிச அரசை ஆதரிக்கிறது.
பத்திரிக்கையாளர்கள் விளையாட்டு வீரர்கள் குழந்தைகள் பொதுமக்கள் எனக்கு அரசை படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவை பாதுகாக்க உலக மக்கள் அந்தந் நாட்டில் அரசுக்கு எதிராக வீதியில இறங்கி போராட்டம் தொடர வேண்டும்.
இஸ்ரேலின் பாசிச வெறி தாக்குதலை நிறுத்த கோரவோ, அல்லது பக்க பலமாக இருப்பதை தவிர்க்கக் கோரவோ மோடியிடம் கோரிக்கை வைக்க முடியாது. ஏனெனில் மோடியின் எஜமானன் அமெரிக்காவின்
ட்ரம்ப்-பை மீறியா வாய் அசைத்திடுவார் மோடி. உக்ரைனுக்கும்-ரஷ்யாவுக்குமான போரை நிறுத்த உலக கட்டப்பஞ்சாயத்து ரவுடி அமெரிக்க டரம்ப் மூக்கை நுழைக்கிறார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த விடயத்தில் மூக்கை நுழைக்கிறார் டரம்ப். அனைத்திலும் அவரது வல்லாதிக்க அரசியல் சித்து விளையாட்டு கும்மாளம் போடுகிறது. ஆனால் பாசிச இஸ்ரேல் அமெரிக்காவின் அடியாளாக மற்றும் ராணுவ தளமாக இருப்பதால் இஸ்ரேலின் இந்த ஈவிறக்கமற்ற கொடுந் தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பது அமெரிக்க ட்ரம்ப்தான் என்பது அப்பட்டமான உண்மை. எனவே இப்படிப்பட்ட உலக விடயங்களில் அமெரிக்காவை வீழ்த்தாமல் கிளை நடவடிக்கைகள் மூலமாக எந்த நாட்டின் பிரச்சனையும் (இஸ்ரேலின் பாலஸ்தீன மீதான தாக்குதல் உட்ப) தீராது தீரவே தீராது.