போலீசு, நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளடக்கிய அரசு கட்டமைப்பின் ஒரு பிரிவானது ஒரு நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்கிறது என்றெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் பீற்றிக்கொண்டது.
சமீபத்தில் உலகில் நீதித்துறையை வைத்து சமூகத்தில் நேர்மையாக நீதி வழங்குகின்ற நாடுகளைப் பற்றி ஆய்வு செய்த ஒரு அமைப்பானது உலகில் எந்தெந்த நாடுகளில் நீதித்துறை பரிபாலனம் ஓரளவுக்கு நியாயமாக உள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசையில் டென்மார்க் முதலிடத்திலும் அடுத்தடுத்து ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் போன்ற நாடுகள் இடத்தைப் பிடிக்கின்றன.
முதலாளித்துவ சமூக அமைப்பு அவர்களே சொல்லிக் கொள்ளக்கூடிய இலக்கண சுத்தப்படி உருவாக்கப்பட்ட பிரான்ஸ் முதல் அதன்பிறகு முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை போராடி முதலாளித்துவமாக முன்னேறிய இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், பின்பு உருவான அமெரிக்கா மேல்நிலை வல்லரசு ஆகியவற்றில் கூட நீதி பரிபாலனம் சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு இல்லை.
முதலாளித்துவம் வளராத, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்பு நிலவிய, நிலவுகின்ற காலத்தில் ஊர் தலைவர்கள் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதி பின்னணி கொண்ட ஆதிக்க சக்திகள் நாட்டாமைகளாக ஊர் பஞ்சாயத்தை நடத்தி வந்தது தான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள நிலைமை.
பிரிட்டன் காலனி ஆதிக்கம் துவங்கிய காலம் முதல் சொல்லிக் கொள்ளப்பட்ட சுதந்திரம் கொடுக்கப்பட்டது வரை இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் போராடுகின்ற உரிமைகள் அனைத்தும் காலனி ஆதிக்க ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது.
1947-இல் அதிகார மாற்றம் வந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் வழிகாட்டுதலில் இயங்குகின்ற இந்திய நீதித்துறை ஆகியவையும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் எப்போதாவது ஆளும் வர்க்கத்தின் மிக மோசமான நபர்களை தண்டிக்கின்ற நீதித்துறையாகவே செயல்பட்டு வந்தது.
இந்தியாவில் நீதித்துறை எந்த அளவிற்கு நீதிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி 2015 ஆம் ஆண்டிலேயே நீதித்துறை உள்ளிட்ட அரசு கட்டமைப்புகள் தோல்வியை தழுவி விட்டது என்பது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன நீதி பரிபாலான முறை ஆகியவற்றுக்கு எதிராக, எதிர்மறை சக்தியாக மாறிவிட்டனர் என்று ஆய்வு செய்து முன் வைத்திருந்தோம்.
அரசு கட்டமைப்பு மட்டுமல்ல. பிற கட்டமைப்புகளும் மக்களுக்கு எதிராக மாறி ஒட்டுமொத்த கட்டுமானங்கள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டது. இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்துகின்ற வகையில் கட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டது என்பதை முன்வைத்து பிரச்சாரமாக மேற்கொண்டோம்.
இந்த சமகாலத்தில் 2014 முதல் இந்திய ஒன்றியத்தை ஆள்வதற்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்புகள் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அதாவது பார்ப்பன இந்திய தேசியத்தை, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குகின்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகளை நியமிக்கத் துவங்கினர்.
படிக்க:
♦ இந்திய நீதித்துறையின் அவலமும் – பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்!
♦ நீதித்துறைக்கு நெருக்கடி தருவது யார்?
நீதிபதிகள் நியமனத்தை கையாண்டு வந்த கொலிஜியம் என்ற அமைப்பையே செல்லாக்காசாக்கி ஆர்எஸ்எஸ் பாசிச பயங்கரவாதிகளை உருவாக்குகின்ற தலைமையகமான நாக்பூர் வழிகாட்டுதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கீழமை நீதிபதிகள் வரை நியமனம் பெற்றனர் என்பது நீதித்துறையில் மிகப்பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
நாட்டின் மிக முக்கியமான வழக்குகள் என்று கருதப்படுகின்ற இட ஒதுக்கீடு முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு, குஜராத் இனப்படுகொலை, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள், கோவிந்த் பன்சாரே முதல் கௌரி லங்கேஷ் வரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் போன்ற அனைத்திலும் குற்றம் சுமத்தப்பட்ட சங்பரிவார அமைப்புகளை சார்ந்தவர்கள் எந்த விதமான தண்டனையும் இன்றி விடுதலை பெற்றனர்.
இத்தகைய சூழலில் தான் உலகில் நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆய்வு செய்த அமைப்பானது இந்தியா 86வது இடத்தில் உள்ளதாக தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“WJP சட்ட விதி குறியீட்டில் வெறும் 0.49 மதிப்பெண்களுடன், நீதித்துறை அமைப்பு அல்லது சட்ட அமைப்பின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 86 வது இடத்தில் உள்ளது. வழக்குகள் அதிக அளவில் தேங்குதல், நீதிபதிகளின் கடுமையான பற்றாக்குறை மற்றும் நடைமுறை தாமதங்கள் காரணமாக இந்திய நீதித்துறை குறிப்பிடத்தக்க சிக்கல்களைக் கொண்டுள்ளது, இது மிகவும் மெதுவாக தீர்ப்பை வழங்குகிறது. ஊழல், வெளிப்படைத்தன்மை இல்லாமை, போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் அதிக சதவீத விசாரணைக் கைதிகள், இது அதன் செயல்திறனையும் செயல்பாட்டையும் முடக்குகிறது” என்கிறது அந்த அறிக்கை.
இது ஓரளவிற்கு உண்மைதான் என்ற போதிலும் நீதிபதிகள் மனசாட்சிக்கு உட்பட்டும், சட்டத்தின்படியும் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்பதெல்லாம் மலையேறிப் போய் விட்டது. ஆட்களை முன்வைத்து தீர்ப்பு வழங்குவது; சாதி ஆதிக்க சக்திகள், பார்ப்பன பாசிச சக்திகள், கார்ப்பரேட் முதலாளிகள் போன்றவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது, தீர்ப்பை வழங்குகின்ற நாட்களுக்கு முன்னேயே நீதிபதிகள் எழுதுகின்ற தீர்ப்பு குற்றவாளிகள் அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைகளுக்கு கிடைப்பது என்ற அளவிற்கு நீதித்துறை அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது.
இத்தகைய நிலைமையில் இந்திய நீதித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. நமக்குள்ள ஒரே சந்தேகம் என்னவென்றால் எப்படி 86வது இடத்தை பிடித்தது என்பதுதான். உலகில் 190 நாடுகளுக்கும் மேல் உள்ள சூழலில் பல்வேறு தரவரிசை பட்டியலில் நூறாம் இடத்திற்கு மேல் சென்று சாதனை படைத்து வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் பாசிச பயங்கரவாத ஆட்சியானது நீதித்துறையில் மட்டும் எப்படி 100 எண்ணிக்கைக்குள் சென்றது என்பதை தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆய்வு செய்வது மட்டுமல்ல. இந்த பாசிச பயங்கரவாத ஆட்சி நீடிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சொந்த அனுபவத்தின் மூலம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் யோக்கியதை மற்றும் இலட்சணங்களை புரிய வைக்க வேண்டும்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற மகத்தான போராட்டத்தில் பல்வேறு வர்க்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலமே உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
◾மருது பாண்டியன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






