மிழகத்தில் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை முன்னேறிய மாவட்டங்கள் என்று கருதப்படுகின்ற கொங்கு மண்டலங்களில் சமீப காலமாக நடத்து வருகின்ற சாதி ஆணவப் படுகொலைகள், வரதட்சணைக் கொடுமைகளுக்காக தற்கொலை செய்து கொள்கின்ற இளம் வயதுப் பெண்கள், பெற்ற குழந்தைகளைக் கொடூரமாக கொலை செய்கின்ற பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இத்தகைய போக்குகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தென்னிந்தியாவின் பெற்ற குழந்தைகளை ஏதாவது ஒரு காரணத்திற்காக படுகொலை செய்கின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று சமீபத்திய குழந்தைகள் நலன் சார்ந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெற்றோர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி, கடன் தொல்லை, விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகளைப் பட்டினி போடுவது போன்ற காரணங்களை சகித்துக் கொள்ள முடியாமல் 47 சதவீதம் குழந்தைகள் பெற்றோர்களாலேயே கொல்லப் படுகின்றனர்.

இரண்டாம் பட்சமாக பெற்றோர்களின் தகாத உறவு விவகாரத்தில் இடையூறாக இருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக 13 சதவீதம் குழந்தைகளும், தாய்-தந்தையர் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள், சிக்கல்கள் போன்றவற்றின் காரணமாக 18 சதவீதம் குழந்தைகளும், எதிர்பாராத தாக்குதல்கள் மற்றும் கொடூரமான நோய்களின் மூலமா ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் 17 சதவீத குழந்தைகளும், இன்ன பிற காரணங்களுக்காக 5 சதவீதக் குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர் என்ற ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியூட்டியுள்ளன.

இத்தகைய படுகொலைகளுக்கு இணையாகவே தனது சாதிக்கு வெளியில் காதலிக்கின்ற தனது மகளை, அதுவரை தனது உயிருக்கு உயிராக போற்றி வளர்த்து வருகின்ற மகளை, பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரப்படும் அகமண முறை என்ற வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்குகின்ற, சாதி மறுப்புத் திருமணங்களை முன்வைக்கின்ற மகளை ஆணவப் படுகொலை செய்கிறார்கள்.

சாதி வெறியுடன் நடத்தப்படும் இத்தகைய கொலைகளுக்கு ’ஆணவப் படுகொலை’ என்று பெயர் வைப்பதை விட, ’சாதி வெறி படுகொலைகள்’ என்று முன் வைப்பது அதன் கோர முகத்தை பளிச்சென காட்டுவதற்கு உதவலாம்.

ஒரு குறுகிய வட்டத்திற்குள் உழன்று கொண்டு குலம், கோத்திரம் பார்ப்பது; ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளேயே உள்ள உட்பிரிவுகளை தேடிக் கண்டுபிடித்து, அதற்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது என்ற பழம் பஞ்சாங்க வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்குகின்ற சாதி மறுப்புத் திருமணங்கள் பெற்றோர்களின் ஆத்திரத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

குழந்தைகள் படுகொலை பற்றிய ஆய்வு செய்த ஆய்வறிக்கையானது, ”பெற்றோர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முக்கிய காரணமாக அவர்கள் கருதுகின்ற விடயம் அவர்களின் குழந்தைகள்தான் என்றும், பெற்றோர்கள் சந்திக்கின்ற சிக்கல்களுக்கு முக்கியமான காரணம் தங்களது குழந்தைகள் என்ற மனநிலை குழந்தைகளின் மீதான ஆத்திரமாகவும், வெறியாகவும் மாறுகிறது” என்று முன் வைக்கிறது.

திரைப்படங்களில் காட்டுவதைப் போல பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு ”கண்ணான கண்ணே” என்று சிறுவயதில் பாடுகின்ற பெற்றோர்கள், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அதாவது பருவமடைந்த பிறகு தனக்கு பொருத்தமான ஒரு இணையை தேர்வு செய்து கொள்ள முடிவெடுத்தால் அந்தப் பெண்ணைப் பெற்றோருக்கு எதிரான வில்லியைப் போல சித்தரித்துக் கொள்கிறார்கள்.

தனது சாதிக் கௌரவம் மற்றும் போலியான சமூக அந்தஸ்து ஆகியவற்றை முன்னிறுத்தி தான் பாலூட்டி, சீராட்டி வளர்த்தப் பெண் குழந்தையை படுகொலை செய்வது என்பது அதிகரித்துள்ளது.

நவீனத்துவ உறவுகளை கொஞ்சமும் கண்டறியாத கிராமங்களில் இருந்த போது இத்தகைய சிக்கல்கள் அவனுக்கு பெரிதாக உருவெடுக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய பெண் குழந்தைகளை, ‘ஓடுகாலிகள்’ என்று பெயர் சூட்டி தூற்றுவதோடு அவர்களின் கடமை முடிந்து போனதாக இருந்தது.

ஆனால் அறிவியல் வளர்ச்சி மனிதருக்கு இடையே உள்ள தொடர்புகளை அதிகரிக்கவே அது சாதகமான பலன்களை உருவாக்குவதற்கு இணையாகவே, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் குடும்பத்திற்கு எதிராக கலகம் செய்பவர்களைப் போல சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகிறது.

இதனால் ஒரு குக் கிராமத்தில் பிரபலமாக பேசப்படாத சாதி மறுப்பு திருமணங்கள், சாதி வெறியர்களாலும் சாதி வெறி அமைப்புகளும் பெரிதாக மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் பல்வேறு வகைகளில் பல்வேறு கோணங்களில் பகிரப்படுகிறது.

இதனால் தனது குடும்பத்தின் கவுரவம் ஒழிந்து போனதாக பெற்றோர்கள் கருதுவதும், அவனை சார்ந்த சாதி அமைப்புகள் அதனை பெரிதுபடுத்தி சாதிக்கே மிகப்பெரிய களங்கம் வந்துவிட்டதாக கருத்துருவாக்கம் செய்வதும் இணைந்து படுகொலை நிகழ்த்துகின்ற அளவிற்கு பெற்ற தாய், தந்தையரையே Explanation மாற்றுகிறது.

படிக்க: சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  

இவ்வாறு படுகொலைகளை நிகழ்த்தியவர்களை கூர்மையாக ஆய்வு செய்யும் போது அவர்கள் இது போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்ற மூளை நரம்பியல் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் சமீபத்திய செய்தியாக வெளியாகியுள்ளது.

தகவல் தொடர்புக்கு என்று கொண்டுவரப்பட்ட அலைபேசி இன்று மனிதர்களின் உறவுகளுக்கு மிகப்பெரிய விரோதியாக மாறியுள்ளது. இந்த அலைபேசியை தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களின் மூளை பாதிப்புக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு 6 முதல் 7 கோடி பேர் மூளை சார்ந்த பாதிப்புகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இத்தகைய கொடுமைகளுக்கும் முக்கியமான காரணமாக, உளவியல் நிபுணர்களும் மூளை பற்றிய விஞ்ஞானத்தை ஆய்வு செய்கின்ற நிபுணர்களும் முன்வைக்கின்ற காரணங்கள் பரிசீலிக்கத்தக்கது. கூட்டு வாழ்க்கையில் வாழ்ந்து வரும் மனித குலம் படிப்படியாக, ”தான்-தனது” என்ற தனிமனித வாழ்க்கை முறையை அதிகமாக நேசிப்பதும், சமூகத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு தான் மட்டும் தனிமனிதனாக வாழ்கின்ற, அதிலேயே ஆறுதல் அடைகின்ற போக்குகள் அதிகரித்திருப்பதும் தான் காரணம்.

படிக்க: ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!

தனிமனித சிந்தனைப் போக்குகள், தனிமனிதக் கலாச்சாரம், தனிமனித வாழ்க்கையை உயர்த்திப் பிடிப்பது, ”தான்-தனது” என்ற பண்பாடு போன்றவை அனைத்தும் இணைந்து தனது நெருக்கடிகளை பிறரிடம் விவாதிப்பது, அதற்கு பொருத்தமாக தீர்வு காண்பது என்ற கூட்டுத்துவ சிந்தனை முறைக்கு படிப்படியாக சமாதி கட்டப்பட்டு வருகிறது.

பாசிச பயங்கரவாதம் பற்றிப் படருவததற்கு பொருத்தமான உளவியல் அடிப்படை இங்கு தான் உருவாகிறது. தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் சமூகத்தை வழிநடத்துவதற்கு சர்வாதிகாரிகளை தேர்வு செய்கின்றனர். அவர்கள் தான் பொது அமைதியை உருவாக்குவார்கள் என்ற கற்பிதங்களுக்கு பலியாகி மீண்டும், மீண்டும் ஜனநாயக விரோத, பாசிச சர்வாதிகாரத்தை அமல்படுத்துகின்ற சர்வாதிகாரிகளை யுக புருஷர்களாகவும், கதாநாயகர்களாகவும் கருதிக் கொண்டு மீண்டும், மீண்டும் அவர்கள் பின்னால் செல்கின்றனர்.

பெற்றோர்கள் குழந்தைகளை கழுத்தறுத்துக் கொல்வது; விஷம் கொடுத்துக் கொல்வது; கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசுவது அல்லது ரயில் முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கும், பாசிசத்தை ஆதரிக்கின்ற கூட்டம் அதிகரித்துக் கொண்டுச் செல்வதற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை தான் நாம் ஒரு அபாயமணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு எதிராக மனித குலத்தை நேசிக்கின்ற மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலும் உண்மையான பாச உறவுகள், அன்பு, காதல், நேசம் போன்றவற்றை வளர்க்கின்ற புதிய வகையான சமூக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியதை மீண்டும், மீண்டும் முன்வைத்து போராட வேண்டியுள்ளது.

பிறரிடம் எதுவும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்கு சரியானதை செய்ய வேண்டும் என்ற சிந்தனையை கற்றுக் கொடுக்கின்ற கம்யூனிச சித்தாந்தமும், சோசலிச சமூக அமைப்பும் தான் இதற்கான தீர்வு என்பதை மண்டையில் உரைக்கின்ற வகையில் மீண்டும், மீண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும்.

சாதி மற்றும் சாதி தீண்டாமை கொடுமைகளை கட்டிக் காக்கின்ற வாழ்வியல் என்பது பொருளாதார உற்பத்தி முறைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பொருளியல் உற்பத்தி முறையை மாற்றி புதியதொரு உற்பத்தி முறையை உருவாக்குவது தான் நிரந்தரமான தீர்வு என்றாலும் அதற்கு இடையில் சாதி ஆணவப் படுகொலைகள், சாதி வெறி படுகொலைகளை கட்டுப்படுத்துகின்ற வகையிலான சில சீர்திருத்தங்கள்; ஆணவக் கொலைகள் தடுப்பு என்ற முகாந்திரத்தில் தேவை என்பது தற்போதைய காலகட்டத்தில் அவசியமாக மாறியுள்ளது.

  • கணேசன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here