மதுரை மாவட்டம், ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்ற இந்து தமிழர் கட்சி (HINDU TAMILAR KATCHI) அமைப்பின் தலைவர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள குதிரை சுனை என்ற இடத்தில் தன்னை தனித்த முறையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனுச் செய்து இருந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவரது கோரிக்கையை ஏற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைத் தூணில் தீபம் ஏற்ற (அனைத்து அரசியல் சட்ட வரம்புகளையும் தூக்கிக் கடாசி எறிந்து விட்டு) அனுமதித்து கடந்த 2025 டிசம்பர் 1 அன்று அநியாயமான தீர்ப்பு வழங்கியதை அனைவரும் அறிவோம்.
அவ்வாறு தீபம் ஏற்றுவதற்கு மாநகர் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனைவரும் தீபம் ஏற்றும் ராம.ரவிக்குமாருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ராம.ரவிக்குமார் கோரியதோ திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள குதிரை சுனை அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான். அதுவே தவறுதான். ஆனால் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனோ எவரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் சில பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மலை உச்சியை நேரடியாகபார்வை இடுவதான தோரனையை உருவாக்கிக் கொண்டு ராம.ரவிக்குமாருக்கு தீபம் ஏற்ற அனுமதித்தார். ஆனால் மனுதாரர் கோரிக்கைக்குப் புறம்பாக நீதிபதி தேர்வு செய்த இடமோ சிக்கந்தர் தர்காவிற்குச் சொந்தமான எல்லைத் தூணில் (இவராக தீபத்தூண் என்று பாவித்துக்கொண்டு) தீபம் ஏற்ற அனுமதித்துத் தீர்ப்புரை வழங்கினார். அதுமட்டுமா? அந்த எல்லைத் தூணுக்குச் செல்ல இஸ்லாமியர்களின் தர்காவிற்குச் சொந்தமான மலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளைப் பயன்படுத்துமாறு கொழுப்பெடுத்தத் தீர்ப்பை வழங்குகிறார் ஜி.ஆர். சுவாமிநாதன். இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?
இத்தத் தீர்ப்பையொட்டி தமிழ்நாட்டை வடநாட்டைப் போல் ஆக்குவதற்கான – குறிப்பாக பாபர் மசூதியை இடித்து ராமர் கோவிலை கட்டிய சதித் திட்டம் போல, தீபம் ஏற்றுவது என்ற பெயரில் சிக்கந்தர் தர்காவை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு(RSS அஜென்டாபடி) முன் முயற்சி எனவும், தமிழ்நாட்டின் மத நல்லிணக்க ஒற்றுமையைச் சிதைக்கும் தீய எண்ணம் கொண்டது எனவும், தமிழ்நாட்டில் ஜனநாயக இயக்கங்கள், வழக்கறிஞர்கள் அமைப்பினர் (Bar Associations) அனைவரும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகமெங்கும் நடந்தன. இதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை. இவை அனைத்தையும் நாம் மட்டுமல்ல; தமிழ்நாடே அறியும். இந்தியாவும் அறியும். உலகமும் அறியும்.
உச்ச நீதிமன்றத்தின் அநியாயமான நடவடிக்கைகள்!?
ஜி. ஆர். சுவாமிநாதனின் சட்டத்திற்குப் புறம்பான தீர்ப்பினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீர்குலையும், மத நல்லிணக்க உறவுகள் சிதைந்து சுக்கு நூறாகும் என்பதனை உள்வாங்கிய தமிழ்நாடு அரசு ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவை அமல்படுத்த மறுத்து 144 தடை உத்தரவை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரைப் பகுதிகளில் பிறப்பித்தது. மற்றைய தொடர் விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை நாம் கட்டுரைகள் வழியாகவும், வீடியோ உரைகள் வழியாகவும் பரப்புரை செய்தவை தான்.
தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மற்றும் போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஜி எஸ் மணி என்பவர் ஏற்கனவே தொடர்ந்திருந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜனவரி 28 அன்று சாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு, போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக யூடியூபர்கள் நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும், அல்லது தமிழக அரசும் எடுப்பதில்லை”- என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது ஏற்கக் கூடியது இல்லை. அதுபோன்று செயல்படுவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது? நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அவதூறு கருத்துக்கள் பரப்பியவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இங்கேதான் நமக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது. அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக – ‘சனாதன தர்மத்தின்’ அடிப்படையில் தொடர்ச்சியாகத் தீர்ப்பளிக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு மதவெறி கண்ணோட்டத்துடனேயே திருப்பரங்குன்றம் விவாகரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக வெட்ட வெளிச்சமாகத் தீர்ப்பளித்துள்ளார். (தனக்கு அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில்) அவருக்கு ஆதரவு நிலை எடுத்து ஜி ஆர் சுவாமிநாதனுக்கு பக்க பலமாக நின்று உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு அரசிடம் கேள்விக்கணைகள்தொடுத்திருப்பது என்பது பார்ப்பனீயப் பாசம் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும்?
உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் (அரசியல் சட்டம் உருவாக்கத்தின் பிதாமகன் அண்ணல் அம்பேத்கர் பெயரன்) மீது அவரது பணிக்காலத்திலேயே – உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளேயே வைத்து ராகேஷ் குமார் என்ற பார்ப்பன வழக்கறிஞன் (ஒரு நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத – மூடத்தனம் சார்ந்த பிரச்சனைக்காகத்) தான் அணிந்திருந்த ஷூவை (செருப்பைத்) தூக்கி வீசினான்.
காவல்துறை அவனை கைது செய்வது போன்று பாவனை காண்பித்து விட்டு ஒரு மணி நேரத்திலேயே விடுதலை செய்தது. வெளியில் வந்த அந்த பொறுக்கி வழக்கறிஞன் ராகேஷ் குமார், ‘இந்து மதத்தை புண்படுத்துபவர்கள் எவனாக இருந்தாலும் விடமாட்டேன்; எனது இச்செய்கைக்காக மன்னிப்பு கோர மாட்டேன்’ என்று ‘வீர வசனம்’ பேசினான்.
இது குறித்து ஒன்றிய அரசோ, குறிப்பாக ஜனாதிபதி, மோடி – அமித்ஷா கும்பலோ, RSS சங்பரிவார் கூட்டமோ, காவல்துறையோ, ராணுவமோ, உச்ச நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரிகளோ, இன்ன பிற எண்ணற்ற ஏவல் படைகளோ… அரசியல் அமைப்பு சட்டத்தின் உச்சபட்ச பாதுகாவலனான பி.ஆர் கவாய்மீது இத்தகைய இழிந்த தாக்குதலை நடத்தியமைக்காகவாய் திறக்கவில்லை. எந்த ஒரு நடவடிக்கைகளையும் குற்றவாளி மீது மேற்கொள்ளவில்லை.ஒரு சிலர் மனதிற்குள் மகிழ்ச்சியில் பொங்கியபடி உதட்டளவில் ‘அப்படி நடந்திருக்கக்கூடாது தான்’ எனக் கடந்து சென்றனர்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களே அதனைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்று விட்டார். அது அவரது அளவுக்கு மீறிய பெருந்தன்மையைக் காட்டலாம்.ஆனால் இந்நாட்டில் உண்மையில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு இருக்க வேண்டும். உச்சபட்ச தண்டனையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு நடக்க வில்லையே ஏன்? ஏனென்றால் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? இதுதான் இந்தியாவின் விதந்தோதப்படும் ‘ஜனநாயகத்தின் மாண்புகள்!’
சரி. இப்பிரச்சனையை உச்ச நீதிமன்றம் எவ்வாறு கையாண்டது? ஷூவை வீசிய ராகேஷ்குமார் என்ற பொறுக்கி உச்ச நீதிபதி மன்ற தலைமை நீதிபதி கவாய் அருகில் சென்ற தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் காதருகில் சென்று ‘நான் இந்து மதத்தை இழிவு படுத்திய கவாய் மீதுதான் ஷூவை வீசினேன்;தங்களை நோக்கி அல்ல; தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்’என ஓதி இருக்கின்றானே, அவரும் திருவாய் மலர்ந்திருக்கிறாரே, இதற்குப் பொருள் என்ன?
மேலும் படிக்க:
♦ நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதம் எதற்கு? நீதிமன்றத்தின் மாண்பை குலைப்பது யார்?
♦ உச்ச நீதிமன்றம்: ராகேஷ் கிஷோருக்கு சரியான செருப்படி! பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!
அதன் பிறகு சில வழக்கறிஞர்கள் இதனை வழக்காக இதே இன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்திடம் (அன்றைய சாதாரண நீதிபதி தான்) வழக்காகக் கொண்டு சென்று குற்றவாளி மீது உடனடி நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தினர். அப்போது சூரியகாந்த் என்ன சொன்னார்? ‘ஜஸ்டிஸ் கவாய் அவர்களே இப் பிரச்சனையை கடந்து சென்று விட்டார்; நீங்கள் இதனை மேலும் பெரிது படுத்த வேண்டாம்; இத்துடன் இதனை விட்டு விடலாம்; எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடவாதிருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்; அவ்வாறு நடந்தால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்…’ எனக் கடந்து சென்றாரே, அதுவும் கூட ஒரு வகை பார்ப்பன சனாதன வழிமுறை யன்றி வேறு என்னவாக இருந்திருக்க முடியும்? ஆக, இப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர்.கவாய் அவர்களை கோரமாக – கேவலமாக உச்ச நீதிமன்றத்தின் உள்ளேயே நடத்தியமைக்காக ‘நீதிமான்’களுக்கு பெரும் கோபம் வரவில்லையே, ஏன்? தானாக முன்வந்து (suo moto) வழக்குத் தொடுக்க வில்லையே, ஏன்?
இன்றோ அனைத்து வகைகளிலும் பார்ப்பன சனாதனத்தை உயர்த்திப் பிடித்து வெளியில் தம்பட்டம் அடித்துக் கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் முரணான தீர்ப்புகளையே தொடர்ந்து வழங்கி வரும், ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் வழக்கறிஞர்கள் தமது சங்கங்களின் சார்பாக போராட்டங்கள் நடத்தினால் மட்டும் இவ்வளவு காரசாரமாக உச்ச நீதிமன்றம் துடிப்பது ஏன்? பார்ப்பன சனாதன பாசமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
அரசியல் சட்டத்திற்குப் புறம்பான ஜி ஆர் சுவாமிநாதனின் தீர்ப்புகள் ஒன்றா? இரண்டா?
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே 1920-கள் மதுரை சப் கோர்ட் நீதிபதி ராமய்யர் துவங்கி, உயர் நீதிமன்றத்திலும் ராமய்யர் தீர்ப்பு உறுதியாகி, அதன் பின்பு அன்றைய உச்ச நீதிமன்றமாக தெரிந்த லண்டன் பிரிவிக் கவுன்சிலில் வழக்கு மேல்முறையீட்டிற்குச் சென்று அங்கேயும் 1923- களிலேயே மதுரை சப் கோர்ட் நீதிபதி ராமய்யர் தீர்ப்பையே உறுதிப்படுத்தியப் பின்னரும், இன்று வரை அந்தக் கலவரக்கார சங்கிக் கும்பல் விடாமல் கிண்டி கிளறிக் கொண்டே இருப்பதை நீதிமான்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் போன்றவர்கள் தொடர்ந்து பார்ப்பன சனாதனத்தின் படி களம் ஆடுவததை தமிழ்நாடு எவ்வளவு காலத்திற்கு தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?
ஜி. ஆர். சுவாமிநாதனின் அரசியல் சட்டத்திற்கு புறம்பான பல தீர்ப்புரைகளை, பேச்சுகளை ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருக்கிறோம். இருப்பினும் உச்ச நீதிமன்றம் தற்போதைய நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஓரிரண்டை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
படிக்க:
♦ ‘ நீதிபதி’ ஜிஆர் சுவாமிநாதன்: சட்டவாதியா? சனாதனவாதியா?♦
♦ திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியின் ஆர்.எஸ்.எஸ். சார்பு
அரியலூர் மாணவி ஒருவரின் இறப்புக்கு “கட்டாய மதமாற்றம்தான் காரணம்” என ஆதாரமே இல்லாமல் பேசியது; பார்ப்பனர் எச்சில் இலையில் சூத்திரர்கள் உருள்வது மரபு- அந்த இழிவான பழக்கம் தொடரலாம் என உத்தரவிட்டது; வயலூர் முருகன் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்தது; பொதுவெளிகளில் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சனாதனத்தை உயர்த்திப் பிடித்துப் பேசுவது என நாம் பார்த்து வருகிறோம்.
இப்படி எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வரும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் செயல்களுக்கு எதிராக – தமிழ்நாட்டில் அமைதியைக் குழைக்கும் செயல்களுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு அரசாங்கமும், அதிகாரிகளும் தீபம் ஏற்றும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சரியே. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டது சரியே.
சட்டத்தின்படி செயல்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவன் ஷூவைத் தூக்கி வீசுகிறான்; அது தவறில்லை. எண்ணற்ற அரசியலமைப்புச் சட்ட விரோத தீர்ப்புக்களை வழங்கிய ஜி .ஆர். சாமிநாதனுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரிகின்றது போலும்.
எனவே உண்மை நிலையை முழுமையாக உணர்ந்து நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்மீது தக்க நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் முன் வர வேண்டும் என்பதே நம் பேரவா. ஆனால் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளோ தந்தை பெரியார் அன்றே சொன்னது போல் ‘ டெல்லியில் உள்ளது உச்ச நீதிமன்றம் அல்ல; அது உச்சிக் குடுமி நீதிமன்றமே’ என்பதை உரத்த குரலில் எழுப்ப வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளியுள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் காவிப் பாசிசத்தை முறியடிக்க வேண்டிய தருணமும் இதுவே.
- எழில்மாறன்






