
2025 நவம்பர் 6, 11 நாட்களில் பீகார் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. பல்வேறு விதமான ஊடகங்களும் சரி; காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகளும் சரி; குறிப்பாக இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி உட்பட பலரும், ‘நிதீஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவி விட்டன; எனவே இம்முறை இந்தியா கூட்டணி எளிதாக வெற்றி பெறுவது உறுதி’ என்று பறைசாற்றிக் கொண்டு தேர்தலில் களம் புகுந்துள்ளனர்.
ஆனால் NDA-வின் மோடி – அமித்ஷா, நிதீஷ் கும்பல் அதீத நம்பிக்கையில் எளிதான வெற்றியை அடையப் போவதாக பறைசாற்றி கொண்டு தங்களது ‘வழக்கமான வேலை’யைத் துவங்கி விட்டனர்.
ராகுல் கண்டுபிடித்த ‘தேர்தல் திருட்டு’ என்னவாயிற்று?
கடந்த ஆகஸ்ட் 7 அன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டார். அதில் பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 250 வாக்குகள் போலியாக சேர்க்கப்பட்டிருந்தன என்பதனை தேர்தல் ஆணைய ஆவணங்களின் ஆதார அடிப்படையில் அம்பலப்படுத்தினார். அதனாலயே அச்சட்ட மன்ற தொகுதிக்கு உள்ள பெங்களூர் மத்திய நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற முடிந்தது என்பதும் அம்பலமானது. அது பெரும் பேசுபொருள் ஆயிற்று. அதன் பிறகு அரியானா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மோசடிகள் குறித்தும் ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். பல்வேறு ஊடகங்கள் கூட அம்பலப்படுத்தினர்.
மேலும் படிக்க:
♦ பீகார் இறுதி வாக்காளர் பட்டியலிலும் தொடரும் முறைகேடுகள்!
கடைசியாக, பீகார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் 65 லட்சம் பேர் ஒரே மாத SIR பணியில் நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையும் அம்பலப்படுத்தினார் ராகுல். உச்சநீதிமன்றம் வரை சென்ற
போதிலும் கூட நீதிபதிகள் சூரியகாந்த் (இவர்தான் பி ஆர் கவாய்க்குப் பின்னர் நவம்பர் இறுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரப் போகிறவர்), ஜாய் மால்யா பாக்கி அமர்வு தேர்தல் ஆணையத்தை தடவிக் கொடுத்தே கருத்துரைகள் வெளியிட்டார்களே தவிர, மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமை எந்தெந்த வகைகளில் எல்லாம் பறிபோகிறது? அரசியல் சட்டப்படி இதற்கு எப்படிப்பட்ட அழுத்தம் திருத்தமான தீர்ப்புரை வழங்க வேண்டும்? என்ற கண்ணோட்டத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின் இணைப்பு அட்டை, ஆதார் கார்டு முதலானவற்றை ஒரு அடையாள ஆவணமாக எடுத்துக்கொள்ள மறுக்கிறது தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்றமோ ஆதார் அட்டையை மட்டுமாவது அடையாளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று பெயருக்கு தேர்தல் ஆணையத்திடம் இறைஞ்சி கேட்டுக் கொண்டுவிட்டு, கூடுதலாக மக்களுக்கு என்ன சொல்கிறது என்றால், ஆதாருடன் 11 வகைப்பட்ட ஆவணங்களில் ஒன்றை காண்பிக்குமாறும் அறிவுறுத்துகிறது. எல்லாமே கேலிக் கூத்தாக இருக்கிறது.
1-8-2025-கணக்கீட்டின்படி பீகார் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடி. எதிர்க்கட்சிகளின் பல்வேறு விதமான நீதிமன்ற போராட்டத்தின் ஊடாக சேர்த்தல் நீக்கலில் சில சலுகைகள் காண்பிப்பதாக தெரிவித்துக் கொண்ட தேர்தல் ஆணையம் இறுதிப்பட்டியல் வெளியிடுகின்ற பொழுது 68 லட்சம் பேரை நீக்கம் செய்திருந்தனர்.பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பொழுது, நீக்கம் செய்யப்பட்டோரின் பட்டியலை தர மறுத்தது தேர்தல் ஆணையம்.
பீகாரில் 28 லட்சம் பேரை புதிதாகச் சேர்த்திருந்தனர். ஒரே முகவரியில் 20 பேருக்கு மேல் இருந்தால் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பெயருக்கு ஆணையிட்டு இருக்கிறது. ஆனால் ஒரே கதவு எண்ணில் 250, 350, 800 என வாக்காளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுங்கூட கண்டு கொள்வதற்கு தேர்தல் ஆணையமோ, பாஜகவோ தயாராக இல்லை.
பாட்னாவில் மட்டும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டோரில் 35 ஆயிரம் பேர் ஊடுருவல்காரர்கள் எனத் தேர்தல் ஆணையமும் அமித்ஷாவும் ஒப்பாரி வைக்கிறார்கள். அந்த ஊடுருவல் காரர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினால் குரங்குகள் மூன்று அவையங்களை யும் மூடிக்கொள்வது போல் மூடிக் கொள்கிறார்கள். தற்போது பீகார் வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வெளிப்படையாக பத்து விதமான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி அடுக்கினார். அவர் குற்றச்சாட்டுக்கள் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் Missed call பதிவு செய்து ஆதரவளித்துள்ளனர்.
இப்படிப்பட்ட கேடுகெட்ட நடைமுறைகளை வைத்துக் கொண்டுதான்
எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய நாட்களில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படியானால் கண்டுபிடிக்கப்பட்ட தேர்தல் திருட்டுக்கள் அனைத்திற்கும் எவ்வித விடையும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை. ஆளும் பாஜக விடமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் எந்த நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவை எதிர்த்து தேர்தலில் களம் காணப் போகிறார்கள் என்பது விந்தையாக உள்ளது.
பாஜக-வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பாஜக!
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக உ.பி. ஆக்ராவில் பிறந்த ஞானேஷ்குமார் (முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா துறையில் பணியாற்றியவர்) பட்டவர்த்தனமாக பாஜகவிற்கு ஆதரவாக கபடி விளையாடுகிறார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை ஒட்டடைகளைப் போல் ஒதுக்குகிறார். மற்ற இரண்டு ஆணையாளர்கள் சுக்பீர் சிங், விவேக் ஜோஷி ஆவர். இவர்கள் அனைவருமே சங்கி வயப்பட்டவர்கள் தான் எனக் கூறப்படுகிறது.
2014 இல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் அனைத்துத் துறைகளையும் காவிமயமாக்குவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது. ECI, ED, IT, CBI, அனைத்தும் ஏற்கனவே காவிமயமாகி விட்டன. உச்ச நீதிமன்றத்திலும் பி.ஆர்.கவாய்
அடுத்த மாதம் ஓய்வு பெற்று விட்டால் ஏறத்தாழ அத்துறையும் சங்கிமயமாகி விடும். IAS, IPS உயர் பதவிகளிலும், ராணுவம் போன்ற கேந்திரமான நிறுவனங்களிலும் காவிக் கூட்டம் கணிசமாகப் புகுந்து விட்டது.
தப்பித்தவறி சில மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்கின்ற பொழுது பாஜகவின் அல்லக்கைகளான ஆளுநர்களைக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தையே முடக்குகிறது.
தேர்தல் திருட்டு தொடர்பாக அனைத்திலும் பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் இணங்கி செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களில் தப்பி தவறி கூட நீதி பெற்று விடக்கூடாது என்ற நோக்கில் மோடி தலைமையிலான பாஜக அரசு அவசர அவசரமாக தேர்தல் நடந்து முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆவணங்களை 45 நாட்களுக்குள் அழித்து விடுவது என சட்டம் இயற்றியது.
எல்லாவற்றிலும் மிகப்பெரிய கொடுமை தேர்தல் ஆணையாளர்கள் மீது அவர்களது பணிக்காலத்தில் குற்றம், குறைகள், தவறுகள் செய்து இருந்தாலும், ஓய்வு பெற்றபின் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது எவரும் வழக்குத் தொடுக்கவோ, தண்டனை அளிக்கவோ முடியாது என சிறிதும் வெட்கமில்லாத சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையாளர்கள் பாஜக ஆதரவு நிலையில் தங்கள் இஷ்டம்போல் ஆட்டம் போடுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம், மேற்கண்டவாறு தேர்தல் திருட்டுக்கள், காவி மயமாக்கல் நடைபெறுகிறது என்றால் மறுபுறம் EVM வாக்கு இயந்திரங்கள் மூலமான தில்லு முல்லு மோசடிகள் வெகுவாக அரங்கேறுகின்றன. அதற்குச் சாட்சியங்கள் தான் எண்ணற்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான கணிசமான வேறுபாடுகள்.
தமிழ்நாடு – மே.வ. – கேரளா
கதியும் அதோ கதிதான்!
பீகாரைத் தொடர்ந்து மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய
மாநிலங்கள் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே பீகாரை பின் தொடர்ந்து அதே பாணியில் SIR எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் நவம்பரில் இப்பணி தொடங்க இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், விசிக. தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர் SIR மோசடி திருத்தப்பட்டியல் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நவம்பரில் SIR பணி துவங்கப்பட்டு 3 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை (2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட SIR யின் போது வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) மூன்று மாதத்தில் பரிசோதிக்க உள்ளது. முன்னாள் திருணாமுல் காங்கிரஸ் அமைச்சரும், அமலாக்கத்துறைக்கு அஞ்சி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவருமான சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் ஒரு கோடியே 25 லட்சம் சட்ட விரோத குடியேறிகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக சரடு விடுகிறார்.
பீகாரில் இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் இவர்கள் பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் வெகுவான எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே சூழ்நிலையை தமிழ்நாடு உட்பட SIR-ஐ எதிர்கொள்ளும் மாநிலங்கள் சந்திக்க இருக்கின்றன.
இதனை எதிர்ப்பவர்கள் அறிக்கை வாயிலாகவும், வாக்குச்சாவடிகளை பாதுகாக்க கட்சித் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் மட்டுமே எதிரிகளை முறியடித்து விட முடியும் எனக் கனவு காண்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ காவிக் கூட்டம் அதற்கெல்லாம் இடம் அளிக்காது.
தங்களின் பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளைச் சந்து பொந்துகளில் நுழைந்தேனும் வெற்றிக் கொடியை நாட்டுவர் என்ற முன்னுதாரணங்கள் நம் கண் முன்னே ஏராளமாக நிரவிக் கிடைக்கின்றன.
ஒருபுறம் நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் அதானி அம்பானி அரவணைப்பு காவிக் கூட்டத்திற்கு நிரம்பி வழிகின்றன. LIC முதல் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. ஊடகங்கள் அனைத்தும் அவர்களது கைப்பாவைகளாகிவிட்டன. ஊது குழலாகி விட்டன. அதிகார வர்க்கம் முழுமையும் தம் கை வசமாக்கிக் கொண்டு விட்டன.
இன்னொரு புறம், எங்கு பார்த்தாலும் சாதி மதவெறி ஊட்டப்பட்டு மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளை வழக்கம்போல சங்கிகள் தொடர்ந்து செய்கின்றனர். ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆதிக்க சாதிவெறி குற்றவாளிகள் சிறைகளில் சொகுசாக வாழ்ந்திடத் தக்க உதவிகளை ஆதிக்க சாதி அதிகாரிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சனாதனத்தை எதிர்க்கும் தலைவராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு பணிபுரிய வந்துவரு விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது புனைவு குற்றம் சுமத்தி, போலியாக மருத்துவமனையில் படுத்துக்கொண்டு சாதி வெறி கண்ணோட்டத்துடன் தொல். திருமாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் போராட்டம் நடத்துகின்றனர்.
அதே நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் உச்சபட்ச பொறுப்பான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது சனாதனப் பார்ப்பன வழக்கறிஞன் ராகேஷ் கிஷோர் என்ற அயோக்கியன் அக்டோபர் 6-ம்நாள் ஷூ-வைக் கழற்றி வீசினான். இதுவரை ஒரு துரும்பு நடவடிக்கை இந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சக்திகளால் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமரோ, உத்துறை அமைச்சரோ உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளோ, காவல்துறையின் உயர் அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இழிவிலும் இழிவானது.
இவற்றுக்காக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், வழக்கறிஞர்களும் மிகப்பிரமாண்டமான- திரட்சியான போராட்டத்தை நடத்திக் காண்பிக்கவும் முன்வரவில்லை.
பாசிச இருள் நாடெங்கும் பரவுகிறது!
பாராளுமன்ற ஜனநாயகம் சவக்குழிக்குள் நுழைகிறது!
இந்தியாவை இந்துராஷ்டிராவாக அறிவிக்கப்படல் வேண்டும்; ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி முறை; ஒற்றை சர்வாதிகார ஆட்சி… என்பனவற்றை முதன்மைப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதன் மூலம் பொருளாதார ரீதியாக தத்தம் இயக்கங்களுக்கு பெரும்பணத்தை சுருட்டிக்கொண்டு செயல்பட துணிந்து விட்டு, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் இந்த பாசிசக் கும்பலை இப்படிப்பட்ட மோசடி பாராளுமன்ற ஜனநாயக தேர்தல் மூலமாக வீழ்த்தவே முடியாது என்பதுதான் அன்றாடம் நமக்கு தென்படும் உண்மைகள் உணர்த்துகின்றன.
எனவே, தொகுப்பாக மேற்கண்டவாறு விளக்கியுள்ள விடயங்களை உள்வாங்கிக் கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் தெருக்களில் இறங்கி உக்கிரமான போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த முடியும்.
எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள் இன்னும் இந்த முறையிலான தேர்தலை நம்பி இருப்பார்களேயானால் அவர்களது கனவு பகல் கனவாகவே முடியும். எனவே, சரியான கண்ணோட்டத்திலான செயற்பாடுகளில் ஒருங்கிணைந்த தன்மையில் ஈடுபாடு கொள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பல்வேறு பிரிவு மக்களையும் இணைத்துக் கொண்டு அனைத்து உழைக்கும் மக்களுக்குமான விடியலை உண்டாக்குவதற்கான தீர்க்கமான போராட்டப் பாதையில் மக்களை அணிதிரட்டி கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்திடவும், மக்கள் ஜனநாயக கூட்டரசை நிறுவிடவும் இயலும்.
- எழில்மாறன்






