விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வகை மாதிரிக்கு இரண்டு பத்திரிகைகளை எடுத்துப் பார்ப்போம். இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி உள்ளது. அதே நேரம் தினமலரோ இப்படத்தை கழுவி ஊற்றாத குறையாக விமர்சித்துள்ளது.
நாம் எப்படி பார்க்க வேண்டும்?
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் புரோக்கராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் தேவையான சகல புரோக்கர் வேலைகளையும் செய்து கமிஷன்களை அள்ளுகிறார்.
அதுவும் எப்படி என்று நினைக்கிறீர்கள்? முதலை வாய்க்குள் போனதை திரும்ப எடுப்பது போல, அதிகாரிகளிடம் லஞ்சம் தந்து ஏமாந்தவர்களின் புகாரை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடமிருந்து பணத்தை மீண்டும் வசூல் செய்கிறார். அதில் 10% கமிஷனாக எடுத்துக் கொள்கிறார் கிட்டுவாக வரும் விஜய் ஆண்டனி.
கிட்டுவின் கதாபாத்திரத்தில் பெண்களை சப்ளை செய்யும் புரோக்கராக விஜய் ஆண்டனி பேசி நடித்திருப்பதை தினமலர் கழுவி ஊற்றியுள்ளது. அதே நேரம் இந்து தமிழ் திசையோ மக்கள் நலனில் அக்கறையோடு கிட்டு பேசும் வசனங்களை மேற்கோள் காட்டி, தான் அடித்த கமிஷன் தொகையில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ததை வியந்து பாராட்டுகிறது. நாம் மேற்கண்ட ஒப்பீடுகளையும் கடந்து படத்தை எடை போட வேண்டும்.
இந்தப் படத்தில் கவனத்திற்குரியதாக இருப்பது வில்லனின் பாத்திரப்படைப்பும், அவனைச் சுற்றி இருப்பவர்களின் பாத்திரப்படைப்பும்தான். குறிப்பாக அபயங்கர் கதாபாத்திரம் தமிழகத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவரான குரு*மூர்த்தியை நினைவுபடுத்துகிறது. அவரின் உறவினராகவும் மத்திய அமைச்சராகவும் வருபவரின் கதாபாத்திரம் கூட நிர்*மலாவை உருவகப்படுத்துகிறது. நடிகர்களின் தேர்வு கூட இந்த சாயலில் பொருந்துவதாக உள்ளது. இதை ஆதங்கத்துடன் அல்லது ஆத்திரத்தை கட்டுப்படுத்தியபடி தினமலர் எழுதியுள்ளது.
சமகால அரசியலில் பாசிச பாஜகவின் சங்கப் பரிவார கூட்டங்களின் வாலை யார் நறுக்குவதாக காட்சிப்படுத்தினாலும், அதை பெரும்பான்மையான மக்கள் ரசிக்கவும் கொண்டாடவும் செய்வர். அந்த வகையில் ஆடிட்டர் குரு*மூர்த்தியாக உருவகப்படுத்தப்பட்டுள்ள அபயங்கரையும் மத்திய அமைச்சர் நிர்*மலா மாமியையும் கதற விடுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சக்தி திருமகன் திரைப்படம் தமிழர்களால் ரசிக்கப்படவும் கொண்டாடப்படவும் தகுதியானது தான். ஆனால் இது மேலோட்டமான மதிப்பீடு மட்டுமே.
கிட்டுவின் கதாபாத்திரம் எதை போதிக்கிறது?
இதை விவாதிப்பதற்கு முன் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள KPY பாலா குறித்த விஷயத்தையும் இணைத்துப் பார்த்தால் பொறுத்தமானதாக இருக்கும். கே.பி.ஒய் பாலா ஏழைகளுக்கு உதவுகிறார், பைக் வாங்கி தருகிறார், ஆட்டோ வாங்கி தருகிறார், ஆம்புலன்ஸ்களை வாங்கி ஓட விடுகிறார், இதையெல்லாம் போட்டோ சூட், கேமரா சூட் நடத்தி இணையதளங்களில் வழியாக சமூக ஊடகங்களின் வழியாக புகழையும் அடைகிறார். இதற்கு நேர் எதிரானது விஜய் ஆண்டனி நடித்துள்ள கிட்டுவின் பாத்திரம்.
கிட்டுவும் ரிஸ்க் எடுத்தும், வியர்வை சிந்தி ‘உழைத்து’ புரோக்கர் தொழில் செய்தும் கோடிகளை சேர்க்கிறார். அதே நேரம் தான் பிறருக்கு உதவுவதை மற்றொருவர் பார்க்காத வண்ணம் இலை மறை காயாகவே செய்கிறார். எங்கும் தன்னை ஒளிவட்டம் போட்டு காட்டிக்கொள்ளவில்லை.
பாலா சொந்த வாழ்க்கையில் பிறருக்கு உதவுவதாக மட்டுமே உள்ளார். ஆனால், அவரைப் பயன்படுத்தி அறக்கட்டளைகள் மீடியாக்கள் பல்வேறு சதித்திட்டங்களுடன் காய்களை நகர்த்துகின்றன. அதற்கு கேபிஒய் பாலா பலியாகிறார். அவர் செய்யும் உதவிகளில் பலவும் போலியானதாக செட்டப்பாக உள்ளது என்றுதான் பலரும் அம்பலப்படுத்தி விமர்சிக்கின்றனர் அல்லது பாலாவை பாலியாடாக வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.
பாலாவின் மீதான விமர்சனங்களின் பின்னே கார்ப்பரேட்டுகளின் சதி; கார்ப்பரேட்டுகள் பண்டிங் செய்யும் அறக்கட்டளைகளின் சதி; மீடியாக்கள் ஒருவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்குவதற்கு பின்னே ஒளிந்துள்ள சதி என்பதாக விரிவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பத்திரிக்கையாளர் உமாபதி உள்ளிட்டவர்கள் பேசும்போது, இளைஞர்களை எளிதில் திசை திருப்பி, உணர்ச்சியை தூண்டி, அரசாங்கங்களை கவிழ்க்கும் கலவரங்களை முன்னெடுப்பதற்கு இத்தகைய திடீர் பிரபலங்கள் துணை போகின்றனர். இதற்கு சமீபத்திய ஜென் Z நேபாள கலவரம் ஓர் உதாரணம் என்கிறார்.
படிக்க: நாங்குநேரி வன்முறைக்கு சினிமா தான் காரணமா?
சக்தி திருமகன் திரைப்படத்தில் தொழிலதிபர்களாகவும் அதே நேரம் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் புரோக்கர்களாகவும் வலம் வரும் சிலரைத்தான் தோலுரிக்கிறது. மிகப்பெரும் கார்ப்பரேட் கூட்டணியை குறித்து கூர்மையாக எதுவுமே சொல்லப்படவில்லை. பாலா விவகாரத்தில் மறைந்துள்ள பின் இருந்து இயக்கும் சக்திகள் போலவே, சக்தி திருமகனில் வில்லன்களாக வருபவர்களை பின் இருந்து இயக்குபவர்கள் அம்பலப்படுத்தப் படவில்லை.
அதிகார வர்க்கத்தையும் கூட அவ்வளவு பிரதான இலக்காக கிளைமாக்ஸ் வரை முன் நிறுத்தவில்லை. ஆனால் புலனாய்வு பிரிவுகள் படத்தின் இறுதி வரை அவரை வேட்டையாட துறத்துகின்றன. திரைப்படம் அரசியல் புரோக்கர்களையும், ஒன்றியத்தின் அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியின் அமைச்சர் மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே இலக்காக்கி தாக்குகிறது.
ராபின் ஹூட் காரியத்துக்கு உதவுவாரா?
கே.பி.ஒய் பாலாவை ஒரு ராபின்ஹூட் என்று புகழ்கிறார் நடிகை ஷகிலா. சக்தி திருமகனை பொருத்தவரை ஒரு ராபின் ஹூட் பாணியில் தனி ஒருவனாக அனைத்து முடிவுகளையும் எடுத்து களமிறங்கி சாகசங்கள் செய்வதாகத்தான் கிட்டுவாக வரும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் தெருச்சண்டைகளில் இறங்கி கெத்து காட்டுவதாக பாத்திர படைப்பு இல்லை.
உண்மையில் திரைப்படம் சாமானிய மக்கள் முன்மாதிரியாக கொண்டு சொந்த முறையில் செயல்பட வழி காட்டுவதாக இல்லை. ஒரு மீட்பருக்காக ஏங்கும் அபலைகளாகவே பாதிக்கப்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். அதே நேரம் இவரால் பலன் அடைந்தவர்களில் சிலர் இவருக்கு விசுவாசமாக திரை மறைவில் உதவுகிறார்கள்.
அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் சாமானிய மக்கள் இப்படத்தில் இருந்து கற்றுக்கொண்டு அமல்படுத்துவதற்கு எதுவும் இல்லை. வெறுமனே ரசித்து விட்டு திரைப்படத்திலாவது தம் வாழ்வை சீரழிக்கும் கயவர்களின் தலையை சீவிக் கொல்வதை பார்க்க முடிகிறது என்று ஆறுதல் பட்டுக் கொள்வதற்கு மட்டுமே உதவுகிறது.
கரையும் ஹீரோவின் கெத்து!
தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கெத்து காட்டிய ரமணா படத்தில் பேராசிரியர் விஜயகாந்த் இறுதியில் தமது முன்னாள் மாணவர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து சிறையில் இருந்து வெளியே அனுப்புமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறார். அதே நேரம் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பவும் மறுத்துவிட்டு “இந்த பேனா முனை உடைக்கப்பட வேண்டும்” என்று தத்துவம் பேசி தூக்கில் தொங்கி விடுகிறார்.
படிக்க: அன்னபூர்ணா நிறுவன உரிமையாளரை மன்னிப்பு கேட்க செய்த நிர்மலா சீதாராமனின் பார்ப்பனத் திமிர்!
படம் முழுக்க கெத்தாக ஊழல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கையாண்ட, அவர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய விஜய் ஆண்டனி, படத்தின் பின் பாதியில் தான் குறி வைத்த ஒரு சிலரை பழிவாங்குவதோடு திருப்திப்பட்டு விடுகிறார்.
ரமணாவில் விஜயகாந்த் விருப்பப்பூர்வமாக தூக்கில் தொங்கினார் என்றால், கிட்டு தான் நேசிக்கும் மக்களை அதே அதிகார வர்க்கத்தின், அதே ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் விட்டுவிட்டு, தலைமறைவாகி விடுகிறார். இரு வழிமுறைகளும் வேலைக்கு ஆகாது என்று எதிர்மறையில் மக்களை செயலற்றவர்களாக நிறுத்துவதாகவே இப்படம் இறுதியாக முடிகிறது.
இதற்கு முன்னர் விஜய் ஆண்டனி நடித்திருந்த படமும் கூட நகரத்தில் வந்து தேர்தலின் போது கைமாறும் கருப்பு பணத்தை மொத்தமாக அடித்துச் சென்று மலைவாழ் மக்களின் கிராமங்களுக்கான பாதையை, பாலங்களை அமைப்பதாகவே இருந்தது. இப்படத்திலும் ஒரு பழங்குடியினத்தில் பிறந்து அனாதையாகி பெரியாரிஸ்ட் ஒருவரால் வளர்க்கப்பட்ட இளைஞனாக விஜய் ஆண்டனி அனைத்து மக்களுக்கும் உதவுவதாக அவதாரம் எடுத்துள்ளார். ஏறக்குறைய ஒரே அடிப்படையிலான கதை தான்.
ஊழல்களின் ஊற்றுக்கண்ணான அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் உள்ளடக்கிய கொடிய ஆலமரமாக வியாபித்திருக்கும் நிலையில், கிட்டு தனி நபராக அதன் ஒரு விழுதை மட்டும் வெட்டுவதோடு படம் முடிகிறது. ஆனால் ஊழல் சக்திகளின் ஆலமரம் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. கிட்டுவையும் விரட்டுகிறது. அது குறித்து படம் எதையும் முன்வைக்கவில்லை. இதுவே நம் கவலைக்குரியது.
வரவேற்க வேண்டிய அம்சம்!
அதே நேரம் அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின் முகத்திரையை வழக்கம்போல் அதாவது மணிவண்ணன் – சத்தியராஜ் பாணியில், அமாவாசையின் கோவணத்தை துவைக்கும் அளவிற்கு இறங்கி போகாமல், அதற்கு இணையான கூர்மையுடன் அழுத்தமான கதையின் ஊடாக அம்பலப்படுத்துகிறது.
சிவாஜி படத்தில் ரஜினி கருப்புப் பணத்தை வெள்ளையாக்க உலகம் முழுவதும் உள்ள சட்ட விரோத வலை பின்னல்களை பயன்படுத்தி இருப்பார். இப்படத்தில் விஜய் ஆண்டனி பிட்காயினில் முதலீடு செய்து அதன் மதிப்பை பெருக்கி வெளிநாடுகளில் மீண்டும் பணமாக மாற்றி தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து செலவு செய்கிறார். தனக்குப் பின் உதவிகளைத் தொடர்ந்து செய்யும் வகையில் தன்னால் கலெக்டர் ஆன ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக படம் முடிகிறது.
உண்மையில் இப்படம் சென்சார் போர்டின் கத்தரிகளுக்கு தப்பி வெளிவந்திருப்பது ஓர் அதிசயம்தான். அதே நேரம் விழுதுகளை வெட்டும் படங்கள் எத்தனை வந்தாலும் அதை சென்சார் போர்ட் அனுமதிக்கவே செய்யும். வேரில் கை வைக்கும் படத்தை தான் அலறி அடித்துக் கொண்டு பாய்ந்து தடுக்கும்.
அந்த வகையில் சக்தி திருமகன் படம் சங்கிகளுக்கு பாஜகவினருக்கு ஆத்திரத்தை கிளப்பினாலும் கூட, எதிர்மறையாக சாமானிய மக்களுக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது. படக்குழுவினரின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
அதே நேரம் இப்படம் சுட்டிக்காட்ட அல்லது விவாதிக்க தவறிய, வேரோடு வீழ்த்துவது குறித்தான வழிமுறைகளை, பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி சாதிப்பதற்கான மாற்று குறித்து மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இயக்கங்களும் கட்சிகளும் விவாதிக்கட்டும். நாமும் இணைந்து விவாதிப்போம். மாற்றை மக்களுக்கும் பழக்கப் படுத்துவோம்.
- இளமாறன்
நல்ல படம், நல்ல விமர்சனம்…👍