செப்டம்பர் 30: தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

செப்டம்பர் 30: தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
5 பிரி கொண்ட சாட்டையால் கூரான கற்கள் சொருகி இருக்கும். அடித்தால் சதை பிய்த்துக் கொண்டு இரத்தம் கொட்டும். பின்பு சாணிக்கரைசலை பலவந்தமாக வாயில் ஊற்றுவார்கள். அடிபடும் போது வாய் திறந்து அழக்கூடாது. தாழ்த்தப்பட்ட கூலி ஏழை விவசாயிகள், “சாணிப் பால் சவுக்கடி சாம்ராஜ்யத்தின்” கீழ் கொடும் துன்பத்தை அனுபவித்து வந்தனர்.

மிழகத்தில் துவங்கப்பட்ட இந்திய பொதுவுடமை கட்சியின் (CPI) முதல் கிளையின் உறுப்பினராகவும், தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த பிறப்பால் தாழ்த்தப்பட்ட மக்களாகவும், நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளாகவும் வாழ்ந்து வரும் மக்களின் விடிவெள்ளியான தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் இன்று.

இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை என்று நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் விவசாய நிலங்கள் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் மாவட்டங்களில் முக்கியமான பகுதியாகவும், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகின்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக செங்கொடிகள் உயர்ந்த வரலாறும், தோழர் சீனிவாச ராவின் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்தது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் விவசாயம் நடந்து வந்த 12 லட்சம் ஏக்கர் நிலமும் ஆறு பண்ணையார்களின் கையில் குவிந்து கிடந்தது. குறிப்பாக வலிவலம் தேசிகர், தியாகராஜ முதலியார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், மூப்பனார் போன்ற பண்ணைகளாகவும் ஜமீன்தார்களாகவும் சுரண்டி கொழுத்து வந்த விரல் விட்டு எண்ணத்தக்க நபர்களின் வசம் பல இலட்சம் ஏக்கர் நிலம் இருந்தது.

இவர்கள் கைகளில் இருந்தது போக மீதம் இருந்த பாக்கி நிலம் முழுவதும் மடங்கள், கோவில்கள், ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது. நில உச்சவரம்பு சட்டம் படிப்படியாக அமல்படுத்த துவங்கிய பிறகு இந்த பெரும் பண்ணைகளின் நிலங்கள் அனைத்தும் அறக்கட்டளை நிலங்களாக மாற்றப்பட்டது என்பது தனிக் கதை..

தென்னிந்தியாவிற்கு கட்சி பணியாற்ற வந்த தோழர் அமீர் ஹைதர் கான் சிறைச்சாலையில் கண்டுபிடித்த அரிய முத்து தான் தோழர் சீனிவாச ராவ். கர்நாடக மாநிலத்தில் பிறந்த தோழர் சீனிவாச ராவ் கைகளில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வழங்கி கம்யூனிச இயக்கத்திற்கு கொண்டு வந்தார் தோழர் கான்.

1936 ல் சென்னையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவக்கப்பட்டது. தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவா சீனிவாசராவ் ஏ.எஸ்.கே., சி.எஸ்.சுப்ரமணியம் கே.முருகேசன், டி.ஆர். சுப்ரமணியன், சி.பி.இளங்கோ மற்றும் திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் அடங்கிய தமிழகத்தின் முதல் கட்சி கிளை துவக்கப்பட்டது. . கட்சியில் நிலமற்ற கூலி விவசாயிகளின் மத்தியில் வேலை செய்வதற்கான வேலை திட்டத்தை மனமுவந்து தானே ஏற்றுக் கொண்டார் தோழர் சீனிவாச ராவ்.

1942 ல் தஞ்சை வந்த சீனிவாசராவ் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் வாழ்நிலை விலங்குகளுக்கும் கீழாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கு கொம்பு ஊதியதும் ஏர் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலில் இறங்குபவர்கள் காலை 11 மணிக்கு கஞ்சியை குடித்து விட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவார்கள். இரவு 7, 8 மணிக்கு தான் ஆண்களும், பெண்களும் வீடு திரும்ப முடியும். உடல்நிலை சரியில்லை என்றாலோ சிறிய தவறுகள் செய்தலோ பண்ணையடிமைகள் மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கப்பட்டு தோல் உரிக்கப்படுவார்கள்..

5 பிரி கொண்ட சாட்டையால் கூரான கற்கள் சொருகி இருக்கும். அடித்தால் சதை பிய்த்துக் கொண்டு இரத்தம் கொட்டும். பின்பு சாணிக்கரைசலை பலவந்தமாக வாயில் ஊற்றுவார்கள். அடிபடும் போது வாய் திறந்து அழக்கூடாது. தாழ்த்தப்பட்ட கூலி ஏழை விவசாயிகள், “சாணிப் பால் சவுக்கடி சாம்ராஜ்யத்தின்” கீழ் கொடும் துன்பத்தை அனுபவித்து வந்தனர்.

இப்படி ஒரு தண்டனை உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை. பண்ணை அடிமைகளின் குழந்தைகள் படிக்க கூடாது. பண்ணையில் தான் வேலை செய்ய முடியும். வீட்டில் திருமணம் என்றாலும் பண்ணையாரின் அனுமதி வேண்டும். மாடு வளர்த்தால், முதல் கன்று பண்ணை நிலப்பிரபுக்கே என்பது பண்ணை ஆதிக்கத்தின் எழுதப்பட்ட விதியாகும். இந்த கொடுமைகளை எல்லாம் தஞ்சையை சுற்றி பார்த்து சீனிவாசராவ் தெரிந்துக் கொண்டார்.

பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராகவும் கொடூரமான சுரண்டல் முறைக்கு எதிராகவும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்த தோழர் சீனிவாசன் ராவ் தலைமையிலான செங்கொடி இயக்கம்,. “உன்னை அடித்தால் திருப்பி அடி” “சாணிப் பால் சவுக்கடி சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டு!” “துணிச்சலாக எழுந்து நின்று போராடு! செங்கொடி உனக்கு துணையாக நிற்கும்” என்று தோழர் சீனிவாச ராவ் எழுப்பிய முழக்கங்கள் தஞ்சை மண்ணில் எதிரொலித்தது.

வடபாதி பண்ணையின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் 2000 கூலி ஏழை விவசாயிகளை திரட்டி முதல் முதலில் செங்கொடியை ஏற்றி மக்களுக்கு அச்சத்தை போக்கினார் என்பது மட்டுமின்றி உத்திராபதி மடத்திற்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலத்தை முற்றுகையிட்டு செங்கொடியை நட்டு போராடியதன் விளைவாக புகழ்பெற்ற மன்னார்குடி ஒப்பந்தம் நிலைநாட்டப்பட்டது.

படிக்க: 

வெண்மணிகள் அச்சுறுத்துகிறது!

♦ காம்ரேட் பி.எஸ்.ஆர் – தோழர்.சீனிவாசராவ் நினைவு தினம்!

“பண்ணையாட்களை சாட்டையால் அடிப்பதை நிறுத்தவேண்டும், சாணிப்பால் கொடுமை அகற்றப்படவேண்டும், முத்திரை மரக்காலில் நெல் அளக்க வேண்டும்’ என்ற மூன்று ஒப்பந்தங்களும்” மன்னார்குடியில் ஏற்பட்டு, ஒப்பந்தம் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களும் இதை தவிர்க்கமுடியாமல் ஏற்று ‘2 சின்னபடி நெல் கூலி பெண்களுக்கும், 3 சின்ன படி நெல் கூலி ஆண்களுக்கும்’ கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

வர்க்க ரீதியாக நிலமற்ற கூலி விவசாயிகளாக வாழ்ந்த மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன்னொரு கொடுமையான இரட்டை குவளை முறையை ஒழித்தார். சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில், சொல்லிக் கொள்ளப்படும் முற்பட்ட, பிற்பட்ட சமூக மக்கள் பெருமளவு பங்கேற்றனர் என்பது கவனிக்கப்படவேண்டியது. உழைக்கும் கூலி, ஏழை விவசாயிகளை சாதி தீண்டாமை கொடுமையின் கீழ் ஒடுக்குவதற்கு முடிவு கட்டுகின்ற வகையில் வர்க்க ரீதியாக அணி திரட்டுவதில் கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றியை கண்டது.

இதற்கிடையே இந்திய பொதுவுடமை இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் நான்காண்டு தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்தவர், சேலத்தை சேர்ந்த தோழர் நாச்சியாரம்மாளை காதல் திருமணம் செய்தார். “எளிய வாழ்க்கை, கடினமான போராட்டம்” என்ற கம்யூனிச இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்த தோழர் சீனிவாச ராவ் வாழ்க்கை நமக்கு இன்றும் கற்றுக் கொடுக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரும் வர்க்கமாக திகழ்கின்ற விவசாயிகள் மத்தியில் ஒன்றிணைந்து அவர்கள் வாழ்க்கையில் படும் துன்ப துயரங்களுடன் தோளோடு தோள் நின்று அணிதிரட்டுவதற்கு தோழர் சீனிவாச ராவ் காட்டிய வழிமுறைகள் இன்றும் நமக்கு பாடமாகவே உள்ளது.

அன்று பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக போராடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலை நாட்டிய டெல்டா மாவட்டங்கள் இன்று கார்ப்பரேட்டுகளின் மீத்தேன், ஷெல் கேஸ், நிலக்கரி மற்றும் பலவிதமான எரிவாயு திட்டங்கள், எண்ணெய் வளங்களை உறிஞ்சி கொள்ளையடிக்கின்ற திட்டங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை பாதுகாக்கின்ற பாசிச பயங்கரவாத ஆட்சியின் கீழ் அதனை வீழ்த்துவதற்கு ஒரே சித்தாந்தமாக எழுந்து நிற்கும் கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் மக்களை ஒன்று பட வைப்பதற்கும், விவசாயிகளையும், விவசாயக் கூலி தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி போராடுவதற்கு தோழர் பி எஸ் ஆர் என்று அழைக்கப்படும் சீனிவாச ராவ் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் போராடிய கம்யூனிச தியாகிகளின் அனுபவங்களை கற்றுக் கொள்வோம். மீண்டும் டெல்டாவை சிவப்பு மண்டலமாக்குவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கல்லறையை கட்டுவதற்கு தஞ்சை மண்ணை போராட்டக் களமாக்குவோம்.

மருது பாண்டியன்.

நன்றி புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here