
இந்தியாவின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கார்ப்பரேட்டுகள் வரைமுறையின்றி கொள்ளையடிப்பதற்கு பொருத்தமாக சட்டபூர்வமான வழிமுறைகளை அமைத்துக் கொடுப்பதில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை தனது அரசியல், பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக முன்னிலை வகிக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளாக இந்திய சமூக அமைப்பு சேமித்து வைத்த கனிம வளங்கள் அனைத்தையும், ஒரு சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட்டுகள் சூறையாடிக் கொண்டு செல்வதற்கு பொருத்தமான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதில், போலி ’தேச’பக்தர்களான ஆர்எஸ்எஸ் பாஜக நூறு கால் பாய்ச்சல் வேகத்தில் சென்றுக் கொண்டுள்ளனர்.
இதன் ஒரு அம்சமாக மத்திய அரசு 2014ம் ஆண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை மாற்றியமைப்பதற்காக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
அக்குழு, தொழில்கள் எளிதாக செயல்படும் வகையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதாகக் கூறிக் கொண்டு பல பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், அதற்கு மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிிலையில், அதை நாடாளுமன்ற நிலைக்குழு 2015ம் ஆண்டு நிராகரித்தது.
இந்த முக்கியமான தடையைப் போக்கும் வகையில் கடந்த செப்டம்பர்-8 அன்று இந்திய ஒன்றிய அரசானது, தனது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மூலமாக அலுவல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. “இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை” என கார்ப்பரேட் பாசிச அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியான (strategic considerations) காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, 2006 அறிவிப்பாணையின் (திருத்தம்) விதிமுறைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசு திட்டங்களில் பிரிவு பி-யில் (section B) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணுக் கனிம சுரங்க திட்டங்கள் மற்றும் பிரிவு டி-யில் (section D) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய கனிமங்கள் (critical minerals) (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள) சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கேட்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.” என அதில் கூறப்பட்டுள்ளது.
படிக்க: மதுரை மேலூரில் கனிமவளக் கொள்ளைக்குத் திட்டமிடும் கார்ப்பரேட் வேதாந்தாவை விரட்டியடிப்போம்!
ஆனால் இதுநாள்வரை, ”கனிமங்களை தோண்டி எடுப்போர் தனியாராக இருந்தாலும் அல்லது அரசாக இருந்தாலும் கனிமத்தின் தன்மை அதன் தொழிற்பயன், அது கிடைக்கக்கூடிய இடத்தின் பரப்பு, அக்கனிம பதிவின் மொத்த மதிப்பு ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இத்துடன் அது தோண்டி எடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், பயன்படுத்தும் கருவிகளையும், கனிமத் தேடங்களையும், முற்றாய்வு முறைகளையும் (exploration methods) கனிம வேதியல் பகுப்பு ஆராய்ச்சி முடிவுகளை பற்றியும் கண்டுள்ள உண்மைகளை குறிக்க வேண்டும் இவற்றின் பெரு நோக்கம் மக்களின் நன்மை குறித்தே இருக்க வேண்டும்.” என அரசே பாடம் நடத்துகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதன்படி, கோபால்ட், தாமிரம், டங்ஸ்டன், காட்மியம், செலினியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதேபோன்று, யுரேனியம், தோரியம் போன்ற 6 வகையான அணுக் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள்ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்து 2023ம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடி செல்வதற்கு பொருத்தமான சட்ட திருத்தங்கள் மற்றும் அரசாணைகள் வெளியிடப்படும் போது, பொதுமக்கள் மத்தியில் அது கவனம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே உப்பு பொறாத விஷயங்களை முன்னிலைப்படுத்துவது; அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அக்கப்போர்களை மக்கள் தலையில் முக்கிய செய்தியாக கட்டுவது; ஊடகங்களில் விவாதங்கள் என்ற பெயரில், ’கூலிக்கு மாரடிக்கும் கும்பலை கொண்டு வார்த்தை விளையாட்டு நடத்துவது’; இதுதான் அரசியல் என்று தமிழக மக்களையும், இந்திய மக்களையும் நம்பச் செய்கிறார்கள்.
நாட்டின் பிரதமர் உள்நாட்டின் மாநிலம் ஒன்றுக்கு செல்வதையே பிரதான செய்தியாக மாற்றி லைவ் போடுவது; அவர் வீட்டில் இருந்து புறப்படுவது முதல் அங்கு சென்று இறங்குவது வரை நடக்கின்ற விவரங்கள் அனைத்தையும் நிமிட கணக்கில் ஒளிபரப்புவது போன்றவை தான் முக்கியச் செய்தி என்பதைப் போல, ’கோடி மீடியாக்கள்’ மணிப்பூர் செய்தியை மாற்றியுள்ளன.
இத்தகைய புகை மூட்டங்களுக்கு மத்தியில் நாட்டின் இயற்கை கனிமவளங்கள் அனைத்தும் சட்டப் பூரவமாகவே கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து போராடுவதற்கான அரசியல் உணர்வையும், போர்க் குணத்தையும் மக்களிடையே உருவாக்குவோம்.
இவை பரபரப்பான செய்திகள் இல்லை என்பதால் இதனை நிராகரித்து, ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற செய்திகள் பின்னால் ஓட வேண்டும் என்று அறிவுறுத்துகின்ற குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினரின் உபதேசங்களை நிராகரிப்போம்.
◾மாசாணம்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி