கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களும், கோயில்களில் கொள்ளையடிக்கும் பார்ப்பன அர்ச்சகர்களும்!
ஈசனே! இது என்ன ‘திருவிளையாடல்?’
கோவில் கருவறைக்குள் மணியடிக்கும் உரிமையை தனது, ‘பிறப்புரிமையாக’ வைத்துக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பல், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1947-க்கு பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட பின்னரும் பழக்கவழக்கம், மரபு, பாரம்பரியம் என்ற முறையில் இன்று வரை தனது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
ஒரு நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்த பிறகு புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டம் ஏற்கனவே காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற மரபுகள், நியதிகள், பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தின் மீதும் கேள்வி எழுப்பி புதிய மரபுகளை உருவாக்குகின்றது.
ஆனால், இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்ட பிறகு இறுதி வடிவம் பெறுவதற்கு முன்னர் சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பார்ப்பனக் கும்பல் முதல் அப்போதைய சங்கராச்சாரி வரை அனைவரின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னரே அது சட்டம் ஆகியது.
இதனாலேயே இன்று வரை அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற சட்டபூர்வமான உரிமைகளும் அதற்கு நேர் எதிராக மத வழிபாட்டு உரிமை என்ற பெயரில் தனிப்பட்ட நபர்கள், சாதியினருக்கு கொடுக்கப்படுகின்ற உரிமைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டுள்ளது.
கோவில் கருவறைக்குள் புகுந்து மணியடிக்கின்ற உரிமையை தனது பிறப்புரிமையாக நிலைநாட்டுவதற்கு பார்ப்பனக் கும்பல் தொடர்ச்சியாக ‘ சட்ட நுணுக்கம் தெரிந்த’, அதாவது சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளை தெளிவாக புரிந்துக் கொண்டுள்ள, பார்ப்பன வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி தப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.
அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகின்ற உரிமையை தடுக்கின்ற சட்ட ரீதியிலான தடைகள் மற்றும் ஒவ்வொரு முறையும் போராடி நீதிமன்ற தீர்ப்புகளை பெறுகின்ற போது அதற்கு எதிராக, தீர்ப்புகளை ஒழித்துக் கட்டுவதற்கு பார்ப்பனக் கும்பல் தலைமையில் சட்ட ரீதியான தடை பெறுகின்ற முயற்சிகள். இதற்கு துணை போவதில் பார்ப்பன அடிமைகளான சில கருப்பு பார்ப்பனர்களும், பதிலி பார்ப்பனர்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகம விதிகளின் படி தான் அனைத்து கோவில்களும் இயங்குவதாகவும், அந்த கோவில்களில் மணியடிப்பதற்கும், அர்ச்சனை செய்வதற்கும், ‘ கடவுளின்’ உருவச் சிலையை தொட்டு பூசைகள் செய்வதற்கும் ஆகம விதிகளின்படி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சுழன்று அடிக்கிறார்கள்.
தந்தை பெரியார் முன்வைத்து அதன் பின்னர் திமுக அரசினால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தடை பெறப்படுகிறது. பெயரளவுக்கு சில நியமனங்கள் நடந்தாலும், அங்கும் கருவறைக்குள் சென்று பூசை செய்கின்ற உரிமை பார்ப்பனரல்லாத, தகுதி வாய்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
இந்த சூழலில், கருவறைக்குள் நுழைந்து பூசை செய்வதற்கு, “தகுதி, திறமை, பிறப்புரிமை” வேண்டும் என்று சண்டமாருதம் புரிகின்ற பார்ப்பனக் கும்பலின் உண்மையான யோக்கியதையை அவ்வப்போது பார்ப்பன அர்ச்சகர்களே கிழித்தெறிந்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர் கருவறைக்குள்ளேயே பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது அம்பலமாகி நாறியது..
தேவநாதன் மீது, “பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், இந்து மக்களின் மனதை புண்படுத்துதல், மிரட்டல், பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.” இதில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உட்பட 35 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாகியும் இன்னமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தேவநாதன் தண்டிக்கப்படவில்லை. வழக்கை விசாரிக்கின்ற நீதிபதி வேல்முருகனே விரக்தி அடைந்து இன்னும் எத்தனை காலத்திற்கு இழுத்தடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
அதன் பின்னர் பல்வேறு கோவில்களில் பார்ப்பன கும்பல் அர்ச்சகர்களாக மணி அடித்துக் கொண்டிருக்கும் போதே பூஜை செய்ய வருகின்ற பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை ஏவுவது என்பதில் துவங்கி, “மல மல மருதமலை” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பார்ப்பன அர்ச்சகர்கள் வரை உண்மையிலேயே இந்து கடவுளர்களுக்கும், கடவுளச்சிகளுக்கும் பூசை செய்கின்ற தகுதியைப் பெற்றுள்ளனரா என்பது அந்த ‘ ஈசனுக்கே’ வெளிச்சம்.
இதில் தற்போதைய நிலவரமாக தென் தமிழகத்தின் புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் தலைமை அர்ச்சகர் செந்தில் சிவாச்சாரியார் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் போன்ற நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதாகச் செயல் அலுவலர் பொன்னி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோயில் ஊழியர் ஹரி, பார்ப்பன அர்ச்சகர் செந்தில் பட்டர் உள்ளிட்டோர் வெள்ளிப் பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் தேடி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பார்ப்பன அர்ச்சகர்களின் லீலைகளை தொகுத்தால் அதனை எழுதுவதற்கு ஒரு சில பக்கங்கள் போதாது என்பதால் இந்த அளவில் நிறுத்திக் கொள்வோம்.
படிக்க:
♦ கடவுளுக்கே விபூதி அடித்த பார்ப்பன அர்ச்சகர் செந்தில் பட்டர்! அர்ச்சக மாணவர்கள் கண்டன அறிக்கை
♦ குமார வயலூரில் தொடங்கிய போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வரை ஓயாது!
ஆகம விதிகளின்படி தான் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்த போது அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடிய பார்ப்பன கழிசடை ஊடகங்கள், செய்திப் பத்திரிகைகள் இதுபோன்று பார்ப்பன அர்ச்சகர்கள் கோவில் சொத்துக்களை திருடுவதையோ, பாலியல் ரீதியாக சீரழிந்து கிடப்பதையோ, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவதை பற்றியோ கண்டு கொந்தளிப்பது இல்லை.
மாறாக சிசிடிவியை ஆப் செய்து விட்டு அல்லது அதன் மீது துணியை போட்டுவிட்டு, ‘ டெக்னிக்கலாக, மாட்டிக்கொள்ளாமல் தவறுகள் எதுவும் இல்லாமல் திருட வேண்டியதுதானே’ என்று அங்கலாய்க்கின்றனர். பார்ப்பன வழக்கறிஞர்கள் இந்த கன்னக் கோல் வைக்கும் செயலுக்கு பொருத்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றனர்.
சைவர்களுக்கு தில்லை என்று புகழப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலிலோ தீட்சிதர் பார்ப்பனர்கள் சட்டபூர்வமாகவே பக்தர்களின் காணிக்கையை கொள்ளையடித்து வருகின்றனர் என்பது மட்டுமின்றி, கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களில் வருகின்ற வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் இன்றுவரை பொய் கணக்கு காட்டி பொதுமக்களையும், அரசாங்கத்தையும், இன்னும் சொல்லப்போனால் இந்து பக்தர்களையும் ஏய்த்துப் பிழைத்து வருகின்றனர்.
இந்த லட்சணத்தில் இந்து கடவுளர்களுக்கு விதவிதமாக பெயர் சூட்டி பக்தர்களை மிரட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, பொல்லா விநாயகர் வீர விநாயகர், ஏழை மாரியம்மன், சக்தி வாய்ந்த மாகாளி போன்ற பல பெயர்களில் டிசைன் டிசைனாக பெயர் சூட்டி பக்தர்களுக்கு அச்சத்தையும், மிரட்டலையும் உருவாக்குகின்ற பார்ப்பன கும்பல், இதற்கு நேர் மாறாக கடவுளுக்கே கல்தா கொடுப்பது மட்டுமின்றி காணிக்கைகளை திருடுவதும், உண்டியலை உடைத்து ஏப்பம் விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது.
இன்னொரு புறம், தீண்டாமை ஒரு பாவச் செயல் என்கிறது அரசிலமைப்புச் சட்டம். ஆனால் கருவறைக்குள் தீண்டாமையை சட்டபூர்வமாகவே நிலைநாட்டுகிறது உச்ச நீதிமன்றம்.
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலமாக சாதி தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், கருவறை தீண்டாமைக்கு எதிராகவும், அனைத்து சாதி அர்ச்சகர் உரிமையை நிலைநாட்டக் கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இவை அனைத்தும் பார்ப்பனக் கும்பலின் சட்ட வாதங்களினால் தோற்கடிக்கப்படுகிறது.
ஏனென்றால், நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டம் மதசார்பற்ற தன்மையில் ஒரு நாளும் இருந்ததில்லை. மாறாக இந்து என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தையும், சாதி வெறியர்களின் ஆதிக்கத்தையும் நிலை நாட்டுவதையே தனது கடமையாக கொண்டுள்ளது என்பது தான் அரசியல் சட்டத்தின் உண்மையான நிலைமையாகும்.
அதே சமயத்தில், ஒரு பொருளுக்குள் நேர் எதிரான வேறு ஒரு பண்பு இருக்கிறது என்பதைப் போல அரசியலமைப்புச் சட்டம் சில உரிமைகளை வழங்குகின்றது, சலுகைகளை கொடுக்கின்றது என்பதும் மற்றொரு உண்மை.. ஆனால் இதை வைத்துக்கொண்டு சாதி தீண்டாமை வன்கொடுமைகளை, கருவறை தீண்டாமையை, கோவிலில் நடக்கின்ற கொள்ளைகளை தடுத்து நிறுத்த முடியும் என்று யாராவது கருதினால் அதைவிட ஏமாளித்தனம் ஒன்று இருக்க முடியாது.
அதேபோல பிறப்பின் அடிப்படையிலேயே அர்ச்சகர் உரிமை வழங்கப்படும் என்பதை நிலைநாட்டுகின்ற இந்த அரசியலமைப்புச் சட்டத்தை தகர்த்தெறியாமல் அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆவதோ அல்லது கருவறை தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதோ ஒருகாலும் முடியாது.
கோவில்களில் அவ்வப்போது நடைபெறுகின்ற திருட்டுத்தனங்கள், சட்டவிரோத, கிரிமினல் குற்றச் செயல்கள் நடைபெறும்போது மட்டும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனம் பற்றி விவாதிப்பது, பிற காலகட்டங்களில் அமைதியாக கடந்து செல்வது என்று பெரும்பான்மை, ‘இந்து பக்தர்கள்’ இருக்கின்ற வரை இந்த நிலைமையில் மாற்றம் ஏதும் நிகழாது.
◾பார்த்தசாரதி.






