ம்யூனிசத்தை பொதுவாக ஏற்றுக் கொள்பவர்கள் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமாக ஒரு அமைப்பின் கீழ் செயல்படுவதை விரும்பாத கண்ணோட்டத்திற்கு தனிநபர்வாதம் அல்லது தன்னை முன்னிறுத்தி, தனது நலன்களை மட்ட்டுமே முன்னிறுத்தி செயல்படும் போக்கு என்று பொதுவாக வைத்துக் கொள்ளலாம்.

கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரு அமைப்பு முறையில் நின்று செயல்பட வேண்டும் என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகின்ற விவாதமாகும். குறிப்பாக இரண்டாம் அகிலத்தின் போது தோழர் லெனின் இதனை முன்னிறுத்தி தான் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்படுகின்றவர்களுக்கு மூன்று அடிப்படை கடமைகள் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

ஒன்று கட்சியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுவது, இரண்டு கட்சிக்கு தனது வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செலுத்துவது, மூன்று கட்சியின் ஏதாவது ஒரு குழுவில் அங்கம் வகிப்பது என்பதை தான்.

இன்று நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிசம் பயங்கரவாதமாக உருவெடுத்து கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள், நாத்திகவாதிகள் மற்றும் மதச் சிறுபான்மையினர் பார்ப்பன (இந்து) மதத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்ற போதும்< அமைப்பிற்குள் நின்று வேலை செய்ய முடியாது என்று பேசுபவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்.

எதிரி ஒருவன் தான் என்று தெரிந்து விட்டது. ஆனால் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது தான் எதிரியின் பலம் என்பதை இத்தகைய அமைப்பு சாராத கம்யூனிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை என்றாலும், சில காரணங்களை முன்வைத்து கம்யூனிச அமைப்புகளில் செயல்படுவதை தவிர்க்கின்றனர்.

முதலாவதாக, தான் இந்த உலகத்தைப் பற்றியும், இந்திய நிலைமையை பற்றியும், பாசிசத்தை பற்றியும் புரிந்து வைத்திருக்கின்ற அளவிற்கு வேறு யாரும் புரிந்துக் கொள்வதில்லை. எனவே பாசிசத்தை முறியடிக்க நாம் முன்வைக்கின்ற வழிமுறைதான் சரியானது அதனை இது போன்ற அமைப்பாக செயல்படுகின்ற கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் என்னால் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று முன்வைக்கின்ற பிரிவினர்.

இரண்டாவதாக, குறிப்பிட்ட சூழ்நிலையில் எதிரிகள் நண்பர்கள் யார் என்பதை வரையறுப்பதில் மார்க்சிய லெனினிய கண்ணோட்டம் இன்றி எப்போதுமே ஒரே வகையில் சிந்திக்கின்ற நிலை மாறா கோட்பாட்டை முன் வைக்கக்கூடிய ’தூய்மைவாத’ (பார்ப்பனிய) கம்யூனிஸ்டுகள் மற்றொரு பிரிவினர்.

மூன்றாவதாக, ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டு அமைப்பின் கீழ் செயல்பட்டால் அதற்குரிய வழிமுறைகளை கையாள வேண்டும். குறிப்பாக கம்யூனிச அமைப்புகள் முன்வைக்கின்ற ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகளுக்கு பணிந்து செயல்பட வேண்டும் என்பதை விரும்பாத எல்லோருக்கும் மேலான சிந்தனை கொண்ட, யாருக்கும் கட்டுப்பட விரும்பாத, ’அப்பாடக்கர்’ பிரிவினர்.

நான்காவதாக, தான் சரியானது என்று கருதுகின்ற அம்சங்களையும், தான் கற்றுக் கொண்ட பாக்கிய லெனினிய சித்தாந்த மற்றும் நடைமுறைகளையும், முகநூல் பக்கங்கள் அல்லது தனக்கென்று ஒரு வலை ப்பூ உருவாக்கிக் கொண்டு அதிலேயே மூழ்கி திளைக்கின்றவர்கள். அதில் தான் எழுதுவதை பிறர் அனைவரும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அதாவது பிறருக்கு இது போன்ற சிந்திக்கும் அறிவில்லை, எங்களுக்கு மட்டுமே அப்படி சிந்திக்கின்ற அறிவும் ஆற்றலும் உள்ளதால் இயல்பாக எங்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகின்ற மற்றொரு பிரிவினர்.

ஐந்தாவதாக, கட்சி அமைப்பு போன்றவற்றில் செயல்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், குறிப்பாக தனது குடும்ப வாழ்க்கை தனது சுயநலம் கொண்ட அற்பத்தனமான வாழ்க்கை முறை மற்றும் தனக்கு பிடித்தமான விஷயங்களில் மூழ்கி முத்தெடுக்கின்ற மனோபாவம், இவற்றின் காரணமாகவே கட்சி அமைப்பு முன்வைக்கின்ற கட்டுப்பாட்டை விரும்பாத’ ஒண்டிக் கம்யூனிஸ்டுகள்’ என்ற மற்றொரு பிரிவினர்.

ஆறாவதாக, தற்போதுள்ள அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு பொருத்தமாக வேலை செய்கின்ற போதே, ஒட்டுமொத்தமாக நாட்டின் நிலைமை என்ன அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமையில் மாற்றம் வந்துள்ளதா என்பதை பற்றி ஆய்வு செய்து அதிலிருந்து முடிவெடுத்து செயல்பட வேண்டுமே ஒழிய, தற்போதைய சூழலுக்கு ஏற்ப வேலை செய்கிறோம் என்பது சித்தாந்த ரீதியாக சரியானது இல்லை என்பதால் ஆய்வு என்று ஆழமாக அல்லது அகலமாக அல்லது நீளமாக ஏதாவது ஒரு வகையில் செய்ய வேண்டும் என்று நடைமுறை வேலைகளை தவிர்க்கின்ற இதைப்பற்றி செயல்படுகின்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களின் புரிதல் சிந்தனை ஆற்றலை அவ்வளவுதான் என்று மட்டமாக கருதுகின்ற மற்றொரு பிரிவினர்.

ஏழாவதாக மார்க்சிய லெனினிய மாவொ சிந்தனையை முன்வைத்து இந்திய சமூக அமைப்பை பற்றியும் உலக அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு நிலைமைகளையும் பற்றி புரிந்து கொள்வதற்கு விரும்பாமல் அல்லது அதனை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்சியத்திற்கு விரோதமான மார்க்ஸ் காலம் முதல் தற்போதைய காலம் வரை கருத்துகளை முன்வைக்கின்ற நாரோத்தனிக்குகள், டிராஸ்கியவாதிகள், புகாரினிஸ்டுகள் போன்ற பல வண்ண திரிபுவாத, கம்யூனிச விரோத சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்வைத்து அதனையே தங்களது நடைமுறையாக அமுல்படுத்துகின்ற பிரிவினர்.

எட்டாவதாக கம்யூனிஸ்டுகள் தனி வகை வார்ப்புகள், தனிவகை சாதியினர் என்று ஜூலியஸ் பூசிக் முன் வைத்ததை தவறாக புரிந்து கொண்டு, ஆளும் வர்க்க கட்சிகள் மற்றும் தனி நபர்கள் போன்றவர்களுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது என்றும், அனைவருமே முதலாளித்துவ கைக்கூலிகள், ஏகாதிபத்திய கைக்கூலி அறிவாளிகள், பார்ப்பன எடுபிடிகள் என்று ஏதாவது ஒரு நாமகரணத்தை சூட்டி மகிழ்பவர்கள். குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பதை அறியாமல் கிளிப்பிள்ளைகளைப் போல பல ஆண்டுகளுக்கு ஒரே முழக்கத்தை பஜனை போல முன்வைத்து செயல்படுகின்ற ’பஜனைக் கம்யூனிஸ்ட்கள்’ என்ற மற்றொரு பிரிவினர்.

ஒன்பதாவதாக தாங்கள் சரி என்று கருதுபவற்றை நேர்மையாக தனது கொள்கையாக, பிரகடனம் செய்து அதற்கு வேலை செய்வதற்கு துப்பு இல்லாமல் பிறர் செய்கின்ற வேலைகளின் மீது குற்றம் குறை கண்டுபிடித்து திருவிளையாடல் ’நக்கீரன்’ பாணியில் செயல்படுகின்ற தனது கொள்கைக்கு விசுவாசம் இல்லாத பிறரை பற்றி சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டும், புறணி பேசிக் கொண்டும் திரிகின்ற அற்பவாத கையாலாகாதத் தனம் கொண்ட பிரிவினர்.

பத்தாவதாக கொள்கையை ஏற்றுக்கொள்கிறேன், மாதாமாதம் எனது உழைப்பில் இருந்து ஒரு வருவாயை உங்களுக்கு கொடுத்து விடுகின்றேன், ஆனால் ஒரு குழுவில் இருந்து செயல்படுவதற்கு முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான அமைப்பு முறையில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு சுதந்திரமாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள். இத்தகைய பிரிவினர் தனக்கு தாராளவாதத்தையும், பிறருக்கு மார்க்சியத்தையும் போதிக்கின்ற உயர்தர கம்யூனிசத்தை பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் உரை வீச்சு நடத்திக் கொண்டும் செயல்படுகின்ற மற்றொரு பிரிவினர்.

இத்தகைய போக்குகளும், இவை அல்லாமல் வேறு சில விசித்திரமான போக்குகளும் இந்திய சமூக அமைப்பில் காணப்படுகிறது என்பதால் தான் முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாப்பதற்கு பல்வேறு கட்சிகள் செயல்படலாம். ஆனால் பாட்டாளி வர்க்கத்தை பொருத்தவரை ஒரே கட்சி தான் இருக்க முடியும் என்ற மார்க்சிய லெனினிய அமைப்பு முறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்திலும் அவரவரது சிந்தனை போக்குகள், தனிநபர்வாத அடிப்படையில் தனித்தனியாக செயல்படுவது என்று பிரிந்து கிடக்கின்றனர்.

அதையும் விட கேடாக ஒரு அமைப்பில் செயல்படும் போது தனக்கு நெருக்கமாக பணியாற்றும் சிலரை, தான் செயல்பட்டாலும், வெளியில் சென்றாலும் ஒரு கோஷ்டியாக கட்டிக்கொண்டு பிறர் மீது நம்பத் தகுந்த நம்பத்தகாத கால்வாசி/அரைகால்வாசி உண்மைகளை இதுதான் உண்மை என்பதைப் போல கதைத்து; அந்த கோஷ்டியை தக்க வைத்துக்கொண்டு அவர்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்வது; அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் சொறிந்துக் கொள்வது: அவர்கள் குடும்பங்களை உறவுகளாக பராமரிப்பது, இதிலேயே சுய திருப்தி அடைந்து விடுவது. அமைப்பு ரீதியாக செயல்படுகின்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது என்ற கீழான வழிமுறைகளை கையாளுகின்றனர்.

அமைப்புசாராத சுதந்திர மார்க்சிய சிந்தனை கொண்ட இப்படிப்பட்ட ’அப்பாடக்கர்’ கம்யூனிஸ்டுகள் தான் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளின் மீது சேற்றை வாரி இறைப்பதும், தன்னை ஒத்த மனநிலையைக் கொண்ட ஒரு சிறு கும்பலுடன் கூடிக் குலவி ’புரட்சிகர கடமையை’ முடித்துக் கொள்வதுமாக உள்ளனர்.

கார்ப்பரேட் காவி பாசிச அபாயக் காலத்தில் இந்த போக்குகள் யாருக்கு சேவை செய்யும் என்பதை இந்த தனிநபர் போக்க்குகளை முன் வைப்பவர்களால் புரிந்துக் கொள்ள முடியாதது அல்ல.

தமிழ்ச்செல்வன்.

நன்றி: வினைசெய் 2.0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here