பாசிச பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரே அணியில் நின்று போராடியவர்கள் இயல்பாகவே பார்ப்பன மற்றும் மேல் சாதிகளுக்கு எதிராக போராடுகின்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடிகள் மற்றும் மதச் சிறுபான்மையினர் ஆகியோர்களாக உள்ளனர்.
ஆனால் நாடு முழுவதும் உள்ள மைய நீரோட்ட பத்திரிகைகளிலும் சரி! ஆதிக்கம் வகிக்கின்ற சமூக வலைதளங்களிலும் சரி! முதன்மை அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே உள்ளதால், பாஜகவிற்கு எதிரான கருத்து உருவாகி விடக்கூடாது என்பதில் சொந்த முறையிலேயே அக்கறையுடன் செயல்படுகின்றனர். பார்ப்பன என்ற சொல்லை நாம் பயன்படுத்தினாலே, சாதிரீதியாக குறிப்பிட்ட சாதியை தாக்குகிறார்கள் என்று இன்னமும் ஒப்பாரி வைக்கின்றனர் அறிவாளிகள் சிலர்.
இந்திய சமூக அமைப்பை பல நூற்றாண்டுகளாக படுபிற்போக்குத்தனத்திலும், மூட பழக்க வழக்கங்களிலும் ஆழ்த்தி, அடிமை புத்தியை உருவாக்குவதற்கு முக்கிய பங்களித்தது பார்ப்பன மதம். இந்த மதம் இயல்பாகவே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முக்கிய பங்களிக்கிறது. இது பற்றி பலமுறை புதிய ஜனநாயகத்தில் எழுதியுள்ளோம் என்ற போதிலும் தற்போது மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது.
பார்ப்பனர்களிலேயே இரண்டு பிரிவினர் உள்ளனர்; வேதம், புராணம், இதிகாசம் கடவுள் நம்பிக்கை, நான் கடவுள், ஜாதகம், ஜோதிடம், என்று ஆன்மீக வாழ்க்கையில் திளைக்கின்ற ஆஷாட பூதிகளான வைதீக பார்ப்பனர்கள் ஒருவகை.
ஏழையோ, பணக்காரரோ எந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஓரளவுக்கு படித்து, நல்ல வேலை வாய்ப்புக்கு சென்று பூணூல் மீது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொள்வது முதல் ஹைடெக் வசதிகள் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்ற போதிலும், ஆச்சார அனுஷ்டானங்களை விட்டுக் கொடுக்காத லவ்கீக பார்ப்பனர்கள் மற்றொரு வகை.
இந்த இருவரில் படுபிற்போக்கு கருத்துகளை கொண்டுள்ள வைதீக பார்ப்பனர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ஹைடெக் வசதிகளை பயன்படுத்துகின்ற லவ்கீக பார்ப்பனர்கள் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே புதிய ஜனநாயகத்தில் வரையறுத்து முன் வைத்திருந்தோம்.
இந்த லவ்கீக பார்ப்பனர்கள் தான் ஊடகங்களில் புகுந்துக் கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவதிலும், அதை அச்சு ஊடகங்களிலும், டிஜிட்டல் மீடியாக்களிலும் பரப்புவதிலும் முன்னிலை வகிக்கின்றார்கள்.
இயல்பாகவே ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்ற ஈனபுத்தி இவர்களுக்கு ஊறிப்போயுள்ளதால், எப்போதும் நாட்டை சூறையாடுகின்ற தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் தற்போது புதிதாக உருவாகியுள்ள தேசங்கடந்த தரகுமுதலாளிகள் ஆகியவர்களுக்கு விசுவாசிகளாகவும், அவர்களின் வர்க்க நலனுக்கு உகந்த வகையில் செயல்படுபவர்களாகவும் உள்ளனர். இந்த புத்தி சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பளிச்சென்று வெளிப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக தமிழகத்தில் தினத்தந்தி தொலைக்காட்சி மூலம் பிரபலமான பார்ப்பனரான ரங்கராஜ் பாண்டே தனியே சாணக்யா என்ற ஒரு டிவியை நடத்தி வருகின்றார். இவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இருந்த 2024 ஜூன், நான்காம் தேதி காலை நெற்றியில் பட்டையுடன் குதூகலமாக தனது ஒளிபரப்பை துவக்கினார். தனது அல்லக்கை தேவேந்திரன் மூலம் கேள்விகளை எழுப்பி தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் பற்றிய விவாதத்தை மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.
தன் மனதில் தோன்றிய படியும், தனது விருப்பபடியும் தேர்தலுக்குப் பிந்திய கணிப்புகள் தெளிவாக எதார்த்த நிலைமையை காட்டியுள்ளது என்று ஆரம்பித்தவர் பலவிதமாக அலட்டிக் கொண்டிருந்தார். படிப்படியாக தேர்தல் முடிவுகள் அவரது விருப்பத்திற்கு மாறாக செல்ல துவங்கியவுடன் தொண்டை கம்ம ஆரம்பித்தது.
இறுதியாக முடிக்கும் போது அறுதி பெரும்பான்மையை விட 20 சீட்டுகள் அதிகம் பெற்றுள்ளதால் இப்போதும் பாஜகவினர் தேர்தல் தோல்வி பற்றி சோர்வடையவோ, கொண்டாட்டங்களை நிறுத்தவோ கூடாது என்று ’அருளுரை வழங்கியது’ மட்டுமின்றி, ’மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும், 75 வயது வரை தான் பதவியில் இருக்க வேண்டும் என்ற RSS விதியின்படி ஒரு ஆண்டு தான் பதவியில் இருந்தாலும், அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்’ என்று கூறி தனது தேர்தல் முடிவுகளை முடித்து வைத்தார்.
பார்ப்பனர்களைப் பற்றி விமர்சித்தாலே இப்போதெல்லாம் சாதி புத்தி எங்கே இருக்கிறது தேவையில்லாமல் குறிப்பிட்ட சாதியை தாக்குகிறார்கள் என்று திரும்பத் திரும்ப ஒப்பாரி வைக்கின்றனர் ’நடுநிலைவாதிகள்’. அன்றைய தினத்தின் சாணக்கியா டிவியை தொடர்ச்சியாக கவனித்து இருந்தால் தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் குமுறினார்கள் என்பதற்கு ஒரு வகை மாதிரியாக புரிந்துக் கொண்டிருக்க முடியும்.
படிக்க:
♦ “வதவதவென்று புள்ளையை பெத்து தள்ளுங்க”! பாண்டேக்கள் பதட்டம்!
♦ தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் மோடிக்கு சொம்படித்த கோடி மீடியாக்களுக்கு செருப்படி!
அதேபோல தேர்தல் வெற்றி, தோல்வி பற்றி திட்டமிட்டுத் தருகின்ற ஆலோசனை நிறுவனமான ஐபேக் என்ற கம்பெனியை நடத்தியவரான குஜராத் பார்ப்பனர் பிரசாந்த் கிஷோர் தி வயர் தொலைக்காட்சியில் கரண் தாப்பருக்கு கொடுத்த பேட்டியில் எப்படி வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குதித்தார் என்பதை பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் மீண்டும் ஒருமுறை அந்த சேனலுக்கு சென்று அந்த காட்சிகளை கவனித்து பாருங்கள்.
370 இடங்களில் வெற்றி என்று எதை வைத்து கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு பல வியாக்கியானங்களையும், பல முகபாவனைகளில் பிரசாந்த் கிஷோர் துள்ளி குதித்தது, தனது சாதி ஆணவத்துடனும், சாதித் திமிருடனும், பார்ப்பன பாசிஸ்ட்டுகளைத் தவிர வேறு ஒருவரும் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்ற வெறித்தனத்திலும் வெளிப்பட்டது தான்.
கரண் தாப்பரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொன்ன பிரசாந்த் கிஷோர், நேர்காணலுக்கு இடையே தண்ணீர் குடித்தார். உடனே, ‘பிரசாந்த் கிஷோரை கரண் தாப்பர் தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார்’ என்று சமூக ஊடகங்களில் பலர் எழுதினார்கள்.
அதற்கு, ‘தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது மதிப்பீட்டைக் கண்டு திகைப்பவர்கள் ஜூன் 4-ம் தேதி போதுமான அளவுக்கு தண்ணீரைக் கையில் வைத்திருக்க வேண்டும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இந்த கொழுப்பு கண்டிப்பாக பார்ப்பனக் கொழுப்பு என்பதைத் தவிர வேறில்லை.
2024 தேர்தல் முடிவுகள் பற்றிய சர்வே ஒன்றை துக்ளக் பத்திரிகையின் சார்பில் நடத்தி வெளியிட்டு பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, இந்த தேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சி வளர்கிறது. அது எவ்வளவு சீட்டுகளை வாங்குகிறது என்பது பிரச்சனை இல்லை. மாறாக எவ்வளவு ஓட்டுகளை பெறுகிறது என்பது தான் பிரச்சனை. இந்த தேர்தலில் 20% வாக்குகளை பெற்று வளரும் என்றும், இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகளை காணாமலடித்து விடும் என்றும் குதூகலத்துடன் பேசுவதை பார்ப்பன கும்பல் கைத்தட்டி வரவேற்றுக் கொண்டிருந்ததை பார்த்தோம்.
அது மட்டுமல்ல அதிமுக திமுக இரண்டும் ரவுடிகள், பொறுக்கிகள், கிரிமினல்கள் கட்சி இதிலிருந்து நமக்கு பாஜக விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்று கொட்டை போட்ட பார்ப்பனரான குருமூர்த்தி தனது ஆசையை வெளிப்படுத்தி பேசினார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.
இந்து தமிழ் திசையில் 2024 ஜூன் 5 வெளியான தலையங்கத்தில், வள்ளுவர் சொன்னதை மறக்க வேண்டாம் என்ற தலைப்பு போட்டுவிட்டு, பொதுவாக பாஜகவிற்கு அறிவுரை கூறிவிட்டு எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணியை எச்சரிக்கின்ற வகையில் எழுதியுள்ளது. தலையங்கத்தை பின்வருமாறு முடித்திருந்தது, ”இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஊடக கணிப்புகளை பொய்யாக்கும் விதத்தில் கணிசமான தொகுதிகளில் வென்றிருக்கின்றன. இந்தக் கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும் பட்சத்தில், மக்கள் அவர்களுக்கு விடுக்கும் செய்தி இதுதான். கடந்த ஒரு தசாப்தமாக மக்களவையில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்கின்ற குறையை இந்த தேர்தலில் போக்கிவிட்டீர்கள். மக்கள் பிரச்சனைக்காக முன்னே நிற்பது நல்லது தான். அதே வேளையில் பாஜக அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்கின்ற அணுகுமுறையை இந்த முறை நீங்கள் கைவிட்டாக வேண்டும். அபாண்டமான குற்றச்சாட்டுகள், எதிர்மறை அரசியல் நகர்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து புதிதாக அமையும் கூட்டணி அரசு சரியான திசையில் செல்வதை வாக்காளர்களின் சார்பில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனும் பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ள முடியும்” என்று பெரியவா பாணியில் அருளுரையை வழங்கியது.
ஏற்கனவே 303 என்ற தனிப் பெரும்பான்மை பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப் படைத்து வந்த பாசிச பாஜகவை, ”63 சீட்டுகள் குறைவாக பெற்று இருக்கிறீர்கள், அடக்கி வாசியுங்கள், பிறரது ஜனநாயக உரிமைகளை பற்றி மதிப்பளியுங்கள்”. என்று ஆலோசனை கூறுவதற்கு பதிலாக (இவர்கள் ஆலோசனை சொன்னால் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது வேறு விடயம்) எதிர்க்கட்சிகளுக்கு எதற்கெடுத்தாலும் பாஜகவை குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் அவர்களுடன் இணைந்து ஒழுங்காக பணியாற்றுங்கள் என்று தனது பார்ப்பனத் திமிரை பச்சையாக வெளிப்படுத்துகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணியினர் எட்டாம் தேதி மாலை தான் கூடி தங்களின் சார்பாக பிரதம வேட்பாளரை முன்னிறுத்த உள்ளனர் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற போது இந்து தமிழ் திசை அதையும் வெளியிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்கின்றார் என்றும், நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பதவி ஏற்கின்ற பிரதமர் இவர்தான் என்றும் தனது பார்ப்பன நப்பாசையை பத்திரமான வார்த்தைகளின் மூலம் பத்திரிக்கையில் அள்ளி தெளித்தது.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் பத்திரிக்கைச் சுதந்திரம் 150 வது இடத்திற்கு கீழே சென்றுள்ளது. மைய நீரோட்ட ஊடகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சமூக வலைதளங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் எச்சில் துண்டுக்கு பலியாகி, தனது ஊடக தர்மத்தை மறந்து சொம்படித்து வருகின்றனர்.
துக்ளக் குருமூர்த்தி, தினமணி, இந்து, தினமலர், ரிபப்ளிக் டிவியின் ஆர்னாப் கோஸ்வாமி போன்ற கொட்டை போட்ட பார்ப்பனர்கள் துவங்கி சாணக்யா டிவி நிறுவனர் பாண்டே, பிரஷாந்த் கே. ஸ்வாமி போன்ற ரெக்ரூட் பார்ப்பனர்கள் வரை அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திப்பது ஒன்றே ஒன்றைத்தான்.
பல நூற்றாண்டுகளாக தங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த மக்களும் பழங்குடிகள் மற்றும் மதச் சிறுபான்மையினரும் கல்வி உரிமை பெற்றோ; வேலை வாய்ப்பு உரிமையை பெற்றோ அல்லது தொழில் துவங்கி தொழிலதிபர்களாக வளர்ந்தோ; அல்லது விளையாட்டு வீரர்களாகவோ அல்லது அரசியல்வாதிகளாகவோ ஒருபோதும் தங்களுக்கு இணையாகவே வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள்.
அந்த வரிசையில் ஊடகப் பார்ப்பனர்களும் தங்களது கொண்டையை மறைத்துக் கொள்ளாமல் பூணூலை உருவிக் கொண்டு, குடுமியை விரித்துப் போட்டுக் கொண்டு, ’திகம்பர கோலத்தில்’ ஊர்த்துவ தாண்டவம் ஆடுவதை ஊடக செய்திகள், ஊடக விவாதங்கள் போன்ற பீத்தலுடன் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் கண்டு கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த நவீன காலத்திலும், பிறப்பின் அடிப்படையில் தன்னை மேம்பட்டவர்களாக கருதிக் கொண்டு, அனைவருக்கும் மேலே நின்று பாடம் நடத்துவதற்கு தகுதி தனக்கு மட்டுமே உள்ளது என்று தினவெடுத்து திரிகின்ற ஊடக பார்ப்பனர்களுக்கு உரியவகையில் பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்..
- கனகசபை