ஒரு பாலியல் குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்யப்பட்டதையும் கடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இதற்கு நேர் எதிராக நிரபராதி என விடுவித்துள்ளது.
சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்முறை- கொலை!
சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில்தான் தஷ்வந்த் என்ற இளைஞன் குற்றவாளி என கைது செய்யப்பட்டான்.
அந்த இளைஞனுக்கு கீழமை நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது தீர்ப்பாக தரப்பட்டது. மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம் “மரண தண்டனையைத் தவிர வேறு எதுவும் இந்த நபர் இழைத்திருக்கும் குற்றத்தின் தன்மைக்குப் பொருந்தாது” என தனது தீர்ப்பில் தெரிவித்தது. இப்படி முடிவு செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது. இவன் தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் சென்னையில் பாலியல் கொலை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் கைதுசெய்யப்பட்ட ஒரே மாதத்தில் அவன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டு ஜாமீனிலும் வெளிவந்தான். இவனுக்கு மட்டும் ஒரு மாதத்தில் குண்டர் சட்டம் ரத்து, ஜாமீன் கிடைத்ததன் ரகசியம் என்ன?
சிறுமி வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வந்தவன் சும்மா இருந்தானா? தனக்கு தேவைக்கு பணம் கேட்டும் தராததற்காக தனது அம்மாவையே கொன்று விட்டு மும்பைக்கு தப்பி ஓடினான். இரண்டாவது முறையாக தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் தாயைக் கொன்ற குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை எனும் பெயரில் காவல்துறை செய்த ஏமாற்று வேலை!
ஒரு குற்ற வழக்கு விசாரணையில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, குற்றம் நடந்த விதத்தை நிகழ்வுகளின் சங்கிலி தொடராக விளக்குவதுதான். இதுவே இந்திய காவல்துறையின் வழக்கம். இத்துறை ஒருவனை குற்றவாளி என முடிவு செய்துவிட்டால் அந்த நிகழ்வுகளை போலியாக கட்டமைப்பதும் உண்டு. இதை பல நேரங்களில் அரசியல் கைதிகளுக்கும், சமூக அழுத்தம் காரணமாக குற்றவாளியை பிடித்துவிட்டதாக காட்டுவதற்கும், போலி மோதல் கொலைகளை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வருவதை அனைவரும் அறிவோம்.
இந்த வழக்கில், தஷ்வந்த் தான் கொன்றிருக்கிறான் என முடிவுக்கு வந்த தமிழ்நாடு காவல் துறை அதனை நிறுவ போதிய ஆதாரங்களை (CCTV FOOTAGE, DNA மாதிரி உள்ளிட்டவற்றை) குறித்த நேரத்தில் திரட்டவில்லை. மாறாக, பொதுவாக சம்பவங்களை இட்டுக்கட்டி விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளதை உதாரணங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். காவல்துறையின் சொத்தை வாதங்களை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கிய கீழமை நீதிமன்றத்தையும், அதனை உறுதிபடுத்திய உயர்நீதிமன்றத்தையும் விசாரணையில் உள்ள ஒட்டைகளைப் பாராமல் தீர்ப்பு வழங்கியள்ளனர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஏற்கனவே, போதிய ஆதாரங்கள் இல்லை என்று தாய் கொலை வழக்கில் இருந்தும் விடுதலையை பெற்றிருக்கிறான் தஷ்வந்த். இதில் உண்மையான குற்றவாளியை தப்ப வைக்க முயற்சிக்கும் கிரிமினல் யார்?
இதன் தொடர்ச்சியாகவே தற்போது, சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கிலும், கீழமை நீதிமன்றங்களில் தண்டனை அறிவிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டும் கூட, உச்ச நீதிமன்றத்தால் புனிதனாக்கப்பட்டு விட்டான் தஷ்வந்த்.
முரண்பட்ட தீர்ப்புகள்- எது நீதி?
ஒருவேளை தஷ்வந்த் உண்மையிலேயே நிரபராதி என்றால், அவன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்றால், இத்தகைய வழக்கை போட்டு, 8 ஆண்டு காலம் வழக்கை நடத்திய காவல்துறையினருக்கு – காவல்துறையின் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை தரப்பட்டுள்ளது. எதுவும் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்யாமல் எங்கே போய் ஒளிந்து கொண்டது?
நீதிபதிகள் அனைவரும் சட்டங்களை பயின்றவர்கள் தானே! தீர்ப்பு கூற தகுதி பெற்றவர்கள் தானே! பின்னர் ஏன் நேர் எதிராக மாறுபட்ட தீர்ப்புகள் ஒரே வழக்கில் தரப்படுகின்றன? நீதி தேவதை வர்க்கத்தை பார்த்தும், சாதியை பார்த்துமே தனது தீர்ப்பை எழுதுகிறாளா?
மீடியாக்கள் இது குறித்து எல்லாம் கள்ள மவுனம் காக்கின்றன. கீழமை நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த்தை குற்றவாளி என்று உறுதிப்படுத்திய நீதிபதிகளின் தகுதி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது.
‘நீதி’ யாருக்கு கிடைக்கும்?
நீதி யாருக்கு கிடைக்கும்? இந்த சட்டமும், இந்த விசாரணை அமைப்புகளும் யாரை மட்டுமே தண்டிக்கும்? என்று கேள்வியை கேட்க வேண்டும். இந்த தஷ்வந்த் எனும் கொலைகாரனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டதாக கருதியிருந்தோம். அதுவும் இன்று கேள்விக்குறியாகி உள்ளது.
அதாவது, தவறை செய்பவர்கள் மேட்டுக்குடியினராகவோ, அதிகார வர்க்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவரின் குலக் கொழுந்துகளாகவோ, ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி பிரமுகர்களின் வாரிசுகளாகவோ, ஆதிக்க உயர்சாதியினராகவோ, பார்ப்பனராகவோ இருக்கும் பட்சத்தில் எத்தகைய தவறையும் செய்து விட்டு எளிதாக தப்பித்துக் கொள்ளலாம். இவர்களைப் பொறுத்தவரையில் ’சட்டத்தின் ஆட்சி’ நடக்கிறது; ’வாய்மை வெல்கிறது’; ’நீதி’ நிலைநாட்டப்படுகிறது.
காவல்துறையை பொருத்தவரை கைது செய்யப்படுபவர்கள் இஸ்லாமியராகவோ, மதச்சிறுபான்மையினராகவோ, தலித்துகளாகவோ, உழைக்கும் வர்க்கத்தினராகவோ இருக்கும் பட்சத்தில், அவர்களை கேள்விக்கிடமின்றி கொட்டடிகளில் அடைக்கின்றன.
படிக்க:
♦ ஆந்திர இளம்பெண்களை பாலியல் வல்லுறவு செய்த போலீசை கைது செய்து சிறையிலடை!
♦ தர்மஸ்தலா நடத்தப்பட்ட பாலியல் படுகொலைகள் | தோழர் வெங்கட்
பாசிஸ்ட்களின் ஆட்சியில் உபா (UAPA) உள்ளிட்ட கொடிய சட்டத்தின் கீழ் பலரும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசையோ, ஆளும் கட்சியினரையோ, கார்ப்பரேட்டுகளுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களை எதிர்த்தோ கருத்து சொன்னதற்காகவும், எழுதியதற்காகவும், ஜனநாயக முறைப்படி உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்காகவுமே கைதாகிறார்கள். JNU மாணவர் அமைப்பின் தலைவர் உமர்காலித் உள்ளிட்ட பலர் விசாரணை கைதியாகவே ஆண்டுக் கணக்கில் சிறையில் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பெயில் கிடைப்பதே இல்லை.
தஷ்வந்த் போன்ற கொடூர குற்றவாளிகளுக்கோ, அர்னாப் கோஸ்வாமி போன்ற சங்கிகளுக்கோ பெயில் எனும் சட்டரீதியான உரிமை உடனே கிடைத்துவிடுகிறது.
நமது நீதித்துறை எத்தகைய நேர்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு வகை மாதிரிக்கு மேலே விவரிக்கப்பட்ட இவ்விரண்டையும் ஒப்பிட்டு வாசகர்கள் தமது சொந்த முடிவுக்கு வரலாம்.
நீதி கிடைக்க என்ன செய்வது?
பார்ப்பனியம் உருவாக்கி வளர்த்தெடுத்த ஆலமரத்தடி கட்டப்பஞ்சாயத்துகளில் இருந்து வளர்ந்து, காலனியாதிக்கவாதிகள் பெற்று போட்ட சட்டங்களையும், ‘நீதி’ வழங்கும் நடைமுறைகளையும் வரித்துக் கொண்டுதான் தற்போதைய நவீன நீதித்துறையும், சட்டத்துறையும், காவல்துறையும், சிறைத்துறையும் செயல்பட்டு வருகிறது. இது கடந்த காலங்களிலும் நாட்டு மக்களுக்கானதாக இருந்ததில்லை; தற்போதும் நமக்கானதாக இல்லை.
எனவே இந்த நீதித்துறையின் அடிப்படைகளையே, சட்டங்களின் சார்புத் தன்மையே மாற்றி எழுத வேண்டி உள்ளது. இருப்பதை திருத்துவது அல்ல; புதிதாக உருவாக்க வேண்டி உள்ளது. இதை செய்வதற்கு தற்போதைய மோடி அரசாங்கம் துளியும் உடன்படாது. அது கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எல்லாம், சட்ட தொகுப்புகள் எல்லாம், பார்ப்பனியத்துக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்பவையே.
உழைக்கும் மக்களுக்கு நீதி வேண்டும் என்றால் இப்போது இருக்கும் அமைப்பிடம் கிடைக்காது. தீர்ப்புகளும், தீர்ப்பு எழுதியவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கு தேவை ஒரு ஜனநாயக கூட்டரசு. அந்தக் கூட்டரசுக்கு அழுத்தம் வகையில் தரும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டும் ஒரு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி. காவல் துறையிலிருந்து நீதித்துறை வரை அனைத்து உயர்பதவிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அவர்கள் மக்களுக்கு பதில் தர கடமைப்பட்டவர்களாக பணிக்கப்படவும் வேண்டும். இத்தகைய, அல்லது பொருத்தமான ஒரு மாற்று இல்லாமல் நீதியை பெறுவதில் ஒரு அடி கூட முன்னேற முடியாது.
- இளமாறன்