டிசம்பர் 25: வெண்மணி தியாகிகளின் நினைவும்! கம்யூனிஸ்டுகளின் கடமையும்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சாதி தீண்டாமை கொடுமைகள் இன்றளவும் புதிய வடிவில் பரிணாமம் பெற்று பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் மீதான கொடூரமான தாக்குதலாக அதிகரித்துள்ளது.

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.

இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.

பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?

  • தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.
  • கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
  • சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.

வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எமது இணையதள கட்டுரையில் தோழர் எழில் மாறன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

டெல்டா மாவட்டங்களில் காவிரி பிரச்சனை முதல் நீர் நிலைகள் பாதிப்பு வரை அனைத்தின் மீதும் அக்கறையுள்ள சமூக செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான தோழர் ஜீவகுமார் இன்று தமிழ் இந்து பத்திரிக்கையில் வெண்மணி தியாகிகள் நினைவு பற்றி வெளிவந்த கட்டுரையை மீது தனது கருத்தை கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார். மார்கழியில் நடுங்கும் பனியில் தோலில் சூளீரென்று உரைக்கும் வகையில் இந்த பதிவு இருந்தது என்றால் அது மிகையில்லை.

“நம் குளிர்காலத்தில் மார்கழி தலையாயது.
ஆண்டாள் பாசுரங்கள் ஒருபுறம் என்றால்
மலர்களிலே அவள் மல்லிகை,
மாதங்களில் அவள் மார்கழி என போற்றுவர்..
இப்போதைய கம்யூனிஸ்ட் வாழ்க்கை என்பது போலீசிடமோ
எதிர் அணியிடமோ ஒரு அடி வாங்காமல்,வலி இல்லாமல்
சொகுசாக தலைவராக முடிகிறது.
மைக் கட்டி வைத்த மேடைகளில் முழங்க
முடிகிறது..
பனியில் மட்டுமா வெண்மை, தீ நாக்குகளின்
அடர்புகையும் வெண்மைதான்..
44 பேரின் சாம்பலை சிறு பிள்ளையில்
பார்த்து வளர்ந்த எமக்கு மார்கழியில்
லயிக்க முடியவில்லை..
கட்டுரையை இன்று வெளியிட்ட இந்து
தமிழ்திசையை வணங்குகிறேன்.” என்று முடித்துள்ளார்.

கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் கடந்த பத்தாண்டுகளில் பட்டியலின மக்களின் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு கொண்டுள்ளது., பார்ப்பனக் கும்பலின் மேலாதிக்கமும் பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு வெறியாட்டம் போடுகின்ற ஆதிக்க சாதி வெறியர்களின் கொடூரமான தாக்குதல்களும் ஒன்றிணைந்து பட்டியலின மக்களின் மீதான அடக்குமுறைகளை அதிகரித்துள்ளது.

நீண்ட நெடும் காலமாக இந்திய சமூக அமைப்பில் நிலவி வருகின்ற சாதி தீண்டாமை கொடுமைகளை ஒரு கட்டுரையின் மூலம் விவரித்து விட முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சாதி தீண்டாமை கொடுமைகள் இன்றளவும் புதிய வடிவில் பரிணாமம் பெற்று பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் மீதான கொடூரமான தாக்குதலாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் குறிப்பிட்ட அளவிற்கு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், ஆதிக்க சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பலவீனமாக உள்ள சூழலில், தமிழகத்தை தந்தை பெரியார் மண் என்று கூறப்பட்டாலும் இங்கும் ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் இன்றளவும் தொடர்கின்றது.

ஆட்சி மாறினாலும் அதிகார வர்க்கத்தினர் மாறுவதில்லை. போலீசு முதல் உள்ளூரில் நிர்வாக அமைப்பில் உள்ள விஏஓ வரையிலான அதிகார வர்க்க கட்டமைப்பு அவ்வளவு எளிதில் சாதிய வன்மத்திலிருந்தும், தீண்டாமையை நியாயப்படுத்துகின்ற கொடூரமான சிந்தனையிலிருந்தும் விடுபடுவதில்லை.


படிக்க: வெண்மணிகள் அச்சுறுத்துகிறது!


இத்தகைய சூழலில் கம்யூனிஸ்டுகள் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவது என்பது ரத்தம் சிந்துகின்ற, போலீசு ராணுவத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதற்கு துணிந்த, உயிர் தியாகத்தை மனமகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் கொண்ட வாழ்க்கையையும், போராட்ட முறைகளையும் கோருகிறது.

ஆனால் புதிய தாராளவாதக் கொள்கைகள் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கியது முதல் இந்த நாட்டில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களில் விதிவிலக்கான சம்பவங்கள் தவிர காவல்துறையின் அடக்குமுறையை நேருக்கு நேர் எதிர் கொண்டு போராடி தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டிய கம்யூனிச தலைவர்கள் யார்?

நாட்டின் முதுகெலும்பு என்ற வர்ணிக்கப்படுகின்ற விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுகின்ற கொடூரமான மறு காலனியாக்க கொள்கைகள் அவர்களின் உடமைகளை பறித்து அவர்களின் வாழ்விடங்களையும் விட்டு துரத்தி நாடோடிகளாக மாற்றிய கொடூரத்தை எதிர்த்து ஆளும் வர்க்கத்துடன் நேருக்கு நேர் போராடி உயிர் நீத்த கம்யூனிச தலைவர்கள் எத்தனை பேர்?

ஆதிக்க சாதி வெறியர்களுடன் நேருக்கு நேர் மோதி சாதி தீண்டாமை கொடுமைகளிலிருந்து பட்டியலின மக்களின் உயிர் பாதுகாப்பிற்கும், சுயமரியாதை மிக்க வாழ்வையும் பாதுகாப்பதற்கு முன்நின்று போராடி அடக்குமுறைகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட்கள் எத்தனை பேர்?

இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை பயன்படுத்துவதும், நக்சல்பாரி அரசியலின் பெயரை பயன்படுத்துவதும் புரட்சிகர அமைப்புகளின் பாரம்பரியத்தை கோருவதும். சுலபமானது என்பதைப் போல் ஆகிவிட்டது.


படிக்க:  டிசம்பர் 25  வெண்மணி தியாகிகள் நினைவு நாள்


சமூக வலைதளங்கள் வந்த பிறகு நரம்புகள் புடைக்க, எலும்புகள் நொறுங்க, ரத்தம் கொதிக்கும் வகையில் எழுதுவது, கைவந்த கலையாக உள்ள ’பித்தலாட்ட பேர்வழிகளும்’ கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் களமாடுவதற்கு மிகப்பெரும் வாய்ப்பை உருவாக்கி விட்டது.

விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பழங்குடி மக்களையும், பட்டியலின மக்களையும் நேரில் சந்திக்காமலேயே அல்லது அவர்களுடைய வாழ்வுடன் நெருங்கி பயணிக்காமலேயே பல பக்கங்களில் ’புரட்சிகர சவடால்’ அடிப்பதற்கான வாய்ப்பையும் சூழலையும் சமூக ஊடகங்கள், இணையங்கள் உருவாக்கியுள்ளது.

’போலீசு வீட்டு கதவை தட்டாமலே புரட்சி செய்வது?’ என்பதைப் பற்றி வகுப்பெடுத்து ஆளும் வர்க்கத்துடன் சமரசமாகவும், போலீசு மற்றும் உளவுத்துறையுடன் நெருக்கமாகவும் இருந்து கொண்டு தோலை காப்பாற்றிக் கொள்வது; தோலை காப்பாற்ற கொள்கையை உதிர்ப்பது என்ற வகையில் கம்யூனிச போர்வையில் பல வண்ண ’பித்தலாட்ட பேர்வழிகள்’ நடமாடிக் கொண்டிருக்கின்ற சூழலில், வெண்மணி தியாகிகளின் நினைவும், அன்றாடம் பட்டியலின மக்களின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற கொடூரமான தாக்குதல்களும் இந்த கொடூரங்களை ஒருங்கிணைந்த முறையில் எப்படி முறியடிப்பது என்ற நேர்மையான பரிசீலனையையும், தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க வாழ்வை ஏற்கும் கடமையையும் உருவாக்கியுள்ளது.

சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here