கரூரில் சினிமா கழிசடையும், பாசிச கோமாளியுமான, திருவாளர் விஜய் நடத்திய ’வீக் எண்டு கூட்டம்’ ஒன்றில் அவரை பார்க்கச் சென்ற எமதருமை உழைக்கும் மக்கள் 42 பேர் படுகொலையாகி உள்ளனர். 75-க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளின் காரணமாக இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது அவர் புதிதாக ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கப் போவதாகவும், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிடக் கட்சிகள், இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜக ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய ஒரு அரசியலை முன்வைப்பதாக செயற்கையாக திட்டமிட்டு அவரைப் பற்றி கருத்துருவாக்கம் மேற்கொண்டார்கள்.
2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலானது, இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அது தனது சித்தாந்த ரீதியான எதிரியாக கருதிக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தை குறிப்பாக திமுகவை ஒழித்து கட்டுவதற்கு பொருத்தமான ஒரு கவர்ச்சிவாத தலைவன் ஒருவனை தேடிக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ்-காரனும், மற்றொரு சினிமா கழிசடை நாயகனுமான ரஜினிகாந்த் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றவுடன் அப்போதிலிருந்து விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஒரு கிச்சன் கேபினட் ஒன்று சேர்ந்து விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் வெளியான விஜயின் திரைப்படங்கள் அனைத்தும் அரசியல் ரீதியிலாக விஜயை மக்களின் உரிமைகளுக்காக போராடுவதைப் போலவும், தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் போராளியைப் போலவும் சித்தரிப்பதாக கொண்டுவரப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய கத்தி திரைப்படம் முதல் கடைசியில் வெளிவந்த கோட் திரைப்படம் வரை திட்டமிட்டு தமிழகத்தில் பாசிச கோமாளியான எம்ஜிஆரைப் போன்ற ஒரு புது வகையான கோமாளியை, அதுவும் கொள்கை, லட்சியம், விழுமியங்கள் ஏதுமற்ற (விக்ரவாண்டி மாநாட்டில் பேராசிரியர் சம்பத்குமார் முன் வைத்த சில உல்டா கொள்கைகள் தவிர) இன்றைய புதிய தலைமுறைக்கு பொருத்தமான பாசிசக் கோமாளியை உருவாக்குவதற்கு முயற்சித்தனர் என்பதையும் இணைத்தே புரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் சூத்திரதாரியாக இயங்கி வருகின்ற ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனையின் கீழ் படிப்படியாக உருவான இந்த தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியானது, தன்னை ஒரு தேர்தல் கட்சியாக அறிவித்துக் கொண்ட பிறகு, கொள்கை என்று தனக்கு இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு பெரியார், அம்பேத்கர் முதல் வேலுநாச்சியார் அனைவரையும் முன்னிறுத்தி இவர்கள் வழியில் தான் செல்வதாகவும், தமிழகத்தில் நிலவுகின்ற திமுக ஆட்சியை வீழ்த்துவது ஒன்றே தனது குறிக்கோள் என்றும் பிரகடனம் செய்து கொண்டு மாநாடுகளை நடத்துவது; அதன் பிறகு ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வது; அந்த பிரச்சாரங்களில் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை தப்பும் தவறுமாக படிப்பது; பஞ்ச டயலாக்குகள், பாடல் பாடுவது; குத்தாட்ட பாணியில் நடனமாடுவது; பாசிச ஜெயா பாணியில் மக்களிடம் கேள்வி எழுப்புவது போன்ற வழிமுறைகள் ஆகியவற்றை கடைபிடித்து, ’தன்னிகரில்லாத தலைவனாக’ தன்னை உருவாக்கிக் கொள்ள விஜய் முயன்று வந்தார்.
இப்படிப்பட்ட அரசியல் ஏதுமற்ற பாசிசக் கோமாளிகள் சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
2008ல் ஏற்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடியானது, உலகம் முழுவதும் நிலவி வருகின்ற முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல்வேறு ஆட்சி வடிவங்கள் அனைத்தை யும் கேள்விக்குறியாக்கி சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. மாற்றாக பாசிச சர்வாதிகார வழிமுறையில் ஆட்சியை செய்வதை நிலைநாட்டி வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடியானது அரசியல் மற்றும் பண்பாட்டு துறையிலும் வெளிப்பட்டது என்பது மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஜனநாயகம் ஆகியவற்றின் மீதும் தனது தாக்குதலை கொடுத்தது.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் தொட்டில் என்று கருதப்படுகின்ற அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முதல் முதலாளித்துவ வளர்ச்சி பெறாத பின் தங்கிய காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய நாடுகளிலும் அரசியல் கட்சிகள் தனது கொள்கைகள் விழுமியங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றை தூக்கியெறிந்து விட்டு புதிய வகையிலான கட்சி அமைப்பு ஒன்றை முன்வைத்து செயல்படத் துவங்கினர்.
இத்தகைய மோசமானதொரு அரசியல் நிலைமையை அவதானித்து 2015 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவைப் பொறுத்தவரை ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய அதன் கட்டமைப்புகள் அனைத்தும் தோல்வியை தழுவி விட்டன என்பதை முன் வைத்திருந்தோம்.
”இப்பொழுது எந்த தேர்தல் அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும் தேசியம், திராவிடம், சோசலிசம், முற்போக்கு, சமூகநீதி, காந்தியம், மனிதநேயம் முதலான கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் எதுவும் கிடையாது. அவை எல்லாவற்றிலும் பிழைப்புவாதமும் இலவசங்களும் தான் கோலோச்சுகின்றன.
படிக்க:
♦ கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!
♦ திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வந்தப் பிறகு உள்நாட்டு தேசங்கடந்த தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளை சார்ந்த பொருளாதாரமே வளர்ச்சிக்கான முன்னேற்றத்திற்கான ஒரே பாதை என்பதாக போலிக் கம்யூனிச கட்சிகள் உட்பட எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கை கோட்பாடாக ஆகிவிட்டது.
ஆகவே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் கொள்கை கோட்பாடுகள் இல்லாத கட்சிகளாக மாறிக்கொண்டன. எந்த வழியானாலும் பணம்-செல்வம்-சொத்து சேர்ப்பது; சுகபோகங்களில் புரள்வது; ஆடம்பரங்களில் மூழ்கித் திளைப்பது; பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது என்பதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர்களே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இதற்கு ஏற்ப ஒட்டுமொத்த சமுதாயத்தையே பண்பாட்டு ரீதியில் சீரழிக்கிறார்கள். இவற்றுக்காக எந்த வித கிரிமினல் குற்றச் செயல்களிலும் வேண்டுமானாலும் ஈடுபடுகிறார்கள்.
அது மட்டுமல்ல ஊழல் முறைகேடு, கிரிமினல் குற்றச் செயல்கள், கொலைபாதக செயல்கள் ஆகியவற்றில் தாங்கள் சிக்கிக் கொள்ளும் போது, இவர்கள் இப்போது ஒரு புது அரசியல் கலாச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்தால் அவை அரசியல் அவதூறுகள் என்றும், தண்டிக்கப்பட்டால் அவ்வாறு செய்வது அரசியல் சதிகள், சூழ்ச்சிகள், அரசியல் பழிவாங்குதல்கள் என்றும் கூறி கூலிப்படையை வைத்து போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்”. என்று வரையறுத்திருந்தோம். இத்தகைய போக்குகள் அனைத்தும் தற்போது படிப்படியாக செழித்து வளர்ந்து மிகப்பெரும் முள் மரமாக மாறிவிட்டது.
குறிப்பாக ஜென்-Z என்று அழைக்கப்படுகின்ற இளம் தலைமுறையினரை தமது திரைப்படங்களிலும் அதற்கு வெளியிலும் நண்பா-நண்பி என்றும், ’விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்றும் பெயரிட்டு அழைத்து வந்ததன் விளைவாக குறிப்பான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விரும்பாத, அரசியலை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் பழமைவாத வடிவம் என்று புரிந்து வைத்துள்ள இளைய தலைமுறையினருக்கு விஜயின் மீது ஈர்ப்பு ஏற்ப்பட்டது.
இத்தகைய இளம் தலைமுறையினர் வீடுகளில் பெற்றோர்களை மதிப்பதில்லை என்பதில் துவங்கி பணிபுரியும் இடங்களில் ஒரு சில மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை; ஒரே வகையான உடை உடுத்துவதில்லை; தனது நடை, உடை, பாவனைகள் முதற்கொண்டு அனைத்தையும் வெவ்வேறு விதமாக மாற்றிக்கொண்டு, எந்த விதமான ஒழுங்குகளும் இல்லாத அராஜகவாதிகளாகவும், லும்பன்களாகவும் திரிந்து கொண்டுள்ளனர் என்பதும் இப்படிப் பட்டவர்கள் வீட்டுக்கு வெளியில் விஜய் போன்ற சினிமா கழிசடைகளால் ஈர்க்கப்பட்டு கூட்டங்களுக்கு தானாகவே செல்வது; ஆயிரக்கணக்கில் என்பதை தாண்டி கட்டுப்பாடு இன்றி குவிவது; கொள்கை-கோட்பாடுகள் லட்சிய முழக்கங்களுக்கு பதிலாக கீழ்த்தரமாக ஊளையிடுவது; பஞ்ச் டயலாக்குகளை பேசி தொலைக்காட்சிகளுக்கு, சமூக ஊடகங்களுக்கு செய்தியாக கொடுப்பது என்று அரசியல் ஆபாச வக்கிரத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
இத்தகைய அரசியலற்ற லும்பன்கள் கடந்த ஒரு மாத காலமாக பாசிசக் கோமாளியான விஜய் நடத்தி வருகின்ற கூட்டங்களுக்கு செல்வதில் கட்டுப்பாடுகளற்று திரிந்து கொண்டிருப்ப தால் ஒவ்வொரு கூட்டத்திலும் சாவுகள் நடப்பது சகஜமாகி வருகின்றது. இவையே உச்சகட்டமாகி கரூரில் 42 பேர் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
விஜய் போன்ற பாசிச கோமாளிகள் இயல்பாகவே ஆர்எஸ்எஸ் பாஜகவின் சித்தாந்தத்து டன் ஒத்துப்போகிறவர்களாகவும், பாசிசக் கைக்கூலிகளாகவும் இயங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிரம்பி வழிகின்ற நுகர்வு கலாச்சார சூழ்நிலை, செல்போன் மற்றும் இன்டர்நெட் கலாச்சாரமும், மாணவர்களை இளைஞர்களையும் மகிழ்ச்சி கேளிக்கை ஆகியவற்றில் ஈடுபடுத்துகின்ற செலிபிரிட்டி கலாச்சாரமும், மேலோட்டமான அறிவு; இலட்சியத்தின் மீது ஆர்வமற்ற நிலை ஆகியவை கலந்த கலவையாக உருவாகி வருகின்றனர். இதில் விதிவிலக்கானவர்கள் சமூகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அக்கறையுடன் செயல்படுகின்றனர். பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட வழிமுறை களிலேயே தனது வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
நாடோடி தொழிலாளர்களாகவும், அன்றாடங்காய்ச்சிகளாகவும், தினக்கூலி பெறுகின்ற அரைப் பாட்டாளிகளாகவும் மாற்றப்பட்டுள்ள இந்த பெரும்பான்மை இளைய தலைமுறை மத்தியில் இருந்து பாசிச கோமாளியை ஆதரிக்கின்ற ஒரு கும்பல் உருவாவது ஆச்சரியம் இல்லை.
’கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதை போல’ பாசிச கோமாளி விஜயை மென்மையாகவும், நாசுக்காகவும், மொன்னையாகவும் விமர்சித்து விஜய்யின் கீழே திரண்டுள்ள இளைஞர்கள் மற்றும் அரசியல் வேண்டாம், ’எனது வாழ்க்கை-எனது குடும்பம்-எனது தொழில்’ என்று சுயநல பிண்டங்களாக சீரழிந்துள்ள நடுத்தர, குட்டி முதலாளித்துவ பிரிவினரை அரவணைக்க கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்திப்பது மிகவும் ஆபத்தானது.
குஜராத் படுகொலையின் போது பாசிச மோடியை அனுமதித்ததன் விளைவாக நாடு கடந்த கால் நூற்றாண்டாக பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்துக் கொண்டுள்ளது. பாசிசக் கோமாளியான விஜயை அனுமதித்தால் தமிழகமும் அதே திசையில் சென்று சிக்கி சீரழியும் என்பதே நாம் மக்களுக்கும், அரசியல் முன்னணியாளருக்கும் விடுக்கும் எச்சரிக்கையாகும்.
- தலையங்க கட்டுரை
புதிய ஜனநாயகம்
அக்டோபர் 2025