“ஆசார்யன், ஓதுவித்தவன், தாய், தகப்பன், குரு, அந்தணன், பசு, முனிவன் இவர்கள் தனக்கு எதிர் செய்தாலும், தான் அவர்க்கு எதிர் செய்யக் கூடாது.” (மனு 4:162) இதன்படி பார்ப்பனர்களை கேள்வி கேட்கக் கூடாது என்கிறது மனுதர்மம்.
அன்றாடம் ரத்த வியர்வையை சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்தியாவில் உள்ள நீதிபதிகளுக்கு அதிகாரப்பூர்வமான வகையில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக கொட்டிக் கொடுக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 3,50,000, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2,50,000 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை பெறுகின்ற நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டும், சமூக நீதிக்கு உட்பட்டும் நீதி பரிபாலனத்தை நடத்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக பதவி வகிக்கின்ற பார்ப்பனர்கள் இத்தகைய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை.
இதில் தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 2017 முதல் நீதிபதியாக செயல்பட்டு வருகின்ற ‘ சனாதனியான’ ஜி.ஆர். சுவாமிநாதன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், அவர்களே முன்வைக்கின்ற நீதித்துறை சட்டங்களுக்கும், மதிப்பளிப்பதை விட தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டு அதன் படி நடப்பதில் பெருமைப்படுகிறார்.
அதன் மூலம் அவர் மனுதர்மத்திற்கு கட்டுப்பட்டவர், டாக்டர் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதியாக உள்ள ஜி ஆர் சுவாமிநாதன் பல்வேறு வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தீர்ப்புகளை வழங்கி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட புகார் எவ்வாறு வெளியானது? அதனை வெளியிட அனுமதி கொடுத்தது யார்? புகார் கொடுத்தவர்களின் பெயரை வெளியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமின்றி, உயிர் வாழ்வதற்கு அச்சுறுத்துகின்ற அபாயம் நிறைந்தது என்ற கோணத்தில் தமிழகத்தின் வழக்கறிஞர்களும், ஜனநாயக சிந்தனை கொண்ட முன்னாள் நீதியரசர்களும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு நிற்கிறது.
தன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட ஜி ஆர் சுவாமிநாதன், தோழர் வாஞ்சிநாதனை நீதிமன்றத்திற்கு வரவழைக்க வேறொரு வழக்கை கையில் எடுத்துக் கொண்டு வரவழைத்து அதன் போக்கில் அவரை மிரட்டுகின்ற தொனியில் கீழ்கண்ட வகையில் பேசியுள்ளார்.,
“நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
தன்மீது அளிக்கப்பட்ட புகார் பற்றி தானே விசாரிப்பதற்கான அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட, இந்த சனாதன நீதிபதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தான் பாவ புண்ணியங்களுக்கு அச்சப்படுபவர் என்பதைப் போல ஒரு மாயத்தை உருவாக்குகின்றார்.
“பாவம் புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன். உங்களால் நான் தவறாக வழி நடத்தப்பட்டால், தவறான தீர்ப்பை நான் வழங்கினால் என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்.” என்று தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டு ஏழு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் திருவாய் மலர்ந்துள்ளார் சுவாமிநாதன்.
மாய தோற்றத்தை உருவாக்குவதில் பார்ப்பனர்கள் குறிப்பாக ஸ்மார்த்த பார்ப்பனர்கள் கெட்டிக்காரர்கள். ஏனென்றால் அவர்களுக்கு உருவ வழிபாடு என்று ஒன்று கிடையாது. ஆதிசங்கரன் உள்ளிட்ட ஸ்மார்த்தர்கள் மாயா வாதத்தை முன்வைத்து பேசுவதைப் போல சனாதனத்தையும், மாயவாதத்தையும் கலந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தாக்குதலை தொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்ட புகார் மீது விசாரிக்கும் அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டதைப் பற்றி விமர்சித்துள்ள முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், ” பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்த போது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது என்றும், அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் செய்யக்கூடாது என்றும் , தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனை தடுக்க வேண்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமி நாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும்” என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
படிக்க:
♦ சமூக நலனுக்காகப் போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான தாக்குதலை எதிர்த்து நிற்போம்!
♦ ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள்.
“சில நேரங்களில் நான் என் பொறுமையை இழந்து விடுகிறேன். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு வழக்கறிஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு இளம் வழக்கறிஞரிடன் கடுமையாக நடந்துகொண்டதால், அவரை தனியாக அழைத்து வருத்தம் தெரிவித்ததற்கு, நன்றாக என்னை திட்டுங்கள் என்றார். ஓய்வுபெறும்போது ஒரு வழக்கறிஞரைம் காயப்படுத்தவில்லை என கூற விரும்புகிறேன்.” என்று தன்னைப் பற்றி தானே சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்ற திருவாளர் சுவாமிநாதன் வாஞ்சிநாதன் வழக்கிலும் இவ்வாறுதான் நடந்து கொண்டுள்ளார்.
இதுதான் பாசிச பாஜகவின் ஆட்சியின் கீழ் இந்திய நீதிமன்றங்களின் நிலைமை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நீதித்துறையை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் போராடி வருகின்ற சூழலில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஜி ஆர் சுவாமிநாதன் போன்றவர்கள் சனாதனத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்கள்.
மீண்டும் துவங்கிய இடத்திற்கே செல்வோம் சனாதனத்தை நிலைநாட்டுகின்ற மனுதர்மத்தில் பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது அந்த சட்டத்தை அமல்படுத்துகின்ற வகையிலேயே சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கோர்ட்டுக்கு அழைத்து மிரட்டி உள்ளார் என்பதால் அவர் தூய்மையான சனாதனி என்று நாம் நிச்சயமாக கூறலாம்.
சனாதனத்தை ஆதரித்து நிற்கப் போகிறோமா அல்லது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் கம்யூனிஸ்ட்களும், சனாதனத்திற்கு எதிராக போராடி நிலை நாட்டிய சமூக நீதியின் பக்கம் நிற்கப் போகிறோமா என்பதுதான் தமிழக மக்களுக்கு சனாதன நீதிபதி சுவாமிநாதன் முன் வைத்துள்ள வழக்கு விடுத்துள்ள எச்சரிக்கை?
- பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







சனாதனத்தை வேரறுக்க வேண்டும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற தன்மையில் புரிந்து கொள்ளும் வகையிலான ஒட்டுமொத்த கட்டுரையும் அமையப் பெற்ற உள்ளது. பாராட்டுக்கள். அதே நேரத்தில் இப்படிப்பட்ட இழிந்த நீதிமன்ற பாசிச சம்பவங்கள் சாதி வெறி பிடித்த நீசர்களால் தொடர்கின்ற பொழுது, மக்களைத் திரட்டுவதும், பல்வேறு அரசியல் மற்றும் ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகளும் களம் கண்டு தீர்க்கமான
வீதிப் போராட்டங்களை முன்னெடுப்பதுமே அவசர அவசியக் கடமையாகும். அக்கடமைகளைச் செய்ய களமாடுவோம்